6 ஆக., 2021

சுற்றுச்சூழல் : மூத்த தாவரவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் நரசிம்மன் ஐயா பிறந்தநாள்

ஆகச்ட் 2 
மூத்த தாவரவியல் ஆராய்ச்சியாளர் முனைவர் நரசிம்மன் ஐயா பிறந்தநாள்.

தாவரங்களை இனங்காணுதல், தாவரங்களின் பயன்கள் அறிதல், மக்கள் மத்தியில் இருக்கும் தாவரவியல் சொற்கள் மற்றும் பயன்கள் குறித்து தொகுத்தல், தமிழகத்தில் இருக்கும் தாவர வகைகளை தொகுத்தல், மண்ணின் மற்றும் அயல் தாவரங்களை வகைபிரித்தல், மக்களிடையே தாவரங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல், தாவரங்கள் சார்ந்த பல ஆராய்ச்சியாளர்களை உருவாக்குதல், திணைக்கேற்ற காடுகளையும் தாவரங்களையும் மீள்உருவாக்கம் செய்தல், மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படும் தாவரங்கள் குறித்து ஆராய்ந்து ஆய்வு கட்டுரைகள் எழுதுதல் என தன் வாழ்நாள் முழுவதையும் தாவரங்களுக்காவே அர்ப்பணித்து வருபவர் நமது நரசிம்மன் ஐயா. 

முனைவர் D. நரசிம்மன் அவர்கள் பட்டப்படிப்பு மற்றும் முனைவர் பட்டம் இரண்டும் சென்னை கிருத்துவக் கல்லூரியில் பெற்றவர். உயிரி பன்மம் (Biodiversity), தாவர வகை பிரித்தல் (Taxonomy), பாரம்பரிய மருத்துவ தாவரங்கள்(Ethnobotany), மூலிகைகள் (Medicinal Plants) மற்றும் தாவர உடற்கூறியல் (Plant Anatomy) ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்றவர்.

25 ஆண்டுகளுக்கு மேலாக பேராசிரியராக பணியாற்றியுள்ளார். 60க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். தற்போது பல அரசு சார்ந்து மற்றும் சாரா நிறுவனங்களில் ஆலோசகராக செயலாற்றி வருகிறார். நமது சூழல் அறிவோம் குழுவின் தாவரங்கள் சார்ந்த முன்னெடுப்புகளுக்கு சிறந்த வழிகாட்டியாகவும் ஆலோசகராகவும் உதவி வருகிறார்.

தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள Urban Forestry Division, சென்னை வெளியிட்ட " Common trees of Chennai, A photo identification guide book" மற்றும் D. K. Printworld(P) Ltd, புதுடெல்லி வெளியிட்ட "Ethnobotany the Kondh, Poraja, Gadaba and Vonda of the Koraput retion of Odisha, India" என்ற இரண்டு புத்தகங்களின் இணை ஆசிரியர் ஆவார்.

தமிழ்நாடு சுற்றுச்சூழல் துறைக்காக தமிழ்நாட்டின் மூடுவிதை செடியினங்கள் (Angiosperms) மற்றும் தமிழ்நாட்டில் அயல் தாவரங்களின் ஆக்கிரமிப்பு (Invasive Alien Species of TamilNadu) ஆகியவற்றிற்கான தரவுத்தளங்கள் உருவாக காரணமாக இருந்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள அறியப்பட்ட 6723 தாவர வகைகளில் 2459 தாவர வகைகள் அயல் அறிமுகப்படுத்தப்பட்ட தாவரங்கள் என்று தற்போது இருக்கும் நமது மாநிலத்தின் தாவர பட்டியலை தலைமை தாங்கி தொகுத்தவர்.

19 M.Phil , 14 Ph.D அறிஞர்களுக்கு தாவர வகை பிரித்தல், பாதுகாப்பு உயிரியல், மருத்துவ தாவரங்கள் மற்றும் தாவர தொடர்பியல் கீழ் சிறந்த வழிகாட்டியாக இருந்துள்ளார். அதில் இரண்டு ஆய்வறிக்கைகள் தாவரவியலில் சிறந்ததாக சென்னைப் பல்கலைக்கழகத்தால் தேர்வு செய்யப்பட்டது சிறப்புக்குரியது

தாவர வகை பிரித்தல், தாவர தொடர்பியல், மருத்துவ தாவரங்கள் மற்றும் சுற்றுச்சூழல் போன்ற பிரிவுகளில் வல்லுநராகவும் பல்வேறு கல்லூரி, பல்கலைக்கழகம் மற்றும் தன்னார்வ நிறுவனங்களில் விரிவுரையாளராகவும் இருக்கிறார்.

தாவர வகைப்பிரிப்பாளர்களுக்காக(Taxonomists) Indian Association for Angiosperm Taxonomy (IAAT) மூலம் வழங்கப்படும் உயரிய விருதான Dr. V. V. சிவராஜன் தங்கப்பதக்கம் 2008-2009 ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.

சூழல் அறிவோம் வரிசையில் தாவரங்கள் குறித்து இரண்டு முக்கிய உரைகள் வழங்கி உள்ளார்:
நீர்வாழ் தாவரங்கள்:
https://youtu.be/J0bmaCWD1jk
நம்மைச் சுற்றியிருக்கும் நீர்வாழ் தாவரங்கள் குறித்து அறிந்திட சிறப்பான உரை 👆🌿

அயல் தாவரங்கள்:
https://youtu.be/JlIzTx2RYNg
எவையெல்லாம் அயல் தாவரங்கள், நம்மைச் சுற்றியிருக்கும் அயல் தாவரங்களை அறிந்து கொள்ளவும் எவ்வாறு அவைகளை அணுக வேண்டும் என்பது குறித்தும் தெளிவாக விளக்கும் அருமையான ஒரு உரை 👆🌿🌳

இதுபோக தாவரங்கள், உணவு மற்றும் சித்த மருத்துவம் சார்ந்த நமது நிகழ்வுகளில் கலந்து கொண்டு கேள்வி பதில் அமர்வில் அவரது கருத்துக்களை பகிர்ந்து உள்ளார். நமது தாவரங்கள் சார்ந்த நிகழ்வுகள் காண:
https://youtube.com/playlist?list=PL36OwtHiofb1W19vX7oRt9SXRYlg6eijg
உணவு சார்ந்த நிகழ்வுகள்:
https://youtube.com/playlist?list=PL36OwtHiofb16LilPhqLfQsBKwF7Xd-ry

நரசிம்மன் ஐயாவின் ஆய்வு கட்டுரைகள் வாசிக்க:
https://www.google.com/amp/s/www.researchgate.net/profile/D-Narasimhan/amp

இன்று பிறந்தநாள் காணும் தமிழகம் கொண்டாட வேண்டிய மூத்த தாவரவியல் அறிஞர் நமது நரசிம்மன் ஐயாவிற்கு சூழல் அறிவோம் குழு சார்பாக மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். தாவரங்கள் குறித்து அறிந்து கொள்வோம், பாதுகாப்போம், மண்ணிற்கு ஏற்ற தாவரங்களை திணை அறிந்து பரவலாக்குவோம்.

#தாவரங்கள்
#நரசிம்மன்


கருத்துகள் இல்லை: