திருப்பூர் குமரன் நினைவு தினம்: ஜனவரி 11
...............................................
*கொடிகாத்த குமரனும் ராமாயி அம்மாளும்!*
*திருப்பூர் கிருஷ்ணன்* (நிறைவுப் பகுதி)
படங்கள்: திருப்பூர் குமரன், ராமாயி அம்மாள்.
...............................................
*திருப்பூரில் ஓடக்காடு பகுதியில்தான் திருப்பூர் குமரனின் மனைவி ராமாயி அம்மாள் வசித்து வந்தார். என் வீடிருந்த ரங்கநாதபுரம் பகுதியிலிருந்து சைக்கிளில் போய் நான் ராமாயி அம்மாளை அடிக்கடிச் சந்தித்ததுண்டு.
இளைஞர்களிடமெல்லாம் சொந்தப் பிள்ளைபோல் பாசமாகப் பழகும் பண்பு அவரிடம் இருந்தது.
கல்லூரி மாணவனாக இருந்த நான், வேலை கிடைத்து பத்திரிகையாளனாக மாறிய பின்னும் ராமாயி அம்மாளைப் பலமுறை சந்தித்திருக்கிறேன். தினமணிகதிரில் அவரைப் பேட்டி கண்டு எழுதியிருக்கிறேன்.
பொதிகைத் தொலைக்காட்சியில் ஸேவியர் என்ற நிகழ்ச்சி அமைப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் பொதிகைத் தொலைக்காட்சிக்காக நான் ராமாயி அம்மாளைப் பேட்டி காணவேண்டும் என ஏற்பாடு செய்தார்.
அது நேரலை ஒளிபரப்பு. (அப்போதெல்லாம் பெரும்பாலும் அப்படித்தான்.)
திருப்பூரிலிருந்து ராமாயி அம்மாள் சென்னை வந்து சேர்ந்தார். மாடி ஏற இயலாது என்பதால் ஓர் உணவகத்தின் கீழ்த்தளத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தார்.
எனக்கு அவரைப் பேட்டி காண்பதில் எந்தச் சிக்கலும் இருக்கவில்லை. காரணம் அவர் மூலமே அவர் வாழ்க்கை முழுவதையும் ஏற்கெனவே நன்கு அறிந்தவன் நான்.
பொதிகை நிலையத்தில் ஸ்டூடியோவில் பேட்டி தொடங்கியது. ஒளிவெள்ளம் தன்மேல் விழுந்ததும் ராமாயி அம்மாள் திகைத்தார். தன்மேல் வெளிச்சம் விழுவதை அவர் விரும்பவில்லை போலும்!
என்னிடம் எப்போதும் சகஜமாக உரையாடும் அவரிடம் ஏனோ ஒரு மிரட்சி தென்பட்டது.
நான் கேட்ட கேள்விகளுக்கு எவ்வளவு வற்புறுத்தியும் விரிவாக பதில் சொல்லாமல் `ஆமுங்க, அஆமுங்க` என்று கொங்கு மொழியில் மிகச் சுருக்கமாகவே பதிலளிக்கத் தொடங்கினார்.
நிகழ்ச்சியைக் கண்காணித்துக் கொண்டிருந்த ஸேவியருக்கு என்ன செய்வதெனத் தெரியவில்லை. அரைமணி நேரத்தை ஓட்டியாக வேண்டுமே?
திருப்பூர் குமரன் வரலாறு முழுவதும் எனக்கு அத்துப்படி என்பதால் நான் ஒவ்வொரு சம்பவமாகச் சொல்லி `அது அப்படித்தானே?` எனக் கேட்கலானேன். `ஆமுங்க அஆமுங்க` என என் பேச்சு முழுவதையும் அவர் ஆமோதித்தார். ஒருவழியாகப் பேட்டி முடிவடைந்தது.
ஸ்டூடியோவை விட்டு வெளியே வந்தோம். `கண்கூசற வெளிச்சத்துல எனக்குப் பேச்சே வரல கண்ணு! நீதான் நல்லா சமாளிச்சிட்டியே!` என்று என்னைப் பாராட்டினார் ராமாயி அம்மாள்.
முகத்தின் வியர்வையைத் துடைத்துக் கொண்ட ஸேவியரும், `திருப்பூர் குமரன் பற்றிய தகவல்கள் எல்லாம் வெளிவர வேண்டும் என நினைத்தோம். அவை வெளிவந்து விட்டன. அதுவே நிகழ்ச்சியின் வெற்றிதான்!` என என்னைப் பாராட்டினார்.
நான் வீட்டிற்கு வந்துசேர்ந்தேன். என் நண்பர்கள் பலர் என்னைத் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அங்கலாய்த்தார்கள். நடந்ததன் பின்னணி அவர்களுக்குத் தெரியவில்லை.
`என்ன ஆயிற்று உனக்கு? அந்த மூதாட்டியைப் பேச விடாமல் நீயே பேசிக் கொண்டிருந்தாயே?` எனக் கடிந்துகொண்டார்கள் அவர்கள்!
*ராமாயி அம்மாள் இளம் வயதிலேயே வெள்ளைச் சேலை அணிந்தார். வெள்ளைச் சேலையோடு தொண்ணூறு வயதுக்குமேல் வாழ்ந்து மறைந்தார்.
பதினேழு வயதில் கணவனை இழந்தவர் அவர். எழுபத்து மூன்று ஆண்டுகள் கணவனை இழந்த கைம்மை வாழ்வு.
திருப்பூர் குமரன் உயிர்நீத்த தியாகம், ராமாயி அம்மாள் உயிர்வாழ்ந்த தியாகம் - இரண்டில் எது பெரிது?
திருப்பூர் குமரன் பெயர் எல்லோருக்கும் தெரியும். ஆனால் ராமாயி அம்மாளின் பெயர் எத்தனை பேருக்குத் தெரியும்?.....
குமரன் காலமான ஒரு மாதத்திற்குள் திருப்பூர் வந்த மகாத்மா காந்தி, ராமாயி அம்மாளின் இல்லத்திற்குச் சென்று குமரனின் தியாகத்தை எண்ணி நெகிழ்ச்சியோடு அவரைக் கைகூப்பி வணங்கினார்.
காந்தியே அவரை வந்து பார்த்தார் என்பதால், அதன்பின்னர்தான் மக்களிடையே அவருக்கு மதிப்பு ஏற்பட்டது....
*நடிகர் திலகம் சிவாஜிகணேசன் `ராஜபார்ட் ரங்கதுரை` என்ற படத்தில், இறுதிப் பகுதியில் சிறிதுநேரம் திருப்பூர் குமரன் வேடத்தில் நடித்திருப்பார்.
பிறகு அந்தத் திரைக்கதையின் போக்குப்படி அவர் சுடப்பட்டு இறந்து கீழே விழுவதாக வரும்.
திரைப்படங்களையே பார்த்தறியாத ராமாயி அம்மாள், தன் கணவர் வேடத்தில் நடிகர் திலகம் நடிப்பதாக அறிந்து அந்தப் படத்தைப் பார்க்க விரும்பினார்.
திருப்பூரில் டைமண்ட் தியேட்டரில் அந்தப் படம் ஓடிக் கொண்டிருந்தது. படத்தை அவர் பார்க்க ஏற்பாடு செய்யப்பட்டது.
படத்தைப் பார்த்துக் கொண்டே இருந்த அவர், திருப்பூர் குமரன் பாத்திரமேற்றிருந்த நடிகர் திலகம் இறந்ததாக நடித்த காட்சியைப் பார்த்தவுடன், தான் மயக்கமடைந்து கீழே விழுந்தார்.
பிறகு அவர் மயக்கம் தெளிவிக்கப்பட்டு வீட்டுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டார்.
`நடிகர் திலகத்தின் நடிப்பு எல்லோரையும் மயக்கக் கூடியதுதான். ஆனால் நீங்கள் ஏன் மயங்கி விழுந்தீர்கள்?` என்று அவரிடம் பின்னொருநாள் நான் கேட்டேன்.
`தான் சொல்லும் பதிலைத் தான் உயிரோடிருக்கும் வரை வெளியே சொல்லக்கூடாது` என வாக்குறுதி வாங்கிக் கொண்ட அவர், கண்ணைத் துடைத்துக் கொண்டு சொன்ன பதில் இதுதான்:
`கண்ணு! பத்து வயசுல எனக்குக் கல்யாணம். வயசுக்கு வர்றதுக்கு முன்னாடியே பதினேழு வயிசுலே தாலியறுத்தேன். புருசனோட வாழ்ந்த வாழ்க்கை ஏழு வருசம். அவர் போலிஸ்லே அடிபட்டு சாகறப்ப கூட நான் திருப்பூர்ல இல்லே.
எத்தினி வருசம் ஓடிபபோச்சு. அவர் முகமே எனக்கு மறந்துபோச்சு. இதோ என் புருசன்னு சிவாஜி நடிச்ச அந்தப் பாத்திரத்தையே என் புருசனா நினைச்சுப் பார்த்தேன்.
அந்தப் பாத்திரம் செத்து விழுந்தப்ப உண்மையிலேயே என் புருசன் அபபத்தான் செத்ததா நினைச்சு மயக்கம் போட்டு விழுந்திட்டேன் ராசா. அடடா! என்னமா நடிச்சிருக்காரு!`
`ஆசை முகம் மறந்துபோச்சே! அதை யாரிடம் சொல்வேனடி தோழி` என்ற பாரதியார் பாடல் என் நினைவில் ஓடியது.
நாம் அடைந்திருக்கும் சுதந்திரத்தின் பின்னணியில் எத்தகைய மகத்தான தியாகங்களெல்லாம் இருக்கின்றன என்ற எண்ணத்தில் என் கண்களில் குளம் கட்டியது.
*ஜெயப்பிரகாஷ் நாராயண், பெருந்தலைவர் காமராஜ், எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோரெல்லாம் ராமாயி அம்மாளை பல்வேறு காலகட்டங்களில் வந்து சந்தித்திருக்கிறார்கள்....
எம்.ஜி. ராமச்சந்திரன் காலமான ஓரிரு நாட்கள் கழித்து நான் ராமாயி அம்மாளைச் சந்தித்தேன். `என் பிள்ளை போயிட்டானே!` என அவர் கண்கலங்கினார்.
நான் வியப்போடு `எம்.ஜி.ஆர் எப்படி உங்கள் பிள்ளையாவார்?` எனக் கேட்டேன். அதற்கு அவர் சொன்ன பதில் இன்று முதியோர் இல்லங்களில் பெற்றோரைத் தவிக்கவிடும் பிள்ளைகள் அனைவரும் அறிய வேண்டியது. அவர் சொன்னார்:
`ரொம்ப வருசம் முன்னாடி என்னைப் பாக்க அவர் வந்தாரு. நீ என்ன செஞ்சுக்கிட்டிருக்கேன்னு கேட்டேன். சினிமால நடிச்சுக்கிட்டிருக்கேன்னு சொன்னாரு. நான் சினிமாவெல்லாம் பாக்கறதில்லியேன்னு சொன்னேன்.
என் வீட்டைச் சுத்துமுத்தும் பாத்தாரு. நீங்க என் அம்மா மாதிரின்னு சொல்லி கையில ஒரு பெரிய தொகையைக் கொடுத்தாரு. பிறகு மெட்ராஸ் போனப்புறம் கவர்மென்டில சொல்லி எனக்கு மாசாமாசம் பென்சன் கிடைக்கவும் ஏற்பாடு செய்தாரு.
இப்ப அவரு காலமாயிட்டாரு. ஆனா நான் காலமாற வரையிலும் அவர் ஏற்பாடு செஞ்சு தந்த பென்சனை நான் வாங்கப் போறேன்.
அப்பா அம்மாவை பொருளாதார சிரமம் இல்லாம பாத்துக்கறவன் தானே பிள்ளை? அப்படிப் பாத்தா எம்.ஜி.ஆர்.தான் எனக்குப் பிள்ளை! என் பிள்ளை போயிட்டானே!` என்ற ராமாயி அம்மாள் முந்தானையால் தன் விழிகளைத் துடைத்துக் கொண்டார்.
குமரன் உயிர்நீத்த தொடக்க காலத்தில் தான் பட்ட பொருளாதார சிரமங்களை ராமாயி அம்மாள் என்னிடம் பகிர்ந்து கொண்டதுண்டு. அதைக் கேட்டு என் உள்ளம் கசியும்.
பிற்காலங்களில் ஒரு நடுத்தர வாழ்க்கைக்குத் தேவையான பொருளாதாரம் எம்.ஜி.ஆர். ஏற்பாடு செய்த ஓய்வூதியம் மூலம் அவருக்குக் கிடைத்தது. அவர் இருப்பது போதும் என்று தன்னிறைவோடு வாழும் மனப்பக்குவம் கொண்டிருந்தார்.
பிற்காலங்களில் சுதந்திர தினம், குடியரசு தினம் போன்ற நாட்களில் திருப்பூர்ப் பள்ளிகளில் அவரைக் கொடியேற்றக் கூப்பிடுவார்கள். அவர் மறுக்காமல் அந்த அழைப்புக்களை ஏற்றுக் கொள்வார்.
கொடிக்காக உயிர்நீத்த குமரனின் மனைவிக்கல்லாமல், நம் தேசக் கொடியை ஏற்றி வைக்கும் முதல் உரிமை இந்தியாவில் வேறு யாருக்கு உண்டு?
கொடிக்கயிறை இழுத்து கொடி மேலே சென்று பறப்பதை அண்ணாந்து பார்ப்பார். அவர் விழிகளில் நீர் கசியும்.
கொடியின் முடிச்சவிழ்ந்து கொடியிலிருந்து தற்காலிகமாகக் கீழே உதிரும் மலர்களெல்லாம் தன் கூந்தலிலிருந்து நிரந்தரமாக உதிர்ந்தவை என்று அவர் மனம் நினைத்ததோ என்னவோ?
அவர் தொடக்க காலத்தில் வறுமையில் வாடியதையும் பின்னாளில் கொடியேற்றும் அளவு சமூகத்தில் மதிப்புப் பெற்றதையும் இணைத்து கற்பனைச் சம்பவங்களையும் கலந்து, சுதந்திரத் தியாகி ஒருவவரின் மனைவியைக் கதாநாயகியாக்கி `பட்டொளி வீசி..` என்ற தலைப்பில் சுதந்திரப் பொன்விழா ஆண்டில் நான் ஒரு சிறுகதை எழுதினேன்.
அந்தக் கதையை உள்ளடக்கிய, அதே தலைப்பிலான என் சிறுகதைத் தொகுதியை வானதி பதிப்பகம் வெளியிட்டது. அந்தத் தொகுதி பல பரிசுகளைப் பெற்றது.
ராமாயி அம்மாளின் வாழ்நாள் முழுவதும், எல்லா அரசியல் கட்சிகளும் அவரைத் தங்கள் கட்சியில் சேரச் சொல்லித் தொடர்ந்து வேண்டுகோள் வைத்தன.
`என் கணவர் உயிர்நீத்தது இன்றைய இந்த ஊழல் அரசியலுக்காக அல்ல!` என்று சொல்லி இறுதிவரை எந்தக் கட்சியிலும் அவர் சேராமலிருந்தார்.
அதிகப் படிப்பறிவு இல்லாத அவருக்கு இறுதிநாள் வரை இருந்த சிந்தனைத் தெளிவு வியக்க வைக்கிறது. அதுசரி, அவர் கொடிகாத்த குமரனின் மனைவி அல்லவா!
(இது ஒரு மீள்பதிவு.)
................................................
நன்றி: திரு திருப்பூர் கிருஷ்ணன்
மற்றும்
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக