20 ஜன., 2010

சூரியின் டைரி-1: ஜனவரி 20, 2010

ஜனவரி 20, 2010.

பனிக்காலத்தில் உணவு விஷயத்தில் சிறிது அலட்சியமாக இருந்தாலோ, அல்லது பனியிலிருந்து காக்கும் உடைகளை அணியாமல் வெளியே சென்றாலோ, அல்லது தூசி, நெடி போன்றவற்றாலோ ஆஸ்துமா தோன்றி, மூச்சு விடமுடியாமல் சிரமப்பட நேரிடும். சாதாரணமாக அக்டோபர் இறுதியிலிருந்தே இந்தத் தொல்லை ஆரம்பித்துவிடும். ஆனால் இம்முறை எச்சரிக்கையோடு உடற்பயிற்சி, யோகா போன்றவற்றின் மூலம் டிசம்பர் இறுதிவரை எந்தத் தொல்லையுமில்லாமல் இருந்தேன். டிசம்பர் இறுதியில் சென்னை செல்ல நேரிட்டது. உணவுக் கட்டுப்பாடுகளை காற்றில் பறக்கவிட்டுவிட்டு, யோகா, உடற்பயிற்சி ஆகியவற்றையும் கைவிட்டதால் கடுமையான சிரமத்திற்கு ஆளானேன். இன்றுவரை முழுமையாக குணமானபாடில்லை. சில நாட்களாக தெளிவாகச் சிந்தித்ததன் விளைவாகவோ அல்லது இறை அருளாலோ சரியான மருந்தைத் தேர்ந்து கொள்ள ஆரம்பித்தேன். என்னுடைய முக்கிய குறிகள் பலவற்றை உள்ளடக்கிய ஹோமியோ மருந்தான ஆர்செனிக்கம் ஆல்பம் என்ற மருந்தை மில்லெசிமல் வீரியத்தில் எடுத்துக் கொண்டேன். நோய் படிய ஆரம்பித்துவிட்டது. இருப்பினும் நேற்றிரவு என்னவோ தூக்கம் அடிக்கடி கேட்டது. அதன் விளைவாக காலி எழுந்திருப்பது தாமதமாகி, ஆறு மணிக்கு எழுந்தேன்.

அந்தக் காலத்தில் "கோடை மறைந்தால் இன்பம் வரும்" என்று புகழ் பெற்ற தமிழ் திரைப்படப்பாடல் உண்டு. அதைச் சற்றே மாற்றி "கோடை பிறந்தால் இன்பம் வரும்" என்று பாடத் தோன்றுகிறது.

காலைக் காப்பியைப் பருகியபின், கம்ப்யூட்டரை 'ஆன்' செய்தேன். மெயில் பாக்சைத் திறந்தேன். நான் பல மின்னஞ்சல் செய்தித்தாட்களுக்கு விண்ணப்பம் செய்துள்ளேன். அவற்றில் ஒன்றன் பின் ஒன்றாக, படிக்க ஆரம்பித்தேன்.

முதலில் கேரளத்திலுள்ள பட்டம் நகரில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா நூலகத்திலிருந்து மின்னஞ்சல். அவர்களது வலைப்பூவைப் பார்வையிட்டேன்.
ஒரு அற்புதமான வலைப்பூ அது. இந்தியாவில், அது ஒரு பள்ளியின் வலைப்பூ இவ்வளவு சிறப்பாக, மேன்மையாக இருப்பது பெருமகிழ்ச்சியைத் தந்தது. உடனுக்குடன் மாற்றங்கள் செய்யப்பட்டு என்றும் புதிதாக இருப்பது முதல் சிறப்பு. எனக்குத் தெரிந்து பல அரசு அமைப்புகள் மற்றும் கல்வி நிறுவனங்களின் தளங்களில் மாதக்கணக்கில், வருடக்கணக்கில் மாற்றங்கள் செய்யப்படாமல், ஓய்வு பெற்றவர்கள், மறைந்தவர்கள் பெயர்கள் எல்லாம் வெளியிலிருப்பவர்கள் பட்டியலில் இருக்கும். அனைத்திற்கும் மேலாக உருப்படியாக ஒரு தகவல் இருக்காது. ஆனால் இந்த வலைப்பூவில் அவ்வளவு பயனுள்ள தகவல்கள், குறிப்பாக மாணவர்களுக்குத் தேவையான அனைத்தும்! அதன் பயன்பாடிற்குச் சிறந்த சான்று நான் அதன் 619,095-வது பார்வையாளன்!

மிகச் சிறந்த தளங்களின் இணைப்புக்கள் ('NASA Videos', 'Karan Thapar Videos', 'ஆன்லைன் டிவி', 'eBooks', 'eLibraries', 'eJournals', மேலும் பல), 'Question Banks', 'Tutorials for Various Subjects' போன்ற பல சேவைகள். எல்லாவற்றிற்கும் மேலாக அன்பான, தோழமையான அணுகுமுறை. இந்த வலைப்பூவின் முகவரி: http://librarykvpattom.wordpress.com.

நூலகர் எஸ்.எல்.ஃபைசல் அவர்களுக்கும், பட்டம் கேந்திரிய வித்யாலயா நிர்வாகிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள்.

இதுபோல் மேலும் பத்து மின்னஞ்சல்கள் வெவ்வேறு அமைப்புகளிடமிருந்து. ஒரே நாளில் அவற்றிப்பற்றிஎல்லாம் இங்கே கூறமுடியாது. வரும் நாட்களில் சொல்கிறேன்.

அடுத்து சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களது நூல், விகடன் பிரசுரமான "ஆயிரம் ஜன்னல்களிலிருந்து" ஒரு அத்தியாயமும் (சிறைச்சாலைகளைப் பற்றியும், கைதிகளைப்பற்றியது), 'இன்போசிஸ் பௌண்டஷன்' திருமதி சுதா மூர்த்தி அவர்களது 'அனுபவம் தந்த பாடங்கள்' என்ற நூலிலிருந்து ஒரு அத்தியாயம் படித்தேன்.

குளியலுக்கும், காலை உணவிற்கும் பின் எனது வலைப்பூக்களில் சில பதிவுகளைச் செய்தேன்:

SURiMOUNT: 'இன்றைய புகைப்படம்', 'இன்றைய சிந்தனை' மற்றும் 'எனது குறிப்பேடு'
சூரியோதயம் தமிழ்: 'திருநீற்றுப்பதிகத்திளிருந்து' ஒரு பாடல். மற்றும் 'இன்றைய சிந்தனைக்கு'
Ideal Education: கேரளாவிலுள்ள பட்டம் நகரில் செயல்படும் கேந்திரிய வித்யாலயா நூலகத்தின் வலிப்பு பற்றிய குறிப்பு.

காலை 10 மணி முதல் 12 மணி வரை 'பவர் கட்'.

'சுடோகு' போட்டேன்.

வங்கிக்குச் சென்று பணம் எடுத்தேன். BSNL அலுவலகம் சென்று போன் பில் கட்டினேன். திரும்பும் வழியில் புதிய பேருந்து நிலைய புத்தகக் கடையில் சஞ்சிகைகள் வாங்கினேன்.

வீடு திரும்பியதும் 'திருப்பாவை' சீரியல் பார்த்தேன்.

மதிய உணவிற்குப் பின் சிறிது ஓய்வு. 'World Public Library Association' அமைப்பில் நான் ஒரு சந்தா செலுத்தும் உறுப்பினன். அந்த தளத்திலிருந்து நிறைய புத்தகங்கள் 'டவுன்லோட்' செய்தேன். (இலக்கியம், கல்வி தொடர்பான நூல்கள்).

ஒரு குட்டித் தூக்கம்.

மாலையில் காந்திஜியின் 'சத்திய சோதனை' ஆங்கில நூலிலிருந்து ஒரு அத்தியாயமும், வினோபாஜியின் 'கீதைப் பேருரைகள்' ஆங்கில வடிவிலிருந்து ஒரு சில பகுதிகளையும் படித்தேன். இங்கிலாந்தில் காந்திஜி மேற்கொண்ட சுயகட்டுப்பாட்டு முயற்சிகள் படிக்க பிரமிப்பாக இருந்தன. கீதைப் பேருரைகளிளிருந்து 'சுயதர்மம்' பற்றிய தெளிவான விளக்கவுரை.

இன்றைக்கு இது போதுமென நினைக்கிறேன்.

கருத்துகள் இல்லை: