28 ஆக., 2021

இன்றைய சிந்தனைக்கு : இழந்தவை !

இழந்தவை

இந்த ஒன்றரை ஆண்டுகளில் குழந்தைகள் என்னென்னவெல்லாம் இழந்தார்கள் என்று யோசித்துக் கொண்டிருந்தேன்.
- பள்ளிப்பாடங்கள், பள்ளி வாழ்க்கை
- பெற்றோருடன் வாகனத்திலோ, சைக்கிளிலோ, நடந்தோ, பஸ்சிலோ பள்ளிக்குச் செல்லும் பயண அனுபவம்
- பயணத்தின்போது கிடைக்கும் அனுபவங்கள், பார்க்கும் காட்சிகள்
- பள்ளியில் விளையாட்டுகள், கோபதாபங்கள், சிநேகங்கள், பரிமாறல்கள், 
- பிறந்தநாளுக்கு புத்தாடை அணிந்து சென்று எல்லாருக்கும் மிட்டாய் கொடுக்கும் அனுபவம்
- நெருக்கமான / பட்டும்படாததுமான நட்புகளுடனான உறவு
- தனது மகிழ்ச்சிகளையும் வருத்தங்களையும் கவலைகளையும் பகிர்ந்து கொள்ள முடியாத இறுக்கம்
- மாலை நேரங்களில் வெளியே விளையாடுதல்
- பூங்கா அல்லது விளையாட்டு மைதானங்களுக்குச் செல்லுதல்
- சைக்கிள் ஓட்டுதல்
- பெற்றோருடன் வாகனத்தில் வெளியூர் பயணம்
- ஆசிரியர்களின் பாராட்டுகள் / திட்டுகள் / அன்பு
- பல்வேறு போட்டிகளில் பங்கேற்பு, பரிசுகள் பெறுதல்
- பள்ளிகளுக்கு இடையிலான போட்டிகளில் பங்கேற்பு
- சுற்றுலாக்கள், ஓட்டல்களில் தங்கல், வெளியூர்களைப் பார்த்து மகிழ்தல்
- அவரவர் வீட்டிலிருந்து சமைத்துச் சென்றதை பரிமாறி உண்ணல்
- யூனிஃபார்ம் அணிதல், புதிதாக வாங்குதல்
- நட்புகள் இல்லாமல் தனியாக பிறந்தநாள் கொண்டாடுதல்
- புதிதாக ஆடை அணிகலன்கள் வாங்குதல்
- வாங்கியதை மற்றவர்களிடம் காட்டிப் பெருமையடித்தல், மகிழ்ச்சி அடைதல்
- பாஸ் ஆவோமா பெயில் ஆவோமோ என்ற பதற்றம்
- ரிசல்ட் பார்க்கும்போது கிடைக்கும் பேரானந்தம்
- உன் மார்க் என்ன, என் மார்க் பாரு என்ற பரிமாற்றங்கள்
- பிரேயர் அல்லது விளையாட்டு வகுப்பில் உடல் பயிற்சிகள்

பல வீடுகளில் நடந்ததெல்லாம் போனில் பாடம் படிப்பது, படிப்பது போல நடிப்பது, கண்கள் மட்டும் போனில் இருக்க கவனமும் நினைவும் வேறெங்கோ இருப்பது, அட்டெண்டன்ஸ் கொடுத்துவிட்டு போனைப் பார்த்தவாறே தூங்கி வழிவது, வகுப்பு நடக்கும்போது மியூட்டில் போட்டுவிட்டு விளையாட ஓடிவிடுவது, பெற்றோர் இல்லாத நேரத்தில் வகுப்பை விட்டுவிட்டு வேறேதனும் பார்ப்பது, வாட்ஸ்அப்பில் அரட்டை அடிப்பது, வாய்ப்புக் கிடைத்தால் வயதுக்கு ஒவ்வாத போர்ன்களையும் பார்ப்பது, கேம் விளையாடுவது என்று போனிலேயே மயங்கிக் கிடந்திருக்கும் ஒரு மாணவர் பகுதி. அவர்களை போன் போதையிலிருந்து மீட்டெடுப்பதே பெரும் போராட்டமாக இருக்கும். 

காலையில் எழுந்து பள்ளிக்குத் தயாராகும் வழக்கம் அற்றுப் போயிருக்கும். எட்டு-ஒன்பது வரை உறங்குவது வழக்கமாகிப் போயிருக்கும். பெற்றோர் திட்டத்திட்ட இன்னும் கொஞ்சநேரம் என்று கெஞ்சிக்கொண்டே படுத்தே கிடக்கும் பழக்கம் வந்திருக்கும். நேரத்துக்கு உண்ணும் வழக்கம் மாறியிருக்கும். பகலில் தூக்கம் அறிமுகமாகியிருக்கும். இரவில் குறிப்பிட்ட நேரத்துக்கு உறங்கும் வழக்கம் போயிருக்கும். போர்வைக்குள் செல்போனை மறைத்து வைத்துக்கொண்டு ஏதேனும் பார்க்கும் பழக்கம் வந்திருக்கும். வெட்டி அரட்டைகள் பழகிப்போயிருக்கும். வீட்டில் பெரியவர்கள் டிவி சீரியல் பார்க்க, இவர்களும் அதைப் பார்க்கப் பழகியிருப்பார்கள். குறித்த நேரத்துக்குள் படித்து எழுதுவது என்ற வழக்கம் அற்றுப் போயிருக்கும். படிக்கும்போது, எழுதும்போது உட்காரும் பாணி மாறிப்போயிருக்கும். ஐடி கார்டு எங்கே என்றே மறந்து போயிருக்கும். புத்தகப் பைகளில் பூஞ்சை படிந்திருக்கும். ஷூக்களில் கரப்பானோ, பூரானோ தேளோ குடிவந்திருக்கும். வீட்டிலேயே இருப்பதால் அவ்வப்போது சலிப்புற்று திங்கிறதுக்கு ஏதாவது குடும்மா என்று நச்சரித்து, தீனிகளைத் தின்று பழகிப்போயிருக்கும். வசதியுள்ள குழந்தைகள் சற்றே கொழுத்தும்போயிருக்கும். 

வசதியில்லாதவர்களின் வீடுகளில் செருப்பு அறுந்து போச்சு, யூனிபார்ம் கிழிஞ்சு போச்சு, பை பிஞ்சு போச்சு, இப்படி ஸ்கூலுக்குப் போகவே வெக்கமா இருக்கு என்ற குமுறல்களும் இல்லை. ஆன்லைன் கிளாசுக்கு செல்போன் இல்லை, செல்போன் இருந்தாலும் மாதம்தோறும் 200-300 ரூபாய்க்கு டேடா போட காசு இல்லை, அவனெல்லாம் வச்சிருக்கான் என்கிட்டேதான் இல்லை என்கிற சண்டைகள். என்னை எதுக்கு பெத்தே என்ற கேள்விகள்... ஆனால் இத்தகைய குமுறல்களுக்கு ஆளாகிறவர்களில் பலர் பள்ளியுடன் தொடர்பையே விட்டிருப்பார்கள். கிடைத்த கூலி வேலைகளுக்கு, பெற்றோருடன் வேலையில் உதவிக்கு, திருப்பூர், கரூர் போன்ற தொழில் நகரங்களில் அடிமை வேலைக்குப் போயிருப்பார்கள். ஆண்களில் பலர் சித்தாள் வேலைக்குப் போயிருப்பார்கள். கொஞ்சம் சம்பாதித்து பணத்தின் ருசியை அறிந்தவர்கள் இனியும் எதற்குப் பள்ளிக்குப் போக வேண்டும் என்று சிந்திக்கத் துவங்கியிருப்பார்கள். மீண்டும் பள்ளிகள் துவங்கும்போதுதான் தெரியும் இடை நின்றவர்கள் எத்தனை சதவிகிதம் என்று

மொத்தத்தில், வசதி உள்ளவர்களோ இல்லாதவர்களோ எல்லாக் குழந்தைகளும் தம் குழந்தைமையின் இன்பங்களை இழந்து விட்டிருப்பார்கள் என்பது மட்டும் நிச்சயம். இது ஈடு செய்யக்கூடிய சாதாரண இழப்பல்ல.

பள்ளிகளின் திறப்பு பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் நிஜமாகவே பெருத்த நிம்மதியாக இருக்கும்.

நன்றி :

கருத்துகள் இல்லை: