29 ஆக., 2008

நெல்லையப்பன் கவிதைகள்-17: "நம்பிக்கை விற்பவன்"

மழையில் நனைந்தபடி வந்து,
கிளிக்கூண்டு நனையாதபடி
தன் பழைய சைக்கிளை நிறுத்திவிட்டு,
ரோட்டோர உணவகத்தின் உள்ளே,
பையத் துழாவி சில்லறைகளை
பலமுறை எண்ணிப்பார்த்துவிட்டு,
மழையால் தொழில் பாதிக்கப்பட்டதாக
மழையை கெட்டவார்த்தையில் திட்டி,
"இதெல்லாம் ஒரு பிழைப்பா?" என்று
தன்னைத்தானே நொந்துகொண்டு,
அரைச்சாப்பாடு கிடைக்குமா என்று
தயங்கியபடி கேட்டவனுக்கு,
தலைவாழை இல்லை போட்டு,
சிறப்பு சாப்பாடாக
ஒவ்வொன்றாய் பரிமாறியபடி
முதலாளி சொன்னார்:
"உன் பெருமை உனக்குப் புரியவில்லை;
அரசு செய்யமுடியாததை,
அப்பன் ஆத்தா செய்யத் தவறியதை,
கிளி ஜோதிடன், நீ செய்கின்றாய்!"
நீ நம்பிக்கை விற்கின்றாய்;
நாடிவருபவற்கு நல்லது சொல்கின்றாய்;
உருப்படாமல் போய்விடுவாய் என்று
ஒருவருக்கும் நீ சொல்வதில்லை.
இடரினி இல்லை என்றும்,
விரைவில் துன்பம் விலகும் என்றும்,
நம்பிக்கை விதைக்கும் நீ
நல்ல தொழில் செய்கின்றாய்;
உனக்கு சாப்பாடு போடுவதில்

சந்தோசம் எனக்குத்தான் ;
பணம் தரவேண்டாம் நீ,
நன்றாகச் சாப்பிடப்பா"
வயிறுமுட்டச் சாப்பிட்டபின்
கிழிக்கும் உணவு தந்துவிட்டு,
கைதொழுது சொன்னான்:
"ஐயா, பெரியவரே!
இனி எனக்கு கலக்கமில்லை,
இந்தத் தொழில் பற்றி வருத்தமில்லை,
மழையைப் பார்த்தால்ஆகாதையா!
விரைந்து நான் போக வேண்டும்,
நாலு பேருக்காவது
நம்பிக்கை கொடுக்க வேண்டும்!"

கருத்துகள் இல்லை: