31 அக்., 2021

நூல் நயம் : தோட்டியின் மகன் : மலையாள மூலம் : தகழி சிவசங்கரப் பிள்ளை (தமிழில் : சுந்தர ராமசாமி)


#ReadingMarathon2021
#RM223
#ஆண்டுவிழா
#மொழிபெயர்ப்பு
#கிளாசிக்
67/50+

புத்தகம் : தோட்டியின் மகன்
ஆசிரியர் : 
மலையாள மூலம் : தகழி சிவசங்கரப் பிள்ளை அவர்கள்
தமிழில் : சுந்தர ராமசாமி அவர்கள்

வறுமையின் காரணமாக, தோட்டியாக பணிபுரியும் ஒருவர், அவருக்குப் பின் அவரது மகன், அடுத்து, அடுத்து என சந்ததியாகத் தொடரும் தோட்டித் தொழில், தங்கள் உரிமைகளை, உரிமைகள் எனில் மிகப் பெரிய விஷயங்களுக்கான நிர்பந்தங்கள் எல்லாம் இல்லை, தங்களுடைய உழைப்பிற்கு ஏற்ற ஊதியம், கல்வி கற்கும் உரிமை, இது போன்ற் அடிப்படை உரிமைகள் தான். இவற்றினைக் கூட, இந்த சமூகம் கொடுக்க மறுக்கிறது. ஆனால், இந்த சமுகத்தால், தோட்டிகள் இல்லாமல், ஒரு நாளைக் கூட நகர்த்தி விட முடியாது. ஆனாலும், அவர்களை மதிக்க மாட்டோம். இப்படியான சமூகத்தில், தோட்டியாக இருக்கும் ஒருவன், தன் சந்ததி, தோட்டியாகி விடக் கூடாது என்று, முனைப்புடன் செயல்படுகிறான். நல்ல எண்ணம், நல்ல மாற்றம், மாற்றம் வேண்டும், வாழ்வில் முன்னேற்றம் வேண்டும் என்றெண்ணும் அம்மனிதனின் ஆசை நிறைவேறியதா?

"மனிதனின் கழிவுகளை, மனிதன் அகற்றும் அவல நிலை தீருமோ?" என்ற வலி நிறைந்த வாசகத்தினை சில காலத்திற்கு முன் வாசித்ததாக நினைவு. இந்த நாவலை வாசித்ததும், அந்த வாசகத்தின் பின்னிருக்கும் வலியை உணர முடிந்தது.

இசக்கிமுத்து மகன் சுடலைமுத்து, இக்கதையின் கதை சொல்லி. இசக்கிமுத்து மரணிக்க, அவரை புதைக்க வழியில்லாமல், அவர்கள் படும் பாடு, வேதனையானது. தந்தைக்குப் பின், தந்தை பார்த்த தொழிலுக்கு தள்ளப்படும் சுடலைமுத்து, தன் பிள்ளை ஒரு தோட்டி ஆகிவிடக் கூடாது என்பதில் முனைப்புடன் இருந்து, வள்ளியை மணமுடித்து, மோகன் என்ற பிள்ளையும் பிறக்க, தானொரு தோட்டியின் மகன் என்பதே தெரியாமல் வளர்க்கப்படும் சூழல் எங்ஙனம் தலைகீழாக மாறுகிறது? தோட்டி குறித்து அந்த குழந்தை என்ன நினைக்கிறது? சுடலை முத்து மீது பாசம் கொண்ட அவன் பிள்ளை மோகன், தந்தையின் பாசத்திற்காக ஏங்கி நிற்கும் தருணங்கள் நெகிழ வைக்கின்றன.

தோட்டி எனில், அவனும் மனிதன் தானே, அவன் தன் பிள்ளைக்கு, தான் விரும்பும் பெயரைக் கூட வைக்கக் கூடாதா என்ன, சுடலையின் மகன், மோகனின் பெயர், பரிகாசத்திற்கு உள்ளாகையில், கோபம் கட்டுப்படுத்த இயலவில்லை.

சமூகத்தில், மனிதக் கழிவுகளை துப்புரவு செய்யும் தோட்டிகளின் வாழ்விடம், ஊருக்கு ஒதுக்குப்புறமாய், கழிவுகள் நிறைந்த இடங்களிலேயே அமைகிறது. தூய்மையற்ற இடம், இவர்களின் வாழ்விடம் ஆகிப் போவதால், ஆண்டு தோறும் வரும் கொள்ளை நோய்கள், இம்மக்களில் பலரையும் காவு வாங்கத் தவறுவதில்லை. இம்மக்களின் எண்ணிக்கை குறைந்தால், தங்களுக்கு அன்றாடம் செய்ய வேண்டிய, கழிவு அகற்றும் பணியினை செய்ய ஆள் தட்டுப்பாடு ஏற்படும் என்று சிந்திக்கத் தெரிந்த மக்களால், அவர்களும் தம்மைப் போன்ற சக மனிதர் தாம் என்று சிந்திக்கத் தோன்றவில்லை.

பல கேள்விகளையும், வலிகளையும் மனதில் ஏற்படுத்திய புத்தகம். இப்புத்தகம் எழுதப்பட்ட ஆண்டு, 1946. இன்றுவரை, இத் தொழில்புரியும் மக்கள் இருக்கிறார்கள். இந்தத் தொழில் செய்வதால், பல இன்னல்களுக்கு, நோய்களுக்கு ஆளாகிறார்கள். சிலர் மரணத்தையும் தழுவுகிறார்கள். நாமும் அவற்றை எல்லாம், ஒரு செய்தியாக மட்டுமே பார்த்து, கடந்து போக பழகிக் கொண்டு விட்டோம். சக மனிதனின் துயரில், வலியில், வேதனையில், நாம் அந்த வலி, வேதனை என்றொன்று இருப்பதைக் கூட உணராது, ஒவ்வொரு நாளையும், கடந்து போய்க் கொண்டே தானிருக்கிறோம்.

நன்றி :

திரு.தமிழ் முகில் பிரகாசம், 
வாசிப்பை நேசிப்போம், 
முகநூல்

கருத்துகள் இல்லை: