14 ஜூலை, 2020

கருத்து மேடை : நவீன மருத்துவமும் மாற்று மருத்துவமுறைகளும்

பழனிக்குமார்
மதுரை

மாற்று மருத்துவம் பற்றி பேசுவது என்பது ஏற்கனவே பல நேரங்களில் உடைக்கப்பட்ட ஃபர்னிச்சர். அலோபதியில் முறைகேடான மருத்துவம் என்பதும் நிறைய நேரங்களில் குறிப்பாய் பொழுதுபோகவில்லை என்றால் அடிக்கடி எட்டி உதைக்கும் ஃபர்னிச்சர்.

 திடீரென உங்களுக்கு பீட்ஸா சாப்பிட ஆசை இருந்தால் , ஃப்ரைட் ரைஸ் சாப்பிட ஆசை இருந்தால் அங்கு போகலாம்.

இல்லை, நல்ல கருப்பட்டி பால் கலந்த ஆப்பம் சாப்பிடவேண்டும் என்று ஆசை இருந்தால் அங்கு போய் அதை வாங்கி உண்ணலாம்.

ஹோட்டல்காரர் உங்களை மடியில் படுக்க வைத்து அவரிடம் இருப்பதை உங்களுக்குச் சங்கில் கரைத்து ஊற்றுவது இல்லை.
எந்த மருத்துவத்தை நீங்கள் தேர்ந்தெடுக்கவேண்டும் என்பது உங்கள் கையில் இருக்கிறது. உங்கள் விருப்பம் அது. அதை யாரும் தடுக்க முடியாது. அதே நேரத்தில் ஒரு மருத்துவமுறையில் இருக்கும் நிறை குறையை வைத்துக்கொண்டு இன்னொரு மருத்துவமுறையைக் குறை சொல்வதும் தவறு. இரண்டிலும் நிறை இருக்கலாம். குறை இருக்கலாம். உங்களுக்கு எது விருப்பமோ அதைத் தொடருங்கள். உங்களுக்கு ஒன்று பிடித்திருக்கிறது என்பதற்காக இன்னொருவரை மதத்தைப் பரப்புவது போல் வற்புறுத்துவது கூடாது.

நண்பன் ஒருவன் கூப்பிட்டான், சித்தமுறையில் சிகிச்சை அளிக்கப்படும் சென்னை மருத்துவமனையில் இறப்பு விகிதம் இல்லையாமே என்றான். இறக்கும் தருவாயில் எத்தனை நோயாளிகள் வந்தனர் என்றேன். அவன் பதில் தரவில்லை.

இப்பொழுதும் ஊருக்குள் ஒரு மருத்துவமனையைக் காண்பித்து, இந்த ஹாஸ்பிட்டலுக்குள்ள போனா வெறும் டெட்பாடி தான் வரும். எங்க சொந்தத்துள்ளேயே மூணு பேர காவு வாங்கிருக்கு போன்ற வசனங்கள் நம்மூர்க்குள் புழக்கத்தில் இருக்கும்.

இறக்கும் தருவாயில் இருக்கும் எந்த நோயாளியையும் எந்த மருத்துவரும் மருத்துவமும் காப்பாற்றாது.

ஆனால், சில முரண்கள் இருக்கின்றன.

ஒரு அலோபதி மருந்தை உலகளவில் அங்கீகரிக்க, தேசியளவில் அங்கீகரிக்க சில வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன. என்ன மருந்து, என்ன மெக்கானிசம், எத்தனை நோயாளிகள், எங்கு பரிசோதிக்கப்பட்டது, பக்கவிளைவுகள் என்ன, ப்ளேஷிபோ டெஸ்ட்கான ஒப்பீடு இப்படி பல நிரல்கள் உள்ளன. கடைசியில் தேறிவந்த நோயாளிகளின் நிலை இப்படி. அதேபோல் சித்தா மருத்துவம் கடைசியாகச் செய்த ஆய்வு என்ன?

ஆயுஷ் அப்படியான எந்த மருந்தை உற்பத்தி செய்திருக்கிறது. அதற்கானத் தரவுகள் இருக்கின்றனவா, இருந்தால்  பொதுவில் வெளியிடப்பட்டிருக்கிறதா?

(உடனே ஓலைச்சுவடியைத் தூக்கிக்கொண்டு வராதீர்கள், ஏனென்றால் ஒரு மூலிகை அந்தந்த காம்பினேஷனுக்கு ஏற்றபடி வேறுவேறு வேலைகளைச் செய்யும்)

உங்களுக்கு இன்னொரு கேள்வி? உங்களுக்கு அலோபதியில் எத்தனை மருந்தைத் தெரியும்? பேராசிட்டமால்?

நிமுஸ்லைடு?
டைக்ளோஃபினாக்?
சிட்டிரிசின்
அவில்?
போலியோ?
ரோட்டோ?
ஹோமியோபதியில் எத்தனை தெரியும்?

ஆர்சனிகா ஆல்பம் அதுவும் இப்பொழுது

சித்தாவில்?

கபஸ்வர், நிலவேம்பு, திரிகடுக, சிட்டுக்குருவி, பிள்ளைப்பேறு சூரண லேக்கியங்களைத் தவிர?

ஏன் நமக்கு மாற்று மருந்தின் பெயர்கள் தெரியவில்லை. உங்கள் அருகில் இருக்கும் மாற்று மருத்துவரிடம் போய் பார்க்கும்பொழுது ஒரு நம்பிக்கையின் அடிப்படையில் தான் போய் பார்க்கிறீர்கள். வைத்தியர் என்ற பெயரில இருக்கும் போலி மருத்துவர்களை (அதாவது அங்கீகரிக்கப்படாத மருத்துவர்கள்)க் கண்டதுண்டா?

உங்களில் எத்தனை பேர் ஆயுர்வேத , சித்த மருத்துவரிடம் போய் பார்த்து பெயரிடப்படாத மருந்து புட்டிகளை வாங்கி வந்ததுண்டு? உள்ளே இருக்கும் மருந்து மற்றும் கலவைகளை அதன் லேபிளில் கொடுத்ததுண்டா. ஏனென்றால் பெரும்பான்மையான மாற்று மருத்துவர்கள் தாங்கள் அளிக்கும் மருந்துகளை வெளியில் சொல்வதில்லை. வெளிப்படைத்தன்மையில்லாத போது அரசாங்கம் எப்படி ஒரு மருத்துவமுறையைத் தொடருங்கள் என்று சொல்லமுடியும். இருந்தபோதிலும் மாற்று மருத்துவமுறைகளை அரசாங்கம் பரிந்துரைக்கத்தான் செய்கிறது.

அலோபதி மருத்துவம் வீண் , பொய் சொல்கிறது என்று ஓரமாய் மிக்ஷர் சாப்பிட்டுக்கொண்டு ஸ்டேடஸ் போடுவதற்கு வேண்டுமானால் சரிப்பட்டு வரும். சென்னையில் இப்பொழுது ஒரு சித்த மருத்துவர் தலைமையில் சிகிச்சை

செய்வதைப்போல் ஒவ்வொரு ஊரிலும் மாற்று மருத்துவர்கள் ஏன் களத்தில் இறங்கவில்லை. அவர்களுக்கானச் சங்கங்கள் ஏன் இதைச் செய்யவில்லை. ஹோமியோபதி கல்லூரி இருக்கிறது, தமிழ் மருத்துவமுறை என மார்தட்டும் சித்த கல்லூரிகள் இருக்கின்றன. ஏன் இந்த மருத்துவமனைகளில் பறக்கும்படை தயார்செய்து மக்களுக்கு நம்பிக்கை அளிக்கக்கூடாது. இதோ மதுரை அரசு மருத்துவமனை இருக்கிறது. அங்கு ஆபத்தான கட்டத்தில் இல்லாத கொரோனா நோயாளிகளை மாற்று மருத்துவ நிபுணர்குழு தேர்ந்தெடுத்து அவர்களை சித்த ஆயுர்வேத ஹோமியோபதி மருத்துவமனைகளுக்கு மாற்றி அவர்களை அவர்கள் பொறுப்பு எடுக்கட்டும். அரசிற்கும் பாரம் குறையும். ஆபத்தான கட்டத்தில் இருக்கும் நோயாளிகளுக்கும் படுக்கைவசதி கிடைக்கும். அப்படியான அவர்கள் பொறுப்பில் இருக்கும் நோயாளிகளுக்கு மாற்று மருத்துவமோ, ஒருங்கிணைந்த மருத்துவமோ செய்து குணமாக்கலாம்.இதைச் செய்யலாம் தானே? மாற்று மருத்துவத்தை மக்கள் நம்புவது கிடையாது என்பது யாருடைய குற்றம். மக்கள் நம்புவதற்குப் பாத்தியம் செய்வது யாருடைய வேலை. இப்படியே பேசிக்கொண்டே செல்லலாம். அலோபதியில் தீராத அல்லது repeated infectious வாய்ப்பு இருக்கிற பல நோய்களை முற்றிலும் மாற்று மருத்துவமுறை இலகுவாய் கையாள்கிறது. பூரண நலம் கிடைக்கவாய்ப்புண்டு. ஆனால், உயிர்போகும் தருவாயில் அலோபதி மருத்துவம் ஓர் உயிரைக் காப்பாற்றுவது போல் மாற்று மருத்துவம் செய்கிறதா என்றால் செய்யலாம், அதற்கான வழிமுறைகள் இருக்கும். ஆனால் நம்பிக்கையான மருத்துவர்கள் அந்தத்துறையில் இருக்கிறார்களா என்றால் சந்தேகமே. வெறுமனே ஓலைச்சுவடியில் இருப்பதை வைத்துக்கொண்டு அதையே பேசிக்கொண்டிருத்தலைவிட எத்தனை ஆயுர்வேத சித்தா நிறுவனங்களை நிறுவி அப்படி ஒரு மருந்தைக் கொண்டு வர அரசாங்கமோ இல்லை அந்தத் துறை வல்லுனர்களோ முயற்சி செய்திருக்கிறார்கள்.

பொதுவாய் மாற்று மருத்துவத்தின் ஆதிக்கருத்து ஒன்று தான், இப்படி இருந்தால் நீ நன்றாக இருப்பாய், தினம் கடுக்காய் லேகியம் சாப்பிடு, துளசி சாப்பிடு, எலுமிச்சை சேர்த்துக்கொள், அமுக்குராங்கிழங்கு சாப்பிடு இப்படியான prophylaxis முறைகளை அதிகமாய் ஆதரிக்கும். எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் கபஸ்வர குடிநீர்  , மற்றும் எலுமிச்சை இஞ்சி மஞ்சள் கசாயம் கூட அந்த வகையறா தான். அதை மீறி வாதம் பித்தம் கவ்வம் எனப் பிரித்து சிகிச்சை அளிப்பார்கள்.

ஆனால் அலோபதியில், நோய் வந்த பிறகு செய்வது என்ன என்பது தான் அதிகம் (therapeutic) . நவீன வாழ்வில் நோய் தாக்கியபிறகு தான் நாம் மருத்துவரைப் பார்க்கப்போகிறோம்.

உங்களுக்குப் பொறுமை பற்றி உதாரணம் சொல்கிறேன். பரமக்குடியில் ஒரு மருத்துவரைப் பார்க்கப்போனபோது, அவர் ஒரு நோயாளியைப் பார்த்துக்கொண்டிருந்தார். அவர் கூலி வேலை பார்க்கும் நோயாளி. ஊசி போடவேண்டும் என்றதும் அந்த நோயாளி ரெண்டு ஊசிய போடுங்க நாளைக்கு வேலைக்குப் போகனும் என்றார், மருத்துவர் எவ்வளவோ சொல்லியும் கேட்காமல் இரண்டு ஊசி வேண்டும் என்று அடம்பிடித்தார் அந்த நோயாளி. இதை ஏன் சொல்கிறேன் என்றால்  , நோயும் வலியும் மக்களுக்குக் காலத்தோடு பின்னிப்பிணைந்து விட்டன. மக்களுக்குப் பொறுமை இல்லை. இன்று காய்ச்சல், நாளைக்கு வேலைக்குப்போகவேண்டும் இப்படியான மனநிலை தான் நமது பாரம்பரிய சித்தா ஆயுர்வேத வகை மருத்துவத்தைப் பின்னுக்குத்தள்ளியது. உங்களுக்கு வேகமாகக் குணமாகவேண்டுமா, வெறுமனே குணமானால் போதுமா என்பது நீங்கள் தான் தீர்மானிக்கவேண்டும்.

உங்களுக்குக் கலப்பின தக்காளி விலை குறைவாய் வேண்டும். நாட்டு தக்காளி வேண்டாம்.

உங்களுக்கு விதையில்லாத கனி வேண்டும், நாட்டுப்பழம் வேண்டாம்.

உங்களுக்கு இரசாயணம் கலந்த உரம் தெளித்த, வேகமாய் அறுவடை செய்த தானியங்கள் வேண்டும், இயற்கைமுறையில் கால தாமதமாய் அறுவடை செய்யப்படும் எதுவும் வேண்டாம்.

அப்படியானத் தவறான  வாழ்வியல் முறையை வைத்துக்கொண்டு இன்னொருவரைக் குறை கூறுவது எப்படி. மருத்துவமும் அப்படித்தான். உங்களுக்குத் எது தேவையோ அதைப் பின்பற்றுங்கள். எதைப் பின்பற்றுகிறீர்களோ அது தான் உங்களுக்கு மொழியப்படும்.

அந்தந்தக் காலத்திற்கு ஏற்றபடி விஞ்ஞானம் வளர்ச்சிபெறும். மக்களின் வாழிவியல்முறைகளுக்கேற்றபடி எல்லாம் மாறும். நீங்கள் மாறாமல் இருந்து பாரம்பரியமுறைகளைக் காப்பாற்றலாம். நமக்கு எப்பொழுதும் இப்படித்தான். நாம் திருந்தவே கூடாது, அடுத்தவன் மட்டும் திருந்திரனும்..

வாய்ப்பே இல்ல ராஜா.......

உலகம் திருந்தனும்னா முதல்ல நீ திருந்தனும் ராஜா...

நன்றி: திரு.பழனிக்குமார்,மதுரை, முகநூல்.

கருத்துகள் இல்லை: