4 ஆக., 2020

ஆன்மீக சிந்தனைகள் : புரட்சித் துறவி வள்ளலார்


புரட்சித் துறவி வள்ளலார்...

தமிழ்கூறு நல்லுலகில், உலகெலாம் தெளிவுபெற, படர்ந்த இருள் அகன்றிட வீசிய சுடர் ஒளியாம் தமிழ்நெறி விளக்கி பெருநெறி பிடித்தொழுகிய வாழையடி வாழையென வந்த திருக்கூட்ட மரபினில் உதித்த அருட்கடலே வள்ளல் பெருமானார் இராமலிங்க அடிகளாவார்.
தொல்காப்பியர், வள்ளுவர், திருமூலர், சித்தர் பெருமக்கள், வள்ளலார் எனும் வழி வழிவந்த மரபினரால் தமிழினம், அவ்வவ் காலக்கட்டத்தில் பல்வகையிலும் விழிப்புணர்த்தப் பெற்றது, எச்சரிக்கை விடுக்கப் பெற்று காக்கப் பெற்றது எனலாம்.
கி.மு.10 ஆம் நூற்றாண்டில் நாவலந் தண் பொழிலில் உள் நுழைந்த தமிழியத்திற்குப் புறம்பான அயல் நாகரிகத்தால் தமிழினத்திற்கு ஏற்பட்ட கேடுகள், தாக்கங்கள், கொஞ்ச நஞ்சமல்ல. மொழி, இனம் பண்பாடு, இறைக் கோட்பாடு முதலானவற்றில் பல்வேறு சிதைவுகள் இதனால் ஏற்படலாயின. மொழி நிலையில் “வடவெழுத்தை நீக்கக் கூறி 2700 ஆண்டுகளுக்கு முன்னால் தொல்காப்பியர் குரல் கொடுத்தார். அவரே மரபு நிலைத் திரியின் பிறிது பிறிதாகும் என்று எச்சரிக்கையும் விடுத்தார். அதற்கடுத்து திருமூலர் பெருமானும் தமிழ் நெறியைக் காத்து ஆதரித்தார். பின்னர் தமிழினத்தில் தோன்றிய சித்தர் பெருமக்கள் மூடத்தனங்களைக் கடுமையாக எதிர்த்தனர். அவ்வரிசையில் 19ஆம் நூற்றாண்டில் சமயத்துறையில் மிகப்புதிய புரட்சியினை ஏற்படுத்திய திருப்பெருந் துறவியே அருட்சுடர் இராமலிங்க அடிகளாவார்.

 
தமிழினத்தை, தமிழர் நாட்டைச் சீரழித்து விட்ட சூழ்நிலையில் மேலைநாட்டு வல்லாண்மையம் மேலாண்மை செய்து வந்த காலத்தில்தான் வள்ளல் பெருமானார் தோன்றி புரட்சிகரமான கொள்கைகளை மக்களிடையே பரப்பினார் எனலாம்.
பெருமானாரின் சிந்தனைகள் எவரையம் புண்படுத்துபவையல்ல, மாறாகப் பயண்படுத்துபவை. புண்பட்ட மக்களையும் உயிர்களையும் கண்டு மனம் வருந்தி அவர்களை மீட்டெடுத்த உயிரருள் ஒழுக்க நெறிகளை மக்களுக்கு ஊட்டி உணர்த்தினார். இதற்கு எதிர்ப்பான கோட்பாடுகளை, சிந்தனைகளை நிறுவனங்களை மிகக் கடுமையாகவே சாடினார். இதனால், மாந்தநேயத்திற்கும், உயிர் நேயத்திற்கும் புறம்பான அனைத்து வன்முறை செயற்பாடுகளும் அடிபட்டுப் போயின. 

ஒருமையுடன் நினது திருமலரடி நினைக்கின்ற 
உத்தமர் தம் உறவு வேண்டும்.  
உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார் 
உறவு கலவாமை வேண்டும் 
பெருமைபெரு நினது புகழ் பேச வேண்டும் 
பொய் பேசாதிருக்க வேண்டும் 
பெருநெறி பிடித்தொழுக வேண்டும் 
மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும் 
மதி வேண்டும், நின் கருணை நிதி வேண்டும்
நோயற்ற வாழ்வு நான் வாழ வேண்டும் 

எனும் பாடல், வள்ளல் பெருமானார்க்கு மட்டுமல்ல மாந்தர் அனைவர்க்கும் எழவேண்டிய வேட்கையாகும்.
இறைநெறிக்கு அடிப்படையில் இருக்க வேண்டிய
பண்புகள் என்ன?

1. ஒருமையுடன் இறையை எண்ணுகின்ற தூய்மையுடைய  நெஞ்சம் 
2. உள்ளொன்று வைத்து புறமொன்று பேசாமை 
3. இறை புகழ் பேசல் 
4. பொய் பேசாதிருத்தல் 
5. பொய் தீர் ஒழுக்க நெறியாம், பெருநெறி பிடித்தொழுகல்
6. மதவெறிப் பேய்மை இல்லாமை 
7. நல்ல அறிவு பெறுதல் 
8. இறையருள் பெறுதல் 
9. நோயற்ற வாழ்வு வாழ்தல்

இறைநெறியாளர்கள் இவ்வேட்கையை தம் மனத்துள் எழுப்பி அதன்படி வாழ வேண்டும்.

இப்பாடலின் வழி போலித் துறவியரின் செயற்பாடுகள் பற்றியும் அவரால் உலகிற்கு ஏற்படும் கேடுகளைச் சொல்லாமல் சொல்லியும், இறைவேட்கையாக மக்களுக்கு முன்வைக்கின்றார் வள்ளலார். 
“மதமான பேய் பிடியாதிருக்க வேண்டும்” என்னும் வரி மதவெறியால் மாந்தகுலம் சிதறுண்டும் உயிர்நேயம் இல்லாமலும் ஆகிவிடும் எனும் உண்மையால் உள்ளது உள்ளபடி உணர்த்தும் மாண்பினைக் காட்டுகின்றது.

"சாதியும் மதமும் சமயமும் பொய்யென ஆதியில் உணர்த்திய அருட்பெருஞ்சோதி”

எனும் வரியால் சாதியும் மதமும் சமயமும் பொய் என்று அருட்பெருஞ்சோதியே தமக்கு உணர்த்தியதாகக் கூறுகின்றார்.
தொடர்ந்து, 

கூறுகின்ற சமயம்எலாம் மதங்கள் எலாம் பிடித்துக் 
கூவுகின்றார் பலன் ஒன்றுங் கொண்டறியார் வீணே 
நீறுகின்றார் மண்ணாகி நாறுகின்றார் அவர்போல 
நீடு உலகில் அழிந்துவிட நினைத்தேனோ நிலைமேல்....

எனும் கூற்றால் சமய மதங்களால் எந்தப் பலனும் இல்லை என்பதையும் அவற்றால் மண்ணாகி நாறவேண்டிய நிலை ஏற்படும் என்பதையும் எச்சரிக்கையாக கூறுவதைக் காணலாம்.
வள்ளல்பெருமானார் உணர்த்தும் இறைமை என்பது
சாதியும் மதமும் சமயமும் கடந்த ஆதியும் அந்தமும் எல்லாமும்  ஆகிய அருட்பெரும் சோதியாகும்.

அதுவே எல்லாமாகி நின்று எல்லாவற்றையும் இயக்கி பேராற்றலாய் விரிகின்றது. அதை அன்பினால், அருளினால், தூய உள்ளத்தினால் உயிர் அருள் ஒழுக்கத்தினால் மட்டுமே உணர முடியும், அடைய முடியும். அதனை அடைந்தவர் வள்ளல் பெருமானார் ஆவார். இதை விடுத்து, மாந்தனின் அறிவை முடக்குகின்ற, முடமாக்குகின்ற கலை உரைக்கும் கற்பனைகளான வேத புராண இதிகாச சூதுகளை பின்பற்றினால் அவற்றின் வழி சென்றால் மனத்தில் இருள்சேருமே ஒழிய அருள் சேராது என்பது வள்ளலார் வாய்மை. 

"சாதியும் மதமும் சமயமும் தவிர்த்தேன்
சாத்திரக் குப்பையும் தனந்தேன் 
நீதியும் நிலையும் சத்தியப் பொருளும்
நித்திய வாழ்க்கையும் சுகமும் 
ஆதியும் நடுவும் அந்தமும் எல்லாம்
அருட்பெரும் சோதி என்று அறிந்தேன்  

எனும் பாடலும் 

“வேதாகமங்கள் என்று வீண்வாதம் ஆடுகின்றீர்
வேதாகமத்தின் விளைவறியீர் - சூதாகச் 
சொன்ன அலால் உண்மைவெளி தோன்ற உரைத்தல் இலை
என்ன பயனோ இவை." 

எனும் பாடலும் 

சாதியிலே மதங்களிலே சமய நெறிகளிலே
சாத்திரச் சந்தடிகளிலே கோத்திரச் சண்டையிலே 
ஆதியிலே அபிமானித்து அலைகின்றீர் உலகிர்
அலைந்து அலைந்து வீணே நீர் அழிதல் அழகலவே 
நீதியிலே சன்மார்க்க நிலைதனிலே ஞான
நிறுத்தமிடும் தனித்தலைவர் ஒருத்தர் அவர்தாமே 
வீதியிலே அருட்சோதி விளையாடல் புரிய
மேவுகின்ற தருணம் இது கூவுகின்றேன் உமையே! 

எனும் பாடலும் இவ்வுண்மையை உணர்த்துவதைக் காணலாம்.

"கொள்ளைவினைக் கூட்டுறவால் கூட்டிய பல் சமயக் கூட்டம்” என்று மிகவும் புரட்சிகரமாகத் துணிவாக வள்ளலாரால் காட்டப்பட்டுள்ளது. இவை அழிந்து போக வேண்டும் என்றும் வள்ளலார் அறம் பாடுவதைக் காணலாம். 

கலையுரைத்த கற்பனையே நிலைஎனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கம் எலாம் மண்மூடிப் போக
என மூடத்தனங்கள் எல்லாம் அழிந்தொழிய வேண்டும் என்று வள்ளலார் வேண்டுவதைக் காட்டுகின்றது. 

ஒருமுறை வள்ளலாரும் சங்கராச்சாரியரும் சந்திக்கின்ற நிலை ஏற்படுகின்றது, அக்கால் ஆச்சாரியார் 

"எல்லா பாஷைகளுக்குமே மாத்ரு பாஷை சமஸ்கிருதந்தான்”. என்று வள்ளலாரிடம் கூற அதற்கு வள்ளலார், “எல்லா பாஷைகட்கும் பித்ரு பாஷை ஒன்று இருக்க வேண்டுமல்லவோ? அதுவே தமிழ்” என்று நறுக்கு தெறித்தாற்போல விடையளித்தார். இதன் வழி தம் தாய்மொழியாம் தமிழை விட்டுக் கொடாத மொழிப் பற்றும், மொழி வேறுபாடு காணாத மனம் கொண்டிருந்தும் தமிழின் உயர்வுதன்மையை தக்கவாறு விளக்கியுரைக்கும் மறமாண்புணர்வும் வள்ளலார் கொண்டிருந்ததைத் தெளிய உணர முடிகின்றது.  இதன் பிறகு “தமிழ்” எனும் சொல்லுக்கு வள்ளல் பெருமானார் பொருள் பொதிந்த உரை விளக்கக் கட்டுரையும் வரைந்தார். 

தமிழ் பாஷையே அதிசுலபமாகச் சுத்தசிவானு பூதியைக் கொடுக்கும் 

என்று வள்ளலார் அக்காலத்தில் எழுதியிருப்பது, சமற்கிருதம் வேத மொழியெனும் சிந்தனையில் அதன் வாயிலாகவே இறைவழிபாடும் செய்ய முடியும் என்று கூறித்திரிகின்ற பேருக்கு தகுந்த விளக்கமாகவே அமைந்துள்ளது எனலாம். 

மேலும், ஆரியம், மராட்டியம், ஆந்திரம் என்கிற பற்பல பாஷைகளைப் போலாகாமல் பெரும்பாலும் கற்பதற்கு எண்ணளவு சுருக்கமாயும், ஒலி இலேசாயும், கூட்டென்னும் சந்தி அதிகசுலபமாயும், எழுதவும் கவி செய்யவும் மிக நேர்மையாயும், அக்க ஆரவாரம், சொல்லாடம்பரம் முதலிய பெண்மை அலங்காரமின்றி, எப்பாஷையின் சந்தசுகங்களையும் தன் பாஷையில் அடக்கி ஆளுகையால் ஆண்டன்மையைப் பொருந்தியதுமான தமிழ்பாஷைக்கே அமைவுற்ற ழ்,ற்,ன் என்னும் முடி, நடு, அடி சிறப்பியல் அக்கரங்களில் முடிநிலை இன்பானுபவ சுத்த மோனா தீதத்தை சுட்டறச் சுட்டும் இயற்கை உண்மைத் தனித்தலைமைப் பெருமை சிறப்பியல் ஒலியாம்.'' 

என்று வரையறை செய்திருப்பது வள்ளலார் தமிழுக்குச் செய்த பெருமையாகவே கருதப்படுகின்றது. வள்ளலாருக்குச் சமற்கிருத மொழியின் மீது நாட்டமில்லை; மனமும் ஒட்டவில்லை . அதைவிட தமிழின் மீது அவர் பற்றுவைக்கின்றார். மணிப்பிரவாள நடைமிகுந்ததிருந்த அக்காலக்கட்டத்தில் இவர் இவ்வாறு கூறியிருப்பது புரட்சியல்லவா?  

" இடம்பத்தையும் ஆரவாரத்தையும் பிரயாசத்தையும் பெருமறைப்பையும் போது போக்கையும் உண்டுபண்ணுகின்ற ஆரியம் முதலிய பாஷைகளில் எனக்கு ஆசை செல்ல வொட்டாது, பயிலுதற்கும் அறிதற்கும் மிகவும் இலேசுடையதாய்ப் பாடுதற்கும் அறிதற்கும் மிகவும் அருமை உடையதாய், சாகாக் கல்வியை இலேசில் அறிவிப்பதாய் திருவருள்வலத்தாற் கிடைத்த தென்மொழி ஒன்றனிடத்தே மனம் பற்றச் செய்வது அத்தென் மொழிகளால் பல்வகைத் தோத்திரப் பாட்டுக்களைப் பாடுவித்தருளினீர்”.

என்று தமிழுக்கும் ஆரியத்திற்கும் உள்ள வேறுபாட்டை வள்ளலார் தெளிவுபடுத்துகின்றார். 

வடிக்குறும் தமிழ்கொண்டு அன்பருக்கருளும் வள்ளலே! ஒற்றியூர் வாழ்வே! 

உள்ளம் உருகி பாடுதற்கும், உணர்தற்கும் வாய்ப்பான தமிழ் ஒன்றே இறைநலம் வாய்க்கச் செய்யும் இயற்கை சிறப்புடையது எனும் கருத்தை மேற்கண்ட வரிவிளக்குவதை உணரலாம்.
அவருக்குத் திருவாசத்தின் மீது பற்றிருந்தது. திருக்குறளின் மீது ஆழ்ந்த மதியும் வேட்கையும் இருந்தது. இதனால் பொதுமக்களுக்கெல்லாம் திருக்குறள் வகுப்பு நடத்த திட்டமிட்ட தொழுவுர் வேலாயுதனார் அவர்களைக் கொண்டு வகுப்பு நடத்தினர்.
அவர் ஆரவாரத்தையம் ஆர்ப்பரிப்பையும் விரும்பாதவர் தம்மை யாரும் பெருமளவு புகழ்வதையும் விரும்பாதவர். 

"தெய்வத்தை தெரிந்து கொள்ளாது இவ்வுலகத்தார் என்னைச் சுற்றுகிறார்கள். ஐயோ சகோதரர்கள் தெய்வத்தைத் தெரிந்து கொள்ளாததினாலேயல்லவா நம்மைச் சுற்றுகிறார்கள் என்று நான் உள்ளும் புறமும் பரிதாபப்பட்டுக்கொண்டே இருந்தேன, இருக்கிறேன், இருப்பேன்." 

என்று கூறியதோடு வள்ளலார் என்று சொல்வதையும் விரும்பவில்லை. ஆயினும், பேரிறையின் அருள் வள்ளன்மையை அன்னாரிடமிருந்து இன்றும் இனி என்றும் பெறுகின்றோம். அவர் செய்த புரட்சி, தமிழினத்தை என்றும் தூக்கி நிறுத்தும், அறியாமை இருளை அகற்றும் தமிழ்நெறி என்றும் நிலைக்கும். வெல்க வள்ளலார் புகழ்.

நன்றி : இரா.திருமாவளவன் மற்றும் முகநூல்.

கருத்துகள் இல்லை: