23 அக்., 2008

நலக்குறிப்புகள்-17: "அருகம்புல்லின் சிறப்புகள்" - ச.வெ.சுப்பிரமணியன்

இயற்கை வாழ்வியல் அல்லது உணவு மருத்துவத்தில் அருகம்புல்சாறு முதலிடம் பெறுகிறது. இதன் சிறப்பும் பண்பும் பலவாகும். அருகம்புல்லில் பச்சையம் நிறைந்துள்ளது. காரத்தன்மை உடையது. உயிர்ச்சத்துக்களும், தாது உப்புக்களும் இருக்கின்றன. உடல்தளர்ச்சியை நீக்கி, கட்டுமாறா உடலுறுதியைத் தரவல்லது. உடலிலுள்ள நச்சுத்தன்மைகளை நீக்குகிறது.

உடற்பிணிகள் அனைத்துக்கும் முதற் காரணமான குருதியின் அமிலத்தன்மையை சீர்செய்து, குடற்புண்களை குணப்படுத்துகிறது. ஆக்கச்சிதைவு மாற்றத்தை சீர்செய்து, நரம்புத் தளர்ச்சியிலிருந்து பாதுகாக்கிறது. இரத்தத்தைக் கூடுதலாக்கி, இரத்தச் சோகையை நீக்குகிறது. இதயம், நுரையீரல் போன்றவற்றின் சீரான இயக்கத்திற்குத் துணைபுரிகிறது. கல்லீரலில் இறுக்கம் உண்டாகி கற்கள் படிவதைத் தடுக்கிறது. இரத்த அழுத்தத்தைச் சீராக்குகிறது.

சிறுநீரகத்தின் குறைபாட்டினை நீக்கி அது சீராகப் பணிபுரிய உதவுகிறது. பல் ஈறுகளில் இரத்தம் வடிதலை நிறுத்தி, பற்களை உறுதிப் படுத்துகிறது. பற்களை வெண்மையாக்கி, வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது. பிள்ளைப்பேறு காலத்தில் தாய்மார்களுக்கு பால்சுரப்பை உண்டுபண்ணுகிறது. நச்சுப் பொருட்களால் உண்டாகும் புற்றுநோயைத் தடுக்கிறது. இதில் இன்சுலின் நிறைந்துள்ளதால் நீரழிவுக்கு நன்மருந்தாகும். நாளமில்லாச் சுரப்பிகளின் இயக்கத்தை இது சீர்படுத்துவத்தின் மூலம், ஆஸ்துமாவிலிருந்து நலம்பெற உதவுகிறது.

உடலின் வெக்கையை நீக்க உதவும். உணவுப் பாதையில் நடைபெறும் தொடர் அலை அசைவை சீர்செய்து, மலச்சிக்கலை நீக்கி, உடல்நல உயர்வினை நல்குகிறது. தோல் தொடர்பான பிணிகளுக்கு சிறந்த பயனளிக்கிறது.

அருகம்புல் சாற்றினை காலை வெறும் வயிற்றில் உணவாகக் கொள்ளலாம். உணவைக்குடி, நீரை உன் என்ற சொற்றொடரை மனதில் கொண்டு, நன்கு சுவைத்து, சிறிது சிறிதாக உமிழ் நீருடன் கலக்கும்படி வாயில் ஊறவைத்து உண்ணவேண்டும். குடித்த இரண்டு மணி நேரத்திற்கு நீரின்றி பிற உணவுகளைக் கொள்ளலாகாது.

நன்றி: திரு ச.வெ.சுப்பிரமணியன், அறிக அறிவியல், ஜனவரி 1995.

கருத்துகள் இல்லை: