11 அக்., 2020

சிற்றின்பமும் பேரின்பமும்

*இன்பத்தில் என்னய்யா சிற்றின்பம் ...பேரின்பம்...!!*

*படைப்பினால் ஈர்க்கப் பட்டால் சிற்றின்பம்.*

*படைத்தவனால் ஈர்க்கப்பட்டால் பேரின்பம்.*

*படைப்புகளை அனுபவித்தால் சிற்றின்பம்.*

*படைப்புகளை ஆராதித்தால் பேரின்பம்.*

*படைப்புகளை படைப்புகளாய் கண்டால் சிற்றின்பம்.*

*படைப்புகளில் படைத்தவனைக் கண்டால் பேரின்பம்.*

*என்னால் தான் இந்த வாழ்க்கை எனில் சிற்றின்பம்.*

*இறைவனால் தான் இந்த வாழ்க்கை எனில் பேரின்பம்.*

*நான் இந்த உடல் என எண்ணினால் சிற்றின்பம்.*

*நான் இந்த உயிர் என எண்ணினால் பேரின்பம்.*

*அமைதி ஆனந்தம் சிறிதே பெற்று பின் இழந்தால் சிற்றின்பம்.*

*அமைதி ஆனந்தத்தை நித்தியமாகப் பெற்றால் பேரின்பம்.*

*செய்வதெல்லாம் தனக்காக என்றால் சிற்றின்பம்.*

*செய்வதெல்லாம் இறைவனுக்காக என்றால் பேரின்பம்.*

*செய்வது நான் என எண்ணினால் சிற்றின்பம்.*

*செய்வது இறைவன் என எண்ணினால் பேரின்பம்.*

*புறப் பொருட்களில் நிகழ்வில் சுகமுறுவது சிற்றின்பம்.*

*அகத்திலேயே நித்திய சுகம் பெறுவது பேரின்பம்.*

*இன்பத்தை அடைந்தாலும் மீண்டும் வேண்டுவது திருப்தி அடையாதது சிற்றின்பம்.*

*வேறு எதனையும் விரும்பாதது பூரணமானது பேரின்பம்.*

*நிரந்தர பேரின்பத்தை மறைப்பது சிற்றின்பம்.*

*நிலையற்ற சிற்றின்பத்திற்கு அப்பாற்பட்டது பேரின்பம்.*

*உடலோடு மனதை தொடர்புப்படுத்துவது சிற்றின்பம்.*

*உயிரோடு மனதை இணைப்பது பேரின்பம்.*

*இன்பம் என்கிற வடிவிலிருக்கும் துன்பமே சிற்றின்பம்.*

*துன்பம் போல் அறியப்பட்டு இன்பமாவது பேரின்பம்.*

*எங்கோ இருக்கிறான் இறைவன் எனில் சிற்றின்பம்.*

*எங்கும் இருக்கிறான் இறைவன் எனில் பேரின்பம்.*

*பலவீனம், நோய், துன்பம், மரணம் தருவது சிற்றின்பம்.*

*மரணமிலாப் பெருவாழ்வைத் தருவது பேரின்பம்.*

*பயம், சஞ்சலம், சந்தேகம், குற்ற உணர்வு தருவது சிற்றின்பம்.*

*பயமறியாதது, ஸ்திரமானது, தூய்மையானது பேரின்பம்.*

*சிறு உணர்ச்சிகளில் இன்பம் அடைவது சிற்றின்பம்.*

*எல்லையற்ற பிரம்மத்தில் கலப்பது பேரின்பம்.*

*பிறரை தனக்காக பயன்படுத்துவது சிற்றின்பம்.*

*தன்னை பிறருக்காக அர்ப்பணிப்பது பேரின்பம்.*

*அளவுடையது, முடிவுடையது சிற்றின்பம்.*

*அளவற்றது, முடிவிலாதது பேரின்பம்.*

*அறிவை மழுங்கடிப்பது சிற்றின்பம்.*

*அறிவைப் பிரகாசிக்கச் செய்வது பேரின்பம்.*

*பேரின்ப பெருவாழ்வு வாழ முயற்சிப்போம்*

கருத்துகள் இல்லை: