5 மார்., 2026

புத்தகமும் நானும் -2: இரும்புக்கை மாயாவி - சித்திரக்கதைகள்

புத்தகமும் நானும் -2
இரும்புக்கை மாயாவி- சித்திரக்கதைகள்

நெல்லையப்பன் 18.06.24


அரிசியின் மேலே அவனவன் பெயரை ஆண்டவன் எழுதி வைப்பான். அதை அடுத்தவன் யாரும் கெடுப்பதற் கில்லை; அவனவன் தின்றே தீர்ப்பான். இது ஒரு திரைப்படப் பாடல் வரி. இஸ்லாமிய வேதம் சொன்ன கருத்தை, பாடலாசிரியர் கவித்துவமாக, அதே சமயம் எளிமைப் படுத்திச்  சொல்கிறார்.

ஆண்டவனின் இன்னொரு விளையாட்டைப் பாருங்கள்.  ஒரு மனித உயிரை படைத்து, அதை இரண்டாகப் பிரித்து பூமியை நோக்கி வீசி விடுவாராம். அவை வெவ்வேறு இடத்தில், வெவ்வேறு காலக்கட்டத்தில், கருவினுள் புகுந்து,  ஒன்று ஆணாகவும்,  மற்றது பெண்ணாகவும், பிறந்து, வளர்ந்து, தன் உயிரின் இன்னொரு பாதியை தேடோதேடென்று தேடிக் கண்டடைந்து இணைந்து விடுமாம். இந்த தேடலில் தான் சிக்கலே இருக்கிறது.

 பருவம் அடைந்த பிறகு பார்க்கும் ஒவ்வொருவரையும், இவர் தானா, இவர் தானா என்று மனம் மயங்கி, குடும்பத்தினர், நண்பர்கள் செய்த குழப்பங்களும் சேர்ந்து, அவசரக் கோலத்தில்  பெரும் பிழை நேர்ந்து விடுகிறது. அதைத்தான் நாம் திருமணம், காதல், கள்ள உறவு, பாலியல் வன்கொடுமை, என வெவ்வேறு பெயரால் அழைக்கிறோம். அப்பா ஆண்டவா!, நீ விளையாட இந்த மனிதப் பயல் தானா கிடைத்தான்?

புத்தகம் பற்றியும் இதே போன்ற ஒரு கருத்து உண்டு.  "அச்சு ஏறும் ஒவ்வொரு புத்தகத்தின் ஒவ்வொரு பிரதியிலும்,  முதல் பக்கத்தில், அதை யார்யார் படிக்கப் போகிறார்கள் என்பது, கண்ணுக்குத் தெரியாத ஒரு மையினால் எழுதப்பட்டு இருக்குமாம்.  அந்தப் புத்தகம் அவர்களை எப்படியோ தேடிச் சென்று சேர்ந்து விடுமாம்.

சரி, அப்படி சென்று சேர்ந்து விட்டாலும், அவன் உடனே படித்து விடுவானா என்ன? கல்லாகச் சமைந்த அகலிகை, ராமன் கால் படாதா என்று  காத்துக் கிடந்தது போல், வாசிப்பவன் கை படாதா! என்று புத்தகங்களும் தவமிருக்கும் போலும்.

சித்திரக் கதைகள் இவற்றிலிருந்து மிகவும் வேறுபட்டவை. கையில் எடுத்தால்  ஒரே மூச்சில் முடித்து விட்டுத்தான் மறுவேலை. அப்போது எனக்கு 10 வயது. எங்கள் வீட்டிற்கு எதிர் வீட்டில் சபாபதி அம்மாவின் 6 பையன்களில் முதல் மூவர் எனக்கு தோழர்கள். அவர்கள் வீட்டில், கடைக்கு வந்த அன்றே *"முத்து காமிக்ஸ்"* புத்தகங்களை நைனா வாங்கி வந்து விடுவார். முதலில் அவர் படித்து விட்டு பிள்ளைகளிடம் கொடுப்பார். (காமிக்ஸ் சிறார்களுக்கே என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும் தவறு. அது எல்லா வயதினருக்கும், இரு பாலருக்கும் ஆனது.)  ஒரு பிரதியை 20 , 30 பேர், போட்டி போட்டுக் கொண்டு படிப்போம். 

என் வாசிப்பு அனுபவத்தை தொடங்கி வைத்தவர் முத்து காமிக்ஸ்  திரு.முல்லை தங்கராசன் அவர்கள் தான். என் "புத்தகக் கோட்டி"க்காக நீங்களோ, என் குடும்பத்தினரோ யாரையாவது உதைக்க வேண்டும் என்று நினைத்தால் முதன்மையானவர் அவர்தான்!  ஆனால் துரதிஷ்டம், இன்று அவர் இல்லை. வாழ்க்கையின் மிகப் பெரிய முரண், பல இளைஞர்களுக்கு கற்பனை மற்றும் creativity என்ற வாசலை விரியத் திறந்து விட்ட அவர், பின் ஒருநாள், பலர் கலந்து கொண்ட ஒரு விழாவில், உயரமான மாடியில் இருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொண்டாராம். என்ன சொல்ல.


எப்படிப் பட்ட கதைகள்! கருப்பு வெள்ளையில் விழிகளை விரிய வைத்த படங்கள்!!
 அடடா, என்னே கற்பனை வளம்! அவர் உருவாக்கிய இரும்புக் கை மாயாவி, லாரன்ஸ் & டேவிட், ஜானி நீரோ & ஸ்டெல்லா எல்லாம் எங்களின் *கதாநாயகர்கள்* எங்களின்  *ஒரே எதிரி* அ.கொ.தீ.க ( அழிவு, கொள்ளை, தீயவர் கழகம்). இது வேறு கழகம். தி.மு.க, அ.தி.மு.க வோடு நீங்கள் போட்டுக் குழப்பிக் கொள்ளக் கூடாது. ஆங்! ஒரே எதிரி என்றா சொன்னேன்?வேண்டுமானால் சில ஆசிரியர்களையும் இதில் சேர்த்துக் கொள்ளலாம்.

நம் பள்ளிப் பாடத் திட்டங்கள் இன்னும் கொஞ்சம் creative ஆக இருந்தால் சித்திரக் கதைகளின் மூலம் பல நல்ல விசயங்களை மாணவர்களுக்கு புரியும் படி சொல்லி எளிதில் மனதில் பதிய வைக்க முடியும். ஏன் இன்னும் *மஞ்சள் பூ மர்மம்* எந்த வகுப்பிற்கும் பாடமாக வைக்கப்பட வில்லை?

வாசிப்பின் பரிணாமத்தை நான் இப்படிச்  சொல்வேன்.

படங்களை பார்த்து பெயர் சொல்லுதல் - பாட்டி, தாத்தா, அம்மாவிடம் கதை கேட்டல் - படங்களை பார்த்துக்  கதை சொல்லுதல்  - சித்திரக் கதைகளை எழுத்துக் கூட்டிப் படித்தல் - நன்நெறிக் கதைகள்- தெனாலிராமன், அக்பர், பீர்பால் கதைகள்- திகில், மர்மம், துப்பறியும் கதைகள் - சரித்திர நாவல்கள்- காதல் கதைகள்- காமம், பாலியல் கதைகள்- வீர, தீரக் கதைகள்- புரட்சி -சமூக அவலம் - வர்க்கம் - பெண்ணியம் - ஆன்மிகம் - கட்டுரைகள்- ஆய்வுகள்- சூரியனுக்கு கீழுள்ள எல்லாமும்.

இந்தச் சங்கிலியின் ஆரம்ப கண்ணிகளில் ஒன்றான தாத்தா, பாட்டி, அம்மாவிடம் கதை கேட்டல் என்ற இடத்திலேயே சங்கிலி அறுந்து விடுவது தான் பெரும் சோகம்.

புத்தகமே படிக்காதவர்கள் பற்றி என் சொல்ல? 

ஒன்று செய்யலாம். அவர்களுக்காக, எழுந்து நின்று ஒரு நிமிடம் நாம் மௌனம் அனுஷ்ட்டிப்போம்!

கருத்துகள் இல்லை: