4 மார்., 2026

புத்தகமும் நானும் -1

இன்று முதல் ஒரு புதிய தொடர். நான் பெரிதும் போற்றும் எனதருமைத்தம்பி எங்கள் குடும்ப வாட்ஸ்ஆப் குழுவில் தொடர்ந்து எழுதிவருவதை இங்கே பதிவு செய்யப் போகிறேன்.

படித்துவிட்டு தங்கள் கருத்துக்களை பகிர்ந்தால் மிகவும் மகிழ்வேன்.

                                                                    தம்பி நெல்லையப்பன் 


 புத்தகமும் நானும் -1
நான் சம்பாதித்த முதல் புத்தகம்
நெல்லையப்பன்  16.06.24

கோட்டையூர் "தஞ்சாவூர் அருணாசலம் செட்டியார் அரசு ஆண்கள் உயர்நிலைப் பள்ளியில், அப்பொழுது நான் பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தேன். பள்ளி ஒரு பேச்சுப் போட்டி அறிவித்திருந்தது. 

1) நான் விரும்பும் தலைவர் 
2) எனக்கு பிடித்த கவிஞர் 
3) உலக அரங்கில் இந்தியாவின் நிலை  

- இந்த மூன்றில் ஏதாவது ஒன்று பற்றி 5 நிமிடங்கள் பேச வேண்டும். அவ்வளவு தான். ஆசிரியர் வகுப்பறையில் சுற்றரிக்கையை சப்தமாக படித்து விட்டு அவராகவே என் பெயரை எழுதிக் கொண்டார்.

TTE ஆன என் அப்பா, அப்பொழுதெல்லாம் இரண்டு மூன்று நாட்களுக்கு ஒருமுறை தான் வீட்டிற்கு வருவார். காலை 6 மணி ரயிலில் வீட்டிற்கு வந்து, குளித்து சாப்பிட்டு 8 மணி ரயிலை அன்று பிடிக்க வேண்டும். மூன்று நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவர் வீட்டிற்கு வருகிறார். அவர் வீட்டிற்குள் நுழைந்தவுடன் நான் விஷயத்தைச் சொன்னேன்.

"சரி எழுதிக் கொள்" என்று உடை மாற்றிக் கொண்டே சொல்ல ஆரம்பித்தார். அவர் சொன்ன வேகத்திற்கு என்னால் எழுத முடியவில்லை. திரும்பத் திரும்ப கேட்டுக் கேட்டு எழுதினேன். இடையில் அம்மாவுடன் கணக்கு வழக்கு. வீட்டில் இருந்த மற்ற 8 குழந்தைகளுடன் (இரண்டு அக்காமார் திருமணமாகி புக்ககம் சென்று விட்டிருந்தனர்)  கொஞ்சி, பேசி,  கோரிக்கைகளுக்கு செவி சாய்த்து, தனக்கு அவர்கள் ஒவ்வொருவரும் எவ்வளவு முக்கியம் என்று, ஒவ்வொருவரையும் உணர வைத்து, குளித்து, இடைஇடையே கட்டுரை வரிகளை என்னிடம் சொல்லியபடி, வெங்காய சட்னி வச்சு ஒரு இட்லி, நேற்று திரிச்ச மிளகாய் பொடிக்கு ஒரு இட்லி, பழைய புளிக்குழம்பு உங்களுக்கு பிடிக்குமே என்று அதற்கு ஒரு இட்லி என்று அம்மையையும் திருப்தி செய்து, கட்டுரையையும் திருத்திக் கொடுத்து, என்னை பின்னால் உட்கார வைத்து சைக்கிளை மிதி மிதி என்று மிதித்து, ஸ்டேஷனில் கிட்டத்தட்ட ஓடிப்போய்   ரயில் ஏறினார் அப்பா. பாருங்கள்! எழுதும் எனக்கே மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்குகிறது. 

 அப்பாவின் நேர மேலாண்மை அசர வைக்கிறது. அதற்கு மற்றொரு சான்று இருபது வருடங்களில் 11 குழந்தைகள்.

மத்திய சர்க்கார் உத்தியோகம் என்றாலும், அந்த இழுத்துக்ககோ, பறிச்சிக்கோ சம்பளத்தில், பல பெட்டிகளை ஒற்றையாக இழுக்கும் குட்ஸ் இன்ஜின் போல
இருந்தார் அப்பா. ஆனால் அப்பா சோகமாக இருந்தோ, கவலையுடன் சோர்வுற்று இருந்தோ நாங்கள் பார்த்ததே இல்லை. தந்தையர் தினத்தில் இதை நான் எழுதிக் கொண்டிருக்கும் போது எங்கிருந்துதான் இத்தனை கண்ணீர் கண்களில் வந்து முட்டுகிறதோ! 

தான் பெற்ற 11 குழந்தைகள், அந்த குழந்தைகளை பெற்றுக் கொடுத்த தன் மனைவி (*எனக்குத் தெரிந்து உலகத்திலேயே தொடர்ந்து 20 ஆண்டுகள் தான் பெற்ற 11 குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுத்த ஒரே பெண்மணி*) இவர்கள் மனம் ஒரு கிஞ்சித்தும் வாடிவிடக் கூடாது என்பதற்காக எதை வேண்டுமானாலும் செய்பவராக, சிரித்த முகத்துடன், வானளாவிய நகைச்சுவை உணர்வுடன் இருந்தவர் அப்பா.

                                                               எங்கள் தந்தையார் 


நிற்க! கட்டுரை போட்டி என்னாச்சு?  "புத்தகமும் நானும்" என்ற தலைப்பு எதற்கு? இருங்கள், பக்கத்தில் வந்து விட்டோம்.

11ஆம் வகுப்பு மாணவர்கள் பத்து பேர்  கலந்து கொண்ட அந்தப் போட்டியில் நான் ஒருவன் மட்டுமே 10ஆம் வகுப்பு மாணவன். பேசிய அனைவருமே காந்தி, காமராஜர் அல்லது பாரதி பற்றியே பேசினர். நான் ஒருவன் மட்டுமே "உலக அரங்கில் இந்தியாவின் நிலை" என்ற தலைப்பில் தட்டுத் தடுமாறிப் பேசினேன். 

என்னைவிட நான்கு, ஐந்து மாணவர்கள் நன்றாக பேசியதாக நான் நினைத்த போதும், எனக்கு இரண்டாவது பரிசு கிடைத்தது.

அந்த வருட பள்ளி ஆண்டு விழாவில், பேச்சுப் போட்டி- இரண்டாம் பரிசு- எஸ்.நெல்லையப்பன் என்று ஒலி பெருக்கியில் அறிவிக்க நான் பெருமையுடன் மேடையேறி அந்த பரிசை பெற்றுக் கொண்டேன். பரிசாகக் கிடைத்தது ஒரு புத்தகம். 

கவியரசர் கண்ணதாசன் அவர்கள் எழுதிய அந்த புத்தகம் "தைப்பாவை". அது ஒரு கவிதை புத்தகம். நான் அதை அடிக்கடி கையில் எடுத்து அழகு பார்ப்பேன். இரண்டொரு நாளில் வீட்டிற்கு  வந்த அப்பாவிடம் புத்தகத்தை கொடுத்தேன்.  அவர் சாய்வு நாற்காலியில் அமர்ந்து அதை படிக்கத் தொடங்கினார்.  நான் பெருமையுடன் அருகில் நின்றிருந்தேன். உண்மையில் அது அவருக்குக் கிடைத்த பரிசு தானே!.

 இப்படியும் சொல்லலாம்- நான் என் வாழ்க்கையில் முதன் முதலாக சம்பாதித்தது ஒரு புத்தகத்தை. அதன் அன்றைய விலை ரூபாய் மூன்று. 

அதன் பிறகு அந்த புத்தகம் எங்கே போனது என்று தெரிய வில்லை. நானும் அந்த புத்தகத்தை இன்று வரை படிக்க வில்லை. இன்று என் நூலகத்தில், தமிழிலும் ஆங்கிலத்திலுமாக  சுமார் 3000 புத்தகங்கள் இருப்பினும், அதில் "தைப்பாவை" பிரதி இல்லை. உங்கள் யாரிடமேனும் இருக்கிறதா கண்ணதாசனின் "தைப்பாவை"?
🙏🙏🙏

(தொடரும்)

கருத்துகள் இல்லை: