28 ஜன., 2022

கவிதை நேரம் : அகன்று விரிந்த வானின் கீழ் - தேவதேவன் கவிதை

*அகன்று விரிந்த வானின் கீழ்*

தேவதேவன் கவிதை
 

அகண்டு விரிந்த வானின்கீழெ
அத்துணை அகண்ட பேரெழிலுடன்
யார்
ஏன்
எதை
இப்படி
ஈரப்புனல்கொண்டு
இதமான சமநிலப் பரப்பினை விரித்த
பெருங்களத்தில் நின்றபடி
வெகு அக்கறையோடு குனிந்து
ஊன்றிக்கொண்டே இருக்கிறார்கள்
வரிசை வரிசையாய்? அணி அணியாய்?
புன்னகையோடு திரும்பிப் பார்த்த அவனைப்
பூரிப்போடு பார்த்த தந்தை
“நாற்று’ என்றார் “நடுகிறார்கள்” என்றார்
“வயல்” என்றார்
மிகப்பரிதாபமான தொனியுடன்
பரவாயில்லை என்பது போன்ற
கனிவும் புன்னகையும் நிறைவும்
பேரளவானதொரு ஆறுதலும் மிளிர
அவர் முகத்தை வருடின
அவன் பிஞ்சுக்கரங்கள்.


நிலக்காட்சி என்ன ஏது என்று தெரியாமலேயே சிறுகுழந்தைகளை ஒருவகை பரவச நிலைக்குக் கொண்டுசெல்கிறது. அவை நிலமே தாங்கள் என்னும் இரண்டின்மையை அடைகின்றன. என் சிறுவயதில்- எனக்கு ஒருவயதுதான் இருக்கும் என நினைக்கிறேன், பிறர் தூக்கிச் செல்லும் வயது- அப்படி ஒரு மாட்டுவண்டியில் அமர்ந்து ஓர் ஆற்றில் இறங்கும்போது அடைந்த முழுமையனுபவம் இன்றும் நினைவிருக்கிறது. ரப்பர் நாவலில் அந்தக் காட்சி அப்படியே பொன்னுமணி பெருவட்டரின் அனுபவமாக வரும்
 
இக்கவிதையில் அகண்ட [ துண்டாடப்படாத, முழுமையான என்னும் பொருள்கொண்ட சொல்] நிலத்தைப் பார்த்து விதிர்த்து நின்றிருக்கிறது குழந்தை. அப்போது அதன்மேல் ஒருவர் உழுது நடவுசெய்வதை காண்கிறது. நிலவெளி வயல்பரப்பாக உருமாறுவதைக் காண்கிறது. துண்டாடப்பட்டு கண்டமாக்கப்பட்டு. அது அறியும் முதல் வாழ்க்கைத்தரிசனம் அல்லவா அது? பரவாயில்லை என்று சொல்லி அவரை ஆறுதல்படுத்துகிறது குழந்தை.

கருத்துகள் இல்லை: