14 ஜூலை, 2020

சாதனையாளர்கள் : போராடாமல் வாழ்க்கை இல்லை!



கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் நகரிலிருந்து 22 கி.மீட்டர் தொலைவில் உள்ளது குறும்பனை என்ற கடற்கரைக் கிராமம். அங்கு காலை நேரத்தில் மக்கள் திரண்டு காத்திருக்கிறார்கள் ஒரு மருத்துவரை எதிர்பார்த்து.வாரம் ஞாயிறு ஒருமுறை, முடியாதபட்சத்தில் கண்டிப்பாக மாதம் ஒருமுறை இங்கு வந்து இலவச சிகிச்சை மட்டுமல்லாமல், மருந்துகளையும் இலவசமாக வழங்குகிறார் இந்த டாக்டர்!

மரிய சுபிசன் தான் இந்த டாக்டர்!ஒரு காலத்தில் இவர் ஒரு மீனவச் சிறுவன்!தந்தை சூசை பெர்னாண்ட் கூட்டுறவு சங்கத்தில் வேலை பார்த்தார். தாய் மலர்மேரி. இவர்களுக்கு ஐந்து பிள்ளைகள். திடீரென்று சூசைக்கு மனநிலை பாதித்தது. வேலை பறிபோனது. மொத்தக் குடும்பமும் வறுமையின் கோரப் பசிக்கு ஆளானார்கள். குழந்தைகள் வேலைக்குப் போனால்தான் சாப்பிட முடியும் என்னும் நிலை.

முதலாவது பெண் பிள்ளை. அடுத்து, அப்போது 11ஆம் வகுப்புப் படித்துக் கொண்டிருந்த மரிய டெல்லஸ். மிகவும் ஒல்லியாக இருப்பான். மீன் பிடித்தல் போன்ற கடினமான வேலையைச் செய்யும் உடல் வலிமை கிடையாது. மூன்றாவது மரிய சுபிசன். எட்டாவது படித்தான். கொஞ்சம் திடமாக இருப்பான். "நான் வேலைக்குப் போயி உங்களை எல்லாம் காப்பாத்துகிறேன்" என்று தைரியமாய்ச் சொல்லிவிட்டு கடலுக்குப் போனான்.

"இவ்வளவு சின்னப் பையனாக இருக்கிறான். இவனை வேலைக்குச் சேர்த்துக்கொள்ள மாட்டோம்" என்று மீனவர்கள் அனைவரும்  மறுத்து ஒரு சேர விட்டார்கள். பிறகு, கண்கலங்கி நின்ற குடும்பத்தையும் அவனையும், வீட்டு வறுமையையும் பார்த்து சேர்த்துக் கொண்டார்கள். பாடப் புத்தகத்தைக் கையில் ஏந்த வேண்டிய சின்னஞ்சிறு பிள்ளையின் பிஞ்சுக் கரங்கள் மீன் வலையை மூச்சிறைக்க இழுக்க ஆரம்பித்தது. இதனால் மாதந்தோறும் குடும்பத்திற்கு வருமானம் வந்தது. அதனால் குடும்பத்துக்கு சாப்பாடு போட்டதுடன், அக்கா, அண்ணன் மற்றும் இரு தம்பிகளையும் படிக்க வைத்தான்.

இந்நிலையில் படிப்பில் முதலாவதாக வரும் மரிய சுபிசன் படிப்பை நிறுத்தியதால், அவனைத் தேடி ஆசிரியர்கள் வீட்டுக்கு வந்துவிட்டார்கள். அவனோடு படித்த சக மாணவர்களும் கடிதங்கள் எழுதியிருந்தார்கள். அந்தக் கடிதங்களைப் படித்தவன் கல்வியைத் தொடர கரையேறிவிட்டான். ஒரு வருடம் கழித்து மறுபடியும் பள்ளியில் சேர்ந்தான். படித்துக்கொண்டே, விடுமுறை நாட்களில் பெயிண்டர், ப்ளம்பர், எலெக்ட்ரிஷியன் போன்றோருக்கு உதவியாளராகப் போனான். அந்த வருமானம் குடும்பத்துக்கு ஓரளவு உதவியாக இருந்தது. 

விடுமுறைகளில் வேலை பார்த்துக்கொண்டே படித்தாலும் பத்தாம் வகுப்பில் பள்ளியிலேயே 2-ஆவது ரேங்க். 442 மதிப்பெண் எடுத்தான். பன்னிரண்டாம் வகுப்புத் தேர்விலும் 1127 மதிப்பெண் எடுத்து பள்ளியில் இரண்டாவதாக வந்தான். சென்னை மருத்துவக் கல்லூரியில் தகுதி அடிப்படையில் இடம் கிடைத்தது. டாக்டராகி குடும்பத்தை நல்ல நிலைக்குக் கொண்டுவந்தார் சுபிசன்.

தந்தை இறந்துவிட்டார்.  திருவனந்தபுரத்திலுள்ள தன் வீட்டில் வைத்துத் தாயை மரிய சுபிசன்தான் பார்த்துக்கொள்கிறார். அக்கா, அண்ணன், தம்பிகள் எல்லாரும் திருமணமாகி வெளியூர்களில் வசிக்கிறார்கள். எனவே, இப்போது இந்த வீட்டில் யாரும் இல்லை. சுபிசனுக்குத் திருமணமாகி ஒரு குழந்தையுள்ளது. ஆனாலும் எல்லா ஞாயிறும் தவறாமல் கணவனும் மனைவி மேரியட் ஜேனும் வந்துவிடுவார்கள். காலை 8 மணிக்கே மருத்துவம் பார்க்க வேண்டி ஆட்கள் வரத் தொடங்கிவிடுவார்கள். குறும்பனை கிராமத்தவர்கள் மட்டுமல்லாமல் அக்கம்பக்க கிராமத்து மக்களும் இங்கே மருத்துவம் பார்க்க வருவார்கள். யாரிடமும் ஒரு பைசா வாங்குவதில்லை. வறுமையிலும் தான் மருத்துவரான சாதனையை சுபிசன் உணர்வு ததும்பக் கூறினார்....

"பெரியவர்களாலேயே கடலுக்குள்ள போயி மீன் பிடிக்கிறது சவாலான விஷயம். எட்டாவது படிக்கும்போது, கண்ணுக்கெட்டிய தூரம் வரைக்கும் தண்ணீர் மட்டுமே தெரிந்த நடுக்கடலில் அசையும் படகில் போன நாட்களை, இன்று நினைத்துப் பார்த்தாலும் பகீர் என்று இருக்கும். அப்போது மழை, புயல் வருகிறதைக் கண்டுபிடிக்கும் தொழில்நுட்பம், படகு கரையை நோக்கிச் செல்ல ஜிபிஎஸ் கருவிகள் எதுவும் கிடையாது. கடலுக்குள்ள போய்ட்டோம்னா கரை எங்க இருக்குன்னே தெரியாது. வானமே நம்மை போத்திக்கிட்டு இருக்கிற மாதிரி சூழ்ந்திருக்கும். கடலிலிருந்து கரைக்கு வருகிற வரைக்கும் நம்ம உசுரு நம்ம கையில் இல்ல. திடீரென்று மழை அடிக்கும்; புயல் வரும்; படகு பயங்கரமா தத்தளிக்கும். இரண்டு மூன்று நாள் தொடர்ந்து மழையிலேயே நனைந்துகொண்டு பயத்தோடவே இருந்திருக்கிறேன்."

"வேலையும் கடினமானதாக இருக்கும். ஒரு நாளைக்கு நான்கு தடவைக்கு மேல் வலையை இழுக்க வேண்டியிருக்கும். வலையை இழுத்து இழுத்துக் கையெல்லாம் காய்ப்பு காய்ச்சிடும். எவ்வளவோ கஷ்டங்களையும் பொறுத்துக்கிட்டு கடலுக்குப் போனது குடும்பக் கஷ்டத்துக்குத்தான். ஆனால், குடும்பத்தைக் காப்பாத்துறதுக்காகச் சின்ன வயசிலேயே வேலைக்குப் போறது தற்காலிகத் தீர்வாகத்தான் இருக்கும். கஷ்டப்பட்டுப் படித்து பெரியவனாகி வேலைக்குப் போறதுதான் நிரந்தரத் தீர்வா இருக்கும் என்பதை உணர்ந்தேன். அதேநேரம், என் பள்ளி ஆசிரியர்களும் நண்பர்களும் திரும்பவும் படிக்க வரும்படி தொடர்ந்து வற்புறுத்தினார்கள். மீண்டும் பள்ளியில் சேர்ந்து படிக்க ஆரம்பித்தேன்.சென்னை மருத்துவக் கல்லூரியில் தகுதி அடிப்படையில் இடம் கிடைத்தாலும், வருடத்துக்கு 5000 ரூபாய் கல்லூரிக்குக் கட்ட, எங்ககிட்ட பணம் இல்லாத நிலை. அப்போது, தமிழக முதல்வர் ஜெயலலிதா அம்மா அவர்கள் என் நிலை பற்றி அறிந்து 1 லட்சம் ரூபாய் நிதியுதவி செய்தார்கள். அது எனக்குப் பேருதவியாக இருந்தது. ஹவுஸ் சர்ஜனானதும் கிடைத்த ஸ்டைஃபண்ட் பணம் தொடர்ந்து படிக்கிறதுக்கும் கைச்செலவுக்கும் உதவியது."

"முதுகலை பட்ட மேற்படிப்பு நுழைவுத் தேர்வில் தமிழக அளவில் 1300 இடங்களில் 60ஆவது ரேங்க் வாங்கினேன். அகில இந்திய தேர்விலும் நல்ல ரேங்க் கிடைத்தது. மிகவும் போட்டியுள்ள நரம்பியல் துறையில், அய்ந்து வருட சூப்பர் ஸ்பெஷாலிட்டி எம்.சி.ஹெச். இண்டக்ரேட்டட் கோர்ஸ் சீட் கிடைத்தது. அதையும் சென்னை மருத்துவக் கல்லூரியில் தான் முடித்தேன். இறுதியாண்டு தமிழக அளவில் தங்கப் பதக்கம் வாங்கினேன். கடந்த 2014ஆம் ஆண்டுதான் படிப்பை முடித்தேன்."

"அப்போது என் படிப்பு என் ஊருக்கு உதவ வேண்டும் என முடிவு செய்தேன். இந்தக் கிராமத்தில் ஒரு சின்ன மருத்துவமனைகூடக் கிடையாது. உடம்புக்குச் சின்னப் பிரச்சினைன்னா 5 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள குளச்சலுக்கும், ரொம்ப முடியலைன்னா 22 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள நாகர்கோவிலுக்கும்தான் போகவேண்டும். இதனாலேயே, பலரை இழந்திருக்கிறோம்".

"எனவே, அடிக்கடி ஊருக்கு வந்து செல்லும் தூரத்தில் இருக்க வேண்டும் என்று, இங்கிருந்து பக்கத்திலுள்ள பெரிய நகரமான திருவனந்தபுரத்தில் பணியில் சேர்ந்தேன். எங்கள் குடும்பம் கஷ்டத்தில் இருந்தபோது, எதுக்குடா உனக்கு ஸ்கூலு? ஒழுங்கா வேலைக்குப் போயி குடும்பத்தைக் கவனிடான்னு சொன்ன ஊர்க்காரர்கள் பலர், இன்று என்னிடம் சிகிச்சைக்காக வருவார்கள். அப்போது, நீ அன்னைக்கு எடுத்த முடிவுதாம்பா சரியானதுன்னு பாராட்டுவார்கள். பெருமையாக இருக்கும்.

"என்னை மாதிரி கிராமப் புறங்களிலிருந்து முன்னேறி வந்து நகர்ப்புறங்களில் வசதியாக வாழ்கிறவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் அவரவர்கள் துறை சார்ந்து தன்னைப் பெற்றெடுத்த கிராமத்துக்கும் ஏதாவது செய்ய வேண்டும். அப்படிச் செய்ய ஆரம்பித்தாலே நமது ஒவ்வொரு கிராமமும் முன்னேறிவிடும்" 

இப்போது  39 வயதாகிறது டாக்டர் மரிய சுபிசனுக்கு!


Grateful thanks to Htay Htay, Facebook.

கருத்துகள் இல்லை: