2 செப்., 2025

இன்றைய புத்தகம்


"பாண்டியர் வரலாறு".
  தி .வை.சதாசிவ பண்டாரத்தார்.
ஏ கே எல் பதிப்பகம் முதல் பதிப்பு 2016 .விலை ரூபாய் 95 மொத்த பக்கங்கள் 160.

   #இது ஒரு வரலாற்று புத்தகம் .
புதின வரலாறு அல்ல .ஆய்வு செய்து கண்டறியப்பட்ட வரலாற்று புத்தகம். பாண்டிய வரலாற்று புத்தகம் இது.

        கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் தமிழ் நூல்களையும் பிற ஆராய்ச்சி நூல்களையும் ஆதாரமாகக்கொண்டு எழுதப்பெற்றது ‘பாண்டியர் வரலாறு' என்னும் இந்நூலாகும். இது கடைச்சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டிய நாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டிய மன்னர்களின் சரிதங்களைச் சுருக்கமாகக் கூறுவதாகும்.
***
ஆசிரியர் குறிப்பு:
தி.வை. சதாசிவ பண்டாரத்தார்
(1892-1960)
         அண்ணாமலைப் பல்கலைக்கழக கல்வெட்டு ஆராய்ச்சித் துறை அறிஞராக பணியாற்றிய சதாசிவ பண்டாரத்தார். அவர்கள் எழுதிய 'பாண்டியர் வரலாறு' எனும் ஆராய்ச்சி நூல் பண்டை இலக்கியங்களின் சான்றுகளையும் கல்வெட்டுக்களின் உண்மைகளையும் ஆராய்ந்து பாண்டிய மன்னரின் உண்மைக் கதையை தமிழ்மக்கள் அறிந்து கொள்வதற்கு ஏற்ற ஒரு சிறந்த நூலாகும்.

      அவருடைய பாண்டியர் வரலாறு, பிற்காலச் சோழர் வரலாறு, சோழக்காலத்தின் அரசியல், சமுதாய வழி போன்றவை குறிப்பிடத்தகுந்த நூல்களாகும்.

       தமிழ் இலக்கியத்தின் பல இடங்களை கல்வெட்டு ஆராய்ச்சி மூலம் விளக்கி உள்ளார். 
      அவருடைய ஆராய்ச்சி மிகவும் நேர்மையாகவும், தெளிவாகவும் இருந்தமையால் கல்வெட்டு ஆராய்ச்சியில் தனித் தன்மை பெற்று விளங்கினார்.

      தமிழ் இலக்கிய உலகுக்கும், வரலாற்று ஆராய்ச்சிகளுக்கும் இவர் ஆற்றியுள்ள தொண்டுகளைப் போற்றும் வகையில் தமிழக அரசு இவரது நூல்களை நாட்டுடைமையாக்கி தமிழ் மொழிக்கு வளம் சேர்த்துள்ளது. 

       இந்தத் தொகுப்பு கல்வெட்டு ஆராய்ச்சி குறித்து பயிலும் மாணவர்களுக்கும், சமுதாயத்திற்கும் பெரிதும் உதவியாக இருக்கும் .
****

இந்த புத்தகம் கீழ்க்கண்ட தலைப்புகளில் அத்தியாகங்களாக பிரிக்கப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.

1.கடைச்சங்க காலத்திற்கு முந்திய பாண்டியர்கள் வடிம்பலம்பநின்ற பாண்டியன் - பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி

2.. கடைச்சங்க காலத்துப் பாண்டியர்கள் பாண்டியன் முடத்திருமாறன் - பாண்டியன் மதிவாணன்- பொற்கைப்பாண்டியன் - கடலுண் மாய்ந்த இளம்பெருவழுதி - பாண்டியன் அறிவுடை நம்பி - ஒல்லையூர்தந்த பூதப்பாண்டியன் - பாண்டியன் ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் - பாண்டியன் சித்திரமாடத்துத் துஞ்சிய நன்மாறன் - தலையாலங் கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன்- பாண்டியன் கானப்பேர் கடந்த உ உக்கிரப் பெருவழுதி - கருங்கையொள்வாட் பெரும்பெயர் வழுதி- பன்னாடுதந்த பாண்டியன் மாறன் வழுதி - நல்வழுதி - கூடகாரத்துத் துஞ்சிய மாறன் வழுதி இலவந்திகைப்பள்ளித்துஞ்சிய நன்மாறன்- குறுவழுதி - வெள்ளியம்பலத்துத் துஞ்சிய பெருவழுதி நம்பி நெடுஞ்செழியன்.

3. பாண்டிநாட்டிற் களப்பிரர் ஆட்சி

4.கி.பி. 575 முதல் கி.பி.900 வரை ஆட்சி புரிந்த பாண்டியர்கள்

பாண்டியன் கடுங்கோன் - மாறவர்மன் அவனி சூளாமணி- செழியன் சேந்தன் - மாறவர்மன் அரிகேசரி -கோச்சடையன் ரணதீரன் - அரிகேசரி பராங்குச மாறவர்மன் - நெடுஞ்சடையன் பராந்தகன் - இரண்டாம் இராசசிம்ம பாண்டியன் வரகுணமகாராசன்-சீமாறன் சீவல்லபன் - வரகுண வர்மன் - பராந்தக பாண்டியன்.

5.கி.பி.900 முதல் கி.பி.1190 வரையில் ஆண்ட பாண்டியர்கள்.
மூன்றாம் இராசசிம்ம பாண்டியன் வீர பாண்டியன் - அமரபுயங்கள் மானாபரணன் - வீரகேரன பாண்டியன் சுந்தரபாண்டியன் விக்கிரம பாண்டியன் - வீரபாண்டியன் - சீவல்லப பாண்டியன் -பாண்டியன் வீரகேசரி - சடையவர்மன் சீவல்லபன் - மாறவர்மன் திரிபுவனச் சக்கரவர்த்தி பராக்கிரம பாண்டியன்- சடையவர்மன் பராந்தக பாண்டியன் மாற வர்மன் சீவல்லபன் - சடையவர்மன் குலசேகர பாண்டியன் - சடையவர்மன் வீரபாண்டியன்- மாறவர்மன் விக்கிரம பாண்டியன்.

6.. கி.பி. 1190 முதல் கி.பி. 1310 முடிய ஆட்சி புரிந்த பாண்டியர்கள்.
முதல் சடையவர்மன் குலசேகர பாண்டியன் - முதல் மாறவர்மன் சுந்தர்பாண்டியன் - இரண்டாம் சடைய வர்மன் குலசேகரப்பாண்டியன் - இரண்டாம் மாற வர்மன் சுந்தரபாண்டியன் - முதல் சடைய வர்மன் சுந்தரபாண்டியன் - சடையவர்மன் வீர பாண்டியன் - சடைய வர்மன் விக்கிரம பாண்டியன் முதல் மாறவர்மன் குலசேகர பாண்டியன் - சடைய வர்மன் சுந்தர பாண்டியன் - மாறவர்மன் விக்கிரம பாண்டியன் - மாறவர்மன் வீரபாண்டியன்.

7.கி.பி.1310-ஆம் ஆண்டிற்குப் பிறகு ஆட்சி புரிந்த பாண்டியர்கள்.

8. தென் பாண்டிநாட்டில் ஆட்சிபுரிந்த பிற்காலப் பாண்டியர்கள்.
சடையவர்மன் பராக்கிரம பாண்டியன் சடைய வர்மன் குலசேகரபாண்டியன் - அழகன் பெருமாள் பராக்கிரமபாண்டியன் சடைய வர்மன் சீவல்லப பாண்டியன் - சடையவர்மன் பராக்கிரம குலசேகர பாண்டியன் - நெல்வேலி மாறன் - சடையவர்மன் அதிவீரராம பாண்டியன் - வரதுங்கராமபாண்டியன் - வரகுணராம் குலசேகர பாண்டியன்.

9..பாண்டியர் அரசியல்
பாண்டிமண்டலத்தின் உட்பிரிவுகள் -அரசனும் இளவரசனும் - அரசியல் அதிகாரிகள் அரசிறை நில அளவு - இறையிலி - அளவைகள் - நாணயங்கள் கிராம சபை - ஆவணக் களரி-படை - வாணிகமும் கைத்தொழிலும் - கல்வி - சமயநிலையும் கோயில் களும் - சில பழைய வழக்கங்கள்

**

            உலகில் நாகரிகம் பெற்ற நாட்டினர் தம் முன்னோர் வரலாறுகளைப் பலவகையாலும் ஆய்ந்து, உண்மைச் சரிதங்களை மக்கள் எல்லோரும் உணருமாறு தம் தாய்மொழியில் வெளியிட்டுப் போற்றி வருகின்றனர். 
      நம் தமிழகத்தில் முற்காலத்தில் ஆட்சிபுரிந்த தமிழ் வேந்தர்களான சேர சோழ பாண்டியர்களின் வரலாறுகள் நமக்கு மகிழ்ச்சியும் உணர்ச்சியும் அளிக்க வல்லன என்பது யாவரும் அறிந்ததொன்றாம். 
       கல்வெட்டுக்களையும் செப்பேடுகளையும் தமிழ் நூல்களையும் பிற ஆராய்ச்சி நூல்களையும் ஆதாரமாகக்கொண்டு எழுதப்பெற்றது 'பாண்டியர் வரலாறு' என்னும் இந்நூலாகும். 
         இது கடைச்சங்க காலத்திற்கு முன்னர்த் தொடங்கி, கி.பி. பதினேழாம் நூற்றாண்டின் தொடக்கம் வரையில் பாண்டிநாட்டில் ஆட்சிபுரிந்த பாண்டி மன்னர்களின் சரிதங்களைச் சுருக்கமாக 
எழுதப்பட்டுள்ளது

       ஆசிரியரின்,T.V.சதாசிவ பண்டாரத்தார் அவர்களின்
 ஆராய்ச்சியிற் புதியனவாகக் கண்ட கருத்துக்கள் பலவும் இதன்கண் இடம்பெற்றுள்ளன. இதன் பிற்சேர்க்கையாக வேள்விக்குடிச் செப்பேடுகள் சின்னமனூர்ச் செப்பேடுகள் என்பவற்றின் பகுதிகளும் மெய்க்கீர்த்திகளும் பாண்டியரைப்பற்றிக் கல்வெட்டிற் கண்ட பாடல்களும் சேர்க்கப்பெற்றுள்ளன. ஆராய்ச்சித்துறையிற் கருத்து வேறுபாடுகள் நிகழ்தலும் புதியனவாகக் கிடைக்கும் ஆதாரங்களால் சில செய்திகள் திருத்தமெய்துதலும் இயல்பாகும். 

     அமிழ்தினுமினிய நம் தமிழ்மொழியைத் தாய் மொழியாகக் கொண்டு நிலவும் இந்நிலப்பரப்பு முற்காலத்தே தமிழகம் என்று வழங்கப் பெற்றதென்பது தொன்னூலாராய்ச்சியுடையார் யாவரும் அறிந்த ஒன்றாம்.    

         இப்போது இதனைத் தமிழ்நாடு என்றே யாவரும் கூறுவார்கள்.
இது வடக்கில் வேங்கடமும் தெற்கிற் குமரிமுனையும் கிழக்கிலும் மேற்கிலும் இருபெருங்கடலும் உடையது. 
       இத்தமிழகத்தைக் குடபுலம் குணபுலம் தென்புலம் என்ற மூன்று பெரும்பகுதிகளாகப் பிரித்துப் பண்டைக்காலமுதல் ஆட்சி புரிந்து வந்தோர், சேர சோழ பாண்டியர் என்னும் தமிழ் மூவேந்தரேயாவர். 
        இவர்கள் ஆட்சிபுரிந்த பகுதிகள் முறையே சேர மண்டலம், சோழ மண்டலம், பாண்டிமண்டலம் எனப்படும். 
       இவற்றுள் பாண்டி மண்டலத்தின் அரசுரிமையுடையராய்ப் பண்டைக்காலத்தே அரசு பரிபாலனம்  செய்த பாண்டிய அரசர்களின் வரலாறே இங்கு ஆராயப்பட்டு எழுதப்பட்டிருக்கிறது.

       இப்பாண்டியர் படைப்புக்காலந்தொட்டு மேம்பட்டுவரும் தொல் குடியினரென்பது அறிஞர்களது கொள்கை. 
      இக்குடியினர் எக்காலத்து இப்பாண்டி மண்டலத்தை ஆட்சிபுரியும் உரிமை பெற்றனர் என்பது  எவ்வேந்தரால் இதன் ஆட்சி முதன்முதலாகக் கைக் கொள்ளப்பட்டது அறிந்துகொள்ள 
முடியவில்லை. ஆகவே, எவரும் ஆராய்ந்து அளந்து காண்டற்கரிய அத்துணைத் தொன்மையுற்ற குடியினர் இவர்கள் என்பது அறிய பெறப்படுகிறது.

      வடமொழியாளர் ஆதிகாவியமெனக் கொண்டாடும் வான்மீகி ராமாயணத்தில் தமிழ் நாட்டைப்பற்றிய உயரிய செய்திகள் பல காணப்படுவதொடு
, பாண்டிவேந்தரது தலைநகர் பொன்னாலும் முத்துக்களாலும் அலங்கரிக்கப்பெற்றகோட்டை வாயிலையுடையதாய் இருந்தது எனவும் சொல்லப்பட்டுளது. 

     அதோடு அல்லாமல்
வியாச முனிவரது மகாபாரதத்தே, பாண்டவருள் ஒருவனான 
அருச்சுனன் ஒரு பாண்டியர் குலப்பெண்மணியை மணந்த செய்தி காணப்படுகின்றது.

    இங்ஙனமே வடமொழியிலுள்ள புராணங்களிலும் தமிழரசர்களைப்பற்றிய செய்திகள் காணப்படாமலில்லை. 

       கி. மு. நான்காம் நூற்றாண்டினை சேர்ந்தவர்கள் என்று
கருதப்படும் காத்தியாயனர், பாணினி வியாகரணத்திற்குத் தாம் வரைந்த வார்த்திகம் என்ற உரையுள் 'பாண்டியி' என்னும் மொழிக்கு இலக்கணம் வகுத்துள்ளனர். 

       அதோடு அல்லாமல் கிறித்துப் பிறப்பதன்முன்னர் மகதநாட்டில் ஆட்சிபுரிந்த மௌரிய மன்னனாகிய அசோகனுடைய கல்வெட்டுக்களிலும் பாண்டியர்களைப் பற்றிய செய்தி கூறப்பெற்றுள்ளது .
      
        இலங்கையின் பழைய சரித்திரத்தை விளக்கும் ‘மகாவம்சம்' என்ற சரிதநூல் அவ்விலங்கையின் முதற்றமிழ்வேந்தனும் புத்தரது நிர்வாண காலமாகிய கி.மு.478 - ல் அதனை ஆட்சிபுரியும் உரிமையடைந்தவனுமாய விசயனென்பான், ஒரு பாண்டியர்குலப் பெண்மணியை மணந்தனனென்றும், ஆண்டுதோறும் தன் மாமனாகிய பாண்டியற்குச் சிறந்த பரிசில் அனுப்பினனென்றும் கூறுகின்றது. 

      கி.மு. மூன்றாம் நூற்றாண்டில் கிரீஸ் தேசத்தினின்றும் சந்திரகுப்தன் அரசவைக்கு வந்த யவனதூதனாகிய மெகஸ்தனிஸ் 
என்பவர் பாண்டி நாட்டின் வரலாற்றைப்பற்றிக் கீழ்க்கண்டவாறு கூறுகிறார்:

     "ஹெர்க்கிளிசுக்குப் பண்டேயா என்ற ஒரு பெண் பிறந்தது .அவன் அப்பெண்ணிற்குத் தெற்கிற் கடலைச்சார்ந்துள்ள ஒரு நாட்டை அளித்தனன் .அவளது ஆட்சிக்குட்பட்டவர்களை முந்நூற்ற்றுபத்தைந்து ஊர்களில் பகுத்து வைத்து ஒவ்வோர் ஊரினரும் ஒவ்வொரு நாளைக்கு அரசிக்குத் திறைகொணர வேண்டுமென்று கட்டளையிட்டான்" என்று கூறியிருக்கிறார்

    கி.பி. 79 - ஆம் ஆண்டில் இறந்தவராகிய பிளைனி என்ற மற்றொரு மேனாட்டு வரலாற்று ஆசிரியரும் மெகஸ்தனிஸ் கூறியதைப் போன்றுள்ளதோர் கதை கூறியிருக்கின்றார். 

    அது  என்னவென்றால் "இந்தியாவிற் பண்டோவென்ற ஒரேசாதி பெண்ணரசுக்கு உட்பட்டது. ஹெர்க்கிளிசுக்கு ஒரே பெண்ணிருந்தமையின் அவன் மிக்க அன்புடன் ஒரு பெரிய நாட்டை அவளுக்கு அளித்ததாகச் சொல்லுகிறார்கள். 
      அவள் வழியினர் முந்நூறு ஊர்களை ஆட்சி புரிந்தனர். அவர்கள் பெருஞ்சேனைகளை உடையராயுமிருந்தனர்” என்பது. 

       யவனாசிரியர் இருவரும் கூறியுள்ள கதை, பாண்டியர், மலையத்துவச பாண்டியனுடைய புதல்வியாகிய மீனாட்சியம்மையின் வழித் தோன்றியவராய்க் கௌரியர் என்றழைக்கப்பெற்ற செய்தி ஆகையால் அவர்கள் 
 பாண்டியன் சித்திராங்கதனுடைய மகள் சித்திராங் கதையின் வழித் தோன்றல்களாயுள்ள செய்தியை குறித்ததாகக் கொள்ளல்வேண்டும்
என்பது தெளிவாகிறது.

        மேற்கூறிய மேற்படி செய்திகளால் பாண்டியர் மிகத் தொன்மை வாய்ந்த குடியினரென்பது நன்கு விளங்குகின்றது.

        இனி, இப்பாண்டியர் சந்திரவம்சத்தைச் சேர்ந்தவரென்றும் ,வேப்பம்பூ மாலையைத் தமக்குரிய அடையாள மாலையாகவும், கயல்மீனுருவத்தைக் கொடியாகவும் ,இலச்சினையாகவும் கொண்டவர்கள் என்றும் பண்டைத்தமிழ் நூல்களும் கல்வெட்டுக்களும் செப்பேடுகளும் கூறுகின்றன.

      இனி, புறநானூறு, பத்துப்பாட்டு முதலிய சங்கநூல்களில் எத்துணையோ பல பாண்டியமன்னர்களின் பெயர்கள் காணப்படுகின்றன. 

     ஆயினும் அவர்களது வரலாறு நன்குணரப் படவில்லை. 
       கடைச் சங்க காலத்திற்கு முந்திய நாட்களில் நிலவிய அரசர்களுள் வடிம்பலம்பநின்ற பாண்டியனும், பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமிப் பெருவழுதியுமே சிறந்தோராவர் என்று என்று இந்த புத்தகத்தின் மூலமாக ஆய்வு செய்து ஆசிரியர் சதாசிவ பண்டாரத்தார் கூறியிருக்கிறார்.

      பாண்டியர் வரலாறு படிக்க படிக்க சுவையாக இருக்கிறது என்றாலும் ஆசிரியரின் தமிழ் மொழி நடை சற்று படிக்கின்ற 
முனைப்பை தாமதப்படுத்தவே செய்கிறது.

கருத்துகள் இல்லை: