🕉️ ஸ்ரீராமகிருஷ்ணரின் அமுதமொழிகள் 🕉️
(மூன்றாம் பகுதி)
தொடர்ச்சி... ( 502 )
🌲 அத்யாயம் - 47 🌲
🌼 டாக்டர் சர்க்காருடன் 🌼
வெள்ளி, அக்டோபர் 23. 18852
ஸ்ரீராமகிருஷ்ணர்: 'உங்கள் மகனின் மனத்தில் இன்னமும் உலகியல் அதாவது காமினீ-காஞ்சனம் நுழையவில்லை.'
டாக்டர்: 'தந்தையின் செலவில் வாழ்கிறான், அதனால்தான்! சொந்த உழைப்பில் காலந்தள்ளும்போது அவனிடம்
உலகியல் நுழைகிறது இல்லையா
என்று பார்க்க வேண்டும்.
ஸ்ரீராமகிருஷ்ணர்: 'ஆம். அது உண்மைதான், உண்மைதான். ஆனால் காரியம் என்ன தெரியுமா? உலகியல் கொண்டவனிடமிருந்து இறைவன் வெகுதூரத்தில் இருக்கிறார். பொருட்பற்று அற்றவர்களிடம் அவர் உள்ளங்கை நெல்லிக் கனிபோல் உள்ளார். (டாக்டர் சர்க்கார், டாக்டர் தோக்டி இரு வரையும் பார்த்து) காமினீ - காஞ்சனத் துறவு உங்களுக்கு அல்ல, நீங்கள் மனத்தளவில் துறக்க வேண்டும். கோசுவாமி களிடமும் நான் இதையே சொன்னேன்; "நீங்கள் ஏன் துறவைப் பற்றி பேசுகிறீர்கள்? நீங்கள் துறந்தால் சியாம சுந்தரின் பூஜை, சேவை இவைகளெல்லாம் நடக்காது" என்றேன்.
ஸ்ரீராமகிருஷ்ணர்: 'துறவு துறவிகளுக்குத்தான். அவர்கள் பெண்களின் படத்தைக்கூட பார்க்கக் கூடாது. அவர்கள் விஷயத்தில் பெண்கள் விஷம் போன்றவர்கள். அவர்களிடமிருந்து பத்தடி விலகியிருக்க வேண்டும், குறைந்தது ஓர் அடியாவது விலகியிருக்க வேண்டும். எவ்வளவுதான் பக்தி நிறைந்தவளாக இருந்தாலும் அவளிடம் அதிகம் பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது.
'பெண்களை அறவே பார்க்க முடியாத இடத்திலோ அல்லது கூடியவரைக்கும் பெண்கள் இல்லாத இடமாகவோ பார்த்து துறவிகள் வாழ வேண்டும்.
'துறவிக்குப் பணமும் விஷம்தான். பணம் அருகிலிருந் தால் கவலை, அகங்காரம், உடலின்ப முயற்சிகள், கோபம் எல்லாம் வந்துவிடுகின்றன; ரஜோகுணம் அதிகரிக்கிறது. ரஜோகுணமிருந்தால் தமோகுணமும் வரும். ஆகவேதான் துறவி பொன்னைத் தொடுவதில்லை. காமினீ - காஞ்சனம் இறைவனை மறக்கச் செய்கிறது.
'பணத்தைக் கொண்டுதான் அரிசியும் பருப்பும் துணி மணியும் வாங்குகிறோம்; தங்க இடம் தேடுகிறோம். இறைவனுக்குச் சேவை, சாதுக்கள் மற்றும் பக்தர்களின் சேவையெல்லாம் செய்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால் பணத்தைச் சேர்த்து வைப்பது தவறு. மிகவும் சிரமப்பட்டு தேனீ கூடுகட்டுகிறது. ஆனால் யாரோ ஒருவன் வந்து கூட்டைக் கலைத்து தேனை எடுத்துச் சென்று விடுகிறான்.'
டாக்டர்: 'நாம் யாருக்காகச் சேர்க்க வேண்டும்? ஒரு தறுதலை மகனுக்காகவா?’
ஸ்ரீராமகிருஷ்ணர்: 'தறுதலையான மகன் மட்டுமா! ஒரு வேளை மனைவியும் ஒழுக்கம் கெட்டவளாக இருக்கலாம். அவளுக்குக் கள்ளப் புருஷன் இருக்கக் கூடும்! கணவனின் கைக்கடிகாரத்தையும் செயினையுமே [ Chain; மாலை.] அவனுக்குக் கொடுத்து விடுவாள்!
'உங்கள் விஷயத்தில் பெண்களை அடியோடு துறக்க முடியாதுதான். மனைவியுடன் சேர்வது தவறல்ல. ஆனால் ஓரிரு குழந்தைகளுக்குப் பிறகு இருவரும் சகோதர சகோதரியைப்போல் வாழ வேண்டும். காமினீ- காஞ்சனப் பற்று இருந்தாலே நான் மேதை, நான் பணக்காரன், நான் உயர் பதவி வகிப்பவன் என்ற அகங்காரங்களெல்லாம் தானாகவே வந்துவிடுகிறது. அகங்காரம் போகாவிட்டால் ஞானம் பெற முடியாது. மலைமுகட்டில் தண்ணீர் தங்காது; பள்ளமான நிலத்திற்கு நாலா பக்கங்களிலிருந்தும் தண்ணீர் பாய்ந்தோடி வருகிறது.'
டாக்டர்: 'ஆனால் பள்ளமான நிலத்தில் நாலா பக்கங்களிலிருந்தும் வரும் தண்ணீரில் நல்ல தண்ணீரும் இருக்கும். கெட்ட தண்ணீரும் இருக்கும். கலங்கின தண்ணீர், சாக்கடைத் தண்ணீர் எல்லாம் இருக்கும். மேலும் மலைப்பாங்கான இடத் திலும் பள்ளமான நிலம் இருக்கும். நைனிடால், மானசரோவர் போன்ற இடங்களில் ஆகாயத்திலிருந்து விழுகின்ற சுத்தமான தண்ணீரே உள்ளது.'
ஸ்ரீராமகிருஷ்ணர்: 'வெறும் ஆகாயத் தண்ணீர் மட்டுமா?'
டாக்டர்: 'மேலும், அவ்வாறு மலைமுகட்டில் தேங்கும் தண்ணீரை நாலா பக்கங்களுக்கும் கொடுத்தும் உதவலாம்.
ஸ்ரீராமகிருஷ்ணர் (சிரித்தவாறு): 'ஒருவனுக்கு சித்த மந்திரம் கிடைத்திருந்தது. அவன் மலைமுகட்டில் நின்று கொண்டு, "`நீங்கள் இந்த மந்திரத்தை ஜபம் செய்து கடவுளைப் பெறலாம்” என்று உரத்த குரலில் கத்தினான்.'
டாக்டர்: 'சரிதான்.'
ஸ்ரீராமகிருஷ்ணர்: 'ஆனால் ஒரு விஷயத்தைக் கவனிக்க வேண்டும். இறைவனுக்காக மனம் ஏங்கி உயிர் துடிக்கும்போது நல்ல தண்ணீர், சாக்கடைத் தண்ணீர் என்ற கணக்குவழக்கெல்லாம் நிற்காது. இறைவனை அறிவதற்காக சிலசமயம் நல்லவனிடம் செல்லக்கூடும், சிலவேளைகளில் பக்குவப்படாதவனையும் நாடக்கூடும். ஆனால் இறைவனது அருள் கிடைத்து விட்டால் அழுக்கடைந்த நீரும் எந்தக் கெடுதலையும் உண்டாக்காது. அவர் ஞானத்தைத் தரும்போது எது நல்லது, எது கெட்டது என்பதையெல்லாம் நாம் அறியுமாறு செய்கிறார்.
'மலைமீது பள்ளம் இருக்கலாம்; ஆனால் தீய-நான் என்ற மலையின்மீது ஒருபோதும் இருக்காது. வித்யை-நான், பக்த நான் இவை ஏற்படுமானால், அப்போதுதான் ஆகாயத்திலிருந்து வருகின்ற தூய தண்ணீர் அங்கே வந்து தங்கும். மேலும், உயர்ந்த இடத்திலிருக்கும் தண்ணீரை நாலா புறங்களிலும் கொடுக்கலாம் என்பது உண்மைதான். அது வித்யை நான் என்ற மலையிலிருந்துதான் முடியும்.
'இறைவனுடைய ஆணை கிடைக்காவிட்டால் போதிக்க முடியாது. சங்கராச்சாரியார் ஞானம் பெற்ற பிறகும் உல கிற்குப் போதிப்பதற்காக வித்யை-நானை வைத்திருந்தார். இறையனுபூதி பெறாமல் லெக்சர் செய்வதா! அதனால் மக்களுக்கு என்ன நன்மை உண்டாகும்!
'நந்தன் பகான் பிரம்ம சமாஜத்திற்குப் போயிருந்தேன். பிரார்த்தனைகளுக்குப் பிறகு ஒருவர் மேடைமீது உட்கார்ந்து லெக்சர் செய்தார்— எழுதிக் கொண்டு வந்திருந்தார். படிக்கும் பொழுது நான்கு புறமும் பார்க்கவும் செய்தார். தியானம் செய்தார்; அப்போதும் இடையிடையே எல்லோரையும் ஒரு கண் பார்த்துக்கொள்வார்.
'இறைக்காட்சி பெறாதவனின் உபதேசம் சரியான பலனைத் தராது. ஒரு விஷயத்தை அவன் சரியாகச் சொல்லிவிடலாம். ஆனால் வேறு ஏதோ ஒன்று வரும்போது குழப்பி விடுவான். சாமாத்யாயி லெக்சர் செய்தார்— "இறைவன் மன வாக்கிற்கு அப்பாற்பட்டவர். அவரிடம் எவ்வித உணர்ச்சியும் இல்லை. நீங்கள் பிரேமபக்தி என்ற உணர்ச்சி யைச் சேர்த்து அவரை வழிபடுங்கள்'' என்றார் அவர்! பார்த்தாயா! யார் உணர்ச்சிகளின் வடிவானவரோ, ஆனந்தமே உருக்கொண்டவரோ அவரை இப்படிக் கூறுகிறார். இந்த லெக்சரால் என்ன பயன்? மக்களுக்கு நன்மை ஏற்படுமா? "என்னுடைய மாமன் வீட்டு மாட்டுத் தொழுவம் முழு வதும் குதிரைகள் இருக்கின்றன" என்றான் ஒருவன். மாட்டுத் தொழுவத்தில் குதிரைகளாம்! (எல்லோரும் சிரித்தனர்) அங்கே குதிரைகளே இல்லை என்பதை இதிலிருந்து புரிந்து கொள்ள வேண்டும்.
டாக்டர்(சிரித்தவாறு): 'மாடுகளும்
இல்லை.' (எல்லோரும் சிரித்தனர்).
பரவச நிலையில் இருந்த பக்தர்கள் சாதாரண நிலைக்குத் திரும்பினர். பக்தர்களைப் பார்த்து டாக்டர் மகிழ்ந்தார். 'இவர் யார்? இவர் யார்?' என்று ஒவ்வொருவரையும் பற்றி ம-விடம் கேட்டார். பால்டு, சிறிய நரேன், பூபதி, சரத், சசி முதலிய இளைஞர்களை டாக்டரிடம் ம- அறிமுகப்படுத்தினார். சசியைச் சுட்டிக்காட்டி, ''இவன் பி.ஏ. பரீட்சை எழுத இருக்கிறான்'' என்று கூறினார். டாக்டரின் கவனம் எங்கோ இருந்தது. உடனே டாக்டரிடம் குருதேவர், "இவன் என்ன சொல்கிறான் என்று கவனியுங்கள்'' என்றார். டாக்டர் ம- கூறுவதைக் கேட்டார்.
ஸ்ரீராமகிருஷ்ணர் (ம-வைச் சுட்டிக்காட்டி டாக்டரிடம்): 'இவன் ஸ்கூல் மாணவர்களுக்கு உபதேசம் செய்கிறான்.'
டாக்டர்: 'கேள்விப்பட்டேன்,'
ஸ்ரீராமகிருஷ்ணர்: 'என்ன ஆச்சரியம்! நானோ பாமரன். இருப்பினும் எவ்வளவோ படித்தவர்கள் எல்லாம் இங்கு வருகிறார்கள். இது என்ன விந்தை! இதை இறைவனது விளையாட்டு என்றுதான் கூறவேண்டும்.
இன்று கோஜாகர் பௌர்ணமி. இரவு ஒன்பது மணி இருக்கும். டாக்டர் ஆறு மணியிலிருந்தே அங்குதான் இருந்தார்; அங்கே நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்தார்.
கிரீஷ் (டாக்டரிடம்): 'ஐயா, உங்களிடம் ஒன்று கேட்கிறேன் — இங்கு இன்று வரக்கூடாது. வரக்கூடாது என்று நினைப்பேன். ஆனால் ஏதோ ஒன்று என்னை இங்கு இழுத்துக் கொண்டு வருவதுபோல் தோன்றும். உங்களுக்கு இப்படி நேர்வதுண்டா?'
டாக்டர்: 'அப்படி எனக்குத் தெரியவில்லை. ஆனால்
நெஞ்சைப் பற்றியதை நெஞ்சுதான் அறியும். (குருதேவரிடம்) இதைப்பற்றியெல்லாம் பேசி என்ன பயன்?'
-அமுதத்தை தொடர்ந்து பருகுவோம்...
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக