அந்த கவிஞனுக்கு வாழ்த்து சொல்லும் முன் கவிஞர்கள் எனும் தனி பிறவிகள் பற்றி சில விஷயம் சொல்லியாக வேண்டும்.
ஆம் கவிஞன் என்பதும் எழுத்தாளன் என்பதும் ஒரு சாபம், அது வரம் அல்ல முழு சாபம். அவனால் இயல்பான மனதுடன் இருக்க முடியாது, சதா சர்வ காலமும் கற்பனையும் சிந்தனையும் இன்னும் பலவும் ஓடிகொண்டே இருக்கும், அவன் மனம் ஒருமாதிரி எப்பொழுதும் சுழன்றடித்து கொண்டே இருக்கும்
சாமான்யனும் கலைஞனும் மனதால் மிகுந்த வேறுபட்டவர்கள், சாமான்ய கண்ணோடு கலைமனதை ஒப்பிட்டு பார்க்கவே முடியாது, ஒப்பிட்டால் அது அபத்தம், மடமை.
அதுவும் எழுதாமல் பிழைக்கமுடியாது எனும் நிலை வந்தபின் அவன் அசுரதனமாக இயங்கும்பொழுது அவன் சிந்தனை ஓங்கி ஓங்கி அமையும் பொழுது மனம் சில ஆறுதல்களை தேடும்
கலைஞன் என்பவன் மனதால் பலகீனமானவன் என்பதால் உலக இன்பங்கள் அவனுக்கு ஆறுதல் கொடுப்பதாக எண்ணி மயங்கி வீழ்ந்துவிடுவான்,
அதிலே அவன் ஓய்வும் இருக்கும், அவமான ஆறுதலும் இருக்கும், அதில் மூழ்கி எழுந்தால் அவனுக்கு புத்துணர்ச்சியும் இருக்கும்
ஏராளமான கலைஞர்களுக்கு மதுவும் மாதுவும் ஆறுதலாய் இருக்கும், அவைகளிடமே அவர்கள் அடைக்கலமாக புகுந்துவிடுவார்கள்
காளிதாசன் எனும் மகா கவிஞனின் கடைசி காலங்கள் மகா சர்ச்சையானவை காரணம் பெண் மோகம்
கம்பனின் ராமாயணம் நமக்கு தெரியும், தனிபாடல் திரட்டு என்பது அவன் வாத்சாயனரை விட பெரும் ஆராய்ச்சியாளன் என்பதை சொல்லும்
ஜெயகாந்தனும் கஞ்சா எனும் சிவஞான மூலிகையில் சரண்டைந்தார்.
முத்துகுமார் போன்றோர் மதுவில் மூழ்கினார்கள். கண்ணதாசன் என்பவர் பூலோக போதை எல்லாவற்றிலும் வலம் வந்தார் அரசியல் உட்பட
தமிழக கலை பிம்பங்கள் அல்ல, உமர்கய்யாம் போன்ற மாபெரும் கவிஞனின் சாயலும் அதுவே
உமர்கய்யாம் என்ன? ஞானிகளுக்கெல்லாம் ஞானியென கொண்டாடபட்ட சாலமோன் அரசனே பெண்களுக்குள் மயங்கி கிடந்திருக்கின்றான், உலகின் மகா அழகான படைப்பும் அழகும் பெண் என்பது அவன் கண்ட ஞானமாய் இருந்தது
அதில் உண்மையும் இருந்தது.
மனதால் கற்பனையில் மிதப்பனும், அழகில் எளிதில் சரிபவனுமே நல்ல ரசிகன், அம்மாதிரி மனம் கொண்டவனே கவிஞனும் எழுத்தாளனுமாக மின்ன முடியும், அவனின் வரம் அது, சாபமும் அது
இதனால் பெண்களும் போதையும் அவர்களின் வழக்கமாகிவிடுகின்றன, போதைகளில் அழகானதும் ராஜபோதையுமான பெண் விவகாரங்களில் அவர்கள் சிக்கிவிடுகின்றனர்
எது அவர்களின் உற்சாகமோ, எது அவர்களை இயங்க வைக்குமோ, எது அவர்களின் ஆதார சக்தியும் ஊற்றுமாய் இருக்குமோ அதில்தான் அவர்கள் வாழ்வார்கள், படைப்பார்கள், அதுவன்றி அவர்களால் படைக்க முடியாது
ஆனால் அதிலே மூழ்கி வீழ்ந்தும் போவார்கள்
கலைஞர்களின் வாழ்வெல்லாம் காணபடும் பக்கம் இதுதான்.
(கடவுளின் கருணை இருந்தால் அவர்கள் தப்புவார்கள், புவி வட்டபாதையில் இருந்து தப்பும் செயற்கை கோள் சந்திரனின் வட்டத்தில் நுழைவது போல சிலர் ஆண்டவன் பக்கம் திரும்புவார்கள்
வெகுசிலருக்கே அந்த வரம் உண்டு.. அதில் கண்ணதாசனும் பாலகுமாரனும் மகா முக்கியமானவர்கள்.)
இதை மிக யதார்த்தமாக ஒப்புகொண்டவர் கண்ணதாசன், சிலரை உலகமாக புரிந்து கொண்டது அவ்வளவுதான் விஷயம்
அப்படி வைரமுத்துவும் சிக்கியிருக்கலாம், கவிஞனின் இயல்பு அது. அவன் தன்னிலை விளக்காதது மட்டும்தான் சிக்கலே தவிர கவிஞனின் இயல்பே அதுதான், அதுவன்றி கவி இல்லை.
மது மாது போதை என ஏதும் ஒன்றில்லை என்றால் கவிஞன் எழுத்தாளன் என்பவன் பெரும்பாலும் இல்லை
கடவுளில் மூழ்குபவனுக்கு கடவுள் பாடல் வருவது போல, உலக இன்ப துன்பங்களில் மூழ்காமல் பாடல் முத்து எடுக்கமுடியாது, அது அவர்கள் விதி.
அப்படி தமிழகம் கண்ட நல்ல கவிகளில் ஒருவர் வைரமுத்து.
கண்ணதாசன், வாலிக்கு பின் தமிழகம் கண்ட மிக அற்புத கவிஞர் வைரமுத்து, தமிழ் அவரின் நாவில்,பேனாவில் எல்லாம் அப்படி விளையாடும்
எல்லா வகை உணர்வுகளையும் பாடலில் வடிக்கும் வரம் அவருடையது, அதுவும் கிராமத்து பாடல்கள் என்றால் இன்னும் அட்டகாசம்
ஆம் இளையராஜாவுக்கும் அவருக்கும் சர்ச்சை வந்தது, ஆனால் இளையராஜா இல்லாவிட்டாலும் தன்னால் தேசிய விருது வாங்கிவிட முடியும் என ஐந்து முறை காட்டிய கவிஞன் அவர்
இளையராஜா இல்லா வைரமுத்து சாதித்ததும், வைரமுத்து இல்லா இளையராஜா தடுமாறுவதும் உங்கள் முடிவினை பொறுத்தது
1977களில் பொன்மாலை பொழுது என வந்த வைரமுத்து எட்டியிருக்கும் உயரம் கொஞ்சமல்ல.
அவரின் வார்த்தைகள் கிராமத்து யதார்த்த வார்த்தைகள், மனதுக்கு நெருக்கமான வார்த்தைகள், அந்த சொற்களை அடுக்கி தமிழ்தேனில் கலந்து அவர் தருவது கிராமத்து ருசியான உணவுகளை போன்றது
1980 முதல் 1990 வரை அவர் உச்சத்தில் இருந்தார், கண்ணதாசன் விட்டுசென்ற காலியிடத்தை பலருடன் சேர்ந்து நிரப்பியதில் அவருக்கும் பங்கு உண்டு.
சிங்கத்து பாலை தங்க தட்டில் வைக்க வேண்டும், அப்படி வைரமுத்து தங்க தட்டு இளைராஜா சிங்கத்து பால், இரண்டும் கலந்து வந்த காலங்கள் பொற்காலங்கள்.
நிச்சயம் அவர்கள் கூட்டணியில் வந்த காலங்களின் சுகமான கீதங்கள் இனி வாரா..
இளையராஜா பிரிந்த நிலையிலும் ரகுமான் உட்பட பலருடன் இணைந்து அற்புத பாடல்களை எழுதி தன்னை நிறுத்தி காட்டியவர் வைரமுத்து.
அவரின் தமிழ் அழகு, உணர்ச்சியாய் சொல்லும் கலை அழகு, சொல் உவமை அழகு, நிச்சயம் அவர் கவிஞர், அழகுதமிழ் கவிஞர் அதில் சந்தேகமில்லை.
அழகான வார்த்தைகள், பொருத்தமான உருவகங்கள் உவமைகள், எளிய கிராமத்து வார்த்தைகளின் ஆழ்ந்த அர்த்தங்கள். மிக மிக அழகான உருக்கமான ரசிக்கதக்க வரிகள் என வைரமுத்துவின் பாணி மிக மிக சுகமானது
கயிற்றுகட்டிலில் படுத்தபடி மாமர நிழலில் தென்றல் வீச இளநீர் குடிப்பது போன்ற சுகம் அது..
கிராமத்து எல்லா சுகங்களுக்கும் நம்மை இழுத்து செல்லும் ரதம் அவரின் பாடல்கள்
வைரமுத்துவின் பாடல்களில் காதலும் அழகும் ரசனையும் மிகுந்திருக்கும், ஆண் பெண் மனதின் அடிமன காதலை அவர் பாடுவதே ஒரு சுகம், உண்மையில் அவர் காதலர்களின் கவிஞன், அழகை ரசிக்கும் மனங்களின் கவிஞன்
வைரமுத்துவின் வீழ்ச்சி கருணாநிதி பின்னால் சென்றதில் தொடங்கியது, கருணாநிதி பின்னால் செல்வதுதான் தமிழ்பற்று எனும் போலிபிம்பத்துக்கு அவரும் தப்பவில்லை
அதை அவர் செய்திருக்காவிட்டால் இன்னொரு கண்ணதாசனாக வாலியாக அவர் உருவாகியிருக்க கூடும்
இன்னும் காலமிருக்கின்றது
வைரமுத்து கவிஞன் என்பதை விட அருமையான விஷயம் நல்ல எழுத்தாளன் , அந்த "கள்ளிகாட்டு இதிகாசம்" எப்பொழுது வாசித்தாலும் கண்ணீர் வரவைக்கும் காவியம்
அப்படி உருக்கமான காவியங்களை அவரால் கொடுக்க முடியும், ஆனால் போலி பகுத்தறிவு அவரை தடுக்கின்றது
கண்ணதாசனும் திமுகவில் இருந்தார், இந்து கடவுள்களை மகா மட்டமாக பழித்தார். ஆனால் பின் உண்மை உணர்ந்து வெளிவந்து அழியா காவியங்களை எழுதினார்
இன்றும் கண்ணதாசனின் சினிமா படைப்பினை விட நிலைத்து நிற்பது கிருஷண கானமும் அர்த்தமுள்ள இந்துமதம் போன்றவையே..
காஞ்சி காமாட்சியினை பழித்த கண்ணதாசன் பின்னாளில் அந்த தாய்க்கே பக்தனாது போல ஆண்டாளை பழித்த வைரமுத்துவும் ஒரு காலம் இவ்வழி திரும்புவார்
ஓடிமுடித்த நதி கடலில் வீழ்வதும், ஆடி ஓய்ந்த கால்கள் திண்ணையில் அமர்வதும், பாடி ஓடி ஆடி கடைசியில் தவிக்கும் கவிஞன் கடைசியில் கடவுளிடம் குடிபுகுவதும் இங்கு புதிதல்ல
அருணகிரி நாதர் முதல் கண்ணதாசன் வரை அப்படியே, அவ்வரிசையில் வைரமுத்துவும் இடம்பெறட்டும்
கடவுள் ஒரு கலைஞனை குறித்துவிட்டால் விடமாட்டார், நேரம் வரும்பொழுது சட்டென தூக்கிவிடுவார், அதன் பின் அவன் தப்பமுடியாது, அவருக்கு தொண்டாற்றியே தீரவேண்டும்
தன் படைப்பின் நோக்கத்தை உணரும் தருணம் வரும்பொழுது அவன் அப்படி தெய்வத்தால் ஆட்கொள்ளபட்டு மிகபெரும் காவியம் படைப்பான்
மலையில் ஊற்றெடுக்கும் நதி தான் ஆட்டம் போட பிறந்தோம் என குதித்தோடி வரும், வயலுக்கு வந்தபின்பே நோக்கம் தெரியும், கடலுக்கு செல்லும் பொழுதே ஞானம் விளங்கும்
அப்படி வைரமுத்துவுக்கும் உரிய நேரம் வரும்பொழுது அவர் ஆன்மீகம் பக்கம் வருவார், அழியா காவியங்களை தருவார்
தெய்வம் அவரை நோக்கி சிரிக்கின்றது, இருந்து பாருங்கள் கருணாநிதி விட்டுசென்ற ராமானுஜரின் வாழ்வினை கையில் எடுத்து விரைவில் அவர் ஆன்மீக பக்கம் வருவார்
நிச்சயம் வருவார், எல்லா தமிழ் கவிஞர்களையும் தொட்டுவிடும் தெய்வம் அவரைமட்டும் விடுமா என்ன? ஆன்மீக படைப்புகள் பல செய்யாமல் அவரின் பிறவி ஓயாது, அது நிச்சயம்
அவருக்கு இன்று பிறந்தநாளாம், வாழ்த்துவோம். அதற்கு பெரும் காரணமும் இருக்கின்றது
அழியா பாடல்கள் , அற்புதமான கிராமத்து கதைகளை அவர் எழுதியதை விட நமக்கெல்லாம் பெரும் உதவி செய்திருக்கின்றார், மறக்க முடியாத உதவி
குஷ்பூவிற்கு மிக பொருத்தமான பாடல்களை வைரமுத்து எழுதினார்
"எந்த பெண்ணிலும் இல்லாத ஒன்று.." என அவர் குஷ்பூவிற்கு எழுதியபாடல் ரசனையின் உச்சம், மிகபெரும் குஷ்பூ ரசிகனாக இல்லாவிட்டால் அப்பாடல் சாத்தியமே இல்லை
"சிரிக்கும் போது கண்ணில் மின்னல் தெரித்து ஓடுதே அதுவா" என்ற வரிகளாகட்டும், முல்லை நிறத்து பற்களில் ஒன்று தள்ளி உள்ளதே அதுவா" என்ற வரிகளாகட்டும், குஷ்பூவிற்காய் எழுதபட்டது
இந்த வரிகளுக்காகவே வைரமுத்துவிற்கு வைரமாலை சாற்றலாம்.
கம்பன் தன் கதை நாயகியினை பாடியது போல அப்படி ஒரு உருவகம் தந்த இரண்டாம் கம்பன் அவர்.
நம்மை போலவே உருகி ரசித்து ஆனால் நம்மால் சுத்தமாக முடியாத, அற்புதபாடலை கொடுத்தவர் வைரமுத்து
அப்பாடலை எழுதியதற்காகவே அவரை கொண்டாடலாம், இப்பாடலை எழுதியற்காகவே இன்னொரு முறை தேசிய விருது கொடுக்கபட வேண்டிய கவிஞர் அவர்
அதனால் ஸ்பெஷல் வாழ்த்து
அந்த அற்புத கவிஞனுக்கு சங்கத்தின் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்கள்,
இன்னொருமுறை அவர் குஷ்பூவிற்கு இன்னொரு அழியாபாடல் இயற்ற வாழ்த்துவோம்
இப்பொழுதும் அவரின் பாடல்களை, வரிகளை கூர்ந்து கேட்கின்றோம்
ஆம் கடல் படத்தின் நெஞ்சுக்குள்ளே உம்மை முடிஞ்சிருக்கேன் பாடலாகட்டும், ராவணா படத்தின் பாடல்களாகட்டும்
நிச்சயம் இளையராஜாவோடு இணைந்தால் அது இன்னும் பிரகாசித்திருக்கும்
இன்னும் காலமிருக்கின்றது
இருவரும் இணையட்டும் மறுபடியும் பூங்காற்று திரும்புமா பாடல் வரட்டும்
தமிழகம் கண்ட தனிபெரும் கவிஞனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்வதில் சங்கம் பெருமை அடைகின்றது
இன்னும் ஆயிரம் ஆயிரம் புத்தகமும் கவிதையும் பாடலும் எழுத வாழ்த்துக்கள்,
அவர் விரைவில் திராவிட கும்பலில் இருந்து வெளிவந்து அழியா ஆன்மீக பாடல்களும் காவியங்களும் கொடுக்க போவதற்காக முன்கூட்டிய வாழ்த்துக்கள்..
வைரமுத்துவுக்கு யாருக்கும் கிடைக்கா வாய்ப்பு கிடைத்தது
ஆம் பிள்ளைகள் தகப்பனை போல் திறமையாய் அமைதல் அரிது, கவிஞர்களில் கம்பனுக்கு மட்டும் அவ்வாய்ப்பு கிடைத்தது அதுவும் காதலால் போனது
அதன்பின் எந்த கவிஞன் மகனும் எழுத்தாளன் மகனும் தந்தையின் எழுத்து வாரிசாக வந்ததே இல்லை
வைரமுத்துவுக்கு கம்பனுக்கு பின் அந்த அதிர்ஷ்டம் கிடைத்திருக்கின்றது, அவரின் மகனான மதன் கார்க்கி கவனிக்கபடும் ரகம், நிச்சயம் திறமை உண்டு. வைரமுத்துவின் மகத்தான கவி வாரிசு அவர்
இவ்விஷயத்தில் வைரமுத்து அவரின் குருநாதர் கருணாநிதியினை விட மிக பெரும் அதிர்ஷ்டசாலி, அதனால்தான் இப்பொழுதெல்லாம் திமுகவில் இருந்து அவர் தள்ளிவைக்கபடுகின்றாரோ என்னமோ?
நன்றி: திரு.ஸ்டான்லி ராஜன், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக