16 ஜூலை, 2020

பாட்டியின் மார்க்கெட்டிங் திறமை!

[7/16, 08:09] Suri Jio: எங்கள் தெருவில் காய் விற்கும் சுரும்பாயி பாட்டி குறித்து,ஏற்கனவே முகநூலில் எழுதி இருக்கிறேன்.அதை,
ராணி  வார இதழின் ஆசிரியர், ராணி இதழில் பிரசுரித்திருந்தார்.

தினமும் சூரியன் வருதோ இல்லையோ,சுரும்பாயி பாட்டி வந்துடுவாங்க என கிண்டல் செய்வேன்.இன்று காலை, வாக்கிங் போகும். போது,எதிரே வந்தவர்,என்னத்துக்கு தான் இப்படி நடையா நடக்குறியோ என்றார்.நீங்க என்னத்துக்கு தான் இப்படி வயசான காலத்துல காய்கறி கூடையை தூக்கிட்டு கஷ்டப் படுறீங்களோ என கிண்டலாக கேட்டேன்...என்னத்துக்கா...உன்னை மாதிரி எத்தனை பேரோட அன்பும்,அனுசரணையும் கிடைச்சிருக்கு...அதுக்கு தான் என்றவர்,ஒரு தகவலை சொன்னார்...

அவரிடம் தொடர்ந்து காய் வாங்கிய ஒரு குடும்பத்தினர்,மூன்று வருடங்களுக்கு முன் வேறு ஊருக்கு போய் விட்டார்களாம்.எந்த தொடர்பும் இல்லை.இந்த ஊரடங்கின் போது,அவர்கள்,தாங்கள் குடியிருந்த வீட்டு உரிமையாளருக்கு ஒரு சிறு தொகை அனுப்பி, சுரும்பாயி பாட்டி வருமானத்துக்கு என்ன பண்றாங்களோ...இந்த பணத்தை எப்படியாவது அவங்களுக்கு கொடுத்துடுங்க என சொல்லியிருக்கிறார்கள்.நெகிழ்ந்து போன அந்த வீட்டு உரிமையாளர் அவரும் தன் பங்குக்கு கொஞ்சம் பணம் சேர்த்து, பாட்டியிடம் கொடுத்திருக்கிறார்.

தாய்,புள்ள கூட இப்படி செய்யுமா... மூணு வருஷமாச்சு அவங்க ஊரை விட்டு போயி...நான் வருமானத்துக்கு என்ன பண்ணுவேனோ னு பணம் அனுப்பிருக்காங்க பார்த்தியா...அந்த மனுச,மக்க  நல்லாருக்கணும் என சொல்லும் போது அனிச்சையாக வானத்தை பார்த்து கும்பிட்டார்.

கொரோனாவால் மக்களிடம் சுயநலம் அதிகமாகி விட்டது, எல்லாரும் ஏமாற்றுகிறார்கள் என்றே செய்திகளை கேள்விப்படும் நிலையில், இன்று காலை பாட்டி சொன்ன இந்த தகவல் மானுடத்தின் மீது பெரும் நம்பிக்கையை தருகிறது.சக மனிதன் மீதான அக்கறை எப்போதும்,எல்லோருக்கும் இருந்து கொண்டு தான் இருக்கிறது.

பாட்டி பற்றிய என் முந்தைய பதிவின் சில வரிகள்..."மார்க்கெட்டிங் பாட்டி " என்னும் தலைப்பில் ராணி இதழில் வந்தது 👇

இன்று,முருங்கைக்கீரை,வாழைக்காய், வாழைத்தண்டு என சத்தம் போட்டுக் கொண்டு வந்தார். ஆனால் அவை எதுவுமே அவர் தலையில் இருந்த கூடையில் இல்லை..."என்ன பாட்டி...உங்க கிட்ட இல்லாததை எல்லாம் சொல்றீங்க? " எனக் கேட்டால், நான் எப்பவும் அப்படித் தான் என்றார்.

நான் புரியாமல் விழிக்க..."என்கிட்ட இருக்குறதை மட்டும் சொல்லிக் கத்துனா,என் குரலைக் கேட்குறவங்களுக்கு,அது தேவையில்லனா,வெளிலயே வர மாட்டாங்க.நான் எல்லா காய்,கீரை யும் சொல்லிக் கத்துனா,அதை வாங்கணும் னு வர்றவங்க...அது இல்லனாலும்,வேற ஏதாவது வாங்குவாங்க.இப்ப முருங்கைக்கீரை வாங்கணும் னு கூப்பிடுறவங்க,அது இல்லனாலும்,சரி...இந்தக் கீரை கொடுங்க னு இருக்குறதை வாங்குவாங்க....அதான்,என் கிட்ட இல்லனாலும்,எல்லா காய்,கீரையையும் சொல்லிக் கூவுவேன் " என்றார்.அவரின் " மார்க்கெட்டிங்" திறனை எண்ணி,வியந்து போனேன் 😳😳😳😳...
 

Grateful thanks to Ms Sumathi Sri & Facebook.

கருத்துகள் இல்லை: