பிரபஞ்சன் நினைவு தினம்: டிசம்பர் 21
................................
*எழுத்தாளர் பிரபஞ்சன்*
*திருப்பூர் கிருஷ்ணன்*
................................
*பிரபஞ்சன் நெற்றியில் புருவங்களுக்கிடையே திருநீறு இட்டாற்போல் ஒரு சின்னத் தழும்பிருக்கும். நன்கு உடையணிந்து வசீகரமாக வலம் வருவார்.
உரையாடலுக்கு உகந்தவர். எதிராளி பேசுவதைக் கவனமாகக் கேட்டு அன்போடு பதிலளிப்பார்.
இலக்கியம் குறித்துத் தனிப்பட்ட முறையிலும், பொது மேடைகளிலும், யாராவது சந்தேகம் கேட்டால் பொறுப்போடு பதில் சொல்வார்.
ஒருவர் தன்னைக் கேள்வி கேட்பது, தான் செய்த பாக்கியம் என எண்ணுவதுபோல் இருக்கும் அவர் பதில் சொல்லும் பாணி.
தன் தவறுகளை ஒப்புக்கொள்ள அவர் தயங்கியதில்லை. தாம் எழுதிய ஒரு சரித்திர நாவலின் முன்னுரையில், தமிழில் சரியான சரித்திர நாவல் இல்லை என்ற வசை தன்னால் ஒழிந்தது என்பதுபோல அகம்பாவமாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை டேக் மையத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒரு வாசகி அந்த வாக்கியம் குறித்துச் சலிப்போடு கேள்வி கேட்டதும், தான் தற்பெருமையோடு அப்படி எழுதியது தவறுதான் என மேடையிலேயே ஒப்புக் கொண்டுவிட்டார்.
எழுத்தாளர்களின் தற்பெருமை வாசகர்களுக்கு எரிச்சலூட்டுகிறது என்பதையும், தன்னைப் பற்றித் தன் எழுத்துத்தான் பேச வேண்டுமே தவிரத் தான் பேசக் கூடாது என்பதையும் போகப் போக அவர் புரிந்துகொண்டார்.
கணையாழி கி. கஸ்தூரிரங்கன் தாம் தினமணிகதிர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், பிரபஞ்சனின் `மானுடம் வெல்லும், வானம் வசப்படும்` ஆகிய மிக நீண்ட தொடர்கதைகளை வாங்கி வெளியிட்டார். மணியம் செல்வனின் அழகிய ஓவியங்களோடு அவை வெளியாகி எண்ணற்ற வாசகர்களை ஈர்த்தன.
அந்தத் தொடர்கள் வெளிவரும் தருணத்தில் நான் தினமணிகதிர் துணையாசிரியனாக இருந்தேன். பிரபஞ்சனின் எழுத்தை அவர் கையெழுத்திலேயே சுடச்சுடப் படித்து ரசித்த அனுபவம் மறக்க இயலாதது.
நடன மங்கைகளைப் பற்றி எழுதும்போது அவர் பேனாவே நாட்டியமாடுவது போல் தோன்றும். அப்படி ரசித்து ரசித்து எழுதுவார். அவர் முறையாகத் தமிழ் கற்றவர் என்பதை அவர் கையாளும் உவமைகள் புலப்படுத்தும்.
தினமணிகதிர் ஒரு காலத்தில் ஒரே எழுத்தாளரின் ஐந்து சிறுகதைகளைக் கேட்டு வாங்கி அடுத்தடுத்து வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. அதுவும் கஸ்தூரிரங்கன் ஆசிரியராக இருந்தபோது நடந்ததுதான்.
அப்படியான ஐந்து கதைகளை சுஜாதா, தருமூ சிவராமூ, ம.வே. சிவகுமார் போன்றோர் எழுதினார்கள். அந்த வரிசையில் பிரபஞ்சன் எழுதிய ஐந்து கதைகளும் முத்து முத்தானவை.
அவர் சுயமாக எழுதிய எழுத்துக்கள் மட்டுமல்ல, அவர் தொகுத்த பிறர் எழுத்துக்களும் கூட அவரது மேதைமையைப் பேசுபவை. ஆர். சூடாமணியின் சிறுகதைகளிலிருந்து ஆகச்சிறந்த கதைகளைத் தேடித் தொகுத்திருக்கிறார்.
`புதுவைச் சிறுகதைகள்` என்ற தலைப்பில் அவர் தொகுத்த இரண்டு தொகுப்புக்களும் கூட முக்கியமானவை.
பாரதியாருக்கு தலித் மக்கள் மீதிருந்த அன்பைப் புலப்படுத்தும் வகையில் பாரதி வசந்தனால் எழுதப்பட்ட `தம்பலா` என்ற சிறுகதை உள்படப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் அத்தொகுப்பை மேன்மைப்படுத்துகின்றன. (மிகச் சிறந்த எழுத்தாளரான பாரதி வசந்தன் காலமாகி விட்டார்.)
புதுச்சேரியில் நடந்த `புதுவைச் சிறுகதைகள்` தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னைப் பேச அழைத்தார்.
அப்போது கேந்திரிய வித்யாலயா ஆசிரியையான என் மனைவி பணிநிமித்தம் பூனாவில் இருந்ததால் நானும் பூனாவில் சிறிதுகாலம் இருந்தேன். அங்கிருந்து புதுச்சேரி வந்து வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிவிட்டு, பின் பூனாவுக்குத் திரும்பிச் சென்றேன்.
அடிக்கடிப் பிரபஞ்சனைச் சந்தித்துக் கொண்டிருந்த நான், கொஞ்சகாலம் சந்திக்காமல் இருந்து பின் மீண்டும் அவரைச் சந்தித்த தருணம் அது.
என் கைகளைப் பற்றிக்கொண்டு தழதழப்போடு அவர் பேசியபோது நான் அடைந்த நெகிழ்ச்சி விவரிக்க இயலாதது.
நான் அவர் மேல் செலுத்திய அன்பையும் அவர் எழுத்தின்மேல் கொண்டிருந்த மரியாதையையும் அவர் புரிந்துகொண்டிருந்தார்.
முருங்கை மரத்தை மையமாக்கி எழுதப்பட்ட `பிரும்மம்` என்ற அவரின் கணையாழிக் கதை என் தாயாருக்கு மிகவும் பிடித்த கதை.
என் தாயார் அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்தக் கதையை வெகுவாகப் பாராட்டினார். அந்தக் கதையை இலக்கியச் சிந்தனையில் மாதப் பரிசுக்காக நான் தேர்வு செய்தேன்.
பிறகு அதே கதை முதுபெரும் எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு அவர்களால் ஆண்டுப் பரிசிற்காகவும் தேர்வானபோது என் தாயார் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது.
தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் என்று சிலவற்றைத் தொகுத்தால் அந்தத் தொகுப்பில் கட்டாயம் இடம்பெறக் கூடிய கதை அது.
எழுத்து, பேச்சு இரண்டிலும் திறமைபெற்ற சிலரில் அவரும் ஒருவர். திருத்தமான உச்சரிப்பில் பகுத்தும் தொகுத்தும் சபையைக் கட்டுவது மாதிரி ஒரு மணிநேரத்திற்கும் மேல் பேசக் கூடியவர். அவர் மேடைப் பேச்சில் கொஞ்சம் ஜெயகாந்தன் சாயல் தென்படும்.
அவரும் நானுமாகப் பல மேடைகளில் இணைந்து பேசியிருக்கிறோம். பேச்சின் பொருட்டாக காரிலும் ரயிலிலும் பேருந்திலும் அவரோடு பயணம் செய்திருக்கிறேன். பயண நேரங்களில் அவரோடு பேசிக்கொண்டே செல்வது சுவாரஸ்யமாக இருக்கும்.
அவர் ஓயாத படிப்பாளி. முன்னோடிகளின் தற்கால இலக்கியம் முழுவதையும் கரைத்துக் குடித்தவர். தி. ஜானகிராமனின் `மோகமுள்` தொடங்கிப் பழைய அழியாத காவியப் படைப்புகள் குறித்து அவருடன் பேசுவதென்பது ஒரு தனி ஆனந்த அனுபவம்.
தேடிவரும் நண்பர்களை மிகவும் மதிப்பார். உற்ற நண்பர்களை அவரும் தேடிச் செல்வார். நட்பைப் போற்றுவதும் நண்பர்களோடு உரையாடுவதுமாகவே அவரது நேரங்கள் கழிந்தன.
தொடர்கதை அத்தியாயத்தைக் கொடுப்பதற்காகவோ என்னைச் சந்திக்கவென்றோ அவர் கதிர் அலுவலகம் வருவதுண்டு. மாலை ஐந்து மணிக்குமேல் எக்ஸ்ப்ரஸ் கான்டீனில் நெடுநேரம் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம்.
சென்னை பீட்டர்ஸ் காலனியில் அவர் வசித்தபோது நான் அங்கு சென்று அவரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன்.
புதுவைப் பல்கலையில் நான் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டபோது பலமுறை அடுத்தடுத்துப் புதுவை செல்வேன். அப்போதெல்லாம் கி.ரா.வையும் பிரபஞ்சனையும் கொஞ்ச காலம் புதுச்சேரியில் வசித்த இந்திரா பார்த்தசாரதியையும் நான் சந்திக்காமல் இருந்ததில்லை.
பிரபஞ்சனின் மனைவி, சகோதரி பிரமிளா ராணி, நான் அவர் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் சாப்பிடச் சொல்லி அன்போடு உபசரிப்பார்.
என்னைப் பார்த்தவுடன், நான் சைவ சாப்பாட்டுக்காரன் என்பதால், `இண்ணைக்கு மீன்குழம்பு வைக்க முடியாது. வெங்காய சாம்பார்தான்!` என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்வது வாடிக்கை. அவர் என்னை வரவேற்கும் விதமே அப்படித்தான்.
அன்பே வடிவான கிராமியப் பெண்மணி. சாப்பாடு போடாமல் என்னை அவர் அனுப்பியதில்லை. அவர் சமையல்கலை வல்லுநர்.
சிறுவனாக இருந்தபோது நகைச்சுவைத் துணுக்குகளை என்னோடு பகிர்ந்துகொண்டு என் நண்பனாகவும் மாறி என் மனத்தைக் கவர்ந்த சதீஷ் உள்பட, பிரபஞ்சனுக்கு மூன்று புதல்வர்கள்.
பிரபஞ்சன் தன் கடைசிக் காலங்களில் புதுவையில் சில நாட்களும் சென்னையில் சில நாட்களுமாக வாழ்ந்து வந்தார். அவரது எழுத்து சார்ந்த வாழ்க்கைக்குச் சென்னையே செளகரியமாக இருந்தது.
கணிப்பொறியை அவர் பழகவில்லை. எப்போதும் கையெழுத்துத் தான். அடித்தல் திருத்தல் இல்லாத சீரான கையெழுத்து. சிறுகதையானாலும், தொடர்கதை அத்தியாயமானாலும், ஒரு வேகத்தோடு எழுதிக் கொடுத்து விடுவார். உலகளாவிய தத்துவப் பார்வை அவரது எழுத்தின் சிறப்பம்சம்.
வாழ்நாள் முழுதும் வறுமை அவரை விரட்டியது. கடின உழைப்பாளியான அவருக்குப் பொருளாதார ரீதியிலான நிம்மதியான வாழ்க்கை அமையவில்லை. அவரின் அப்பாவின் ஆதரவு அவருக்குக் கைகொடுத்தது.
தஞ்சாவூரில் கொஞ்சகாலம் பள்ளி ஆசிரியராக இருந்தார். சிறிதுகாலம் குமுதத்திலும் வேறு சில பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார்.
கொஞ்சகாலம் புதுவைப் பல்கலை நாடகத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். பெரும்பாலான காலங்களில் எழுத்தை மட்டுமே சார்ந்தவராக முழுநேர எழுத்தாளராகத் தான் இருந்தார்.
நாவல், சிறுகதை ஆகிய இரண்டு துறைகளிலும் முத்திரை பதித்தார். அவற்றில் சிறுகதைத் துறையில் அவர் பதித்த முத்திரை கூடுதல் அழுத்தம் கொண்டது. `முட்டை` உள்ளிட்ட முக்கியமான சில நாடகங்களையும் எழுதினார்.
தமிழில் முழுநேர எழுத்தாளராக இயங்குவது மிகக் கடினம். வல்லிக்கண்ணன் போன்ற தனி மனிதர்களே அப்படி வாழ முடியாமல் தத்தளித்தார்கள். பிரபஞ்சன் குடும்பஸ்தர். கடும் பொருளாதார நெருக்கடிகள் அவருக்குத் தொடர்ந்து இருந்து வந்தன.
தன்னை மணந்துகொண்ட காரணத்தாலேயே வறுமையோடு போராடுபவராகவே தம் மனைவியும் வாழ நேர்ந்ததில் அவருக்குக் குற்ற உணர்ச்சியோடு கூடிய கழிவிரக்கம் இருந்தது. மனைவி காலமானதும் தம் நண்பர்களிடம் அதுகுறித்துப் பெரிதும் வருந்தினார்.
அவர் மனைவி காலமான தருணத்தில், மனைவியின் விருந்துபசாரப் பண்பு பற்றி நான் புகழ்ந்து பேசியபோது அவர் விழிகள் கலங்கின.
`வானம் வசப்படும்` நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு, பாரதிய பாஷா பரிஷத் விருது, `மானுடம் வெல்லும்` நாவலுக்காக இலக்கியச் சிந்தனைப் பரிசு, சி.பா. ஆதித்தனார் விருது, தமிழக அரசின் பரிசு எனப் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார்.
முதுமையில் அவரது வறுமை சற்று விலகத் தொடங்கியது. நண்பர்கள் நிதிசேகரித்துக் கொடுத்தார்கள். இறுதிக் காலத்தில் செங்கமலத் தாயார் அறக்கட்டளைப் பரிசு உள்படப் பொருளாதாரப் பலன்தரும் சில பரிசுகள் அவரை வந்தடைந்தன. புதுவை அரசும் உதவியது.
ஆனால் புற்றுநோய் அவரை வரவேற்றது. அவர் கடைசிக் காலங்களில் கல்கியில் எழுதிய மகாபாரதப் பாத்திரங்களைப் பற்றிய தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது எழுத்தாற்றல் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மரணம் அவரைத் தழுவியது.
ஒருவழியாக நோய்சார்ந்த உடல் வேதனையிலிருந்து அவர் விடுதலை பெற்றார். (டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் உள்ளிட்ட சிலர் அவருக்கு இறுதிக் காலத்தில் செய்த உதவிகள் குறிப்பிடத் தக்கவை.)
புதுவை அரசு, அவர் புதுவையைச் சேர்ந்தவர் என்ற வகையில் அவருக்கு துப்பாக்கிக் குண்டு மரியாதையோடு கூடிய இறுதிச் சடங்கை நிகழ்த்தியது. தமிழ் எழுத்தாளர்களில் எவருக்கும் அதுவரை கிட்டாத பெருமை அது.
அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமான எழுத்தாளர்கள் புதுவையில் கூடினார்கள். அவரது நண்பர் வட்டம் எவ்வளவு பெரியது என்பதை அவரது இறுதி அஞ்சலிக்கு வந்த கூட்டம் புலப்படுத்தியது.
பிரபஞ்சன் காலமானாலும் மென்மையும் ஆழமும் கூர்மையும் கொண்ட அவரது வசீகரமான எழுத்துக்களுக்கு என்றும் அழிவே இல்லை.
(மீள் பதிவு)
................................