டாக்டர் மு.ராஜேந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
டாக்டர் மு.ராஜேந்திரன் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 செப்., 2021

நூல் மயம் : 1801 - டாக்டர் மு.ராஜேந்திரன்

1801-டாக்டர் மு.ராஜேந்திரன்
பக்கங்கள்:541
எழுத்தாளர்:-

இவர் ஒரு மாவட்ட ஆட்சியாளர். வேலையிலிருக்கும் போதே இந்திய வரலாறு குறித்த ஆய்வுகளில் ஈடுபட்டவர். ஆட்சியர் தேர்விற்காக வரலாற்றை ஒரு பாடமாக எடுத்துப் பயின்றவர். இதன் பின் இவரது முழு கவனமும் வரலாற்றின் பக்கமே திரும்பியது. மலேசியாவின் தேசிய நிலநிதிக் கூட்டுறவுச் சங்கத்தின் டான் ஸ்ரீ கே.ஆர்.சோமா மொழி இலக்கிய அறவாரியம், அனைத்துலகத் தமிழ் நூல் போட்டியை நடத்தியது. அதில் இந்நூலைச் சிறந்த நூலாக தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசு கிடைத்தது.

இவரின் பிற நூல்கள்:-

1 சோழர்கால செப்பேடுகள்

2 பாண்டியர்கால செப்பேடுகள்

3  சேரர்கால செப்பேடுகள்

4  பல்லவர்கால செப்பேடுகள்

5 சட்ட வல்லுநர் திருவள்ளுவர்

6  வடகரை- ஒரு வம்சத்தின் வரலாறு

7  பாதாளி (சிறுகதைகள்)

8   வந்தவாசி போர்-250

புத்தகம்:-

                இந்த போட்டியில் கலந்துகொண்டபின் நான் வாசிக்க அதிக காலம் எடுத்த புத்தகம் இது. வேலை மற்றும் புத்தக தன்மையே அதன் காரணம். வரலாற்றுத் தகவல்களைக் கொண்டு புனைந்துள்ள நாவல்கள் அதிகம் படித்ததுண்டு. ஆனால் வரலாற்றையே நாவலாகப் படிப்பது என்பது மிகக் கடினம். இந்நாவலில் ஒவ்வொரு வார்த்தையும் ஒரு தகவலே.

     இந்த புத்தகம் 1801-ம் ஆண்டு நடந்த வரலாற்று நிகழ்வு. இந்தியாவில் நிகழ்ந்த முதல் சுதந்திரப்போராட்டமாகச் சிப்பாய் கலகம் வரலாற்றில் உள்ளது. ஆனால் அதற்கும் முன்னரே மக்களைத் திரட்டி மக்கள் போராட்டமாக முன்னெடுத்ததில் தென்னிந்தியாவுக்கு அதிக பங்குண்டு என்பதைப் பதிவு செய்வதே இந்நாவல்.

     பள்ளி காலங்களில் சிறு பகுதிகளாக வீரபாண்டிய கட்டபொம்மனும், ஊமைத்துரையும், செவித்தையாவும், மருது சகோதரர்களும் வந்து போவார்கள். ஆனால் அவற்றில் சுருங்கிப்போவதல்ல அவர்களின் வீரமும் புகழும்.

     ஊமைத்துரையைத் தெரிந்தவர்களுக்கு ஊமைத்துரையின் இயற்பெயர் குமாரசுவாமி என்பது தெரியவாய்ப்பில்லை. இந்த புத்தகத்தில் ஒவ்வொரு உறவு முறையும், போராடிய போராளிகளின் பெயரும் ஆசிரியர் நிறையத் தேடிப் பகிர்ந்துள்ளார். ஆங்கிலேயத் தளபதிகளின் பெயர்கள், விடுதலை போராளிகளின் பெயர்கள் அவர்களின் வரலாறுகள் புத்தகத்தின் கடைசி சில பக்கங்களில் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது.

 

     1800 மே மாதம் ஆரம்பிக்கும் இந்நாவல் ஊமைத்துரை மற்றும் சிவத்தாவின் சிறையில் இருந்து ஆரம்பிக்கிறது. அவர்களைச் சின்ன மருது சிறையிலிருந்து மறைமுகமாக மீட்டு வருகின்றார். அதே நேரம் ஆங்கிலேயர்களுடன் விரோதத்தை வளர்க்காமலும் இருக்கின்றார். சிவகங்கை, இராமநாதபுரமே இந்நாவலின் கதைக்களங்கள்.

     பின்னர் ஆங்கிலேயருடன் மோதல் ஏற்பட்டு இறுதியில் மருது சகோதரர்கள் மற்றும் அவருக்கு உதவி செய்தவர்கள், மருது சகோதரர்களின் பிள்ளைகள் அனைவரையும் தூக்கிலிடுகின்றனர்.

     ஆங்கிலேயர்கள் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றவும், மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தவும் திருச்சி முதல் திருநெல்வேலி வரை 72 பாளையமாகப் பிரித்து வைத்திருந்தார்கள்.

     இந்திய அடிமைப்பட முக்கியக்காரணம் துரோகம். வீரமின்றி தோற்றவர்களைத் துரோகத்தில் வீழ்ந்தவர்களே அதிகம் நம் வரலாற்றில். ஆங்கிலேயர்கள் நம்மிடமிருந்து அவர்கள் முதலில் கண்டுபிடித்தது இந்த சூட்சமத்தை தான். வெள்ளைகரார்களின் படையில் வீரர்களை உருவாக்குவதை விட அவன் செய்த முதல் வேலை எதிரிப் படையில் துரோகிகளை உருவாக்குவது. முதன் முதலாக ராபர்ட் கிளைவ் இந்தியாவில் கிழக்கிந்திய கம்பெனி இந்திய அரசர்களுடனான போர்களில் ராபர்ட் கிளைவ்யின் உடன்படிக்கைகள் அந்த நாட்டு தளபதியோடு அல்லது அரசர்களுக்கு அடுத்தபடியான அதிகாரமுடையவர்களுடனாகதான் இருக்கும். மருது சகோதரர்களைக் கைது செய்ய அவர்கள் பயன்படுத்திய ஆயுதமும் துரோகம்தான், அது “கருத்தான்” என்னும் பெயரிலிருந்தது.

     இந்த புத்தகத்தின் முடிவில் சின்ன மருதுவின் மகன் துரைசாமி 12வயதில் நாடுகடத்தப்படுகிறார். அவர்தான் வேலு ராமமூர்த்தி அவர்கள் எழுதிய “பட்டத்து யானை” யில் வரும் இராணா சிங்கமா?  தெரிந்தவர்கள் தெளிவுபடுத்தினால் சிறப்பாக இருக்கும்.

     இந்த புத்தகத்தின் இறுதி பக்கங்களைப் படிக்கும் போது அந்நிகழ்வு நியாபகத்தில் வந்ததால் என் சந்தேகம், அவ்வளவுதான்.

நன்றி :