திருமந்திரம் - பாடல் #1241: நான்காம் தந்திரம் - 8. ஆதார ஆதேயம் (பூரண சக்தியும் அந்த சக்தியினால் தாங்கப்படும் பொருளும்)
ஆமயன் மாலர னீசன்மா லாங்கதி
ஓமய மாகிய வொன்பது மொன்றிடத்
தேமய னாளுந் தெனாதென வென்றிடும்
மாமய மானது வந்தெய்த லாமே.
விளக்கம்:
பாடல் #1240 இல் உள்ளபடி அம்மை அப்பராகிய இறைவன் இறைவியோடு தாமும் ஒன்றாகச் சேர்ந்து அவர்களுக்குள்ளேயே அடங்கி பேரின்பத்தில் இருக்கின்ற சாதகர்கள் தமக்குள் இருக்கின்ற ஒன்பது மண்டலங்களிலும் ஓங்கார மந்திரத்தின் நாதமாகவே ஆகிவிட்ட ஒன்பது தெய்வங்களோடும் தாமும் சேர்ந்து ஓங்காரத்தின் நாதத் தன்மை பெற்றுவிடுவார். அதன் பிறகு தனக்குப் பிடித்த வகையான தேன் இருக்கின்ற பூவைத் தேடி மொய்த்து அதிலிருக்கும் தேனை உறிஞ்சிக் குடித்து இன்பத்தில் திளைத்திருக்கும் தேனீக்களைப் போல சாதகரும் தமக்குக் கிடைக்கப் பெற்ற ஓங்காரத்தின் நாதத் தன்மையில் கிடைக்கும் பேரின்பத்திலேயே திளைத்து இருப்பார்.
சாதகருக்குள் இருக்கின்ற ஒன்பது மண்டலங்கள்:
1. மூலாதாரம் - சூரிய மண்டலம்
2. சுவாதிஷ்டானம் - பிரம்மா
3. மணிபூரகம் - திருமால்
4. அனாகதம் - உருத்திரன்
5. விசுக்தி - மகேஸ்வரன்
6. ஆக்ஞா - சதாசிவம்
7. சகஸ்ராரம் - பரா
8. துவாதசாந்த வெளி (தலை உச்சியிலிருந்து 12 அங்குலம் தூரத்தில் உள்ளது) - பரை
9. சந்திர மண்டலம் (துவாதசாந்த வெளிக்கு மேலே ஆகாயத்தில் உள்ளது) - பராபரை
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக