எஸ்ராவின் வலைப்பக்கத்திலிருந்து
குறுங்கதை 53
பூச்சரம் சூடிய குரங்கு
அந்தக் குரங்காட்டியையும் அவனது பெண்குரங்கினையும் ஊரே அறிவார்கள். எப்போதும் தனது தோளில் குரங்கை உட்கார வைத்துக் கொண்டு அவன் சுற்றிக் கொண்டிருப்பான். சாப்பிடப்போகும் போதும் கூட அருகில் உட்கார வைத்து தனது இலையிலிருந்த உணவை அதற்கும் தருவான். அவன் சலூனில் சென்று முடிவெட்டிக் கொள்ளும் போது அக்குரங்கு கண்ணாடியில் தன்னைப் பார்த்தபடியே இருக்கும். சில வேளைகளில் அந்தப் பெண் குரங்கிற்கு அவன் பூச்சரம் வாங்கிச் சூடிவிடுவான்.
பெரும்பாலும் அவன் பள்ளியின் முன்னால் மாலைநேரங்களில் வித்தை காட்டுவது வழக்கம். அப்போது பெண் குரங்கிற்குச் சிறிய பச்சை நிற தொப்பி அணிந்துவிடுவான். அதை மாட்டிக் கொண்டவுடன் குரங்கின் இயல்பு மாறிவிடும். வேகமாகத் துள்ளுவதும் குதிப்பதும் குட்டிக்கரணம் போடுவதும் எனக் குரங்கு உற்சாகமாக வித்தைகள் செய்யும்
துண்டில் சிதறிக்கிடக்கும் சில்லறைகளை அவன் பொறுக்கிக் கொண்டிருக்கும் போது குரங்கும் உதவி செய்யும். சில நாட்கள் அவன் இரவுக்காட்சி சினிமாவிற்குப் போவான். அப்போது குரங்கும் அவனுடன் சினிமா பார்க்கச் செல்லும்.
பூங்காவிலிருந்த ரேடியோ அறையை ஒட்டிய சிமெண்ட் பெஞ்சு தான் அவனது வசிப்பிடம். இரவில் அவன் அந்தச் சிமெண்ட் பெஞ்சில் படுத்துக் கொள்ளும் போது குரங்கு பெஞ்சின் அடியில் சுருண்டுகிடக்கும். எத்தனையோ வருஷமாக அவர்கள் இப்படித்தான் இருந்தார்கள்.
ஒரு நாள் அந்தக் குரங்காட்டி ஒரு இரும்புச் சங்கிலி வாங்கி வந்தான். அந்தச் சங்கிலியைக் குரங்கின் கழுத்தில் கட்டி மறுமுனையை அருகிலிருந்த வேப்பமரத்தில் கட்டினான். பிறகு பெண் குரங்கிடம் இங்கேயே இரு.. ஊருக்குப் போய்விட்டு வருகிறேன் என்றான் குரங்காட்டி.
அவனது ஊர் எது. ஏன் போகிறது என எதுவும் குரங்கிற்குத் தெரியாது. வித்தை செய்வது போலக் கையை உயர்த்தி அசைத்து விடைகொடுத்தது. ஊருக்குப் போன குரங்காட்டி இரண்டு நாட்களாகியும் வரவில்லை. குரங்கிற்குப் பசி தாங்கமுடியவில்லை. அது ஆவேசத்துடன் சப்தமிட்டது. அங்குமிங்கும் சங்கிலியை இழுத்துக் கொண்டு சுற்றியது. யாரும் குரங்கிற்கு உதவி செய்யவில்லை. தன்னை வேடிக்கை பார்க்கும் காகத்தைக் கண்டு குரங்கு ஆத்திரப்பட்டது.
யாரோ ஒருவர் வாழைப்பழம் கொடுத்தார்கள். அதைத் தின்று குரங்கு பசியாறியது. ஒரு நாள், இரு நாள் என நாட்கள் கடந்த போதும் குரங்காட்டி வரவேயில்லை. அந்தக் குரங்கின் நிலை கண்டு பரிதாபமான பூங்காவின் காவலாளி அதன் சங்கிலியை அவிழ்த்துவிட்டான். பெண் குரங்கிற்கு எங்கே போவது என்று தெரியவில்லை. அது சிமெண்ட் பெஞ்சிலிருந்து மரத்திற்குத் தாவியது. குரங்காட்டி வரக்கூடும் என்ற நம்பிக்கை அதற்கு இருந்தது. ஆகவே உயரமான மரத்தில் ஏறி சாலையில் அவன் வருகிறானா எனப்பார்த்தபடியே இருந்தது.
குரங்காட்டி வரவேயில்லை. சங்கிலி இல்லாத போதும் அந்தக் குரங்கு அதே மரத்தடியில் வந்து உட்கார்ந்து கொண்டது. காவலாளி அதை வெளியே போகும்படி துரத்திய போதும் அது நகரவேயில்லை. பசித்த நேரத்தில் மட்டும் சப்தமிட்டது. காவலாளி மீதமான உணவை அதற்குக் கொடுத்தான். பகலும் இரவும் அந்தக் குரங்கு அதே இடத்தில் அப்படியே உட்கார்ந்திருந்தது. சிலர் அதைக் கண்டு பரிதாபப்பட்டார்கள். சிலர் கல்லை வீசி அடித்தார்கள்.
திடீரென ஒரு நாள் காலை அக்குரங்கு அந்த மரத்தைச் சுற்றி வரத்துவங்கியது. வேப்பமரத்தைச் சுற்றி ஏதாவது வரம் கேட்கிறதா எனக் காவலாளி கேலி செய்தான். ஆனால் அக்குரங்கு வேம்பரத்தை சுற்றி சுற்றி வேகவேகமாக நடந்து கொண்டேயிருந்தது. ஆட்கள் கல் எறிந்து விரட்டிய போதும் அது நடப்பதை நிறுத்தவேயில்லை. ஓராயிரம் முறை அந்த மரத்தைச் சுற்றி நடந்தது. சில நேரம் இரவில் குரங்கு நடந்து கொண்டிருந்ததைக் காவலாளி பார்த்தான்.. என்ன வேண்டுதல் அது. எதற்காக இப்படி நடக்கிறது என்று எவருக்கும் புரியவில்லை.
குரங்காட்டி திரும்ப வரக்கூடும் என அந்தக் குரங்கு உறுதியாக நம்பியது. அவனுக்காகக் காத்திருந்தது. பிரார்த்தனை செய்வது போல நாளெல்லாம் நடந்து களைத்து ஒடுங்கிப் போனது. பசிக்காகக் குரல் கொடுப்பதை நிறுத்திக் கொண்டது. பின்னொரு நாள் ஒரு அடி எடுத்து வைக்க முடியாமல் மயங்கி விழுந்தது அக்குரங்கு.
இங்கேயே இரு என்ற குரங்காட்டியின் ஒரு சொல் தான் அக்குரங்கினை இப்படிச் சுற்றி வரச்செய்து கொண்டிருந்தது என்பதை உலகம் அறியவேயில்லை. சொன்ன சொல்லிற்கு மனிதர்கள் விசுவாசமாக இல்லாமல் இருக்கலாம். ஆனால் அக்குரங்கு கடைசி வரை விசுவாசமாக இருந்தது.
பிரிவுத்துயரும் பிரார்த்தனைகளும் மனிதர்களுக்கு மட்டுமானதா என்ன ?
நன்றி: திருமதி சந்திரபிரபா ராமகிருஷ்ணன், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக