17 ஜன., 2025

இன்றைய புத்தகம்

*எழுத்தாளர் தோழர் ஜனநேசன் மரணம். ஆழ்ந்த இரங்கல்*.

ஆளுமை - சிறுகதைகள் - ஜனநேசன் - ஒரு பார்வை - பொன். குமார்

சமூகப் பிரச்சனைகளை பேசுவதற்கு மக்களை எடுத்துக்காட்டுவதற்கு சிறந்த வடிவமாக இருப்பது சிறுகதையே. சிறுகதை முயற்சியில் தொடக்கக் காலம் முதல் பல ஆளுமைகள் ஈடுபட்டு வந்தனர். வருகின்றனர். சிலரே தொடர்ந்து இயங்குகின்றனர். கவிதை, கட்டுரை, சிறுகதை, இலக்கியத் திறனாய்வு, தொகுப்பு என பல தளங்களிலும் செயல்பட்டு வருபவர் எழுத்தாளர் ஜனநேசன். அவர் எழுதி சந்தியா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் சிறுகதைத் தொகுப்பு ஆளுமை.

ஆளுமைத் தொகுப்பில் பதினாறு சிறுகதைகள் உள்ளன. முதல் கதை சத்தியம். பேருந்தில் அமர்ந்து பயணிக்கும் பெண்ணிடமுள்ள ஆறுமாத குழந்தையை உதவி செய்யும் நோக்கோடு வாங்கிக் கொள்கிறார். தன் நிறுத்தத்தில் இறங்கிய பெண் குழந்தையிடம் இருந்த மோதிரத்தைத் திருடியதாக புகார் செய்கிறார். போராடியும் பயனில்லை. பின்னாளில் தாயின் முந்தானைக்குள் இருந்ததாக மன்னிப்பு கேட்கின்றனர். இச்சாதாரன கதை மூலம் சத்தியம் வெல்லும் என்கிறார்.

இரண்டாம் கதை கூர்மம் போதும் யோகம். பன்றியை வண்டியில் மோதவிட்டு ராசியில்லை என்று பணம் பறிக்கும் கும்பலை அடையாளப்படுத்தி அது பொய்யென்றும் தெளிவுப்படுத்துகிறது.

" உதவாக்கரையாக இருப்பதை விட செத்துத் தொலை" என்று மனைவி சொன்னது மனத்தில் உறுத்த கவலையுடன் செல்கிறான் ஆறுமுகம். சுனாமி பாதிக்கப்பட்ட குப்பங்களில் சுருட்டுவதற்காக அழைக்கிறான் கலியன். உடன்பாடின்றி உடன் செல்கிறான். கண்டு கொண்ட காவல் துறையினர் உதவிக்கு அழைக்க பிணங்களை குழிகளில் தள்ள பிராயச்சித்தமாக செல்கிறான.  தடுமாறி குழியில் விழ பொக்லைன் தள்ளிய மண் ஆறுமுகத்துக்கு சமாதியாகிவிடுகிறது. பிணங்களுடன் பிணமாகிறான். சுனாமியையும் பொறுப்பற்ற மனிதனையும் வைத்து எழுதப்பட்டுள்ளது. தப்பு செய்தவனுக்கு தண்டனை உண்டு என்கிறது. இந்த மூன்றாம் கதையின் தலைப்பு வக்கற்றதுகள்.

வர்ணம் இத்தொகுப்பின் நான்காம் கதை. வர்ணங்களை வெளுக்கச் செய்கிறது. மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் அழுக்கை போக்கச் செய்கிறது. வயதில் மூத்த வழக்குரைஞர் பிராமணர் இறந்து விடுகிறார். அவருடைய மகன் சடங்கு செய்ய முயலும் போது அவரால் கோவிலுக்குள் அனுமதிக்கப்பட்ட, சமமாக பாவிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் பலர் மகன்களாக இறுதிக் கடமைச் செய்ய மகனும் மனமின்றி விடுகிறான். தீண்டாமைகளுக்கு எதிராக தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஆதரவாக எழுதப்பட்டுள்ளது.

வர்ணம் போலவே தோஷம் கதையும் பிராமண சமூகத்தை வைத்தே எழுதப்பட்டதாகும். ஆனால் இது ஜாதகம் பொய் என்கிறது. தோஷம் இல்லை என்கிறது. செவ்வாய் தோஷம் இருப்பதாக காயத்ரியை மணமுடிக்க எவரும் முன்வரவில்லை. ஆனால் அவள் வெளிநாடு சென்று தனக்கு வழிகாட்டியாக இருந்த ராஜா முகமதுவை மணம் முடித்துக் கொள்கிறாள். இப்போதும் தேசம் மாறினால் தோஷம் பலிக்காது என்கிறது பிராமண சமூகம். மூடநம்பிக்கைக் கூடாது என்பது கதையின் கரு.

மதங்களைக் கடந்து இருப்பது மனித மனம். அத்தகைய மனித மனம் எப்படி பட்டது என சொல்லும் கதை பலி. இந்து முஸ்லிம் என்னும் இரு குடும்பங்கள் ஒற்றுமையாய் இருக்கும் சூழ்நிலையில் அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட செய்தி இடியாக இறங்கி இதயங்களைத் தாக்குகிறது. மதவாதிகளுக்கு எச்சரிக்கை. 

பலிக் கதையைப் போலவே நன்னயமும் ஒரு நல்ல கதை. இந்து முஸ்லிம் ஒற்றுமையை வலியுறுத்துகிறது. கலவரம் வேண்டாம் என்கிறது.

குழந்தையிடம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டுமென்கிற சகிப்பு. பெற்றோருக்கு அறிவுரை. சகிப்புத் தன்மை அவசியம் வேண்டும் என்கிறது. 

குழந்தை பிறக்கும் நேரமே நல்ல நேரம். ஆனால் நல்ல நேரத்தில் குழந்தையை மறக்கச் செய்து தாய், சேய் இருவருக்கும் கெடுதல். இயற்கைப் பிரசவமே நன்று. செயற்கையாக பிறப்பிப்பது காயைக் கனியாக்குவதற்கு சமம். ஆளுமை என்னும் இத்தொகுப்பில் ஆளுமை நல்ல நேரத்தில் பிறப்பிக்கச் செய்வது கெட்டதே என்கிறது.

எதிர் வீட்டில் இருக்கும் பெண்ணை பார்க்கிறான். ஆனால் அவள் புறக்கணிக்கிறாள். அவள் கணவனுக்கும் தெரிந்து விடுகிறது. வக்கிர எண்ணங்களை விலக்க அவனுக்குள் ஒரு போராட்டமே நடக்கிறது. இந்நிலையில் அவள் தீக்குளிக்க முயல்கிறாள்.காரணம் மாமியார். எல்லோரும் தயங்க அவளைத் தூக்கி வண்டியில் ஏற்றி தலையை மடியில் கிடத்திக் கொண்டான். தற்போது அவன் மனத்துக்குள் அழுக்கு எதுவுமில்லை. மோசமாக பார்த்தவர்கள் மரியாதையுடன் பார்ப்பதாக கதை முடிகிறது. கதைத் தலைப்பு புடம். குறியீடாகக் கையாளப்பட்டுள்ளது புடம். தங்கம் போலவே மனிதருக்கும் புடம் அவசியம் என்கிறார். மனிதரும் தங்கமும் ஒன்றா? 

நெசவு தொழில் பாதிக்கப்பட்டு வறுமையில் சிக்கிய நெசவாளர்கள் கிட்னி விற்ற அல்லது அவர்களிடமிருந்து கிட்னி திருடிய செய்திகள் சமீபமாக செய்தித் தாள்களிலும் மற்ற ஊடகங்களிலும் வெளியாயின. இதை மையப்படுத்தி எழுதியது தறிகெடதோம். இடைத்தரகர்களை நம்பி ஏமாந்ததாக கதையை அமைத்துள்ளார். இதனால் நெசவாளர்கள் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இக்கதை மீண்டெழுதல் தொகுப்பில் எழுதியுள்ள மீண்டெழுதல் என்னும் கதையை நினைவூட்டியது. 

குடிகார அப்பனுக்குப் பிறந்து அவராலேயே எரிக்கப்பட்ட ஒரு பெண்ணின் கதையைக் கூறும் கதை நவாப்பழம். ஐந்தாம் வகுப்புடன் படிப்பு நிறுத்தப்பட்டு ஆடு மேய்க்க அனுப்பப்படுகிறாள். பின்னர் ஒரு குடிகாரனுக்கு மணமுடிக்க அப்பன்  முயல மறுக்கிறார். முடிவில் அப்பன் மகளை எரித்துக் கொண்டு விடுகிறான். குடிகாரர்களால் குடும்பம் சீரழிவதைக் காட்டியுள்ளார். நவாப்பழத்தை ஒட்டியே கதையை நகர்த்திச் சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

நம்பிக்கை ஏற்படுத்தும் கதை ஒளிமயம். பார்வையுள்ளவன் ஏமாற்றி பிழைக்க பார்வையற்றவன் நாணயமாக லாட்டரி சீட்டு விற்று பிழைப்பு நடத்துகிறான். அரசு லாட்டரிக்கு தடைவிதிக்கிறது. மனைவியின் முயற்சியால் தனக்குள்ள ஆர்மோனியம் வாசிக்கும் திறமை கொண்டு ஓர் இசைக்குழுவை அமைத்துக் கொள்கிறான். அரசுக்கு எதிராகவும் குரல் கொடுத்துள்ளார்.

நன்றி இத்தொகுப்பில் மிக நல்ல கதை. கார்கில் போரில் உயிரை இழக்கிறான் இராணுவ வீரன் நடராஜன். அவனின் முதலாமாண்டு நினைவஞ்சலியன்று இராணுவத்திற்கு சவப்பெட்டி வாங்கியதில் ஆயிரம் கோடி ஊழல் என்னும் செய்தி வெளியாகிறது. கார்கில் போரையும் சவப்பெட்டி ஊழலையும் இணைத்து ஓர் அருமையான கதையைத் தந்துள்ளார். அரசியலையும் அரசியல்வாதிகளையும் சாடுகிறது. 

வறுமையினால், வறட்சியால் கெட்டு பட்டணம் சேர்ந்த ஒரு குடும்பத்தை வாழ வழிகாட்டிய ஓரிளஞனை அடையாளப்படுத்துகிறது ஜீவனம் என்னும் கதை. இளைஞர்களுக்கு ஒரு வழிகாட்டி.

ஆடுடா ராமா ஆடு என்பது இத்தொகுப்பின் இறுதிக்கதை. சற்றே வித்தியாசமானது. நேரடியாக கூறாமல் பூடகமாக கூறியுள்ளார். அடிமை வாழ்வு புது வடிவம் தொடர்கிறது என்கிறார். ஆட்சியாளர்களை மறைமுகமாகச் சாடியுள்ளார். தாத்தா குழந்தைகளுக்கு கதைக் கூறுவதாக கதையைக் கதாசிரியர் கூறியுள்ளார்.

ஆளுமையிலுள்ள ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். வெவ்வேறு களம். சாதாரண கதைகளும் உண்டு. அசாதாரண கதைகளும் உண்டு. கதைகளில் முற்போக்குச் சிந்தனைகளே முன்னிற்கின்றன. மூடநம்பிக்கையைத் தகர்க்கின்றன. அடித்தட்டு மக்களின் வாழ்வைப் பேசுகிறது. முன்னேற வழிவகுக்கிறது. வலியுறுத்துகிறது. செய்திகளையும் வைத்து நன்றாக கதையை உருவாக்கியுள்ளார். பதினாறு கதைகளையும் எழுத எடுத்துக் கொண்ட காலம் ஏழு ஆண்டுகள். நீண்டக் காலம் என்பதால் கதைகளுக்கிடையே ஒரு துண்டிப்பு தெரிகிறது. கதை சொல்லும் முறையில் ஓர் எளிமைத் தெரிகிறது. நேரடி கதைக்கூறும் தன்மை ஒரு நெருக்கத்தை ஏற்படுத்துகிறது. தலித்தியம், பெண்ணியம் என பல இயங்களுக்கும் ஆதரவான குரல் கதைகளில் வெளிப்பட்டுள்ளன. அரசின் மீதும் அதிகாரத்தின் மேலும் கோபத்தைக் காட்டியவர் மனித நேயத்தைத் தொகுப்பெங்கும் பரப்பியுள்ளார். ஆளுமை என்னும் இத்தொகுப்பு ஜனநேசன் என்னும் எழுத்தாளரின் ஆளுமைக்குச் சான்று.

வெளியீடு 
சந்தியா பதிப்பகம் சென்னை 

நன்றி : புதிய புத்தகம் பேசுது