"மறைக்கப்பட்ட இந்தியா" -
எஸ் ராமகிருஷ்ணன் -
விகடன் வெளியீடு
ஜூனியர் விகடனில் வெளியான எனது இந்தியா தொடரின் இரண்டாவது பகுதி நாம்,பள்ளிகளில் கல்லூரிகளில் படித்த வரலாற்று புத்தகங்களில் அறிய முடியாத பல ஆச்சரியமான தகவல்களை உள்ளடக்கிய வரலாற்று கட்டுரைகள் நிறைந்த தொகுப்பு.
இந்தியாவின் தேசிய கீதம் ஜன கன மன என தெரியும்.இந்தியாவின் தேசியப் பாடல் வந்தே மாதரம் என்பதை அறிவீர்களா?
யுவான்சுவாங்,பாகியான் ஆகிய சீன யாத்திரிகர்கள் இந்தியாவுக்கு வந்து சென்றது குறித்து நமக்கு தெரியும்.இவர்களைப் போலவே ரஷ்யாவில் இருந்து வந்த அப்பனாசி நிகிதின்,அலெக்ச சோல்டிகோப் ஆகியோரை அறிவீர்களா?
கவிக்குயில் சரோஜினி நாயுடுவை நமக்குத் தெரியும் சுதந்திரப் போராட்டத்திற்காக மிகத் தீவிரமாகப் பாடுபட்ட அவரது தம்பி வீரேந்திரநாத் சட்டோபாத்யாயவை அறிவீர்களா?
மூன்றாம் நூற்றாண்டில் மௌரியப் பேரரசர் உருவாக்கப்பட்ட, இந்தியாவின் மிக நீண்ட நெடுஞ்சாலையான கிராண்ட் டிரங்க் ரோடு பற்றி நமக்குத் தெரியும்.ஆனால் மதுரை கன்னியாகுமரி சாலையில்,பயணிகள் வசதிக்காக,108 சத்திரங்களைக் கட்டி ராணி மங்கம்மாள் உருவாக்கிய மங்கம்மாள் சாலையை அறிவீர்களா?
தனது பயணத்தை அனுமதிக்காமல் இருந்தால் அந்த இடத்திலேயே கழுத்தை அறுத்துக் கொண்டு இறந்து போவேன் என்று கத்தியை கையில் எடுத்த யுவான் சுவாங்கின் மனத்துணிவுதான்,எத்தனையோ இடர்களைக் கடந்து அவர் விரும்பியது போல் 17 வருடங்களுக்குப் பிறகு அவர் நாடு திரும்பிய போது அவரோடு 20 குதிரைகளில் 657 தொகுதிகள் ஆக்கப்பட்ட 520 பௌத்த பிரதிகள் ஏற்றிச் செல்லப்படக் காரணமாக இருந்தது.
அவுரங்கசீப்பின் மகளான ஜெபுன்னிஸா,எட்டு சுற்று மஸ்லின் ஆடையை அணிந்து வந்த போதும் அது உடலைக் கவர்ச்சியாகக் காட்டுவதாகச் சொல்லி அந்த உடையை மாற்ற ஔரங்கசீப் உத்தரவிட்டார்.அத்தனை மெலிதான, நகத்துளையால் உருவான நுலைக் கொண்டு உருவான டாக்கா மஸ்லினாலான புடவை ஒன்றை ஒரு மோதிர வளையத்துக்குள் வைத்து விடலாம். அந்தக் கலை எவ்வாறு அழிக்கப்பட்டது என்பதை அறியும் போது மிகப் பெரிய வேதனை உண்டாகிறது.
படித்த உயர் பிரிட்டிஷ் ஆண்களில் பலர் வேலை நிமித்தமாக இந்தியாவுக்கு வந்து விட்ட காரணத்தால் நல்ல மாப்பிள்ளை வேண்டி பெண்கள் கப்பல் கப்பலாக இந்தியாவுக்கு வந்து இறங்கினர் இப்படி மணமகனை தேடி வலை வீசி வந்த கப்பல்களுக்கு பிஷ்ஷிங் ப்ளீட் என்று பெயர் என்பதும்,கடுமையான எதிர்ப்பையும் மீறி டச்சு அதிகாரி ஹென்ரிக் வான் ரேட, ஈழவ இனத்தைச் சேர்ந்த அச்சுதன் வைத்தியரை உடன் வைத்துக்கொண்டு 1676 ஆம் ஆண்டில் இந்தியாவின் அரிய மூலிகைகள் தாவர வகைகள் குறித்த விரிவான தகவல்கள் அடங்கிய இரண்டு தொகுப்புகளை உருவாக்கினார் என்பதும் எத்தனை ஆச்சர்யமான விஷயங்கள்.
கோனார்க் சூரியக் கோயில் அதன் கட்டுமானத்தை அதனை ஐதீகத்தை,பிரம்ம சமாஜம்,ஆரிய சமாஜம் பற்றி,தேச விடுதலைக்காக தேசத் தலைவர்களின் சொற்பொழிவுகள் மற்றும் பாடல்களை ரகசியமாக பல இடங்களில் பதிவு செய்து கொண்டு வரப்பட்டு ஒளிபரப்பப்பட்ட ஆசாத் இந்தியா ரேடியோவில் தன் குரலை ஒலிக்கச் செய்த உஷா மேத்தா, ஜெய்பூர் அரசரான இரண்டாம் ஜெய்சிங் மஹாராஜாவால் உருவான,இந்திய வானியல் விஞ்ஞானத்தின் வளர்ச்சிக்கு பயன்படும் கணிப்புக் கருவியான ஜந்தர் மந்தர்,இந்திய தேசிய ராணுவத்தினர் ஜப்பானின் பெற்ற கடுமையான பயிற்சி,இந்திய கல்வி முறையில் மிகப்பெரிய மாற்றங்களை கொண்டு வந்த ரவீந்திரநாத் தாகூரின் சாந்திநிகேதன், பலதரப்பட்ட பயிர் முறையை அழித்த இண்டிகோ புரட்சி,பாபர் காலம் தொடங்கி அடுத்த 300 ஆண்டுகளுக்கு மிகவும் பிரபலமாக விளங்கிய முகலாய நுண் ஓவியங்கள், சென்னையில் பல்லாவரம் அருகே இந்திய நிலவியல் ஆய்வுகளின் தந்தை எனப்படும் ராபர்ட் ப்ரூஸ் 1863 இல் கண்டுபிடித்த கல் கைக் கோடரியால் தொடங்கிய கல்லாயுத ஆராய்ச்சி,இறந்த உடலை எரிக்கவோ புதைக்கவோ செய்யாமல் கழுகுகளுக்கு சைலன்ஸ் டவரில் இரையாக விட்டு விடும் பார்சி இனத்தவர்கள்,மிகப் பெரிய இன அழிப்பைச் சந்தித்த ஆர்மீனியர்கள், பத்தொன்பதாம் நூற்றாண்டு இந்தியாவுக்கான வரலாற்று ஆவணங்களாக இருக்கும் புகைப்படங்களை எடுத்த பிரிட்டிஷ் புகைப்படக் கலைஞர் சாமுவேல் பெர்ன், இந்திய புகைப்படக் கலையின் ராஜா என அழைக்கப்படும் தீன்தயாள்,இந்திரா காந்தியின் உதவியோடு வங்காள தேசம் உருவான கதை,கல்கத்தா கலவரம், பல்லாயிரம் உயிர்களைக் குடித்த நேரடி நடவடிக்கை நாள், காலிஸ்தான் வன்முறை, மகாத்மா காந்திக்கு முந்தைய மகாத்மாவான ஜோதிராவ் புலே,யவனர்கள்,யவனர்களது காலம் முதலே வரலாற்றுச் சிறப்புமிக்க துறைமுக நகரமாக முதல் மற்றும் இரண்டாம் நூற்றாண்டுகளில் புகழ்பெற்று விளங்கிய புதுச்சேரியை அடுத்துள்ள அரிக்கமேடு, ஜமீன்தார்கள் எவ்வாறு உருவாகினார்கள்?, சுதந்திர போராட்டத்திற்காக வெளிநாடுகளில் ஆதரவு தேடிய முக்கிய போராளியான ஜப்பானில் வாழ்ந்த நாயர் சாங் என நாம் அறிந்த,நாமறியாத அத்தனை பேரைப் பற்றியும் எத்தனை எத்தனை தகவல்கள்.இதற்கான அவரது கடுமையான உழைப்புக்கு தலை வணங்க வேண்டும்.
வாசிக்க வாசிக்க பிரமிப்பை உண்டாக்கக் கூடிய தகவல்களுடன் 351 பக்கங்களில் விரிகிற நேர்த்தியான புத்தகம்.மறைக்கப்பட்ட இந்தியாவின் மீது பாய்ச்சப்பட்ட பேரொளி.
நன்றி: சிவகுமார் கணேசன், முகநூல்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக