20 செப்., 2021

மூத்த கவிஞர் புவியரசு : 91வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

#மூத்த கவிஞர் புவியரசு 91வது பிறந்த நாள் வாழ்த்துக்கள்

தமிழ் கவிதை இன்று அடைந்திருக்கும் உயரங்களுக்குப் படிக்கட்டாக இருந்தவர்கள் பலர். அவர்களில்  மூத்த கவிஞர் புவியரசு  அவர்கள் குறிப்பிடத்தகுந்தவர். புதுக்கவிதையைப் பரவலாக்கி மக்கள்மயப்படுத்திய 'வானம்பாடி' இயக்கத்தைத் தோற்றுவித்தவர்களில் கவிஞர் புவியரசு அவர்களும் ஒருவர்.

'கையொப்பம்' என்ற தன் கவிதை நூலுக்காக சாகித்திய அகாடமி விருது பெற்றவர். அதுமட்டுமல்ல மொழிபெயர்ப்புக்காக இன்னொரு முறை சாகித்ய அகாடமி விருதைப் பெற்றார். தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறை விருதையும் பெற்றவர்.

ஷேக்ஸ்பியர், தாஸ்தோவ்ஸ்க்கி, உமர்கயாம் , ஓஷோ, கலீல் ஜிப்ரான் ஆகியோரின் நூல்களை நுட்பமாக மொழிபெயர்த்தவர். இவரது மொழிபெயர்ப்புகளில் மிகைல் நைமியின் "மிர்தாதின் புத்தகம்' முக்கியமானதாகும். 

கவிதை, நாடகம், கட்டுரை, நாவல் முதலிய பல துறைகளில் 80-க்கும் மேற்பட்ட நூல்களின் ஆசிரியர்.

நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களின் பதிப்பாசிரியர். 

உலக இலக்கியம் பயின்றவர். மாற்றுச் சிந்தனையாளர்.

மனதுக்கு வயது இல்லை என்பதை இவரது உழைப்பை பார்த்துத் தெரிந்து கொள்ளலாம். அண்மையில் தன்னுடைய முதல் நாவலை வெளியிட்டு இருக்கிறார்.

பல திரைப்படங்களில் திரைக்கதைகளில் பணியாற்றிய அனுபவமும் உண்டு.

என்னுடைய கவிதைகள் குறித்து மதுரை மன்னர்
திருமலை நாயக்கர் கல்லூரியில் நடைபெற்ற கருத்தரங்கக் கட்டுரைகளையும், இதுவரை என் நூல்களுக்கு வெளிவந்த மதிப்புரைகளையும் தொகுத்தது "பிருந்தா சாரதி கவிதைகள்: ஆய்வுக்கோவை' என்ற நூலைத் தான் பதிப்பாசிரியராகப் பணியாற்றிய கோவை சப்னா பதிப்பகத்தின் மூலம் வெளியிட்டார். அந்த நூலின் வெளியீட்டு விழாவில் அற்புதமான 
ஓர் உரையையும்   நிகழ்த்தினார்.

'எண்ணும் எழுத்தும்' 'இருளும் ஒளியும்' ஆகிய நூல்களை ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட வேண்டும் என்று வாழ்த்தினார். அவரது அன்புக்கு பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன்.
அவரது முத்திரை வரிகள் சில:

தன்னை விற்பதே தற்கொலை.
*
உன்னைத் தேடு 
உலகம் புரியும்.
*
வலையை அறுத்தவர் வானில் பறப்பார்.
*
நல்ல சொல் 
இருட்டையே 
வெளிச்சப் படுத்தும்.
*
வெட்டிப் பிளந்து வெளியேறு 
உன்னை சுற்றி மற்றவர்கள் போடும் வட்டங்களையும் 
நீ போட்டுக்கொள்ளும் வட்டங்களையும்.
*
91 வது பிறந்த நாள் காணும் அவரை வணங்கி வாழ்த்துகிறேன்.

அன்புடன் 
பிருந்தா சாரதி.
*
PC: Iyyappa Madhavan

நன்றி :

திரு.பிருந்தா சாரதி
திரு.ஐயப்ப மாதவன்
மற்றும் 
முகநூல் 


கருத்துகள் இல்லை: