படித்ததில் பிடித்தது.கவிஞர் இரா.இரவி.குன்றக்குடி அடிகளார் பெரியவர் பிறந்தநாள் (11 .7.1925) இன்று.
இவர்தான் உலகத் திருக்குறள் பேரவை என்னும் அமைப்பை தொடங்கித் திருக்குறளை பட்டி தொட்டி எல்லாம் கொண்டு சேர்த்தவர்.
குன்றக்குடி அடிகள் (சூலை 11, 1925 - ஏப்ரல் 15, 1995) சமயம், இலக்கியம், மட்டுமன்றி பேச்சுத்திறன், எழுத்துத்திறன், இசை போன்று பல துறைகளிலும் ஆழ்ந்த புலமை பெற்றவர்
இவருக்கு பெற்றோர் வைத்த பெயர் அரங்கநாதன் .தருமபுர ஆதினத்தில் பணியில் சேர்ந்த பொழுது அவர்கள் இவருக்கு இட்ட பெயர் கந்தசாமி தம்பிரான் பரமாச்சாரியார்.
குன்றக்குடி மகாசந்நிதானமாக பதவி ஏற்ற பொழுது இவருக்கு இட்ட பெயர் தெய்வசிகாமணி அருணாசலத் தேசிகப் பரமாச்சாரியார்.
நான்காம் வகுப்பு பயிலும் சிறுவனாக இருந்த போது வழக்கறிஞரும், தமிழ்ப்பேராசிரியருமான ரா. பி. சேதுப்பிள்ளையின் வீட்டில், அவரது அறையின் ஜன்னல் முன் நின்று தினம் ஒரு திருக்குறள் ஒப்பித்துக் காலணா பெறுவது அரங்கநாதனின் வழக்கம். இவ்வாறு அரங்கநாதனின் வாழ்வை உயர்த்திய திருக்குறள், பின்னாளில் அடிகளாரான அவருக்குப் பொதுநெறி ஆகியது.
இதே போல, அரங்கநாதனின் பிஞ்சு உள்ளத்தில் தீண்டாமை விலக்கு உணர்வும், மனிதநேயப் பண்பும் குறிக்கோள்களாகப் பதியக் காரணமானவர் விபுலானந்த அடிகள் ஆவார்
*இவர் ஒரு அற்புத துறவி*
மற்ற மடாதிபதிகள் பாலில் தேன் கலந்து பழத்தில் பஞ்சாமிர்தம் செய்து உண்டு களித்து ஊன் வளர்த்த துறவி யல்ல.மக்களைக் காணாமல் மடத்தில் படுத்துக்கொண்டு சுகம் அனுபவிக்கும் துறவி அல்லர்.காவிக்குள் தெய்வீகத்தையும் கருத்தில் பகுத்தறிவும் கொண்ட அற்புதத் துறவி.
இந்தத் துறவி பல்லக்கில் ஏறிப் பவனி வந்தவர் அல்லர்.தன்னந்தனியாகச் சேரிக்குள் சென்று தீண்டத் தகாதவர்கள் என்று புறம்தள்ளப் பட்டவர்களைக் கண்டு அவர்களின் துன்பங்களைக் கேட்டு அற்றைக் களைந்தவர்.ஏழைமக்கள் சுயதொழில் செய்ய அரசு உதவிகள் அனைத்தும் பெற்றுத் தந்தவர்.
*இவர் ஒரு புரட்சித் துறவி*.
மடாதிபதிகள் தங்களை இறைத் தூதுவர் என்று ஏசுநாதர் நிலையில் வைத்து மகிழ்வார்கள்.இவர் அப்படி அல்லர்.
இறைமறுப்புப் பெரியாரின் உற்ற நண்பர் அண்ணாவிற்கு அருமைத் தோழர்.கலைஞர்க்கும் அப்படியே.தெய்வப்பணி என்பது மக்களின் சேவைப் பணியே என்பது இவரின் கொள்கை.மடத்திற்குள் சமபந்தி நடத்தி தீண்டத் தகாதவர்கள் என்று புறம்தள்ளப் பட்டவர்களைக் மடத்துக்குள் அழைத்து உயர்குலத்தாரோடு உணவருந்த வைத்தவர்.
மண்டைக்காடு சாதிக் கலவரத்தில் நவகாளிக் காந்தியாக மாறி கலவரப் பகுதிக்குள் நுழைந்து அமைதியை நிலைநாட்டியவர்.
மீனவக் குழப்பங்களுக்கச் சென்று மீன்களைக் கையில் ஏந்தி ஏலம் விட்டு பெருந்தொகை சேர்த்து மீனவர்க்கு உதவியவர்.
மதுரையில் வைத்திய நாதர் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள் அரிசனங்களை அழைத்தச் செல்லும் பொழுது உடன்செனறவர்.இப்படிக் கண்மூடிப் பழக்கங்களை மண்மூடச் செய்த மடாதிபதி.
இவர் கேட்டார் பிணிக்கப் பேசும் நற்றமிழ் நாவலர்.இவர் மேலவை உறுப்பினராக இருந்தபொழுது திருக்குறளை தேசியமொழி ஆக்க வேண்டும் என்று மேலவையில் முழங்கியவர்.
*எழுத்துப்பணி*
*அ* . *சமய இலக்கியங்கள்*
அப்பர் விருந்து
அப்பர் சுந்தரர் மாணிக்கவாசகர்
திருவாசகத்தேன்
தமிழமுது
சமய இலக்கியங்கள்
நாயன்மார் அடிச்சுவட்டில்
ஆலய சமுதாய மையங்கள் (தமிழக அரசின் முதற்பரிசு பெற்றது)
நமது நிலையில் சமயம் சமுதாயம்
திருவருட்சிந்தனை
தினசரி தியான நூல்
*ஆ* . *இலக்கியங்கள்*
திருவள்ளுவர்
திருவள்ளுவர் காட்டும் அரசியல்
திருவள்ளுவர் காட்டும் அரசு
குறட்செல்வம்
வாக்காளர்களுக்கு வள்ளுவர் தொடர்பான அறிவுரை
திருக்குறள் பேசுகிறது
குறள்நூறு
சிலம்பு நெறி
கம்பன் கண்ட ஆட்சியில் அரசியல் சமூகம்
பாரதி யுக சந்தி
பாரதிதாசனின் உலகம்
கவியரங்கில் அடிகளார் (கவிதைகள்)
மண்ணும் மனிதர்களும் (தன்வரலாறு)
*நாட்டுடமை ஆக்கப்பட்ட நூல்கள்*
http://www.tamilvu.org/library/nationalized/html/naauthor-16.htm
இப்படி இவரின் சாதனைப் பட்டியல் நீளும்.
துறவுக் கோலத்தில் தூயத் தமிழ் தொண்டராக சமுதாய பணியில் சமூக நீதிகாத்த சீலராக சமூகத்தைச் செதுக்கும் சிற்பியாக விளங்கித் துலங்கியத் துறவிகளில் தூயமாமணியான குன்றக்குடி அடிகளார் பெரியவரின் வழிநடந்து அவரைப் போற்றுவோம்.
*கவிஞர் புதுகை வெற்றிவேலன்*
தலைவர் உலகத் திருக்குறள் பேரவை
செங்கல்பட்டு மாவட்டம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக