*கிரியை வலம் வருதல்*
*கிருபையை பெறும் வழி.*
*ரமண மகரிஷி.*
ஏன், இந்த மலை ரூபத்தில் சிவபெருமான் இருக்க வேண்டும்.’’ வேதமறிந்த அந்தணர் கைகூப்பி கேட்டார்.
‘நீங்கள் உங்களை இப்போது எப்படி உணர்கிறீர்கள்.’’ பகவான் கூர்ந்து
பார்த்துக் கேட்டார்.
எப்படி எனில்...’’
உடலாகவா. மனதாகவா. புத்தி யாகவா...’’
நான் இந்த மூன்றுமாக என்னை சேர்த்துக் கொண்டு இந்த உடலே நான் என்று நிச்சயித்த உணர்வோடு இருக்கிறேன்.’’
அதாவது, நான் எனில் இந்த உடம்பைத்தான் நீங்கள் காட்டுகிறீர்கள். உடலோடுதான் அடையாளப்படுத்திக் கொள்கிறீர்கள். அப்படித்தானே.’’
ஆமாம், மிக நிச்சயமாய் நான் அப்படித்தான் உணர்கிறேன்.’’
இன்னும் கூர்மையாக ஒன்று சொல்லட்டுமா. நீங்கள் உங்கள் உடலைத்தான் நான் என்று அபிமானிக்கிறீர்கள் அல்லவா’’
ஆமாம்... ஆமாம்...’’ என்று அந்தக் கேள்விக்கு அங்கிருப்போர் அனைவருமே சேர்ந்து தலையசைத்தனர்.
அப்படியா... அதுபோல அந்த சாட்சாத் சிவபெருமான், நாம் நம் உடலை நான் என்று அபிமானிப்பதுபோல இந்த அருணாசல மலையை நான் என்று அபிமானிக்கிறார்.
ஞானமே உருகொண்ட ஈசன், தூல உருகொண்ட மலையாக தன்னையே இந்த மலையாக அபிமானித்திருக்கிறார். அதனால்தான் சொல்கிறேன்.
இந்த மலை வேறல்ல. சிவம் வேறல்ல. அருணாசல மலையே சிவபெருமான். சிவபெருமானே அருணாசல மலையாக வீற்றிருக்கிறார். இதில் எள்ளளவும் ஐயம் வேண்டாம்.
உங்களின் ஆத்மாவை வலம் வந்திருக்கிறீர்களா. ஆத்மப் பிரதட்சணம் செய்திருக்கிறீர்களா. கவலைப்படாதீர்கள். இந்த அருணாசலத்தை வலம் வாருங்கள்.
இந்த கிரியை வலம் வருதலே
கிருபையைப் பெறும் வழி.
அசலமான மலையை சுற்றும் போது மனம் நிச்யலமாக மாறும் பாருங்கள். சலசலத்துக் கொண்டிருக்கும் மனதை அசலமாக்கும் மலை இதுவேயாகும்.
ஆதியந்தமற்ற அந்த ஆத்மா அருணாசலமாக இங்கு எழுந்தருளியுள்ளது’’ என்று சொல்லிவிட்டு கண்களில் நீர்பொங்க மௌனமானார்.
*. பகவான் ஸ்ரீரமணமகரிஷி .*
நன்றி: ஆன்மீகச் சிந்தனைகள், பாலகுமாரன், முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக