19 டிச., 2009

பயணங்கள்-5: "திருக்குற்றாலம்"

"ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே, குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" என்ற சி.எஸ்.ஜெயராமனின் குரல் இன்றும் செவியில் ஒலிக்கிறது. சென்ற ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு கிரகப்ரவேசம், ஒரு கல்யாணம் இவற்றைச் சாக்காக வைத்துக்கொண்டு திருக்குற்றாலம் சென்று வந்தேன் நெல்லையப்பனுடன். என்னவோ தெரியவில்லை இதுவரை அதைப்பற்றி எழுத முடியாமல் தள்ளிக்கொண்டே போய்விட்டது. "Better Late Than Never".

"திங்கள் முடி சூடும் மலை, தென்றல் விளையாடும் மலை" என்று தென்பொதிகை மலை பற்றி நிறையச் சொல்லலாம். திருகூட ராசப்பக் கவிராயரின் "திருக்குற்றாலக் குறவஞ்சி" என்று என்னென்னவோ நினைவில் வந்தது.

நெல்லையில் வாழ்ந்த காலத்தில் நினைத்தால் குற்றாலம். சீசன் காலங்களில் குடும்பத்துடன் குற்றாலம் சென்று ஒரு வாரம் வரை தங்கி மகிழ்ந்திருக்கிறோம். தற்போது பல ஆண்டுகளுக்குப்பின் குற்றாலம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

தங்குவதற்கு வசதியாக கீழ்த் தளத்திலேயே நல்ல அறை கிடைத்தது. பொருட்களையெல்லாம் அறையில் போட்டுவிட்டு நானும் நெல்லையும் சுற்றக் கிளம்பிவிட்டோம்.

"உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையுங்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தா உன்குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே"

எனக் குற்றாலநாதரை இறைஞ்சி மாணிக்கவாசகர் பாடிய பாடல் கூத்தர் கோவில் வாசலில் கண்ணில் பட்டது.

மெயின் ஃ பால்ஸ் எனும் முக்கிய அருவியைச் சுற்றிவந்தோம். பின் ஐந்தருவிப் பாதையில் காலாற நடந்தோம். எழில் கொஞ்சும் இயற்கை அழகைச் சொல்லி மாளாது. எனது கேமெராவில் இஷடப்படி சுட்டுத்தள்ளினேன்.

மறுநாள் விசுவும் எங்களோடு சேர்ந்துகொண்டான். அப்புறம் கேட்பானேன். ஐந்தருவிக்குச் சென்று குளித்தோம். அங்கேயும் படங்கள்.

குற்றாலக் கடைவீதியில் நிறைய பொருட்கள். வீட்டிற்கு வேண்டுவன, குறிப்பாக ஜாதிக்காய் ஊறுகாய், வாங்கினோம். எனக்குத் தெரிந்து ஜாதிக்காய் ஊறுகாய் வேறெங்கும் கிடைப்பதில்லை. மேலும் சுவையான உணவு.
முன்னிரவில் அறையில் அரட்டைக் கச்சேரி.

அடுத்த நாள் மனமின்றி குற்றாலத்தைவிட்டு ஊருக்குக் கிளம்பினோம். குற்றாலத்தில் எடுத்த படங்களில் சிலவற்றை மட்டும் மேலே தனியே பதிவு செய்துள்ளேன்.

திருவெம்பாவை-4:

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-4:

ஆழி மழைக்கண்ணா! ஒன்று நீ கைகரவேல்
ஆழியுள் புக்கு முகந்துகொடார்த்தேறி
ஊழி முதல்வன் உருவம்போல் மெய்கறுத்து
பாழியந் தோளுடைப் பற்பநா பன்கையில்
ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றதிர்ந்து
தாழாதே சார்ங்கம் உதைத்த சரமழைபோல்
வாழ உலகினில் பெய்திடாய் நாங்களும்
மார்கழி நீராட மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.

18 டிச., 2009

திருவெம்பாவை-3:

முத்தன்ன வெண்நகையாய் முன்வந்து எதிர் எழுந்தென்
அத்தன் ஆனந்தன் அமுதனென்ற உள்ளூறித்
தித்திக்கப் பேசுவாய் வந்துன் கடை திறவாய்
பத்துடையீர் ஈசன் பழ அடியீர் பாங்குடையீர்
புத்தடியோம் புன்மை தீர்த்தாட் கொண்டார் பொல்லாதே
எத்தோ நின் அன்புடைமை எல்லாம் அறியோமே
சித்தம் அழகியார் பாடாரோ நம் சிவனை
இத்தனையும் வேண்டும் நமக்கேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-3:

ஓங்கி உலகளந்த உத்தமர் பேர்பாடி
நாங்கள் நம் பாவைக்குச் சாற்றி நீராடினால்
தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து
ஓங்கு பெருஞ்செந்நெல் ஊடு கயலுகள
பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப
தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி
வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும்பசுக்கள்
நீங்காத செல்வம் நிறைந்தேலோர் எம்பாவாய்.

17 டிச., 2009

இன்றைய சிந்தனைக்கு-87:

பக்தியினால் உண்டாகும் மேன்மைகள் பலவாகும். நம் சித்தம் தெளிவாகும். செய்யும் செயல்கள் அனைத்திலும் செம்மை பிறக்கும். கலைகளில் நாட்டம் செல்லும். நல்ல வீரர்களின் உறவு வரும். மனம் உண்மை இன்பத்தை உணரத்துவங்கும். - மஹாகவி சுப்பிரமணிய பாரதியார்

நன்றி: தினமலர்

திருவெம்பாவை-2:

பாசம் பரஞ்சோதிக்கென்பாய் இராப்பகல் நாம்
பேசும் போதெப்போது இப்போதார் அமளிக்கே
நேசமும் வைத்தனையோ நேரிழையாய் நேரிழையீர்
சீசி இவையுஞ் சிலவோ விளையாடி
ஏசும் இடம் ஈதோ விண்ணோர்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
தேசன் சிவலோகன் தில்லைச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பர் யாம் ஆரேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-2:

வையத்து வாழ்வீர்காள்! நாமும் நம் பாவைக்குச்
செய்யும் கிரிசைகள் கேளீரோ பாற்கடலுள்
பையத்துயின்ற பரமன் அடிபாடி
நெய்யுண்ணோம் பாலுண்ணோம் நாட்காலே நீராடி
மையிட்டு எழுதோம் மலரிட்டு நாம் முடியோம்
செய்யாதன செய்யோம் தீக்குறளை சென்றோதோம்
ஐயமும் பிச்சையும் ஆந்தனையும் கைகாட்டி
உய்யுமா றெண்ணி உகந்தேலோர் எம்பாவாய்.

16 டிச., 2009

திருவெம்பாவை-1:

ஆதியும் அந்தமும் இல்லா அரும்பெரும்
சோதியை யாம்பாடக் கேட்டேயும் வாள் தடங்கண்
மாதே வளருதியோ வன்செவியோ நின்செவிதான்
மாதேவன் வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலி போய்
வீதிவாய்க் கேட்டலுமே விம்மிவிம்மி மெய்ம்மறந்து
போதார் அமளியின் மேல் நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே
ஈதே எந்தோழி பரிசேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-1:

மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளால்
நீராடப் போதுவீர் போதுமினோ நேரிழையீர்!
சீர்மல்கும் ஆய்ப்பாடி செல்வச் சிறுமீர்காள்
கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
கார்மேனிச் செங்கண் கதிர்மயம் போல்முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
பாரோர் புகழப் படிந்தேலோர் எம்பாவாய்.