திருமந்திரம் - பாடல் #1307: நான்காம் தந்திரம் - 14. புவனாபதி சக்கரம் (உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கும் சக்கரம்)
ககராதி யோரைந்துங் காணிய பொன்மை
யகராதி யோரக் கரத்தமே போலுஞ்
சகராதி நாலஞ்சு தான்சுத்த வெண்மை
மகராதி மூவித்தை காமிய முத்தியே.
விளக்கம்:
ககர எழுத்திற்கு (க) மூலமாக இருக்கின்ற ஐந்து எழுத்துக்களையும் சாதகர்கள் தங்களுக்குள் தரிசித்துப் பார்த்தால் அவை பொன் நிறத்தில் இருக்கும். அது போலவே இரண்டாவது எழுத்தான அகர எழுத்திற்கு (அ) மூலமாக இருக்கின்ற எழுத்துக்கள் அனைத்துமே சுத்தமான சிவப்பு நிறத்தில் இருக்கும். அது போலவே மூன்றாவது எழுத்தான சகர எழுத்திற்கு (ச) மூலமாக இருக்கின்ற இருபது எழுத்துக்களும் சுத்தமான வெள்ளை நிறத்தில் இருக்கும். உலகத்திற்கு அதிபதியாக விளங்கும் இறைவனும் இறைவியும் சேர்ந்து இருக்கின்ற புவனாபதி சக்கரத்தில் இருக்கின்ற இந்த மூன்று எழுத்துக்களையும் அதன் மூல எழுத்துக்களாகிய இருபத்தாறு எழுத்துக்களையும் மானசீகமாகத் தமக்குள் தரிசிக்கும் சாதகர்களுக்கு ஆதியிலிருந்தே உயிர்களைத் தொடர்ந்து வருகின்ற படைத்தல் காத்தல் அழித்தல் ஆகிய மூன்றின் பிறவிச் சுழற்சியில் சிக்கி இருக்கும் சுத்த வித்தையிலிருந்து இந்த மூன்று எழுத்துக்களையும் ஞானமாகத் தெரிந்து கொள்கின்ற அபர வித்தை பெற்று அதன் பிறகு அதை தமக்குள்ளேயே அனுபவ பூர்வமாக உணருகின்ற பர வித்தையைப் பெற்றால் ஆதியிலிருந்தே தம்மைத் தொடர்ந்து வருகின்ற அனைத்து கர்ம வினைகளும் நீங்கி முக்தியை இறையருளால் அடைவார்கள்.
இப்பாடலை பதப்பொருள் விளக்கத்துடன் படிக்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும்.
https://kvnthirumoolar.com/song-1307/
நன்றி :
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக