“திருவள்ளுவர் பற்றி சுஜாதா”
திருக்குறளை முழுவதும் படித்தபோது எனக்கு ஏற்பட்ட வியப்பை உலகத்துடன் பங்கிட்டுக்கொள்ளும் முயற்சி இது. அடுத்த நூற்றாண்டில் அடி எடுத்து வைக்கப்போகும் இக்கால இளைஞர்களுக்கு இந்த மகத்தான இலக்கியத்தில் ஆர்வமும், " இதெல்லாம் திருக்குறளில் இருக்கிறதா என்ன?" என்கிற வியப்பும் ஏற்படுத்தத்தான்.
திருவள்ளுவரின் திருக்குறளுக்கு சில சமயம் வள்ளுவரைவிட சுருக்கமான உரையெழுதின போது எனக்கு இதைத் தமிழ் மக்கள் ஏற்பார்களோ என்று அச்சமாக இருந்தது. முதலில் இவ்வகையில் எளிமையாகச் சொல்வதற்கான தகுதி எனக்கு இருக்கிறது என்று நிரூபிக்க வேண்டியிருந்தது.
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.
என்பதை 'கடவுளைக் கும்பிடவில்லை என்றால் படித்துப் பிரயோசனமில்லை' என்று சொல்வதற்கேற்ற துணிச்சலை ஏற்படுத்திக் கொள்ள, திருக்குறள் பற்றிய பல ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் பரிமேலழகரிலிருந்து மு.வ. வரை..
அத்தனை உரைகளையும் படித்தேன். அதன்பின்தான் இந்த சுதந்திரம் எடுத்துக் கொண்டேன். இதனால்தான் இந்த உரை அங்கீகரிக்கப்பட்டு பல பதிப்புகள் கண்டது. வள்ளுவரின் வாழ்க்கை பற்றிய கதைகள் பல உள்ளன. ஆதிபகவன் என்பது தாய் தந்தையர் பெயர், வாசுகி அம்மையார் மனைவி.
ஏலேலசிங்கன் கதைகள், வாசுகி கிணற்றில் பாதி தொங்கும் கயிற்றை விட்டுவிட்டு வருவார் என்பது, பழைய சோற்றுக்கு வள்ளுவர் விசிறச் சொல்லுவார் என்பது, மத்தியானத்தில் விளக்கு கொண்டு வரச் சொல்லுவார், மண்ணைச் சமைக்கச் சொல்லுவார், ஏலேலசிங்கனிடம் நூல் வாங்கி நெசவு செய்தது இன்ன பிற கதைகள்’
‘அடிசிற்கினியாளே அன்புடையாளே' போன்ற பிற்கால வெண்பாக்களிலிருந்து பிறந்த கதைகள் தாம், வள்ளுவர் எப்படிப்பட்டவர் என்பதைப் பற்றிய பல தகவல்கள் அவருடைய நூலில் மறைமுகமாகக் கிடைக்கின்றன. அவர் ஜைனராக இருந்திருக்கலாம்.
(கடவுள் வாழ்த்து, நிச்சயம் ஜைனக் கடவுளைத் தான் குறிப்பிடுகிறது) எப்படியும் மாமிச உணவு உண்பதையும் கள்ளுண்பதையும் வெறுத்தவர். முன்வினையிலும் மறுபிறவியிலும் நம்பிக்கை உள்ளவர். அர்த்தசாஸ்திரம், மனு, காமசூத்திரம் இவைகளையும் பல பழைய நூல்களையும்..
படித்தறிந்தவர். கேள்வி கேட்காமலேயே அவருக்கு டாக்டர் பட்டம் கொடுக்கலாம். கேட்பதிலும் படிப்பதிலும் விருப்பமுள்ளவர். சாதிப் பிரிவில் நம்பிக்கை இல்லாதவர். ஒழுக்கம் தான் முக்கியம் என நம்புபவர், அகிம்சையை விரும்புபவர், நல்ல நண்பர்.
பழைய நண்பர்களை விட்டுக் கொடுக்காதவர், ஏழை உறவினரைப் பேணுபவர், சூதாட்டத்தை வெறுப்பவர், என்ன சம்பாதித்தாலும் கொடுத்துவிடுபவர், சாப்பாட்டில் அளவாக இருப்பவர், நல்ல இல்லற வாழ்க்கை நடத்தியவர், இருந்தாலும் பல விஷயங்களில் மனைவி பேச்சைக் கேட்காதவர், நிச்சயம் காதல் செய்தவர்!
ஊடலும் உண்டு, முக்கியமான அரசு அதிகாரியாக இருந்தவர், குழந்தைகளோடு கொஞ்சி அவர்கள் இறைத்த கூழைச் சுவைத்துப் பார்த்தவர், மழலையில் தன்னை மறந்தவர், சங்கீகதத்தில் விருப்பமுள்ளவர், அந்தணரோ வைதீகரோ அல்ல.!
இவ்வாறு பல குணாதிசயங்கள் குறளிலிருந்தே தெரிய வருகின்றன. இந்த விந்தை மனிதர் ஏறத்தாழ 2000 ஆண்டுகள் தாண்டி இன்றும் நம்முடன் கைகுலுக்குகிறார்.
நன்றி : திரு.வெங்கடேஷ் ஆறுமுகம், சுஜாதாவின் கடைசி பக்கம் ரசிகர் குழு மற்றும் முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக