13 ஜூலை, 2020

இன்றைய தத்துவம் : Advaita என்றும் Non dualism என்றும்அழைக்கப்படும் அத்வைத தத்துவம்

[7/13, 08:54] Neyam-Satya: இன்றைய தத்துவம் 👇🏽

Advaita என்றும் Non dualism என்றும்
அழைக்கப்படும்
அத்வைத தத்துவம்

[7/13, 09:02] Neyam-Satya: அத்வைதம் - சிறு அறிமுகம்


முதலில் அத்வைதம் கூறுவதை  சுருக்கமாக, சாதன சதுஷ்டயம், தத்துவ விவேகம், மூன்று உடல்கள், மூன்று அவஸ்தைகள், பஞ்ச கோசங்கள், ஆத்மா, படைப்பு வரிசை, ஜீவ பிரம்ம ஐக்கியம், ஜீவன் முக்தன், மூவகைக் கர்மங்கள், முக்தி ஆகியவைகளை முதலில் பார்ப்போம். 


சாதன சதுஷ்டயம்


சம்சார பந்தத்தில் இருந்து விடுபட விரும்புகின்ற, அத்வைத சீடன் மேற்கொள்ள வேண்டிய நான்கு சாதனங்கள் முதலில் அறிமுகப்படுத்தப்படுகிறது. சாதன சதுஷ்டயம் என்றால் கடைபிடிக்க வேண்டிய நான்கு சாதனங்கள். விவேகம், வைராக்கியம், ஷட் சம்பத்தி என்று கூறப்படுகிற ஆறு பண்பு நலன்கள், மோட்சத்தின் மீது தீரா ஆசை. இந்த நான்கையும் சீடன் முதலில் அறிந்து கொள்ள வேண்டும்.


விவேகம் என்பது இந்தப் பிரபஞ்சத்தில் நித்தியப் பொருள், அநித்தியப் பொருள் எது என்பதை அறிவதாகும். தோன்றாமலும் அழியாமலும் இருக்கக்கூடியது நித்தியப் பொருள். தோன்றி அழிபவவை அநித்தியப் பொருள். வெளிப்பொருட்கள் அனைத்தும் தோன்றி அழியக்கூடிய அநித்தியப் பொருள். தோன்றாத என்றும் நிலைத்திருக்கிற ஆத்மாவே நித்தியப் பொருள் இதனை அறிவது விவேகம். இந்த விவேகத்தை அடைவதற்கு வைராக்கியம் வேண்டும். இம்மை மறுமை பொருட்களை அனுபவிப்பதில் நாட்டமில்லாது பற்றற்று இருப்பது வைராக்கியமாகும்.


இந்த வைராக்கியம் பெற வேண்டுமானால் சீடன் ஆறுவகை பண்புநலன்களை வளர்த்துக் கொள்ள வேண்டும். சமம், தமம், உபரதி, திதிட்சை, சிரத்தை, சமாதானம் என்பவையே அந்த ஆறுவகைப் பண்புநலன்களாகும்.


மனதை அடக்குவது சமம். புலன்கள் வழியாக வெளிப்பொருட்களில் மனம் ஈடுபடுவதை அடகுவது சமம். புலன்களின் மூலம் அனுபவிக்கின்றவைகளின் மீது ஆசையை ஒழித்து மன அமைதி பெறுதலே இந்தப் பண்புநலனாகும். சமம் என்பதற்கு சாந்தம் அதாவது அமைதி என்று பொருள் மன அமைதியை பெறுவதற்கான வழிகளே சமம்.


மன அமைதியை தமம் என்கிற புலனடக்கத்தின் மூலமே பெறமுடியும். புலன்கள் மூலமாக நுகர்வதைக் கட்டுப்படுததுவதை தமம் குறிக்கிறது. இந்தப் புலனடக்கம் ஜீவன் தமது தர்மத்தை பின்பற்றுவதால் கிட்டும். விதிக்கப்பட்ட செயல்களை செய்வது உபரதி. சுயதர்மாவை அறிந்து அதனை விட்டுவிடாமல் பற்றில்லாமல் செய்து திருப்தி கொள்ளுதல் உபரதி.


சுயதர்மத்தை திருப்திகரமாக செய்வதற்கு சகிப்புத்தன்மை பெற்றிருக்க வேண்டும். இதனையே திதிட்சை வலியுறுத்துகிறது. சுகம் துக்கம், இன்பம் துன்பம் போன்ற இரட்டைகளை பொறுத்துக் கொள்ளுதலே திதிட்சை.


சுயதர்மத்தை சகிப்புத்தன்மையோடு பொறுத்துக் கொள்வதற்கு வைராக்கியம் அவசியம். சுயதர்மத்தை தியாகத்தோடு செய்திட வேண்டுமானால், குருவின் உபதேசிக்கும் வேதாந்தத்தை நம்பிக்கையோடு பின்பற்ற வேண்டும். வேதப் பிராமணத்தை நம்பிக்கையோடு ஏற்பது வைராக்கியம்.


இந்த வைராக்கியம் பெறுவதற்கு மனம் சமமான நிலையில் இருக்க வேண்டும். இதனையே சமாதானம் எனப்படுகிறது. இகலோகப் பயணத்தை விடுத்து, மோட்சம் அடைய வேண்டும் என்ற இறுதிக் குறிக்கோளை அடைவதற்கு மனதை சிதறலின்றி ஒருமுகப்படுத்த வேண்டும்.


இவைகள் அனைத்தையும் முக்தி அடைய வேண்டும் என்ற தீரா ஆசை கொண்வடர்களால் தான் முடிவும். இதனையே முமுட்சுதுவம் எனப்படுகிறது. சம்சாரக் கடலில் இருந்து விடுபட்டு முக்தி பெற வேண்டும் என்கிற தகிப்பே முமுட்சுதுவம்.


தத்துவ விவேகம்


அழிவற்ற ஆத்மாவே உண்மையானது, மாறுதலுக்கும் அழிவுக்கும் உள்ளாகிற இப்பிரபஞ்சம் மித்தாகும் அதாவது தோற்றத்தில் காணப்படும் ஆனால் மூன்று காலங்களிலும் மாறிக் கொண்டே இருக்கும்.. இந்த அறிவை பெறுவதே விவேகமாகும். அடுத்து எது ஆத்மா? என்பதை அறிய வேண்டும். இதனை ஆதிசங்கரர் ஸ்தூல, சூக்கும, காரண உடல்களைவிட வேறானதும், பஞ்ச கோசங்களை கடந்ததாகவும், மூன்று அவஸ்தைகளுக்கும் சாட்சியாக விளங்குவதாகவும், சச்சிதானந்த வடிவமாக விளங்குவதாகவும் உள்ளது ஆத்மா என்கிறது அத்வைதம்.


இங்கே ஆத்மா என்று குறிப்பிடப்படுவது பரமாத்மா என்கிற பிரம்மத்தையேயாகும். இந்த பிரம்மத்தைப் புரிந்து கொள்வதற்கு மூன்று உடல்களைப் பற்றியும், பஞ்ச கோசங்களைப் பற்றயும் மூன்று அவஸ்தைகளைப் பற்றியும் அறிந்து கொள்ள வேண்டும்.


உடல்கள் மூன்று, முதலாவது ஸ்தூல உடல், இரண்டாவது சூக்கும உடல், மூன்றாவது காரண உடல். பஞ்சீகரணம் செய்யப்பட்ட ஐவகை பெரும்பூதங்களால் ஆனதும், நல்வினைப் பயனால் தோன்றியதும், இன்ப துன்பங்களின் இருப்பிடமாயும், இருத்தல், பிறத்தல், வளர்தல், மாறுதல், தேய்தல், மாய்தல் என்கிற ஆறுவகை மாற்றங்களுக்கு உட்பட்டது ஸ்தூல உடலாகும்.


பஞ்சீகரணம் செய்யப்படாத ஐவகை பெரும் பூதங்களால் ஆக்கப்படாததும், கர்மங்களால் தோன்றிய சுகம், துக்கம் முதலிய போகங்களை அனுபவிக்க சாதனமாக உள்ளதும், ஐந்து ஞானேந்தியங்கள், ஐந்து கர்மேந்திரியங்கள், ஐந்து பிராணன்கள், மனம், புத்தி என பதினேழு பகுதிகளைக் கொண்டதுமாக உள்ளது எதுவோ அதுவே சூட்சும உடலாகும்.


இப்படிப்பட்டது என்று சொற்களால் விளக்கமுடியாததும், தொடக்கமற்றதாக உள்ள அவித்தை வடிவமாக உள்ளதும், ஸ்தூல மற்றும் சூக்கும உடல்களுக்குக் காரணம் மாத்திரமாக உள்ளதும், தனது உண்மை வடிவை அறியாமலும் உள்ள நிர்விகல்ப வடிவமே காரண உடலாகும். நிர்விகல்பம் என்றால் உபாதிகள் அற்றநிலை, உபாதி என்றால் தன்னிடத்தில் இருப்பதை வேறிடத்தில் இருப்பதாகக் காட்டுவது.


மூன்று அவஸ்தைகள்


விழிப்பு (ஜாக்ரத்), கனவு (ஸ்வப்னம்), தூக்கம் (ஸீஷீப்தி) ஆகிய மூன்று நிலைகளையே மூன்று அவஸ்தைகள் என்று அழைக்கப்படுகிறது.


காது முதலான ஞானேந்திரங்களால், ஒலி முதலான விஷயங்களை அறியும் நிலை எதுவோ அது விழிப்பு நிலை. விழிப்பு நிலையினால் புலன்களின் துணையுடன் வெளிப்பொருட்களுடன் தொடர்பு கொள்ளப்படுகிறது. விழிப்பு நிலையில் எது பார்க்கப்பட்டதோ, எது கேட்கப்பட்டதோ அதனால் ஏற்படும வாசனை மூலம் உறக்கத்தில் தோன்றும் பிரபஞ்சமே கனவு நிலை எனப்படும். எதுவும் அறியப்படாது, ஆனந்தமாக தூங்கும் அனுபவ நிலையே தூக்கம் ஆகும்.


பஞ்ச கோசங்கள்


கோசம் என்றால் உறை என்று பொருள்படும். மூன்று உடல்களும் ஐந்து உறைகளாக பகுக்கப்பட்டுள்ளது. அன்னமயம், பிராணமயம், மனோமயம், விஞ்ஞானமயம், ஆனந்தமயம் என்பவைகளே அந்த ஐந்து உறைகளாகும்.


உணவின் சக்தியால் தோன்றி, உணவின் சக்தியால் வளர்ந்து, அன்ன வடிவான பூமியில் எது ஒடுங்குகிறதோ அது அன்னமய கோசம் எனப்படும். அன்னமய கோசமே ஸ்தூல உடலாகும். பிராணன் முதலிய ஐந்து வாயுக்களும், வாக்கு முதலிய ஐந்து கர்மேந்திரியங்களும் பிராணமய கோசம் எனப்படும். மனமும், ஐந்து ஞானேந்திரியங்களும் சேர்ந்து மனோமய கோசம் எனப்படும். புத்தியும், ஐந்து ஞானேந்திரங்களும் சேர்ந்து விஞ்ஞானமய கோசம் எனப்படும். காரண உடலில் உள்ள அறியாமையினால் (அவித்தையினால்) களங்கப்பட்ட சத்வாசம், பிரியம் முதலான விருத்திகளுடனும் கூடியிருப்பது எதுவோ அது ஆனந்தமய கோசம் எனப்படும்.


இந்த ஐந்து கோசங்கள், ஆத்மாவிற்கு உறைகளாக அமைகிறது. அத்மா பிறவற்றுடன் தொடர்பு ஏற்படும் போது, நான் இவ்வுடல், நான் இம்மனம், நான் இவ்வறிவு என்றெல்லாம் தன்னைக் கருதிக் கொள்வது ஆத்மாவிற்கு உறைகளாகிறது. தன்னுடையதாக அறியப்படுகிற வீடு, நகை போன்றவை தன்னைவிட வேறானதாக இருப்பதைப் போல், தன்னுடையதாக அறியப்படும் இந்த ஐந்து கோசங்களும், மூன்று உடல்களும், மூன்று அவஸ்தைகளும் ஆத்மா அல்ல. அப்படி என்றால் ஆத்மா என்பது என்ன?


ஆத்மா


சத் சித் ஆனந்த வடிவமே ஆத்மா, முக்காலங்களிலும் உள்ளது சத் ஆகும், ஞான வடிவமே சித் ஆகும், சுக வடிவமே ஆனந்தம் ஆகும்.  என்றும் ஞான ஆனந்த வடிவானது ஆத்மா. இதுவே ஆத்மாவின் சொரூப லட்சணம். அதாவது ஆத்மாவின் இயல்பான குணம்.


ஜீவனும் ஈஸ்வரனும்


உலகப் படைப்புப் பற்றி கூறிய பிறகு ஜீவன், ஈஸ்வரன் ஆகியவற்றின் படைப்பு பற்றி பேசப்படுகிறது. ஸ்தூல உடம்பில் அபிமானம் உடையவனும், ஜீவன் என்று அழைக்கப்படுபவனுமாக உள்ளவன் பிரம்மத்தின் பிரதிபிம்பம் ஆவான். அந்த ஜீவன் (அவித்தையினால்) அறியாமையினால் ஈஸ்வரனை, தனக்கு வேறானதாக அறிகிறான். அறியாமை உபாதியோடு கூடிய ஆத்மா ஜீவன் எனப்படுகிறான். மாயை உபாதியோடு கூடிய ஆத்மா ஈஸ்வரன் எனப்படுகிறான். ஜீவனுக்கும் ஈஸ்வரனுக்கும் உள்ள முக்கிய வேறுபாடு ஈஸ்வரன் மாயை ஆள்கிறான், ஜீவன் மாயைக்கு ஆட்படுகிறான்.


உபாதி வேறுபாட்டால் தோன்றிய ஜீவன், ஈஸ்வரன் என்னும் வேறுபாடுகள் உள்ளவரை பிறப்பு, இறப்பு முதலான வடிவிலான சம்சாரம் அழிவதில்லை. எனவே ஜீவன் ஈஸ்வரன் என்கிற பேத புத்தியை விட்டுவிடவேண்டும் என்கிறார் ஆதிசங்கரர்.


அகங்காரத்தோடும், சிற்றறிவோடும் இருப்பது ஜீவன், அகங்காரம் அற்றவனாகவும் பேரறிவு பெற்றவனாகவும் இருப்பது ஈஸ்வரன். முரண் இவ்வாறு இருக்க மகாவாக்கியமான “நீ அதுவாக இருக்கிறார்” (தத்துவமசி) என்பதை எவ்வாறு வேறுபாடற்ற ஒன்றாகப் புரிந்து கொள்ள முடிவும் என்ற கேள்வி இயல்பாய் தோன்றும். அதற்கு ஆதிசங்கரர் விளக்கம் அளிக்கிறார், “நீ அதுவாக இருக்கிறார்” என்பதில் “நீ” என்பது என்பது ஜீவனையும் “அது” என்பது ஈஸ்வரனையும் குறிக்கும் என்றால் இரண்டல்ல என்கிற அத்வைத விளக்கம் வராது. அதனால் ஆதிசங்கரர் வாச்யார்த்தம், லட்சியார்த்தம் என்ற அணுகுமுறையின் மூலம் விளக்கி ஐக்கியத்தை ஏற்படுத்துகிறார். வாச்யார்த்தம் என்பது நேரடிப் பொருளைக் குறிக்கும். நேரடிப் பொருளில் முரண்பாடு காணப்பட்டால் அதனை நீக்கி பொருள்கொள்வது லட்சியார்த்தம் எனப்படும். அதாவது முரண்படாத வகையில் அர்த்தப்படுத்துவது லட்சியார்த்தம்.

“நீ அதுவாக இருக்கிறார்” என்பதில் “நீ” என்ற சொல்லின் லட்சியார்த்தம் உபாதிகள் அற்ற சுத்த சைதன்யமாகிய ஆத்மா என்றும், “அது” என்ற சொல்லின் லட்சியார்த்தம் உபாதிகள் அற்ற சுத்த சைதன்யமாகிய பிரம்மம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. இந்த லட்சியார்த்தத்தில் இரண்டிற்கும் வேறுபாடு காணப்படாததால் ஐக்கியம் சாத்தியமாகிறது.


ஜீவன் முக்தன்


“தத்துவமசி” என்கிற போதனை அறிந்தவன் தன்னை ஜீனாக கருதாத நிலையில், இவ்வுலகில் இருக்கும் போதே முக்தி அடைகிறான். அவனுக்கு ஜீவன் முக்தன் என்று பெயர். ஜீவன் முக்தனின் நிலை எப்படிப்பட்டதாக இருக்கும்.


நான் மனிதன், நான் இந்த உடல், நான் பிராம்மணன், நான் சூத்திரன் என்று ஜீவன் எவ்வாறு நிச்சயமாகக் கருதுகிறானோ, அப்படியே நான் இந்த உடலன்று, நான் பிரம்மணன் இல்லை, சூத்திரன் இல்லை, மனிதன் இல்லை, நான் பற்றற்றவன், சுயம்பிரகாசம் உடையவன், அனைத்து உயிர்களிடத்தும் உள்ளுறைபவன், உருவமற்றவன் என்று உறுதியாக ஜீவன் முக்தன் கருதுகிறான்.


மூவகை கர்மாக்கள்


ஆகாமியம், சஞ்சிதம், பிராப்தம் ஆகியவை மூன்றுவகை கர்மங்களாகும். ஞானம் பெற்ற பிறகு ஞானியின் உடலால் செய்யப்படும் புண்ணிய பாவ வடிவான கர்மங்கள் ஆகாமிய கர்மங்கள் எனப்படும். பலகோடி பிறவிகளுக்குக் காரணமாகவும், முன்னர் செய்த செயல்களால் சம்பாதிக்கப்பட்டதாகவும் உள்ள கர்மங்கள் சஞ்சித கர்மங்களாகும். இந்த உடலைத் தோற்றுவித்து, இந்த உலகத்தில் ஒருவன் அனுபவிக்கும் சுகம், துக்கம் முதலான எந்த கர்மம் கொடுக்கிறதோ அதற்குப் பிராப்த கர்மங்கள் என்று பெயர்.


ஆகாமிய கர்மங்கள் ஞானத்தால் அழிகின்றன. மேலும் ஞானிகளுக்கும் ஆகாமிய கர்மங்களும், தாமரை இலையில் தண்ணீர் ஒட்டாதது போன்று எந்த சம்பந்தமும் கிடையாது.


பரமாத்மாவே தான் என்று அறிந்த பிரம்ம ஞானி சம்சாரக் கடலைக் கடந்து பிரம்மானந்தத்தை அடைகிறார். புறபொருளில் காணப்படும் பன்மையை மறுதலித்து பிரம்மமே நித்தியம் என்கிற ஒருமையை அத்வைதம் நிலைநிறுத்துகிறது.


இதுவரை ஆத்வைத வேதாந்தத்தை மிகவும் சுருக்கமாக பார்த்தோம்.

கருத்துகள் இல்லை: