28 ஜன., 2022

இலக்கிய இன்பம்

புறநானூறு செய்யுளும் பொருளும்

184. பாண்டியன் அறிவுடை நம்பி

காய்ந்து முதிர்ந்த நெல்லை அறுத்துக் கவளம் கவளமாகத் திரட்டி யானைக்கு உண்ணத் தந்தால் மா அளவினும் குறைந்த நிலத்தினது என்றாலும் அதுபல நாளுக்கு வரும்.

நூறு வயல்கள் என்றாலும் யானை தனித்துப் புகுந்து தின்றால் வாயில் புகுவதைவிடக் காலில் மிதிபட்டுப் பாழாகி விடும்.

அறிவுடை வேந்தன் நெறி வகுத்துக் கொண்டு அதன்படி மக்களிடம் பொருள் பெற்று ஆட்சி நடத்தினால் அந்த நாடு கோடிப் பொருளினை ஈட்டித் தந்து நன்கு செழித்து உயரும்.

சிற்றினத்தாரோடு சேர்ந்து இன்பக் கேளிக்கைகளை விரும்பித் தவறான வழியின் மக்களிடமிருந்து பொருளை வற்புறுத்திப் பெற்றால் யானை புகுந்த வயல் போலத் தானும் உண்ணான்; உலகமும் கெடும்.

*காய் நெல் அறுத்துக் கவளம் கொளினே, மா நிறைவு இல்லதும், பல் நாட்கு ஆகும்; நூறு செறு ஆயினும், தமித்துப் புக்கு உணினே, வாய் புகுவதனினும் கால் பெரிது கெடுக்கும், அறிவுடை வேந்தன் நெறி அறிந்து கொளினே, கோடி யாத்து, நாடு பெரிதும் நந்தும்; மெல்லியன் கிழவன் ஆகி, வைகலும் வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு, பரிவு தப எடுக்கும் பிண்டம் நச்சின், யானை புக்க புலம் போலத் தானும் உண்ணான், உலகமும் கெடுமே*.

திணை - பாடாண் திணை, துறை - செவியறிவுறுஉ *பாண்டியன் அறிவுடை நம்பியுழைச் சென்ற பிசிராந்தையார் பாடியது*.

கருத்துகள் இல்லை: