19 ஜூலை, 2020

காமராசர் நினைவுகள்


காமராஜரின் நெருங்கிய நண்பர் ஒருவர் சினிமா தியேட்டர் கட்டினார். தியேட்டரை நீங்கள்தான் திறக்க வேண்டும் என்று காமராஜரை அழைத்தார். காமராஜரும் சரி என்றார்.

ஆனால், சினிமா தியேட்டரின் கட்டுமானப் பணிகள் முழுமை பெறவில்லை. அதனால், தியேட்டருக்கான உரிமம் வழங்க முடியாது என்று மாவட்ட கலெக்டர் கூறிவிட்டார். உடனே, ‘தியேட்டரைத் திறக்கப்போவது யார் தெரியுமா, முதல்வர்தான் திறக்கப்போகிறார்’ என்று தியேட்டர் உரிமையாளர் கூறியிருக்கிறார். அதற்கு, ‘யார் திறந்து வைத்தாலும் சரி, தியேட்டர் கட்டுமானம் முழுமையடையாமல் லைசென்ஸ் தர முடியாது’ என்ற கலெக்டர் கறாராகக் கூறியிருக்கிறார்.

உடனே காமராஜரிடம் சென்ற அந்த நண்பர், லைசென்ஸ் தர முடியாது என்று கலெக்டர் மறுத்துவிட்ட தகவலைக் கூறியிருக்கிறார். அதற்கு, இப்படிப்பட்ட அதிகாரிகள் இருப்பதால்தான் என்னால் நல்ல ஆட்சியைத் தர முடிகிறது என்று காமராஜர் கூறியிருக்கிறார். 

பிறகு, ‘சரி, நான் வந்து தியேட்டரைத் திறக்கிறேன். ஆனால், பணிகள் முழுமை பெற்ற பிறகே தியேட்டரை இயக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார். சொன்னபடியே தியேட்டரைத் திறந்து வைத்த காமராஜர்,

நிகழ்ச்சி முடிந்தவுடன் நேராக கலெக்டர் பங்களாவுக்கு காரில் சென்றுள்ளார். கலெக்டரிடம் நலம் விசாரித்துவிட்டு, கலெக்டரின் மகனைப் பார்த்து, ‘அப்பாவைப்போல பெரிய அதிகாரியாக வர வேண்டும்’ என்று வாழ்த்திவிட்டுச் சென்றுள்ளார்.

காமராஜர் தமிழக முதல்வராக வந்தபோது, தமிழ்நாட்டில் ஒரு சர்க்கரை ஆலைகூட இல்லை. அதனால், 10 சர்க்கரை ஆலைகளை உருவாக்க வேண்டுமென்று அவர் விரும்பினார். சர்க்கரை ஆலைகளை ஏற்படுத்துவதற்கான தொழில்நுட்பம் மற்றும் எந்திரங்களை ஜப்பானிலிருந்து பெற முடிவுசெய்யப்பட்டது. ஜப்பானிலிருந்து தமிழ்நாட்டுக்கு அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர்.

அவர்களுடன் சம்பந்தப்பட்ட அமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அப்போது, 10 சர்க்கரை ஆலைகளை அமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. 

ஒரு சர்க்கரை ஆலை அமைத்துக்கொடுத்தால் 10 சதவிகிதம் தள்ளுபடி தருவோம் என்று ஜப்பான் அதிகாரிகள் கூறியுள்ளனர். மேலும், அந்த 10 சதவிகிதத்துக்கான பணத்தை நீங்களோ, உங்கள் தலைவரோ, உங்கள் கட்சியோ எடுத்துக்கொள்ளலாம் என்று அமைச்சரிடம் கூறியுள்ளனர்.

அந்த விஷயத்தை காமராஜரிடம் அமைச்சர் தெரிவித்துள்ளார். ஒரு தொழிற்சாலைக்கு 10 சதவிகிதம் என்றால், பத்து தொழிற்சாலைகளுக்கு நூறு சதவிகிதம் என்று கணக்குப்போட்ட காமராஜர், அதை வைத்து இன்னொரு சர்க்கரை ஆலை அமைத்துவிடலாம் என்று கூறியிருக்கிறார். தமிழ்நாட்டுக்குக் கூடுதலாக ஒரு சர்க்கரை ஆலை கிடைத்தது.

#தமிழக
நலனை தவிர பிற நலன்களை  எதிர்பார்க்காத ஒரு மாமனிதரின் பிறந்த நாள் இன்று வாழ்த்தி வணங்குவோம்..!!


நன்றி: திரு.கார்த்திகேயன் செல்வராஜ், முகநூல்.

கருத்துகள் இல்லை: