13 ஜூலை, 2020

இன்றைய தத்துவ மேதை : ஜான் லாக் (JOHN LOCKE)

தத்துவ மேதை. ஜான் லாக் 

ஜான் லாக் (John Locke)  இங்கிலாந்தின் பிரிஸ்டல் நகரில் (1632) பிறந்தார். தந்தை வழக்கறிஞர். பள்ளிப்படிப்பை முடித்து, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் இளங்கலை, முதுகலைப் பட்டம் பெற்றார். இளம் வயதிலேயே அறிவியலில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார்.

* பிரிட்டன் தேசிய அறிவியல் வளர்ச்சிக் கழக உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பல விஞ்ஞானிகளுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். மருத்துவத்திலும் இளங்கலைப் பட்டம் பெற்றார். ஆனால், எப்போதாவதுதான் மருத்துவம் பார்த்தார். இவற்றைவிட தத்துவத்திலும், தத்துவமேதைகளுடன் உரையாடுவதிலும் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தார்.

* ஷாஃப்டஸ்பரி பிரபுவுடன் ஏற்பட்ட நட்பு, இவரது வாழ்க்கையில் பெரும் திருப்புமுனையாக அமைந்தது. அவரது செயலாளராகவும், குடும்ப மருத்துவராகவும் பணியாற்றினார். அரசியல் மாற்றங்களால் சிறையில் அடைக்கப்பட்ட ஷாஃப்டஸ்பரி, ஹாலந்துக்கு தப்பி ஓடி அடுத்த ஆண்டில் அங்கேயே காலமானார்.

* அவரது நண்பர் என்பதால் இவருக்கும் நெருக்கடி ஏற்பட்டு, ஹாலந்துக்கு சென்று 1689 வரை தங்கினார். அப்போது ஓய்வு நேரம் நிறைய கிடைத்ததால், தன் சிந்தனைகளை எழுத்தில் வடிக்கத் தொடங்கினார். 1654-ல் எழுதிய 'ஆன் எஸ்ஸே கன்சர்னிங் ஹியூமன் அண்டர்ஸ்டேண்டிங்' என்ற ஆய்வு நூல் இவரைப் பிரபலமடையச் செய்தது. இது சிறந்த தத்துவ நூல்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

* பின்னர், இங்கிலாந்து திரும்பியவர் இறுதிவரை அங்கேயே வாழ்ந்தார். இயற்கை விதி, தார்மீக நெறிகள்தான் இவரது சிந்தனைகளின் அடிநாதம். அனுபவ அறிவின் அடிப்படையில் தனது படைப்புகளை உருவாக்கினார். இவரது சிந்தனைகளில் ஃபிரான்சிஸ் பேகன், ரெனே டெகார்த்தே உள்ளிட்டோரின் தாக்கங்கள் அதிகம் காணப்பட்டன.

* அமெரிக்காவின் நிறுவனத் தந்தை எனப் போற்றப்படும் தாமஸ் ஜெஃபர்சன் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள், பிரெஞ்சு மறுமலர்ச்சி இயக்கத்தை வளப்படுத்திய பல முன்னணி தத்துவஞானிகளிடம் இவரது கோட்பாடுகள் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தின. இவரது அரசியல் கோட்பாடுகள், அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தில் எதிரொலித்தன.

* 1660-ல் எழுதி 1667-ல் வெளிவந்த 'டூ ட்ரீட்டீசஸ் ஆஃப் கவர்மென்ட்' என்ற நூல், உலகம் முழுவதும் அரசியல் சிந்தனைகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. குடிமக்களின் உயிர், உடைமைகளைக் காப்பது அரசின் முக்கிய நோக்கமாக இருக்க வேண்டும் என்று கூறினார்.

* ஆட்சி செய்பவர்களின் தெய்வீக உரிமைகள் பற்றிய கோட்பாட்டை அடியோடு மறுத்தார். அரசு வரம்பற்ற உரிமைகளைக் கொண்டிருக்க முடியாது என்று வாதிட்டார். மக்களின் நம்பிக்கைக்கு எதிராக மாறும் ஆட்சியை அகற்றவும், மாற்றவும் மக்களுக்கு அதிகாரம் உள்ளது என்றார்.

* உலகில் பல புரட்சிகள் நடப்பதற்கு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்னரே முற்போக்கான சிந்தனைகளை வெளிப்படுத்தியவர். இவரது சமூகக் கட்டுப்பாட்டு கோட்பாடு உலகம் முழுவதும் பரவியது.

* இவரது படைப்புகள் அறிவுத் தத்துவவியல், அரசியல் தத்துவம் ஆகிய துறைகளின் வளர்ச்சிக்கு வித்திட்டன. மனம், பிரக்ஞை, அறிவு, சுயம் குறித்து ஆராய்ந்து எழுதினார். 

'தாராளவாதத்தின் (லிபரலிசம்) தந்தை' எனப் போற்றப்படும் ஜான் லாக் 72-வது வயதில் (1704) மறைந்தார்.

நன்றி : திரு நேயம் சத்யா,  தத்துவங்களத் தேடி,  வாட்ஸ்அப் குழு

கருத்துகள் இல்லை: