20 செப்., 2021

இளங்கோ கிருஷ்ணனின் கவிதாஞ்சலி

பிரான்சிஸ்கிருபா யாரென்றே தெரியாமல் யாரேனும் இருக்கக்கூடும்.

அவர்களுக்காக இளங்கோ கிருஷ்ணனின் இந்தக் கவிதை

அந்நியம்
--
ஒரு நகருக்கு
கவிஞனைப் போல் அந்நியமானவன்
யாருமில்லை
ஒரு நகரம்
எதை எல்லாம் கைவிட 
நினைக்கிறதோ
அதையெல்லாம்
சுமந்துகொண்டு சுற்றுபவன் அவன்
சொற்கள்
விழுமியங்கள்
சுடரும் பைத்தியம்
தளும்பிக்கொண்டே இருக்கும்
மனம்
கொதித்துக்கொண்டே இருக்கும்
மூளை
பரபரப்பான காலைப் பொழுதில்
ஆற்றுவெள்ளம்போல்
பெருகிச் செல்லும்
வாகனப் பெருக்கின்
கரையோறம்
ஒரு கவிஞன் 
பசியோடு
நின்றுகொண்டிருக்கிறான்
மிருகம் போல் உருமிக்கொண்டு
போகும் வாகனங்களில்
இவர்கள்
எங்கு செல்கிறார்கள்
எங்கிருந்து திரும்புகிறார்கள்
எதற்கிந்த ஆவேசம்
ஏனிந்த அவசரம்
அவனுக்கு ஒன்றும் புரியவில்லை
பசி அவனைத் தின்றுகொண்டிருகிறது
ஒரு இட்லியையாவது 
உள்ளே போடேனென 
கெஞ்சுகிறது அவன் உடல்
அவன் பசிக்கு 
தன் உடலைக் கொடுத்து
அது தன்னை
உண்பதையே பார்த்துக்கொண்டிருகிறான்
ஒரு தியானம் போல
வலியை 
கவனிக்கையில்
உருவாகும்
விநோத மனஓர்மை அவனுள் கூடுகிறது
தன்னுள் தான் அமிழ்ந்து
ஓடும் வாகனங்களை
கட்டடங்களை வெறுமனே
பார்த்துக்கொண்டிருக்கிறான்
அவன் ஒரே கணத்தில்
அங்கு இருப்பவனாகவும்
அங்கு இல்லாதவனாகவும் இருக்கிறான்
நகரத்துக்கு 
அவனை வைத்துக்கொண்டு 
என்ன செய்வதென்று தெரியவில்லை
அவனுக்கும் 
இந்நகரை வைத்துக்கொண்டு 
என்ன செய்வதென்று தெரியவில்லை
ஒருவரை ஒருவர்
வெறித்துக்கொண்டிருக்கிறார்கள்
வெறுமனே

(ப்ரான்சிஸ் கிருபாவுக்கு...)

நன்றி :

கருத்துகள் இல்லை: