நான் அம்பத்தூரில் வேலை செய்துகொண்டு திருவல்லிக்கேணியில் இருந்தபோது(1973-1978) ஆத்மாநாமை அடிக்கடி சந்திக்கும் சந்தர்ப்பங்கள் ஏற்பட்டன.அவரும் அம்பத்தூருக்கும்,திருவல்லிக்கேணிக்குமாக அலைந்துகொண்டிருந்தார்.சில சமயங்களில் சேர்ந்து பயணிப்போம்.ஞாயிறு காலைகளில் திருவல்லிக்கேணியிலிருந்து ட்ரைவ் இன் வரை சென்று காப்பி சாப்பிட்டு வருவோம்.அவர் ஞானக்கூத்தனிடம் அதிகம் உத்வேகம் கொண்டவராக இருந்தார்.நான் கொஞ்சம் இடதுசாரி மனநிலை கொண்டிருந்தேன். ஒரு சிறிய இடைவெளி எங்களுக்குள் இருந்தது.ஆனால் 1975ல் நாட்டில் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டு கருத்துரிமைக்கு ஆபத்துகள் ஏற்பட்ட நிலையில் அவர் அணுகுமுறையில் சற்று மாற்றம் ஏற்பட்டது.பிரக்ஞை நண்பர்களுடன் ஏற்பட்ட தொடர்பினாலும் அவர் `அவசரம்`கவிதை போன்ற அரசியல் கவிதைகளை அதிகம் எழுத ஆரம்பித்தார்.அவருடைய கவிதைச் சொல்லாடல்கள் அதிக கூர்மையும்,செறிவுமாக பன்முகமும்,நெருக்கமும் கொண்டன.முற்றிலும் கவிதைக்காக `ழ`இதழைத்துவங்கி தமிழில் புதிய கவிதை இயக்கத்துக்கான ஒரு தூண்டுதலாக இருந்தார்.பிறகு அலுவல் காரணமாக நான் வேறு ஊருக்கு செல்லவேண்டி வந்ததால் அவருடன் அதிக தொடர்பு கொள்ளமுடியவில்லை.இடைப்பட்ட நாட்களில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை பல்வேறு சிதைவுகளை சந்தித்து அவர் தற்கொலை செய்துகொள்ள நேர்ந்தது.பலநாட்கள் பிறகுதான் வேறு ஊரில் இருந்த எனக்கு செய்தி கிடைத்தது.பன்முக ஈடுபாடுகளாலும்,புதிய கவிதைச் சொல்லாடல்களாலும் சூழலுக்கு உரமூட்டிய இக்கவிஞனுக்கு நேர்ந்த விபத்தை இன்றும் என்னால் ஜீரணிக்கமுடியவில்லை.
இன்றும் அனுமான்கள் உண்டு வாலின்றி
ராவணர்களும் உண்டு
தீயுண்டு நகரங்கள் உண்டு
தனியொருவன் எரித்தால் வன்முறை
அரசாங்கம் எரித்தால் போர்முறை -ஆத்மாநாம்
இன்று ஆத்மாநாம் நினைவுநாள்.
நன்றி: திரு.வெளி ரங்கராஜன், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக