5 ஆக., 2021

நூல் நயம் : ஜே.ஜே.: சில குறிப்புகள் - சுந்தர ராமசாமி

#Reading_marathon_2021
03/50

புத்தகம்: ஜே.ஜே.: சில குறிப்புகள்
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
வகை: நாவல்
பக்கங்கள்: 224
விலை : ₹250
பதிப்பகம்: காலச்சுவடு பதிப்பகம்

தன் உள்ளொளியைக் காண எழுத்தை ஆண்ட ஒரு அபூர்வ மாற்றுமொழி எழுத்தாளனனை தன்மொழியில் ஒரு அங்கமாக்கி, தன்மொழி வாசகனுக்கு அறிமுகம் செய்துவிட ஒரு எழுத்தாளன் செய்யும் பிரயத்தனம். 

பல யோசனைகள் மற்றும் நிராகரிப்புகளுக்குப்பிறகு இப்புத்தகத்திற்கு இப்படியொரு அறிமுகம் இட்டிருக்கிறேன். அதையும் மரியாதைக்குரிய சுந்தர ராமசாமியின் எழுத்துக்களை கடன்பெற்றே செய்யமுடிந்தது. இன்னும் பண்பட்டிருக்காத என் புரிதல்கள் இப்புத்தகத்தை எவ்விதமேனும் சிறுமைப்படுத்திவிடக் கூடாது என்பதாலது. 

ஏறத்தாழ 30 பக்கங்களை கடந்த பின் வெறுத்துப்போனேன். புத்தகத்தை மூடி முன்னட்டையில் இது நாவலா என்று உறுதிபடுத்திக் கொள்ளவேண்டியிருந்தது. இடம்நகரும் கங்காரு தரையின் மீது இடைவெளி விட்டே தொட்டுக்கொண்டிருப்பது போலவே 30 பக்கங்களை வாசித்திருப்பதாய் உணர்ந்தேன். ஆங்காங்கே தொட்டிருந்த இடங்களெல்லாம் பிரமித்துப்போனேன். ஆனால் ஒரு தொடர்ச்சியாய் எழுத்துக்கள் புரிய மறுத்தன. 15 வருடங்களுக்குமேல் இலக்கிய வாசிப்பை விட்டிருந்ததின் வினைப்பயனது. ஆனால் அதையும் தாண்டி இந்நாவல் வாசிப்பு, கயிற்றின்மேல் நடப்பது போல. எழுத்தாளரின் வரிகளோடு, ஒவ்வொரு எட்டாய்க் கவனமாய் முன்னகர வேண்டும். என் வேலையல்ல உன் சமார்த்தியத்தில் புரிந்துகொள் என்பதுபோல முன் வரிகளையும் பின் வரிகளையும் விட்டிருந்தார். தொடர்ச்சியை விட்டுவிட்டால் மீண்டும் சாத்தியமான தொடக்கத்திலிருந்து மறுவாசிப்பு செய்யவேண்டியிருந்தது.

"ஜோசஃப் ஜேம்ஸ் 1960 ஜனவரி 5ஆம் தேதி, தனது 39ஆம் வயதில், ஆல்பெர் காம்யூ விபத்தில் மாண்டதற்கு மறுநாள் இறந்தான்."

இவ்வரியில்தான் நாவல் துவங்குகிறது. ஏப்ரல் மாதத்தில் முதன்முதலில் வாசித்தபோது இதற்குமேல் எனக்கு எதுவும் தோன்றவில்லை. சில நாட்களுக்குப்பிறகு, இரண்டாம் கட்டத் தெரிதலுக்குப் பின்புதான் ஒரு 'இழவுச் செய்தியில்' நாவலைத் துவக்கியிருக்கிறார் என்பது புரிந்தது! ஆல்பெர் காம்யூ யாரெனத் தெரிந்த பிறகு, அவருக்கு இணையாக ஜே.ஜே வை வைத்து துவங்கியிருக்கிறார்; அப்படியானால் எப்படிப்பட்ட ஒரு எழுத்தாளனின் குறிப்புகளை எழுதப்போகிறார் என்ற தகவலை முதல் வரியிலேயே கொடுத்திருக்கிறார் என்ற புரிதல் மூன்றாம் கட்டச்சிந்தனை திறப்பு. இவ்வரியின் நான்காம் கட்டத் திறப்பிற்குள் நான் இன்னும் நுழையவில்லை (நுழைந்தவர்கள் பின்னூட்டத்தில் உதவலாம்!). ஏழு மலை, ஏழு கடல் தாண்டியபிறகுதான் என்றில்லை; ஒவ்வொரு மலைக்கும் கடலுக்கும் பிறகும் நாம் ஒன்றை இந்நாவலில் கண்டடையக்கூடும்.

ஓரளவு கடுமையான இலக்கிய மொழிநடை. அந்நடையின் தாளத்துடன் வாசகனின் வாசிப்புணர்வு இணங்கினால் மட்டுமே இப்புத்தகத்தின் இசை அபசுரமின்றி ஒலிக்குமென்று தோன்றியது. பயிற்சியல்லாத தொடக்கநிலை வாசகர்களுக்கு நிச்சயமாய் இதில் சிரமம் இருக்கும். 

எழுதிக்கொண்டிருக்கும் ஜே.ஜே.யின் குறிப்புகளின் தொடர்ச்சியிலிருந்து ஆங்காங்கே கிளையாய் பிரிந்து அரையிலிருந்து ஆறேழு பக்கங்கள் வரை தத்துவ விசாரணையோ, மனித நடத்தையின் உளவியல் விசாரணையோ, சமூக கேள்விகளோ, அரசியல் விமர்சனங்களோ, ஜே.ஜே. அல்லாத பிற நபரைப்பற்றிய செய்திகளையோ விவாதித்துவிட்டு மீண்டும் ஜோசப் ஜேம்ஸ்க்கு திரும்பும்.  அப்படியானால் இப்புத்தகத்தின் அனைத்து வரிகளையும் ஒன்றிணைக்கும் அந்த ஒற்றை நரம்புதான் என்ன? அவ்வாறு ஒரு ஒருங்கிணைப்புதான் இந்நாவலுக்கு உண்டா!? சரியாக இதற்கு ஒரு பதிலளிக்க நான் இன்னும் மறுவாசிப்புகள் செய்துகொண்டிருக்க வேண்டும். நிச்சயமாக இது எனக்குமட்டும் ஏற்படும் பிரத்யேக வாசிப்பனுபவமாயிராது. 

இரண்டு பிரிவுகள். முன்னதில் பெரும்பகுதி ஜே.ஜே.வின் வாழ்கைக்குறிப்பு. பின்னதில் ஜே.ஜே.யின் நாட்குறிப்புகளிலிருந்து எடுக்கப்பட்ட சில எடுபதிவுகள் (excerpts). 

ஒரு நாவலின் இயற்கைத்தன்மைகள் என்னென்ன என்று ஒரு வாசகன் பட்டியலிட்டால், அதன் ஒவ்வொரு தன்மையையும் கேள்விக்குள்ளாக்கும் நாவலிது. ஒவ்வொரு தனிமனிதனின் தனிதன்மையின் வாயிலாக உருவாகும் விந்தையான வெளிப்பாடுகள் பொதுவான வரைமுறைகளுக்குட்படாது எனும் பின்நவீனத்துவ கோட்பாட்டின்படி திரு.சுந்தர ராமசாமியின் தனிப்பெரும் தன்மையிலிருந்து வெளிப்பட்டிருக்கும் படைப்பு. 1981ல் ஒரு தமிழெழுத்தாளர் இதனை படைத்திருக்கிறார் என்பது தமிழன்னையும் அவள்தம் பிள்ளைகளும் பெருமைகொள்ளும் அடையாளச்சான்று.

எதிர்மறை எண்ணங்கள் சிலவற்றை இந்நாவலில் நான் காணாமலில்லை. ஆனால் அவற்றை பெரிதுபடுத்தி சிறுமைப்படுத்துமளவிற்கு இங்குநான் இறங்கப்போவதில்லை. அவற்றை வாசிக்கும் வாசகர் பக்குவதுடன் கண்டுகொள்வதே தகுதியானது.

இன்னும் வாசித்திராதவர்களின் வியப்புகளும், கேள்விகளும், சிந்தனைகளும், சந்தேகங்களும் அவரவரே வாசிக்கும்போது தீர்த்துக்கொள்ளவும், என் பதிவால் அவ்வாச்சரியங்கள் கெட்டுப்போக கூடாதென்பதாலும் சில தகவல்களை வேண்டுமென்றே இங்கு தவிர்த்திருக்கிறேன். தன் முயற்சியில் தானே சிலவற்றை புரிந்துகொள்வது ஒருவகையில் உயர்வான இன்பம் தரக்கூடியது.

நன்றி :

திரு. ராஜ்குமார் சாமியப்பன் பொன்னுசாமி, 

கருத்துகள் இல்லை: