ஆர்.மகாதேவன் பிறந்த தினம் இன்று
ஒரே ஒரு கட்டுரையினால், ஒரே நாளில், தமிழ்நாடெங்கும் பிரசித்தமாகிவிட்டார் தேவன். முதன் முதலில் கையெழுத்துப் பிரதியில் அவர் கட்டுரையைப் படித்தபோது, இவ்வளவு குதூகலத்துடன் குழந்தைகளின் வாழ்க்கையை எழுதும் இந்த ஆசாமி யார் என்று வியப்படைந்தேன். இவரோ, இன்னும் இருபது வயது நிரம்பாத இளைஞர் என்று அறிந்தபோது அளவிலாத மகிழ்ச்சி உண்டாயிற்று. குழந்தைகளின் அற்ப சந்தோஷங்களையும், துக்கங்களையும் மட்டுமல்ல, வயதான மனிதர்களுடைய மகா அற்ப சுக துக்கங்களையும் அவ்வளவு குதூகலத்துடன் எழுதக் கூடியவர் தேவன்" - கல்கி
தேவன் அல்லது ஆர். மகாதேவன் (செப்டம்பர் 8, 1913 - மே 5, 1957) பிரபல நகைச்சுவை எழுத்தாளர். பல நகைச்சுவைக் கதைகளையும் கட்டுரைகளையும் தேவன் என்ற புனைபெயரில் எழுதியவர். துப்பறியும் சாம்பு இவரது பிரபலமான படைப்பாகும்.
தமிழ்நாட்டில் கும்பகோணத்தை அடுத்த திருவிடைமருதூரில் செப்டம்பர் 8, 1913 அன்று பிறந்தார். அவ்வூரில் உள்ள திருவாவடுதுறை ஆதீன உயர்நிலைப் பள்ளில் படித்தார். மகாதேவன், பள்ளியில் சாரணர் படையில் சேர்ந்திருந்ததால், சாரணப்படைத் தலைவராக இருந்த கோபாலசாமி ஐயங்கார், மாணவர்களுக்கு நிறைய சிறுகதைகளைச் சொல்லி, மாணவர்களையும் கதை சொல்லச் சொல்லி ஊக்குவிப்பார். இவர் மூலம் கதை கட்டுவதில் மகாதேவனுக்கு ஆர்வமும் சுவையும் தோன்றியது. கும்பகோணம் அரசினர் கல்லூரியில் பி.ஏ. பட்டம் பெற்றார்
துப்பறியும் சாம்பு
1950-60 களில் துப்பறியும் சாம்புவை தெரியாதவர் தமிழ்நாட்டில் யாரும் இருக்க முடியாது என நினைக்கிறேன். அவ்வளவு பாப்புலர். இப்போது கூட தேவனின் பெயரை வைத்து ஏதாவது பேசினால், துப்பறியும் சாம்பு தேவன்தானே என்று சடக் கென நம் மக்கள் கூறுவர். தேவனின் சித்திரக்கதைகளாக வெளிவந்த 'துப்பறியும் சாம்பு’வை பின்னாளில் 'மோட்டார் சுந்தரம் பிள்ளை’ படத்தில் நாகேஷ் தத்ரூபமாக நமக்கு காட்டினார். அதன்பின் ஏராளமான நாடகங்களில் சாம்புவின் கதை மேடையேறியது. காத்தாடி ராமமூர்த்தி 1980 களில், தொலைக்காட்சி தொடர் மூலம் சிறிது காலத்திற்கு சாம்புவின் புகழை தமிழுலகத்தில் பரப்பினார்.
தலைசிறந்த நகைச்சுவைக் கதையின் நாயகனான 'துப்பறியும் சாம்புவுக்கு தெரியாத கலை ஒன்று உண்டு என்றால் அது 'துப்பறிவதுதான்'. இதுதான் தேவனின் எழுத்து மகத்துவம்.
தேவனே தன் கதாநாயகனான துப்பறியும் சாம்புவை முதலில் எப்படி அறிமுகம் செய்கிறார் - சற்று படியுங்களேன்.
'நாற்பதாவது வயதில் எவனொருவன் முட்டாளாகவே இருக்கிறானோ அவன் ஆயுள் முழுதும் முட்டாளாகவே இருப்பான்' என்று யாரோ -முட்டாள்தனமாக அல்ல- சொல்லிவைத்தார். சாம்புவுக்கு நாற்பது வயது சரியாக ஆகி இருந்தது. அவனை எல்லோரும் பார்த்த மாத்திரத்தில் 'முட்டாள்' என்றார்கள்.
'விளாம்பழம்' பார்த்திருக்கிறீர்களா? கொஞ்சம் பெரிய விளாம்பழத்தை நினைத்துக்கொள்ளுங்கள்; அதுதான் சாம்புவின் தலை. கன்றுக் குட்டிகள் அழகாக காதுகளை முன்புறம் வளைத்துக்கொண்டு பார்க்கும் அல்லவா? அந்த மாதிரி காதுகள்... கண்கள் ஒருமாதிரி அரைத்தூக்கத்தைத் தேக்கிகொண்டிருக்கும். இந்த லட்சணங்களுடன் ஒரு பித்தானில்லாத சட்டை.. ஒரு பழைய கோட்டு, கிழிசல் குடை இவைகளை சேர்த்துகொள்ளுங்கள்.. இதோ சாம்பு பிரத்தியட்சிமாகிவிட்டான்.."
தேவன் இப்படித்தான் ஒரு கதாநாயகனை நமக்கு அறிமுகம் செய்து வைக்கிறார்.. பின்னாளில் ரொம்பவுமே புகழ்பெற்று தன் ஆடை அலங்காரங்களை சற்று மாடர்னாக சாம்பு மாற்றிகொண்டாலும் அவன் முட்டாள்தனம் மட்டும் அவனோடு அப்படியே ஒட்டிகொண்டுவிட்டதை தேவன் அழகாக விவரிப்பார் கதை முழுதும்.
எல்லாமே சின்ன சின்னக் கதைகள். எல்லாமே படிக்கத் தெவிட்டாத தேன் துளிகளைக் கொண்ட கதைகள். ஒவ்வொரு கேஸிலும் சாம்புவுக்கு அதிருஷ்ட தேவதை எப்படியோ சமயத்தில் வந்து உதவுவது நம்பும்படியாகவே அமைத்திருப்பார் தேவன். இது எழுத்தாளரின் சாமர்த்தியம். அந்த சாமர்த்தியத்தை எல்லாக் கதைகளிலும் காண்பித்திருக்கிறார் தேவன்.
'முந்திரிப் பருப்பு - பருப்புத் தேங்காய்' என்றொரு கதை. இதை கல்யாணத்தில் சீர் பட்சணமாக வைப்பது வழக்கம் உண்டு. இந்தப் பட்சணம் என்றால் சாம்புவுக்கு உயிர். ராவ்சாகிப் நடராஜய்யர் வீட்டுக் கல்யாணத்தில் ஒரு தற்காப்புக்காகவும் திருட்டு ஏதும் நடக்காமல் ஜாக்கிரதையாக இருப்பதற்கென்றே சாம்பு வரவழைக்கப்படுகிறான் (சாம்பு உள்ள இடத்தில் திருடன் வரமாட்டானே!) ஆனால் அப்படியும் ஒரு இரட்டை வடம் கடிகாரச் சங்கிலி தவறிவிட்டது. இது சாம்புவுக்கும் அறிவிக்கப்பட்டு விட்டதால் கல்யாண வீட்டார் சற்று நிம்மதியோடு இருக்கிறார்கள்.
ஆனால் சாம்புவுக்கு இந்தத் திருட்டுப் போன பண்டத்தை விட அந்தப் பட்சணத்தின் மீதே ஒரு கண். எப்படியாவது யாருக்கும் தெரியாமல் அந்த முந்திரிப் பருப்புத் தேங்காயை சாப்பிட்டுவிடவேண்டும் என துடியாய் துடிக்கிறான். அதற்கும் சமயம் வாய்த்தது. எல்லோரும் நள்ளிரவு நேரத்தில் சற்று கண் அயர்ந்த சமயத்தில் சாமான் அறையில் வைக்கப்பட்டுள்ள அந்த பட்சணத்திற்காக திருட்டுத் தனமாக உள்ளே நுழைந்து அந்த பட்சணத்தையும் கையில் தொட்டபோதுதான் கல்யாண வீட்டின் ஒரு தூரத்து உறவுக்காரியான தர்மாம்பாள் அவன் கையை பற்றித் தடுக்கிறாள். சாம்புவுக்கு பயம் உண்டாகிறது.
'விடு அதை' தர்மாம்பாள் அதட்டுகிறாள்.
'நீதான் விடு' இது சாம்பு.
இப்படி சண்டை நடப்பதற்குள் பலரும் அங்கு வந்துவிட, அவர்களுள் ஒருவர் அந்த முந்திரிப் பருப்பு தேங்காய் பட்சணத்தில் விரிசல் இருப்பதையும் அதற்குள் அந்த இரட்டை வடம் சங்கிலி பளபளப்பதையும் பார்த்து விட்டு 'ஆஹா! என்ன ஆச்சரியம்! சாம்பு திருட்டுப் பொருளைக் கண்டுபிடித்துவிட்டார்.. இதோ இந்த தர்மாம்பாள்தான் திருடி என்பதையும் கண்டுபிடித்துவிட்டார்' என்றும் கூவுகிறார்.
அதை தர்மாம்பாளும் அழுதபடி ஒப்புக்கொண்டாள். 'நான் யார் பார்க்கப் போகிறார்கள் என்ற தைரியத்தில்தான் நகையைத் திருடி இந்த பட்சணத்தில் வைத்தேன். இந்த சாம்பு அதை எப்படியோ தெரிந்துகொண்டு வந்து பிடித்துவிட்டார்.. அவர் மந்திரவாதியோ..இட்சிணியோ.. என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள்.. இந்த சாம்பு முகத்தில் விழிக்காமல் கொண்டு போங்கள்' ....
-------------------------------------------------------------------------------------
நான் இக்கட்டுரையின் ஆரம்பத்தில் தேவன் எழுத்துக்களைப் பற்றி இங்கே எழுதும்போது 'கோபம் வருகிறது' என்ற கட்டுரையில் ஆரம்பித்தேன்.. இனியும் யாருக்காக கோபம் வந்தால் உடனே தேவனின் 'துப்பறியும் சாம்பு' படியுங்கள்.. கோபமெல்லாம் பறந்துவிடும்.
‘ராஜத்தின் மனோரதம்’ என்ற ஒரு புத்தகம். ஒரு சாதாரண மனிதன் வீடு கட்டுவது எப்படி என்பதை ஒவ்வொரு அங்குலமாக நம் கண் முன்னே அரங்கேற்றியிருப்பார். அற்புதமான எழுத்து.
தேவன் எழுத்துலகில் ஜாம்பவான் என்று சொல்வதற்கு அவரின் எழுத்துத் திறன் மட்டும் காரணம் இல்லை. பத்திரிகை நிர்வாகம், எழுத்தாளர் சங்கத் தலைவர் என்று பல முகங்கள் கொண்டவர். பழகுவதற்கு மிக எளிய மனிதராகவே கடைசி மூச்சு வரை இருந்தார்.. தமிழ் எழுத்துலகம் நிச்சயமாக தேவனால் மிகப் பெரிய புகழ் பெற்றது என்றே சொல்லலாம்.
நன்றி :
முகநூல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக