6 செப்., 2009

பாரதி கவிதைகள்-19: "சென்றது மீளாது"

சென்றதினி மீளாது மூடரே! நீர்
எப்போதும் சென்றதையே சிந்தைசெய்து
கொன்றழிக்கும் கவலையெனும் குழியில் வீழ்ந்து
குமையாதீர், சென்றதனைக் குறித்தல் வேண்டாம்.
இன்று புதிதாய்ப் பிறந்தோம் என்று நீவிர்
எண்ணமதைத் திண்ணமுற இசைத்துக் கொண்டு
தின்று விளையாடி இன்புற்றிருந்து வாழ்வீர்
தீமைஎலாம் அழிந்துபோம், திரும்பி வாரா.

நல்வழி-3:

வருந்தி அழைத்தாலும் வாராதன வாரா
பொருந்துவன போமேன்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தானினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

இயற்கை உணவுக் குறிப்பு-6: "வேப்பம்பூ"

வேப்பம்பூவிற்கு இரத்தத்தை சுத்தம் செய்யும் ஆற்றல் உண்டு. மேலும் பித்தத்தை தணிக்கவும் செய்யும். எனவே வாரம் ஒரு முறையோ அல்லது பத்து நாட்களுக்கு ஒரு முறையோ வீட்டில் வேப்பம்பூ ரசம் வைத்து சாப்பிடலாம்.

இன்றைய சிந்தனைக்கு-70:

நிறையுடைமை நீங்காமை வேண்டின் பொறையுடைமை
போற்றி ஒழுகப் படும்.

நிறைகுணம் உள்ளவன் என்ற பெருமை நீங்காமலிருக்க வேண்டுமானால், பொறுமை காத்து அதற்கிணங்க நடந்து கொள்ளவேண்டும்.

4 செப்., 2009

வீடீயோ கவிதைகள்-4: "இந்தியக் காதல்"



மனமார்ந்த நன்றிகள்: கவிப்பேரரசு வைரமுத்துவிற்கும், rkaruncreations மற்றும் YouTube.

நெஞ்சில் நிலைத்த பாடல்கள்-6:



மனமார்ந்த நன்றிகள்: கவிஞர் பா.விஜய், இசையமைப்பாளர் பரத்வாஜ், இயக்குனர் சேரன், கமலேஷ்குமார் மற்றும் YouTube

இன்றைய சிந்தனைக்கு-69:

கற்க கசடற கற்பவை கற்றபின்
நிற்க அதற்குத் தக.

அனைவரும் அறிந்த குறள்தானே என்கிறீர்களா? ஆனால் அன்றாட வாழ்க்கையில் நமது அனுபவங்கள் அதைப் பிரதிபலிப்பதாக இல்லையே, ஏன்? (அன்புடைமை, அருளுடைமை, அழுக்காறாமை, அறிவுடைமை, இனியவை கூறல், இன்னா செய்யாமை, ஒழுக்கமுடைமை, கொல்லாமை, சான்றாண்மை, செய்நன்றி அறிதல், பண்புடைமை, பொய்யாமை, பிறனில் விழையாமை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.) என்னில் தொடங்கியே எழுதுகிறேன். ஒருவேளை நாம் மேலோட்டமாக படித்துவிட்டு மறந்துவிட்டோமா? இதன் ஆழமான பொருளை சிந்தித்துப் பார்க்கிறோமா? சற்றே ஆழமாகத்தான் பார்ப்போமே!

1. கற்க - கற்கவேண்டும்; படிக்கவேண்டும்;
2. கசடற - ஐயந்திரிபுற கற்கவேண்டும்; தெளிவாகப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும்.
3. கற்பவை - கற்க வேண்டியவற்றை மட்டுமே கற்கவேண்டும். வேண்டாத குப்பைகளையெல்லாம் படித்துவிட்டு, மனம் குழம்பி அல்லது மனம் கெட்டு, நேரத்தைப் பாழாக்கி, தவறான பாதையில் செல்லக் கூடாது.
4. கற்றபின் நிற்க அதற்குத் தக - வாழ்க்கையில் நம்மை மேல்நோக்கிச் செலுத்தும் உன்னதமான நூல்களை மட்டும் கற்று, பின் அவற்றின்படி ஒழுக வேண்டும்; வாழவேண்டும்.

இன்றிலிருந்தாவது முயன்று பார்க்கிறேன். நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

3 செப்., 2009

நல்வழி-2:

புண்ணியமாம் பாவம்போம் போனநாள் செய்தவை
மண்ணில் பிறந்தார்க்கு வைத்தபொருள் - எண்ணுங்கால்
ஈதொழிய வேறில்லை எச்சமயத்தார் சொல்லும்
தீதொழிய நன்மை செயல்.

எல்லா மதங்களுமே தீயவற்றை விளக்கி நல்லதை மட்டுமே செய்க என்று அறிவுறுத்துகின்றன.

பாரதி கவிதைகள்-18: "அறிவே தெய்வம்"

ஆயிரந் தெய்வங்கள் உண்டென்று தேடி
அலையும் அறிவிலிகாள்
பல்லாயிரம் வேதம் அறிவொன்றே தெய்வமுண்டாம்
எனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனை போற்றி
மயங்கும் மதியிலிகாள்
எதனூடும் நின்றோங்கும் அறிவொன்றே தெய்வம்
என்றோதி அறியீரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறும்
சுருதிகள் கேளீரோ? - பல
பித்த மதங்களிலே தடுமாறிப்
பெருமை அழிவீரோ?

வேடம் பல்கோடியோர் உண்மைக்கு உளவென்று
வேதம் புகன்றிடும் - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை என்று கொள்வீரென்று அவ்
வேதம் அறியாதே.

நாமம் பல்கோடியோர் உண்மைக்கு உளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீர் உண்மையென்று கொள்வீரென்று அந்
நான்மறை கண்டிலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணும் நிலையாமே - உப
சாந்த நிலையே வேதாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டும் மறைகளெல்லாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்கு
அவங்கள் புரிவீரோ?

உள்ளது அனைத்திலும் உள்ளொளி ஆகி
ஒளிந்திடும் ஆன்மாவே - இங்கு
கொள்ளற் கரிய பிரமமென்றே மறை
கூவுதல் கேளீரோ?

மெல்லப் பலதெய்வம் கூட்டி வளர்த்து
வெறுங் கதைகள் சேர்த்துப் - பல
கள்ள மதங்கள் பரப்புதற்கோர் மறை
காட்டவும் வல்லீரோ?

ஒன்று பிரமமுள்ளது உண்மை அஃதுன்
உணர்வெனும் வேதமெலாம் - என்றும்
ஒன்று பிரமமுள்ளது உண்மை அஃதுன்
உணர்வெனக் கொள்வாயே.