13 ஜூன், 2009

நினைத்துப் பார்க்கிறேன்-2: "ஸ்பெக்ட்ரம் ஸ்கேம்"

பாரதி புத்தகாலயம், சென்னை, வெளியிட்டுவரும் "புதிய புத்தகம் பேசுது" மாத இதழின் சந்தாதாரர் நான். இது போன்ற பல பத்திரிக்கைகளுக்கு சந்தா செலுத்திவிட்டு படிக்க முடியாமல் போகிறதே என்ற குற்ற உணர்வு அவ்வப்போது தோன்றும். அதிலும் பல இதழ்களுக்கும் ஆயுட் சந்தா செலுத்தியிருக்கிறேன். தரமான இதழ்களுக்கு தார்மீக ஆதரவு என்று சொல்லி சமாதானப் படுத்திக் கொள்வேன்.

நேற்று "புதிய புத்தகம் பேசுது" மே 2009 இதழை புரட்டிப் பார்த்தேன். பாரதி புத்தகாலயம் வெளியிட்டுள்ள புதிய புத்தகங்கள் பற்றிய விளம்பரத்தைப் பார்த்தேன். அதில் ஒன்று என் கவனத்தை ஈர்த்தது. அது, அன்வர் என்பவர் எழுதிய "ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல்" எனும் குறும் புத்தகம். நான் அந்தப் புத்தகத்தை இன்னும் பார்க்கவோ படிக்கவோ இல்லை. விலை ரூபாய் ஐந்து என்று போட்டிருப்பதால் குறும்புத்தகம் என்று எழுதிவிட்டேன்.

இந்த ஸ்பெக்ட்ரம் மெகா ஊழல் பற்றி நிறைய பார்த்து, படித்து, கேட்டு அலுத்துப் போன நிலையில் மறுபடியும் ஒரு புத்தகம் ஏன்? அதிலும் நடந்த பாராளுமன்ற தேர்தலில் துளிகூட பாதிப்பை ஏற்படுத்தாத அதைப் பற்றி நினைப்பதாலோ, பேசுவதாலோ அல்லது எழுதுவதாலோ என்ன பயன்? சம்பந்தப்பட்ட அமைச்சர் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றபோது தோன்றியது: "எதிர்த்து நின்ற கட்சிகள் இந்தச் செய்தியை அத்தொகுதி மக்களின் சரியான கவனத்திற்கு கொண்டு செல்லவில்லையோ? இந்திய சரித்திரத்திலேயே மிகப்பெரிய ஊழல், ரூபாய் ஒரு லட்சம் கோடி என்ற அளவில் பேசப்பட்ட ஊழல்! இல்லை, மக்களுக்கு அதையெல்லாம் பற்றி கவலைப்பட நேரமில்லையோ? எப்படியோ தொலையட்டும்!"

அதைவிட அடுத்த கொடுமை. பிரதமரின் கரம் வலுப்பெற்றுவிட்டது; மந்திரி சபை அமைக்கும் பிரதமரின் உரிமையில் யாரும் தலையிடமுடியாது; கறைபடிந்த நபர்களை மீண்டும் அமைச்சரவையில் சேர்த்துக்கொள்ள மாட்டார் என்றெல்லாம் பேசப்பட்டது. ஆனால் சில கூட்டணிக் கட்சிகள் அத்தனையும் பொய் என்று நிரூபித்தன. மீண்டும் அதே நபர் அதே துறைக்கு அமைச்சராக்கப்பட்டார். (இன்றைய பாராளுமன்றத்தில் கிரிமினல் வழக்குகளில் சிக்கியுள்ள நிறையப்பேர் உறுப்பினர்களாக உள்ளனர் என்று ஊடகங்கள் தரும் செய்தி வேதனையைக் கூட்டுகிறது)

ஸ்பெக்ட்ரம் ஊழல் என்ற பிரச்சனை கிட்டத்தட்ட குப்பையில் போடப்பட்டுவிட்டது. (இன்னும் சில வழக்குகள், பொது நல வழக்குகள் நீதிமன்றத்தில் இருந்தாலும், முடிவில் உண்மை வெளியாகுமா? குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்களா? என்ற கேள்விகள் எழும்போது நமக்கு விரக்திதான் ஏற்படுகிறது.) இருப்பினும் இது போன்ற பிரச்சனைகளில் ஒரு சிலராவது நம்பிக்கை இழக்காமல், விடாமல் ஏதாவது முயற்சி செய்துவருவது சற்று ஆறுதலாக இருக்கிறது.

பார்க்கலாம், என்றைக்காவது ஒரு நாள் உண்மை வெளியாகுமா அல்லது 'சத்திய மேவ ஜெயதே' என்பது வெறும் கோஷந்தானா என்ற கேள்விகளுக்கு காலம்தான் பதில் கூறவேண்டும்.

கருத்துகள் இல்லை: