5 மார்., 2009

நெல்லையப்பன் கவிதைகள்-61: "பேன்"

பேன்

தலை நகர் வாசம்
தலைவியருடன் சகவாசம்

மேட்டுக்குடி பிறப்பு
எனவேதான் வசிப்பதில்லை
தாழ்த்தப்பட்டோர் குடியிருப்பாம்
மீசையிலும், புருவத்திலும்

தலைநகர்தான் என்றாலும்
வாசம் புரிவதில்லை
வழுக்கைத் தலையில்

இது கடிக்கும், இரத்தம் குடிக்கும்,
சீப்பின் பற்களுக்கு டிமிக்கி கொடுக்கும்,

சிறைபிடிக்க
பேன் சீப்பு என்னும்
ஸ்பெஷல் சீப்பு வேண்டும்.

சிகைக்காய் இவருக்கு பகைக்காய்
இவருக்கு பிடிக்காத பூ ஷாம்பூ!

சில சமயம்
வேலைக்காரியின் தலையிலிருந்து
வீட்டுக்காரியின் தலைக்கு வந்து
கனவன்மார்களைக் காட்டிக் கொடுக்கும்

மனிதர்களே!
ஈரைப் பேனாக்கி
பேனைப் பெருமாளாக்கும்
வித்தை தெரிந்தோரே!
அழுக்கைச் சேர விடவேண்டாம்
தலையிலும் மனத்திலும்

பலவுண்டு
நாம் பேண வேண்டியவை
பேன் வேண்டாமே
!

கருத்துகள் இல்லை: