தி.ஜா. 100 - 50 சிறுகதைகள் - ஓரு வாசிப்பானுபவம்!
தி.ஜானகிராமன் என்னும் அற்புத எழுத்தாளுமையின் நூற்றாண்டு அமைதியாகக்(?) கடந்து விட்டது. தமிழ் இலக்கிய வரலாற்றை, தி.ஜா என்னும் மகோன்னத கலைஞனின் படைப்புகளின்றி எழுதிவிட முடியாது. நாவல்கள், சிறுகதைகள், பயணக் கட்டுரைகள் என அனைத்திலும் மிளிரும் ‘அழகியல்’ தி.ஜா வுக்கே உரித்தான எழுத்து நடை.
“ எனக்கு நகர வாழ்க்கையில் ஈடுபாடு கிடையாது. மனசு முழுக்க கிராமங்களில்தான் இருக்கு. ஏன்னு சொல்ல முடியலை. அது சிறு வயசுனுடைய இதுவா இருக்கலாம். இல்லே நம்ம கிராமத்து மக்கள் கிட்ட இருக்கிற தனிதன்மை………. அங்கதான் அதிகமாகக் கிடைக்கிறது” என்று தி.ஜா சொல்வதை அவரது ஒவ்வொரு புனைவிலும் உணரமுடியும்!
அதிகம் பேசப்பட்ட, விமர்சிக்கப் பட்ட நாவல்களை விட, இவரது சிறுகதைகள் அனைவராலும் விரும்பிப் படிக்கப் பட்டன. நூற்றுக்கும் அதிகமான சிறுகதைகள் தி.ஜா. என்னும் இலக்கிய ஆளுமையை அடையாளம் காட்டும் படைப்புகளாகும். சூழ்நிலைகளே மனித மனக்குரங்குகளை ஆட்டிப் படைக்கின்றன - பண்பு மீறல்களைக் கூட, அனுதாபத்துடன் பார்க்கும்படி எழுதியிருப்பார் - அவரது சமூகப் பார்வை பாசாங்கற்றது, பாத்திரங்கள் உயிரோட்டமானவை. டம்பம், பொய்மை, உயர்ந்த மனிதர்கள், மனிதநேயம், காவிரிக் கரையின் எல்லா மட்டக் குடிகளின் கலாச்சாரம் என மிக நுட்பமான மனித உணர்வுகளைப் பேசும் அவரது சிறுகதைகள் - அவை வெளிப்படுத்தும் வெகுஜன ஈர்ப்பும், வசீகரமும் பொய்க் கலப்பில்லாதவை! முதல் கதை ‘பசி ஆறிற்று’ முதல், கடைசி கதை ‘சுளிப்பு’ வரை அற்புதமான படைப்புகள்!
நான் ஓர் இலக்கியவாதியோ, பெயர்பெற்ற எழுத்தாளனோ அல்ல. ஓர் ஆர்வமுள்ள வாசகன்! வாசிப்பானுபவம் கொடுக்கும் மன நிறைவை, உலகியல் குறித்த விசாலமான பார்வையை, அகமும் புறமும் சார்ந்த உணர்வுகளை எழுத்தில் வார்ப்பது அவ்வளவு எளிதானதல்ல. ஆனாலும், ஆழ்மனதில் பதியும் இந்த உணர்வுகளின் தாக்கத்தைப் பிறருடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்ற எண்ணமே, வாசித்தவைகளைப் பற்றி என்னை எழுதத் தூண்டியது.
தி.ஜானகிராமனின் நூற்றாண்டில், அவருடைய சிறுகதை ஒன்றைப் பற்றி வாரா வாரம் எழுதலாம் எனத் தோன்றியது. ஒரு வருடத்தில், 50 சிறுகதைகளைப் பற்றி எழுதலாம் என முடிவு செய்தேன். மிகவும் பேசப்பட்ட பிரபலமான சிறுகதைகளை - சிலிர்ப்பு, பாயசம், கோதாவரிக்குண்டு, அக்பர் சாஸ்திரி, காண்டாமணி போன்றவை - தவிர்க்கலாம் என்று தோன்றியது. மேலும் தி.ஜா. மீது வைக்கப்படும் பொதுவான விமர்சனம் ‘அவர் பாலியல் சார்ந்த கதைகளையே எழுதுவார்’ என்பது. அதைத் தவிர்த்த, சமூகம், உளவியல், உறவுகள், மனிதநேயம், குழந்தைகளின் மனவியல் என ஏராளமான படைப்புகளை தி.ஜா. கொடுத்திருக்கிறார் என்பது என் எண்ணம். அதற்கேற்ப பாலியல் சாராத சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்க முடிவு செய்தேன்.
தி.ஜா. வின் படைப்புகளை விமர்சனம் செய்யும் அளவுக்கு - சொல்லப் போனால் எந்த படைப்பாளியின் படைப்பையும் விமர்சிக்க - எனக்கு இலக்கிய ஞானம் கிடையாது. வாசிப்பு கொடுக்கும் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொள்ளவே எழுதுகிறேன். மேலும், தொடர்ச்சியாக தி.ஜா. வின் சிறுகதைகளை வாசிப்பதற்கான வாய்ப்பாகவும் இதனைச் செய்யலாம் என்று தோன்றியது. ‘இதை எழுதுவதில் ஓர் ஆத்ம திருப்தி இருக்கிறது.’ அவர் சிறுகதைகளில் அவரது சமூகப் பார்வை என்னை வியக்க வைக்கிறது! குழந்தைகளும், ரயிலும், ரயில் நிலையங்களும், ஆசிரியர்களும், கிராமங்களும், அவர்கள் குணாதிசயங்களும், கலாச்சாரமும், காவிரியும் அவரது பார்வையில் நம் மனங்களில் குறும்படங்களாய் விரியும் மகோன்னதமான எழுத்து அவருடையது.
முதலில் தினமணி.காம் மின் பத்திரிகையிலும் (நன்றி, திரு ஆர்.பார்த்தசாரதி), பின்னர் என் முகநூல் சுவற்றிலும் எழுதினேன். தி.ஜானகிராமன் வாசகர் வட்டம் குழுமத்திலும் வாராவாரம் பகிர்ந்துகொண்டேன். தி.ஜா. வின் வாசகர்கள், ‘விமர்சனத்துக்கும், கதை வாசிப்புக்கும்’ இடைப்பட்ட என் வாசிப்பானுபவத்தை வாசித்து, அவர்கள் அனுபவத்தையும் பகிர்ந்து கொண்டது மகிழ்ச்சியளித்தது. முன்னூறிலிருந்து நானூறு வார்த்தைகள் என ஒரு வரையறை கொடுக்கப்பட்டதால், முதலில் கொஞ்சம் தயக்கமும், மேலோட்டமான விவரணைகளும் என்னைக் கட்டிப்போட்டன. பின்னர் (21 கதைகளுக்குப் பிறகு), ஐநூறு வார்த்தைகளுக்குள் என நானே சிறிது கூடுதல் இடம் எடுத்துக்கொண்ட போது, தி.ஜா. வின் வாசிப்பானுபவத்தினைத் தடையின்றி சுவாசிக்க முடிந்தது.
தி.ஜா. ’வாசிப்பானுபவம்’ லேடீஸ் ஸ்பெஷல் ஆசிரியர் கிரிஜா ராகவன் தொடங்கி வைத்தது. பின்னர் ‘காவேரியின் காதலன்’ கலைமகளில் கீழாம்பூர் வெளியிட்டார். புதுச்சேரி மின்முற்றத்தில் ‘தி.ஜா. சிறுகதைகள்’ பற்றி உரையாற்ற திரு வீரமணி வாய்ப்பளித்தார். விருட்சம், குவிகம், வாசிப்போம் தமிழ் இலக்கியம் வளர்ப்போம் இணையதளங்களில் தி.ஜா. சிறுகதைகள் பற்றிப் பேசுவதற்கு வாய்பளிக்கப் பட்டது. தி.ஜா. வின் புதல்வி திருமதி உமா சங்கரி தான் எழுதிய “மெச்சியுனை……” (தி.ஜானகிராமனைப் பற்றி அவர் மகள்) புத்தகத்தை அனுப்பி வைத்து நெகிழச்செய்தார்!
மேற்கூறிய எல்லாமே, தி.ஜா. வின் வாசிப்பானுபவத்தை பகிர்ந்து கொண்டதால் வந்த மகிழ்ச்சி!
ஒவ்வொரு வாரமும் தவறாமல் வாசித்து என்னை ஊக்குவித்த அனைவருக்கும் நன்றி!
எழுத்தாளனின் எழுத்தை விட்டு, எழுத்தாளன் என்ற மனிதனை விமர்சிக்கும் சர்ச்சைகளில் தி.ஜா. ஈடுபட்டதில்லை. தன்னைக் கடுமையாகத் தாக்கியவர்களைக் கூட அவர் மிகப் பெரியவர்களென்ற முறையில்தான் நோக்கினார்.
“எந்தக் கலைப்படைப்புக்கும் முழுமையும் ஒருமையும் அவசியம். அவை பிரிக்க முடியாத அம்சங்கள். சிறுகதையில் அவை உயிர்நாடி” - தி.ஜா.
ஒவ்வொரு வாரமும் நான் இதை அனுபவபூர்வமாக உணந்தேன்!
ஜெ.பாஸ்கரன்.
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக