28 ஜன., 2022

ஆன்மீக சிந்தனை

உடல் நலம்

   உடல், உயிர், மனம் ஆகிய மூன்றும் மனிதனுக்கு இன்றியமையாதன.
இம்மூன்றும் நலமாக இருக்க உடல் நலம் வேண்டும், உயிரின் இணக்கம் வேண்டும், மனவளம் வேண்டும். "நோயறற் வாழ்வே குறைவற்ற செல்வம்" என்கிறார் அவ்வை.

   மனிதன் எப்போதும் இன்பத்தையே விரும்புகிறான். இன்பத்தை உடலால்தான் அனுபவிக்கிறோம். உடல் நலத்துடன் இருந்தால்தான் இன்பம் நிலவும். உடல் நலம் குன்றினால் துன்பந்தான். எனவே நோயற்ற வாழ்வான குறைவற்ற செல்வத்தை அனைவரும் விரும்புகின்றனர்.

உடம்பார் அழியில் உயிரார் அழிவர்
திடம்பட மெய்ஞ்ஞானம் சேரவும் மாட்டார்
உடம்பை வளர்க்கும் உபாயம் அறிந்தே
உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேனே  ....திருமூலர்

மனித உடல் இயங்குவதற்கு உயிர்ச்சக்தி மூலகாரணமாக உள்ளது. உயிர்ச்சக்தி தங்கும் பாத்திரம்போல் உடல் அமைந்துள்ளது.

    மனித உடல் ஐந்து அடுக்குகள் இணைந்து  இயங்கும் ஒரு நிலையம். அவை விண், காற்று, நெருப்பு, நீர், நிலம் ஆகும். இவற்றினைப் பஞ்ச பூதங்கள் என்று அழைக்கப்படுகின்றன. முதல் பெளதிகப் பொருளான விண்களின் கூட்டே மற்ற நான்கும். விண் என்பது தன்னைத் தானே சுற்றிக் கொண்டிருக்கும் சிரிய துகள்.
உயிரினங்களில் விண்துகள் உயிர் என அழைக்கப்படுகிறது. மனித உடலில் நிலம் எலும்பாகவும், சதையாகவும், நீர் ரத்தமாகவும், நெருப்பு உடற் சூடாகவும்,
காற்று மூச்சாகவும், விண் உயிர் ஆற்றலாகவும் உள்ளன.  இதையே

      பரமாய சக்தியில் பஞ்சமா பூதம்
      தரம் மாறித் தோன்றும் பிறப்பு
      நிலம் ஐந்து நீர் நான்கு நீடங்கி மூன்று
      உலவை யிரண்டொன்று விண்
என்று அவ்வைக் குறள் கூறுகிறது.

   நீர் நிலத்தை விட லேசானது. நெருப்பு நீரை விட லேசானது. காற்று
நெருப்பை விட லேசானது. விண் என்ற உயிர்த் துகள் காற்றை விட லேசானது.

உடல் நலமாக் இருக்க, உடலுக்கும், உயிருக்கும் இடையே ஓர் இணக்கம் தேவை.

உறவு சரியாக இருக்க வேண்டும். நட்பு சரியாக இருந்தால்தான் உடல் நலமாக
இருக்கும்.

உடலுக்கும், உயிருக்கும் பிணக்கு ஏற்பட்டால் நோய். உடலுக்கும்,
உயிருக்கும் நட்பு ஏற்பட்டால் வாழ்க்கை. உடலுக்கும், உயிருக்கும் பிரிவு
ஏற்பட்டால் மரணம்.     
               
வாழ்க வளமுடன்.

இரா.ஆனந்தன்
உடல் நலம் பெற உடற்பயிற்சி, மன வளம் பெற தியானம், உயிர் நலம் பெற
காயகல்பப் பயிற்சி பெற்று உயருங்கள்

கருத்துகள் இல்லை: