சூரியின் டைரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சூரியின் டைரி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

30 டிச., 2015

சூரியின் டைரி-66: CREATE PUBLIC AWARNESS Group in my Facebook

எனது முகனூல் பக்கத்தில் புதிதாக ஒரு குழுவை ஆரம்பித்துள்ளேன். இதன் நோக்கம் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்பது. எனவே இதற்கு CREATE  PUBLIC  AWARNESS  என்று பெயர் சூட்டி நிறைய அரசு, அரசு அலுவலர்களின் மெத்தனப்போக்கினால், அலட்சியப்போக்கினால், மக்களின் அறியாமையால் நடைபெறும் கொடுமைகள் பற்றி பதிந்துவருகிறேன். 

நல்லதொரு மாற்றம் நிகழ, முதற்படி விழிப்புணர்வு. விழிப்புணர்வு ஏற்பட்டபின் செயல்படும் உத்வேகம் பிறக்கவேண்டும். செயல்படாமல் எந்த மாற்றமும் நிகழப் போவதில்லை.  

சென்னை  நகரம் வெள்ளத்தில் மூழ்கி பட்ட அவஸ்தையை நேரடியாகவோ, டிவி மூலமாகவே, செய்தித்தாட்கள் மூலமாகவோ அனைவரும் பார்த்திருக்கலாம். 

வருடாவருடம்  நிகழும் இந்த அவஸ்தை பற்றி போதிய ஏரி குளங்களை தூர்வாறி, கரைகளை உயர்த்தி, மழை நீர் வடிகால்களை சீரமைக்காததாலும் மக்கள் பட்ட துயர், வீணான குடிநீர், பொதுச் சொத்து மற்றும் தனிப்பட்ட இழப்பு சொல்லிமுடியாது. 

தனிப்பட்ட நபர்களை தாக்காமலும், அரசியல் வாடை வீசாமலும், எச்சரிக்கையுடன் செயல்படுகிறேன். அது மட்டுமல்ல, ஒரேயடியாக எதிர்மறையாக இல்லாமல், சில மக்களுக்குப் பயன்படும் நல்ல செய்திகளையும் பகிரிந்து கொள்கிறேன்.

21 ஜன., 2013

சூரியின் டைரி-65: தென்றலாய் வருடியவை - நீதியே மன்னவன் உயிர் நிலை


சூரியின் டைரி-65: தென்றலாய் வருடியவை - நீதியே மன்னவன் உயிர் நிலை

இனிய உதயம் மாத இதழை பல ஆண்டுகளாக நான் வாங்கிப் படித்து வருகிறேன்.  இதில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பேட்டி.  படைப்பாளிகளுடனான ஆழமான, விரிவான பேட்டி வேறு எந்த இதழிலும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்.  தற்போது இந்த இதழில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2013 ஜனவரி இதழில் புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதியுள்ள “புதுமை வேட்டலா? புரட்டு வித்தையா?” என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. 

நாளிதழ் ஒன்றில் யாரோ எழுதிய சிலப்பதிகாரம் காலத்திற்கு ஏற்றதாக இல்லை, சிலம்பின் பேருண்மைகள் நிலயல்ல என்று எழுதியுள்ளார். அதை மறுத்து மிகத் தெளிவாக, மேற்கோள்களுடன் சிலப்பதிகாரத்தின் சிறப்பினை அற்புதமாக நிலை நாட்டியுள்ளார்.  இது தமிழார்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.

ஆய்வு என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதுவது தற்போது வழக்கமாகி விட்டது.

இந்தக் கட்டுரையிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு பகுதியினை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.  மீண்டும் கேட்டும் கொள்கிறேன்.  இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள்.

...
நமது இலக்கியங்கள், காப்பியங்கள் , நீதி நூல்கள்  அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த, சீர்மை செய்திடவே படைக்கப் பட்டவையாகும்.

‘அல்லவை செயார்க்கு அறங்கூற்றாதல்’;  என்றும் அறத்தின் மீது, எல்லாக் காலத்திலும் ஆள்வோர்க்கு அச்சம் இருந்திட வேண்டும்.  அஃது இல்லாமல் போனதால்தான் இன்றைய அரசியலில் அவலங்கள், அநீதிகள், அக்கிரமங்கள், அயோக்கியத்தனங்கள் அரங்கேறுகின்றன.

தவறிழைத்த பாண்டியனைக் கண்ணகி தண்டிக்கவில்லை; யாரும் கொலை செய்யவில்லை. நீதியை – அறத்தை உயிராகக் கொண்டவன் அவனாதலின் நீதி தவறினோம் என்று உணர்ந்தவுடன், அக்கணமே உயிர் பிரிந்தது. மிகவுயர்ந்த சாவு இது. நீதியே மன்னவன் உயிர் நிலையாயிற்று.

‘வல்வினை வளைத்த கோலை மன்னவன்
 செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது’

என்றார் இளங்கோ.

கண்ணகியும் காப்பிய நிறைவுக்குமுன், வாழ்த்துக் காதையில்,

‘தென்னவன்  தீதிலன் தேவர்கோன்  தன்கோவில்
 நல்விருந்தாயினன்  நானவன்  தன் மகள்’

என்று சான்றளிக்கிறார்.


புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

‘இனிய உதயம்’  மாத இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்



15 ஜன., 2013


சூரியின் டைரி-64: தென்றலாய் வருடியவை – வணக்கத்திற்குரிய வாத்தியார்!

ஆனந்தவிகடன் 2013 ஜனவரி இரண்டாம் நாள் இதழில் வெளியான “2012 டாப் 10 மனிதர்கள்” பகுதியிலிருந்து:

தடகள விளையாட்டுகளில், தமிழ் வீரர்களைச் சர்வதேச உயரத்துக்கு இட்டுச்செல்லும் ஏகலைவன், சென்னையைச் சேர்ந்த நாகராஜ்.  கேரள அரசின் கோடிக்கணக்கான நிதி உதவியுடன் செயல்படும் பி.டி.உஷா அகாடமியில் இருந்து, இதுவரை உருவானது இரண்டு சர்வதேசத் தடகள வீரர்கள் மட்டுமே.  ஆனால், எந்த அரசு உதவிகளும் இல்லாமல், நாகராஜ் இதுவரை 24 சர்வதேச வீரர்களை உருவாக்கி இருப்பது மகத்தான சாதனை. அதில் 14 பேர் சர்வதேச சாம்பியன்கள். 100க்கும் அதிகமானோர் தேசியத் தடகள சாம்பியன்கள்.  இவை அனைத்தையும் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், தேசத்தின் மீதும், விளையாட்டின் மீதும் உள்ள காதலால் செய்கிறார் நாகராஜ்.  மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு அலைந்து திரிந்து, தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து வந்து, பயிற்சி அளிப்பதை, கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தவம் போல் செய்து வரும் நாகராஜின் கனவு, தமிழ் நாட்டில் இருந்து பல ஒலிம்பிய்ன்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். நடக்கும் நாகராஜ்!


திரு நாகராஜிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

ஆனந்தவிடனுக்கும் மனமார்ந்த நன்றிகள்

14 ஜன., 2013

சூரியின் டைரி-63: கவலை தருபவை – செல்போன் மற்றும் கணினிக் கழிவுகள்


சூரியின் டைரி-63: கவலை தருபவை –   செல்போன் மற்றும் கணினிக் கழிவுகள்

ஆனந்தவிகடன் 2013 ஜனவரி ஒன்பதாம் நாள் இதழில் மருத்துவர் கு.சிவராமன் அவர்கள் மிகச் சிறப்பாக எழுதிவரும் தொடர்கட்டுரை “ஆறாம் தினையிலிருந்து” ஒரு பகுதி மட்டும்:

பனை ஓலையில் இருந்து, காகிதத்தில் எழுதுவதை எதிர்ப்பது மடமை.  காகிதத்தினால் அழியும் காடுக்ளைப் பார்த்து, கணினி உபயோகத்திற்கு மாறுவதை குறை சொல்வது முட்டாள்தனம்.  ஆனால், ரோஜாப்பூ சேலைக்குப் பொருத்தமாக சிவப்பு நிற செல்போன், கறுப்பு ஜீன்ஸுக்குப் பொருத்தமாக மஞ்சள் நிற லேப்டாப் என ஹேர்பின், ரிப்பன் போல வருடத்துக்கும் ஒரு மின்சாதனப் பொருள் என நுகர்வதால் குவியும் கணினிக் கழிவுகளைக் கண்டிப்பாக எதிரிக்கத்தான் வேண்டியிருக்கிறது.

அந்தக் கழிவுகள் அனைத்தும் மண்ணுக்குத்தான் செல்கிறது.  கொஞ்ச நஞ்சம் அல்ல... கிட்டத்தட்ட 8,000 டன் ‘பயன்படுத்து, தூர எறி’ எனும் புதிய வணிகச் சித்தாந்தத்தில் அமெரிக்கா மட்டும் 3 மில்லியன் டன் கணினிக் கழிவைப் பூமியில் கொட்டுகிறது.  உலகத்தின் குப்பைக்கூடமாக ஆகி வருவது இந்தியாவும், சீனாவும்தான்.  ஈயம், செம்பு, பாதரசம், பல்லாடியம், கோபால்ட்... கலந்து கொட்டப்படும் இந்தப் பேசாத செல்போன் கழிவுகள் பூமித்தாய்க்குச் செரிக்காது தோழா!

விதை மட்டும் அல்ல, கணினி துவங்கி சலவை சோப் வரை எந்தப் பொருளையும், அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டது என்று சொல்லியோ, சந்தைக்குப் புதிது என்றோ விற்பனைக்கு வரும் எதையும் உபயோகிக்கும் முன்னர் ஒரு முறைக்கு மூன்று முறை சிந்தியுங்கள் நண்பர்களே!

சில புதுசுகளைக் காட்டிலும், பல பழசுகள் பாதுகாப்பானவை. அறிவியல் என்பது புதுமையில் மட்டும் இல்ல, பழ்மையிலும் உறைந்து இருக்கிறது.


நன்றி: மருத்துவர் சிவராமன் மற்றும் ஆனந்தவிகடன்

12 ஜன., 2013

சூரியின் டைரி-62: தென்றலாய் வருடியவை – டாக்டர் வர்கீஸ் குரியன்


சூரியின் டைரி-61: தென்றலாய் வருடியவை – டாக்டர் வர்கீஸ் குரியன்

டாக்டர் வர்கீஸ் குரியன் தனது 90வது வயதில் காலமானபோது, உயிர்மை 2012 டிசம்பர் மாத இதழில், ஷாஜி எழுதிய “பால் வீதியில் ஒரு பயணம்” என்ற அஞ்சலிக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் புகழ்கொண்ட அமுல் என்ற வணிகப் பெயரையும், அதன் வணிக சாம்ராஜ்யத்தையும் 63 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தில் உருவாக்கி வளர்த்தெடுத்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன்.  அமுல் என்றால் ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்று பொருள் (Anand Milk Union Limited). உருவாகி சில மணி நேரத்திற்குள்ளேயே கெட்டுப் போகக்கூடிய ஒரு பொருளை வைத்துக்கொண்டு பலகோடி மக்களின் ஏழ்மையை, ஒரு தனிமனிதனால் எப்படித் தீர்க்க முடியும் என்பதற்கு உலகில் இருக்கும் ஒரே உதாரணம், டாக்டர் வர்கீஸ் குரியந்தான்!  ஒரு தனிமனிதனால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்க முடியும் என்று நிரூபித்த ஒரே இந்தியரும் அவர்தான் என்று திட்டவட்டமாகச் சொல்வேன்.

டாக்டர் வர்கீஸ் குரியன் அமுலின் உரிமையாளரோ, முதலீட்டாளரோ ஆக ஒருபோதும் இருந்தவரல்ல.  ஒரு அரசு ஊழியராக இருந்துகொண்டே ஒரு சமூகத் தொழில் முனைவராக அவர் முன்வந்தபோது நிகழ்ந்த அதிசயம்தான் அமுல்!  அமுல் ஒரு மாபெரும் கூட்டுறவு சங்கம்! 16,200 கிராமிய கூட்டுறவ் சங்கங்களின் கூட்டமைப்பு அது. 32 லட்சம் பொதுமக்கள்தான் அதன் உரிமையாளர்கள்!  ஆண்டில் 12,000 கோடியின் மொத்த விற்பனையுடன், பாலையும், பால் பொருட்களையும் பதப்படுத்தி விற்கும் உலகின் தலைசிறந்த நிறுவனமாக இன்று அமுல் திகழ்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தொடங்கி வெண்ணெய், குழந்தைகளுக்கான பால் சத்துணவுகள், பால் கட்டி, பால் பொடி, தயிர், நெய், பாலாடை, பனிக்கூழ், பால் குளிர்பானங்கள், ஆரோக்கிய பானங்கள், உறைவிக்கப்பட்ட பால், பால் மொரப்பா, பால் அடிப்படையிலான பலகாரங்கள் மற்றும் மிட்டாய்கள் போன்றவற்றின் உற்பத்தியிலும் விற்பனையிலும் அமுலுக்கு நிகராகயிருக்கும் நிறுவனங்கள் உலகில் குறைவே.  அமுலில் டாக்டர் வர்கீஸ் குரியன் ஆரம்பித்த ‘செயல் பெருவெள்ளம்’ (Operation Flood) திட்டத்தின் வாயிலாகத்தான் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் உருவானது.  அதனூடாக உலகில் மிக அதிகமாகப் பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியது!

உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கான மிகக்குறைந்த காரணங்களில் ஒன்று!  எல்லாமே டாக்டர் வர்கீஸ் குரியனின் சாதனைகள்.  மாத சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரின் அன்றாட வேலைகளின் பகுதியாக நினைத்துக் கொண்டே இதையெல்லாம் செய்து முடித்தார் அவர்!


நன்றி : திரு ஷாஜி மற்றும் உயிர்மை மாத இதழ்

11 ஜன., 2013

சூரியின் டைரி-61: நோகவைத்தவை - காவிரிப் பிரச்னை


சூரியின் டைரி-61:  நோகவைத்தவை - காவிரிப் பிரச்னை

குமுதம் தீராநதி 2013 ஜனவரி இதழில் வெளியான செ.சண்முகசுந்தரம் எழுதிய “வறண்ட காவிரியில் தொலைந்த மனிதம்” என்ற மிகச் சிறப்பான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:
----------

காவிரி டெல்டா மாவட்டங்களில் அடிப்படை வாழ்வாதாரம் சீர்குலைவுக்கு ஆளாகத் தொடங்கி பல்லாண்டுகளாகி விட்டன.  தொடர்ச்சியான நதிநீர்ப் பிரச்னை.  தமிழ் நாட்டை மாறி மாறி ஆண்டு கொண்டிருக்கும் கட்சிகளின் உதாசீனம், பாசனக் கட்டமைப்புகளை வலுப்படுத்தாமல் வைத்திருக்கும் போக்கு, விளை நிலங்களை விரைவாக சாப்பிட்டுக் கொண்டிருக்கும் ரியல் எஸ்டேட்.  வேறு வேலை வாய்ப்புகளைத் தேடி இடம் பெயரும் டெல்டா விவசாயத் தொழிலாளர்கள், விளை நிலங்களை மனைகளாக வாங்கிப் போட்டு விட்டு சாப்பாட்டுக்கு மைசூர் பொன்னியை எதிர்பார்க்கும் நடுத்தர வர்க்கத்தினர், விவசாயிகளை புழுப்பூச்சிகளைப் போல் பார்க்கும் அரசு, வங்கி அதிகாரிகள், பிரச்னை வந்தால் மட்டுமே அது பற்றி சிந்தனை கொள்ளும் தமிழக, கர்நாடக ஆளும் வர்க்கங்கள், இரு மாநிலங்களிலும் மக்களை உசுப்பிவிடும் சுய நலக் கட்சிகள், மௌனமாகிப் போன மனசாட்சி கொண்ட இரு மாநில மக்கள், வேடிக்கை பார்க்க்கும் மத்திய அரசு, தனது அதிகாரம் வெற்று வேட்டாகிப் போவதை இயலாமையுடன் நோக்கும் உச்ச  நீதி மன்றம், களவாடப்படும் குளங்கள், ஏரிகள்.  யாரிடம் போய் முறையிடுவது?

....

பாமணி ஆற்றில் தண்ணீர் வந்து, தம்மங்குறிச்சி வாய்க்காலில் மோட்டார் போட்டு இறைத்துவிட்டு, அதன் நான்கு கிலோமீட்டர் தொலைவுள்ள மருதங்காவெளியின் வானம் பார்த்த பூமிக்கு கொண்டு வந்து, இரவில் வாய்க்கால் வரப்பில் படுத்து, பாம்புகளுடன் பழகி, சொற்பத்தண்ணீரையும் வயலுக்குப் பாய்ச்சிய அனுபவங்கள் என்  நினைவில் நிழலாடுகின்றன. சமீபத்தில் அப்பகுதிக்குச் சென்றிருந்தபோது, அவ்விளை நிலங்கள் எல்லாம் ரியல் எஸ்டேட் மனகளாயிருந்தன. வாய்க்கால் தூர் வார வராத அதிகாரி அவ்விளை நிலங்களை அளந்து மனைக் கற்கள் போட ஓடோடி வருகிறார்.  என்ன தேசம் இது?


நன்றி: திரு செ.சண்முகசுந்தரம் மற்றும் குமுதம் தீராநதி 

10 ஜன., 2013

சூரியின் டைரி-60: தென்றலாய் வருடியவை - குப்பை கிடங்குகளாய் மாறிய ஏரிகளைச் சீரமைத்த அருண் கிருஷ்ணமூர்த்தி


சூரியின் டைரி-60: தென்றலாய் வருடியவை – குப்பை கிடங்குகளாய் மாறிய ஏரிகளைச் சீரமைத்த அருண் கிருஷ்ணமூர்த்தி

தினமலர் மதுரைப் பதிப்பு ஜனவரி ஒன்பதாம் நாள் இதழிலிருந்து:

சிறுவயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும்.  சென்னை கீழ்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன.  பின் குப்பைக் கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது.  நன்கு படித்து, கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தேன். 

வேலை பார்க்கும் போதே ஆந்திராவின் குருனாதன் செருவு ஏரி, சென்னையின் லக்ஷ்மி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு சீரமைத்தேன்.  ஆர்வத்தால் கூகுள் நிறுவ்ன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். 
....
ஏரிகளை சீரமைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின. 

விருதிற்கான பணத்திற்குப் பதில், கீழ்கட்டளை ஏரியை ம்றுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கக் கேட்டேன்.  நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது.  விரைவில் பணி துவங்கும்.  மொபைல்: 9940203871


மனமார்ந்த பாராட்டுக்கள்: திரு அருண் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு
நன்றி:  தினமலர் நாளிதழ் 

8 ஜன., 2013

சூரியின் டைரி-59: நோக வைத்தவை


சூரியின் டைரி-59:   நோக வைத்தவை

ஆனந்த விகடன் டிசம்பர் இருபத்தாறாம் நாள் இதழின் தலையங்கத்திலிருந்து ஒரு பகுதி:

வெளி நாட்டு வியாபாரி... உள் நாட்டு துரோகம்!

அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சிக்காகவும் அங்குள்ள வியாபார நிறுவனங்களின் முன்னேற்றத்திற்காகவும் ‘லாபி’ செய்வதற்கென்றே அங்கு ‘லாபியிஸ்ட்கள்’ இருக்கிறார்கள். அந்த நாட்டின் அதிபிரம்மாண்டமான சில்லறை வர்த்தக நிறுவனங்கள் மட்டுமல்ல... கம்ப்யூட்டர் நிறுவனங்களும், பிரபல மருத்துக் கம்பெனிகளும்கூட இந்தியச் சந்தையை ஆக்கிரமிப்பதற்காக, பணத்தை இறைத்து ‘லாபி’ செய்திருக்கும் செய்தி, அமெரிக்க நாடாளுமன்றத்தில் இருந்தே ஆதாரபூர்வமாக வெளியாகி இருக்கிறது.

இதில், இந்திய நாட்டின் ஆட்சி அதிகாரத்தில் உள்ளவர்களைக் ‘குளிரிவிப்பதற்கான’ செலவும் அடங்குமா என்பதுதான் இப்போதைய கேள்வி.

....

ஆண்டாண்டு காலமாக அந்நியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்துவிட்டு, சுய உழைப்பாலும், மூலதனத்தாலும் பல இந்தியக் குடிமக்கள் சொந்தமாக வியாபாரம் பார்க்கத் தலைப்பட்டு இருக்கும் இந்த நேரத்தில் மறுபடியும் அவர்களை எல்லாம் அடிமைகள் ஆக்குவதற்கான அத்தனை ஏற்பாடுகளையும் மத்திய் அரசு செய்கிறது என்பதுதான் வலிமிக்க நிஜம்.

அமெரிக்க ‘லாபி’ செலவில், இந்தியாவுக்குள் அளிக்கப்பட்ட லஞ்சமும் உண்டா?  இதற்கு, வழக்கமான வழுக்கல் பதிலைத் தந்துள்ளது காங்கிரஸ்.  ‘அப்படி எல்லாம் இருக்காதாம்.’  ஒருவேளை இருந்து விட்டால், ‘சட்டம் தன் கடமையைச் செய்யுமாம்!’  நாட்டை ஏலம் விடும் ‘மொத்த வியாபரிகள்’ சிக்கல் வ்ந்தால் சொல்லும் கெட்ட வார்த்தை அல்லவா இது!

....

நன்றி:  ஆனந்தவிகடன்







7 ஜன., 2013

சூரியின் டைரி-58: குமுற வைத்தவை: விலைவாசி ஏன் உயர்கிறது?


சூரியின் டைரி-58:  குமுற வைத்தவை: விலைவாசி ஏன் உயர்கிறது?

ஆனந்தவிகடன் டிசம்பர் இருபத்தாறு இதழில் டி.எல்.சஞ்சீவிகுமார் எழுதிய “வந்தே விட்டது வால்மார்ட்” என்ற கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்:

இன்று பொருட்களின் விலைவாசி அதிகரித்துக்கொண்டே செல்வதற்கு உண்மையான காரணம் என்ன தெரியுமா?

ஆன்லைன் சூதாட்ட வர்த்தகம், சேவை வரி, சுங்க வரி, உற்பத்தி வரி, வாட் வரி, வருமான வரி என சகல திசைகளில் இருந்தும் தாக்கும் விதவிதமான வரிகள்தான். ஒரே பொருள் பத்து பேரிடம் கைமாறி வரும்போது பத்து இடங்களிலும் அதற்கு வரி விதிக்கப் படுகிறது. அந்த வரிவிதிப்புகள்தான் பொருட்களின் விலையை அதிகரித்துவிடுகிறது.

அரிசி விலை ஏன் உயர்கிறது? விவசாயிகள் பெயரில் பெரும் நிறுவனங்களின் ஆட்கள் விவசாயிகளிடமிருந்து ஒட்டு மொத்தமாக நெல் கொள்முதல் செய்து அதை அரசு குடோனில் இருப்புவைக்கிறார்கள். இந்த இருப்பைக்காட்டினால் வெளி நாட்டு வங்கிகள் மிகக் குறைந்த வட்டியில் கடன் அளிக்கும். நாடு முழுவதும் ஆஙகாங்கே இப்படி நெல்லைப் பதுக்கிவைக்க, ஒரு கட்டத்தில் தட்டுப்பாடு அதிகரிக்கும்.  விலை கடுமையாக இருக்கும். நெல்லை அதிக விலைக்கு விற்பார்கள்.  லாபத்துக்கும் லாபும். இடையே இருப்பைக் காட்டி மிகக் குறைந்த வட்டியில் கடன் வாங்கி அதிலும் லாப்ம்.  இவை மிகச் சில உதாரணங்கள் மட்டுமே.  இன்னும் இப்படி நிறையக் குள்றுபடிகளைச் சொல்லிக் கொண்டே போகலாம்..

தவறு என்று தெரிந்தும் அதை ஏன் ஊக்குவிக்கிறது மத்திய அரசு?  சாதாரண வியாபாரிக்குத் தெரிந்த உண்மை, மெத்தப் படித்த பிரதமருக்கும், நிதி அமைச்சருக்கும் தெரியாதா? மிக நன்றாகத் தெரியும்.......
….

அந்நியரின் உரத்துக்கு மண்ணைப் பலியாக்கினோம், பாழாய்ப்போனது விவசாயம். இப்போது கிழக்கிந்தியக் கம்பெனி பாணியில் ஊடுருவியிருக்கும் வால்மார்ட்டுக்கு    நம்மவர்களின் வணிகத்தையும் பலி கொடுக்கப் போகிறோமா?!

நன்றி: திரு சஞ்சீவிகுமார் மற்றும் ஆனந்தவிகடன். 


தவறான நபர்கள் கையில் இந்த நாடு சிக்கிக் கொண்டு என்ன பாடு படுகிறது?  தங்கள் சுய நலத்திற்காகவும், வெளிநாட்டான் தங்களைப் பாராட்ட வேண்டும் என்பதற்காகவும், தங்கள் சொந்த நாட்டிற்கும், மக்களுக்கும் இவர்கள் இழைக்கும் அநீதிகளை என்னென்று சொல்வது?



வால்மார்ட் நிறுவனம் இந்தியாவில் நுழைவதற்காக மட்டும் சென்ற நான்காண்டுகளில் ரூபாய் நூற்றம்பது கோடி லஞ்சம் கொடுத்துள்ளது என்பதும், அதைத் தொடர்ந்து அவர்கள் மட்டுமல்ல அவர்களைப் போன்ற மற்ற நிறுவனங்களும் இதுபோல் நிறைய ‘செலவு’ செய்துள்ளன என்ற் செய்திகளும் குமுற வைக்கின்றன, நெஞ்சைக் கொதிக்க வைக்கின்றன.

இந்த நிறுவனங்களெல்லாம் நம்மைக் கொத்திக் கூறுபோடக் காத்திருக்கின்றன என்பதை நாம் உணரவேண்டும்

இந்தத் தீய சக்திகளிடமிருந்து இந்த நாடு என்று மீளுமோ?  கிழக்கு இந்தியக் கம்பெனி என்று வியாபாரத்திற்காக வந்த ஒரு நிறுவனம் இந்த நாட்டை நூற்றுக் கணக்கான ஆண்டுகள் அடிமைப்படுதியதை எப்படி அவ்வள்வு எளிதாக நாம் மறந்துவிட்டோம்?









6 ஜன., 2013

சூரியின் டைரி–57: தென்றலாய் வருடியவை - வழிகாட்டும் திம்பக்கு!


சூரியின் டைரி – 2013 ஜனவரி ஆறாம் நாள் - தென்றலாய் வருடியவை: வழிகாட்டும் திம்பக்கு!

என் வலைப்பூக்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது.  பொதுவாக மனம் எதிலும் ஒட்ட மறுக்கிறது.  ஈடுபாடு இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போராடித்தான் சிறு செயலையும் செய்ய வேண்டியிருக்கிறது.

அப்படி ஒரு போராட்டத்தின் முடிவாக இந்தப் பதிவு:

பெரிதாக ஏதோ சொந்த சரக்கைப் பதியப் போவதில்லை. இன்னும் இருக்கிறேன், கதை முடிந்துவிடவில்லை என்று காட்ட, நான் படித்தவற்றில் மனதில் படிந்த சிலவற்றை மட்டும், சுருக்கமாக இங்கே பதிவு செய்கிறேன்.

படித்த இதழ், ஆனந்தவிகடன் டிசம்பர் இருபத்தாறாம் நாள் இதழ்.

மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் தொடர் கட்டுரை, “ஆறாம் திணையிலிருந்து”:

‘திம்பக்கு’ சூழலிலும் விவசாயத்திலும் பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ள ஆந்திர அமைப்பு.  ‘தினையும் வரகும் பயிராக்கி பெருமளவில் பயன்படுத்திகிறார்களாமே?’ என்று நான் தேடிப் போன ஊர் இது.  திம்பக்கு பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்க வைத்தது. கிட்டத்தட்ட நூறு கிராமங்கள். ஏறத்தாழ முப்பதாயிரம் மக்களை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியாவின் இரண்டாவது பெரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தப்பூர்1) அவர்கள் வாழ்வியலை உயர்த்தியதுடன், அருகில் உள்ள வறண்ட மூன்று மலைகளைப் பசுமைப் பூங்காவாக்கி இருக்கின்றனர் திம்பக்கு மக்கள்.  ஊரே தினையையும், ராகியையும் வரகையும்தான் மூன்று வேளையும் சாப்பிடுகிறது.  அங்கு ஓர் உணவு விடுதிக்குப் போனால் சாம்பார், ரசம், தயிர், கோவைக்காய் பொரியல் என்று முழுச்சாப்பாடும் தினை அரிசியில் போடுகிறார்கள்.  இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்கை விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்தை மிகக் குறைவான, சரியான விலையில் விற்று தங்கள் வாழ்வை உயர்த்தி வருகின்றனர்.....

படிக்கப் படிக்க மன மகிழ்வையும், பிரமிப்பையும் ஏற்படுத்திய கட்டுரை இது.  இதை அனைவரும் படித்து மகிழவேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு பகுதியை மட்டும் பதிகின்றேன்.  மொத்தத்தில் இந்தத் தொடர் கட்டுரை விடாமல் தொடர்ந்து படித்து மகிழ, பயன் பெற வேண்டிய ஒன்று.

மருத்துவர் சிவராமன் அவர்களுக்கும் ஆனந்தவிகடனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்.









2 டிச., 2011

சூரியின் டைரி-56: "சோனா"

சில நாட்களுக்கு முன், காலையில் நண்பர் அலெக்சிடமிருந்து ஒரு அழைப்பு.  "எங்கே இருக்கிறீர்கள்? நண்பர் சோனா இன்று காலையில் காலமாகிவிட்டதாக, நண்பர் செல்வராஜ் சொன்னார்.  நீங்கள் கோட்டையூரிலிருந்தால், நாம் இருவரும் ஒன்றாகச் சென்றுவரலாமே என்பதற்காகத்தான் கூப்பிட்டேன் என்றார்.  அதிர்ச்சியிலிருந்து மீள  எனக்கு  சில நொடிகள் ஆயின.  பின்னர் அவரிடம்  நான் சென்னையில் இருப்பதாகச்  சொல்லிவிட்டு, என்ன ஆயிற்று என்று விசாரித்தேன்.  அவருக்கும்  தெரியவில்லை.  ஒரு மாதமாக  உடல்நிலை சரியில்லாமல் இருந்தார் என்ற அளவில் மட்டும் தெரிந்துகொள்ள முடிந்தது.   சென்று வந்தபின், விபரங்களைக் கூறுங்கள் என்று அலெக்சிடம் கேட்டுக்கொண்டேன்.  ஆனால் இன்று வரை அலெக்சிடமிருந்து தகவல் இல்லை, நானும் போன் செய்து கேட்டுக் கொள்ளவில்லை.  என்றாலும் என் மனதில் அவர் பற்றிய சிந்தனைகள் ஓடின.


சோனா ஒரு வித்தியாசமான மனிதர்.   ஒரு புத்தக விற்பனையாளர் என்று அறிமுகமானார்.  பின்னர் நான் ஹோமியோபதி பயின்றபோது, சக மாணவர் என்ற முறையிலும், பின்னர் நாங்கள் ஒரு ஹோமியோபதி இயக்கத்தை தோற்றுவித்தபோது நான் பொதுச்செயலர் என்ற முறையிலும், அவர் பொருளாளர் என்ற முறையிலும் நெருக்கமானார்.  இயக்கக் கூட்டம் அவரது வீடான ஜீவா இல்லத்தில்தான் பெரும்பாலும் நடைபெறும்.  சில ஆண்டுகளுக்குப்பின் அந்த இயக்கத்தைவிட்டு, நான் வெளியேறும்படி ஆயிற்று;  அடுத்த சில மாதங்களில் அவரும் வெளியேறினார்.


அதன் பின்னர் நான் மனித மேம்பாட்டு அமைப்பில் முக்கிய பொறுப்பிலிருந்தபோது அவர் உறுப்பினராகச் சேர்ந்தார்.  நான் காரைக்குடியில் மாநில அளவிலான புத்தகக் கண்காட்சி நான்கு ஆண்டுகள்  கம்பன் மண்டபத்தில் நடத்தியபோது,  அவர் எனக்கு உறுதுணையாக இருந்தார்.  நான் அந்த அமைப்பிலிருந்தும் ஒரு காலகட்டத்தில் வெளியேறும் சூழ்நிலை உருவானது.  அதன் பின்னர் அவரது தொடர்பு குறைந்தது.


அவர் காரைக்குடி நகரத்தார் பிரிவைச் சேர்ந்தவர்.  என்னைவிட பல வயது இளையவர்.  அவர் வேலை என்று எதுவும் இல்லாமல், பெயரளவில் புத்தக வியாபாரம், புத்தகங்கள் சேர்ப்பது, அப்புறம் எல்லாவற்றையும்விட ஆச்சரியமான விஷயம் அவர் காரைக்குடி நகர இந்திய பொதுவுடமைக் கட்சியின் பொருளாளராக இருந்தது.  பெற்றோர் மூலமாகவோ, அல்லது திருமணத்தின் மூலமாகவோ கிடைத்த பணத்தை, அரசு ஊழியர்களுக்கு குறைந்த வட்டியில் கொடுத்து, சிறிதளவு வருமானம் தேடிக்கொண்டார். 


 திருமணமாகி பல ஆண்டுகள் ஆகியிருந்தபோதும், அவர்கள் இல்லத்தில் குழந்தைப் பேறு இல்லாதது ஒரு பெரிய குறையாக இருந்தது.  பொதுவாக அவரைவிட அவரது துணைவியார் தோற்றத்தில் அவரைவிட வயது முதிர்ந்தவராகத் தென்பட்டார். அவர்களுக்கிடையில் பெரிய நெருக்கம் என்று சொல்ல வாய்ப்பில்லாததுபோல் பொதுவாக நண்பர்கள் அனைவரும் உணர்ந்தனர்.  ஆனால் நான் இங்கே குறிப்பிட வேண்டிய முக்கியமான ஒன்று, அவரது துணைவியார் எங்கள் அனைவரிடமும் நன்றாகப் பேசினார், பழகினார், அவர் வீட்டில் நாங்கள் இயக்கக் கூட்டங்கள் நடத்தியபோது உறுதுணையாக இருந்தார்.  எனவே எங்களைப் பொறுத்தவரை அவர் மதிப்பிற்குரியவராக இருந்தார். 


பின்னர் ஒருநாள் சில ஆண்டுகளாக அவரும், அவரது துணைவியாரும் சேர்ந்து வாழவில்லை என்ற தகவல் கிடைத்தது.  அவரது வீடு, அவர் சேர்த்த புத்தகங்கள் என்று எல்லாமே அவரது துணைவியார் உடையதாகியது.  அவர் தனது பெற்றோருடன் வசித்தார் என்ற அளவில் அறிந்திருந்தேன்.  சில முறை அவருடன் தொலைபேசியில் தொடர்புகொள்ள முயன்றபோது, அவரது அன்னையார் வெறுப்பேற்றுவது போல் பேசினார்; எனவே அதையும் நிறுத்த வேண்டியதாயிற்று.


என் பெண்ணின் திருமணத்திற்குப்  பிறகு தற்செயலாக அவரை எங்கோ வழியில் சந்தித்தேன்.  நான் அவரை திருமணத்திற்கு அழைக்காதது குறித்து வருத்தப்பட்டார்.  அவருடைய முகவரி கிடைக்காதது, மற்றும் மகளின் திருமணச் சுமைகளில் மூழ்கியிருந்ததால் விடுபட்டுப் போயிற்று என்று கூறி அவரிடம் என் வருத்தத்தைத் தெரிவித்தேன்.  அதுதான் நான் அவரைக் கடைசியாகப் பார்த்தது.


நாங்கள் நண்பர்கள் சிலர் பேசிக் கொள்கையில் சோனா பற்றி ஒரு கருத்து பொதுவாக அனைவரிடமும் இருந்தது.  அது அவர் எதிலுமே ஆழமாக இல்லாமல் மேலோட்டமாக இருந்தார் என்பதும், அதுபோல் அவருடைய புரிதலும் ஆழமாக இல்லை என்பதும்.  எத்தனை குறைகள் இருந்தாலும் என்னிடம் அன்போடு பழகியவர்; பல சமயங்களில் எனக்கு உறுதுணையாக இருந்தவர்; எங்கள் வீட்டிலும் அனைவரிடமும் உரிமையோடும் அன்போடும் பழகியவர் என்றமுறையில் அவரது மரணம் எனக்கு வருத்தத்தை அளிக்கிறது.  அடுத்தபடி அவரை எடைபோட நான் யார்?  நான் என்னவோ பெரிதாக வாழ்ந்த்துவிட்டதாகவோ, சாதித்துவிட்டதாகவோ கூறமுடியாது என்கிறபோது அவரை எடைபோடும் தகுதி எனக்கு இல்லை என்பதை ஒத்துக்கொள்ளத்தான் வேண்டும். 


சமயத்தில் நினைத்துப் பார்க்கையில் வாழ்க்கைக்கு அர்த்தம் தேடுவது பைத்தியக்காரத்தனமோ என்று தோன்றுகிறது.  இதையொத்த கருத்தை லியோ டால்ஸ்டாய் கூறியதாக எங்கோ படித்தது நினைவிற்கு வருகிறது.  ஏன், என்னுடைய வாழ்க்கையையே எடுத்துக் கொள்கிறேன்; வாழ்க்கையில் புரியாத விஷயங்களே அதிகமாக இருப்பதுபோலவும்,  பல சமயங்களில் தலையைப் பிய்த்துக் கொள்ளலாம் என்பதுபோலவும், ஏன், எதற்கு என்று புரியாமலேயே பலவற்றை செய்திருக்கிறேன் என்பதையும்  ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்; அதுவே உண்மை.


சோனாவின் நிழற்படம் எனகாவது இருக்குமா என்று தெரியவில்லை.  தேடிப் பார்த்து கிடைத்தால் இதில் பதிவு செய்யவேண்டும்.           

25 நவ., 2011

சூரியின் டைரி-55: தாகூரின் நாவல், "தி ரெக்" (The Wreck)



ஒரு மாதத்திற்கு மேல் உடல்நிலை சரியில்லாமல், தற்போதுதான் உடல்நிலை சிறிது, சிறிதாக தேறி வருகிறது.  ஒருமாதமாக பெரும்பாலும் படுக்கையிலேயே சிரமப்பட்டு பொழுதைக் கழித்தேன்.  எதுவும் செய்ய இயலவில்லை.  உணவும் செல்லவில்லை.  ஏற்கனவே நான் ஒரு சர்க்கரை நோயாளி.  சர்க்கரை நோயாளிகளின் முக்கிய பிரச்சினை அவர்கள் உண்ணும் உணவை சக்தியாக, ஆற்றலாக மாற்றும் திறன் குறைவாக இருப்பது; அதன் விளைவாக, உடல் உறுப்புக்கள் அவை செயல்பட தேவையான ஆற்றல் இல்லாமல், அரைகுறையாக செயல்படுவது.  அதிலும் உடல் எடையில் மூன்று சதவிகிதமே உள்ள மூளை, உணவிலிருந்து கிடைக்கும் ஆற்றலில் பதினேழு சதம் எடுத்துக் கொள்ளும்.  சர்க்கரை வியாதி + உணவை ஏற்கா நிலையில் மூளையின் செயல்பாடு எவ்வளவு பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை.  முக்கியமாக ஒரு மந்த நிலை, எதிலும் ஈடுபாடின்மை, மனத் தளர்ச்சி போன்றவை எதிர்கொள்ளவேண்டிய பிரச்சினைகள்.  தினசரி செய்தித்தாளைக் கூட படிக்க ஈடுபாடில்லை.  தினமும் போடும் 'சுடோக்கை' கண்டுகொள்வதே இல்லை.  சாதாரணமாக எனக்கு மிகவும் பிடித்த,  இரண்டு மூன்று வரிகளில், ரத்தினச் சுருக்கமாக பயனுள்ள ஆரோக்கியத் தகவல்களைத் தரும் சென்னை டைம்ஸ் கூட ஈர்க்கவில்லை.  

நிலைமை கவலை அளிப்பதாக இருந்தது.  நாவல் ஏதாவது படித்தாலென்ன?  நாவல் என்றால் சுவாரசியமாக இருக்கும்.  எனவே நான்கைந்து புத்தகங்களை எடுத்தேன்.  அதிலொன்று, தாகூரின் புகழ் பெற்ற நாவல்.  படகு விபத்தால் ஏற்படும் இடமாற்றங்கள், குழப்பங்கள் என்று கதை விறுவிறுப்பாகச் செல்லும்.  பள்ளி நாட்களின் சுருக்கமான பதிப்பைப் படித்திருக்கிறேன், ரசித்திருக்கிறேன். மேலும் அந்தக் கதையை அடிப்படையாகக் கொண்டு, தமிழில் வெளிவந்த "மாதர் குல மாணிக்கம்" என்ற திரைப்படத்தையும் சிறுவயதில் பார்த்திருக்கிறேன்.  படகு விபத்திற்குப் பதிலாக, அரியலூர் ரயில் விபத்து;  அப்புறம் வேறு சில மாற்றங்கள்.  தாகூரின் கதையில் ஒரு மணப்பெண் விபத்தில் பலியாவாள்;  தமிழில் இரண்டு புதுமண ஜோடியும் பிழைக்கும்;  மணப்பெண்கள் இருவரும் இடம் மாறுவர்;  இறுதியில், சிக்கல் எப்படி அவிழ்கிறது, அந்தப் பெண்கள் இருவரும் தங்கள் கணவன்மாரை எப்படிச் சென்றடைகின்றனர் என்பது கதை.

தெரிந்த கதையை இருந்த போதும் அந்த நாவலைத் தேர்ந்தெடுக்க முக்கிய காரணம் முழுமையான - சுருக்கப்படாத அந்த நாவலைப் படிக்கவேண்டும்; தாகூரின் எழுத்து வண்ணம், வர்ணனைகள் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்ற ஆவல்தான்.  அந்தக்கால வங்காளத்தைக் கண் முன் கொண்டு வருகிறார்.  அற்புதமான வர்ணனைகள்.  குறிப்பாக, கங்கையாற்றில் கதாநாயகனும், கதாநாயகியும் காசிப்பூர் வரை பயணம் செய்வது; ஒவ்வொரு இரவு ஆற்றங்கரையில் ஒரு கிராமத்தில் படகு நிற்பது; அந்த நேரம் வேண்டிய பொருட்களை பயணிகள் வாங்குவது, சமைப்பது, மற்றும் அந்த கிராம மக்களைப் பற்றிய வர்ணனை.

ஒரு மெகா சீரியல் எடுத்தால், அதுவும் தாகூரின் எழுத்துப் படி, சிதையாமல், உருவாக்கப் பட்டால் மிகவும் நன்றாயிருக்கும்.  ஏற்கனவே, வங்க மொழியிலோ, இந்தியிலோ எடுக்கப்பட்டிருந்தால் ஆச்சரியப் படுவதற்கில்லை.  நானூற்றுப் பதினாலு பக்கங்கள் கொண்ட நாவலை மூன்று நாட்களில் படித்து முடித்தேன்.  அருமையான நாவல்.  ஒரே குறை 'க்ளைமாக்ஸ்தான்'.  அப்பா தாங்க முடியாத அளவிற்கு, தலை சுற்றும் அளவிற்கு திருப்பங்கள். நம்மூர் மெகா சீரியல்கள் தேவலாம் என்றாகிவிட்டது. 

இந்தக் குறையை ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் சுவையான நாவல்.  1926-ஆம் வருடம் முதற் பதிப்பு என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.  கிட்டத்தட்ட நூறு ஆண்டுகளுக்கு முன் வங்காள மாநிலத்தில் வாழ்க்கை எப்படி இருந்தது என்பதற்கு பதமாக ஒரு பருக்கை இந்நாவல்.

என்னைப் பொறுத்தவரை தாகூருக்கு மிகவும் நன்றி.  மனம் துவண்டு, செய்வதறியாது இருந்த நிலையில் இந்நாவல் ஒரு டானிக் போல செயல்பட்டது என்றால் மிகையில்லை.           

21 நவ., 2011

சூரியின் டைரி-54: நல்ல சாவு

அது என்ன நல்ல சாவு?  பயங்கரமான சாலை விபத்திலோ, குருரமான தீ விபத்திலோ, இல்லை படுக்கையில் மாதக் கணக்கில் கிடந்து நாறி,  அன்பு வைத்திருந்த மனைவி மக்கள் எல்லாம் வெறுத்து, இவன் ஒழிய மாட்டானா என்று ஏங்கும் நிலை-இதெல்லாம் நிச்சயமாக நல்ல சாவு இல்லை.  தூக்கத்திலேயே எந்த வித தொல்லையும் இன்றி உயிர் பிரிவது மிகச் சிறந்த சாவு என்று நினைக்கிறேன்.  காலையில் காப்பியுடன் மனைவி எழுப்ப, ஒன்றுமே சலனமில்லாமல், கட்டையாகக் கிடக்க, அலறி அடித்து, டாக்டர் வந்து பார்த்து, சாரிங்க! அதிகாலை இரண்டு அல்லது மூன்று மணிவாக்கில் உயிர் பிரிந்துவிட்டது என்று சொல்கிறார் அல்லவா, அதுதான் நல்ல சாவு.  இன்னும் நல்ல சாவு என்றால், நமக்கு மட்டும் அறிகுறிகள் காட்டும், நாம் சுதாரித்து நாம் செய்யவேண்டிய கடமைகளை விரைவாக முடித்து, கணக்கு வழக்குகளையெல்லாம் தெளிவாக ஒப்படைத்துவிட்டு, சிக்கல்களையோ, பிரச்சினைகளையோ குடும்பத்தாருக்கு விட்டுச் செல்லாமல் இருப்பது. முக்கியமாக, பெரும் மருத்துவச் செலவை உண்டாக்காமல் இருப்பது.

எனது உறவினர் ஒருவரின் தந்தை இரவில் உடல் நலம் திடீரென மோசமாக, அவசர அவசரமாக, வாடகைக்கார் பிடித்து, மதுரை சென்று, அங்கே புகழ் பெற்ற தனியார் மருத்துவ மனையில் பெரும் பணம் செலவு செய்து, அவரைக் காப்பாற்றி வீடு கொண்டு சேர்த்தார்.  ஆனால், இரண்டு மாதம் கழித்து, நான் அவர்கள் வீட்டிற்குச் சென்றிருந்தபோது, அவர் அலுத்துக் கொண்டார்: "நான் தப்புப் பண்ணீட்டேன்! அன்றைக்கே அவரைச் சாக விட்டிருக்கவேண்டும்.  தற்போது படுத்த படுக்கையாய் இருக்கிறார். சொல்வதைக் கேட்பதில்லை.  கண்டதையும் தின்றுவிட்டு, படுக்கையை நாறவைக்கிறார்.  பிள்ளைகள் எல்லாம் அருவருப்புப் படுகிறார்கள்.  அவருக்குப் பாடு பார்பதற்குள் உயிரே போய்விடுகிறது.  அவர் சீக்கிரம் போய்ச் சேர்ந்தால் போதும் என்றிருக்கிறேன்."

நான் என் தினசரிப் பிரார்த்தனையில்: "பிறவிப் பயனை அடைதல் வேண்டும்; முழுமை பெறவேண்டும்; மகத்தான சாதனைகள் படைத்திடல் வேண்டும். உரிய நேரம் வந்ததும், மன நிறைவோடு, சிரித்த முகத்தோடு, உன் திருவடிகளை வந்தடைதல் வேண்டும்.

இப்பிறவியை நல்லபடியாக முடித்திடல் வேண்டும்; அல்லல் படாமல், அவதிப் படாமல், அசிங்கப் படாமல், துன்பப் படாமல், துயரப் படாமல், கேவலப் படாமல் முடித்திடல் வேண்டும்.  அடுத்த பிறவியிலாவது முற்றிலும் தூயவனாகப் பிறந்து, முற்றிலும் தூயவனாக வாழ்ந்து, முற்றிலும் தூயவனாக முடித்திடல் வேண்டும்.

எஞ்சியுள்ள காலத்திலாவது உடல் உபாதைகள், மன உபாதைகள், நோய்கள், பிணிகளிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, கடன்கள், கஷ்டங்கள், துன்பங்கள், துயரங்களிலிருந்து முற்றிலுமாக விடுபட்டு, மன நிறைவுடனும், மன நிம்மதியுடனும், மன மகிழ்வுடனும், சீரும் சிறப்புடன் வாழ நல்லருள்  புரிவாய் இறைவா"  என்று வேண்டிக் கொள்வேன்.

ஒரு மாதம் படுக்கையில் கிடந்து, நாய் படாத பாடு பட்டு எழுந்த பிறகு, தற்போது என் பிரார்த்தனை மிகவும் சுருங்கிவிட்டது.  சாதனைகள், புடலங்காய்கள், மன நிறைவு, மன மகிழ்வு இவற்றையெல்லாம் கடாசி விட்டு, "இயலாமை, முதுமை, தள்ளாமை, பிணி என்று படுக்கையில் விழுமுன், அடுத்தவர்களுக்கு சுமையாகு முன், இந்த உடலை உதறிவிட்டு, நின் திருவடிகளை நல்லபடியாக வந்தடைதல் வேண்டும்; வேறு ஒன்றுமே எனக்கு வேண்டாம்" என்ற நிலைக்கு வந்துவிட்டேன்.  நோய்களும், கஷ்டங்களும் மனிதனை எந்த அளவுக்கு பக்குவப் படுத்துகின்றன!

இறைவன் என் பிரார்த்தனைக்கு செவி சாய்க்கிறானா என்று பார்க்கலாம்.    

17 நவ., 2011

சூரியின் டைரி-53: மானாமதுரை

மானாமதுரை  இரயில்  நிலையத்தின்  புதிய  முகப்பு 


முதல் பிளாட்பாரத்தில் மழை கொட்டுகிறது 

முதல் பிளாட்பாரத்தின் கடைசியில்தான் 
டிக்கட் பரிசோதகர்களின் அறை  



தம்பிமார் பயின்ற 
ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி 


வைகை மேம்பாலத்திலிருந்து ஊருக்குள் நுழையாமல்  பைபாஸ் சாலை வழியே புதிய பேருந்து நிலையம் செல்லும் பாதை - அண்ணா சிலை 

புதர்தான் என்றாலும் வைகைக் கரையில் ஒரு அழகிய காட்சி 


வைகை ரயில் பாலமும், 
எங்கு பார்த்தாலும் மண்டிக் கிடக்கும் புதரும் 


வைகை சாலைப் பாலத்திலிருந்து ஒரு காட்சி 



மானாமதுரை கீழ்கரை - ஒரு காட்சி 


அருள்மிகு பூர்ண சக்ர  விநாயகர் கோவில்



அருள்மிகு  ஆதிபராசக்தி  திருக்கோவில்  


அருள்மிகு சாஸ்தா ஆலயம் 



மானாமதுரையின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத சோமநாதர் திருக்கோவில் - வைகை ஆற்றங்கரையில் 



வைகை ஆற்றுத் தரைப்பாலம் - பெரும்பாலும் ஆற்றில் தண்ணீர் இல்லாதபடியால் இப்பாலம் வழியே எளிதில் அக்கறை செல்லலாம் 

வைகை சாலைப்பாலத்தில் வாகனங்கள் செல்கின்றன 


எனது பள்ளி இறுதித் தேர்வு முடியவும், இரயில்வேயில் பணிபுரிந்த என் தந்தைக்கு திருநெல்வேலியிலிருந்து, மானாமதுரைக்கு மாற்றலாகவும் சரியாக இருந்தது.  நான் விடுமுறையில் திருச்சியில் என் சித்தப்பா வீட்டிலிருந்தேன்.  வீடு மாற்றியதே எனக்குப் பின்னர்தான் தெரியும்.   1965  ஆண்டு ஜூன் மாதம் என்று நினைக்கிறேன்.  ஒருநாள் அப்பாவிடமிருந்து ஒற்றைவரிக் கடிதம் வந்தது. இரவு ராமேஸ்வரம் பாசெஞ்சரில் அவருடன் நான் மானாமதுரை   செல்லவேண்டும். இதுபோன்ற ஒற்றைவரிக் கடிதம் அவர் கோபத்தில் இருக்கிறார் என்பதை தெளிவாக்கியது. எனக்கு சித்தப்பாவைவிட்டு பிரிந்து செல்ல விருப்பமில்லை; சித்தப்பாவிற்கும் என்னை அனுப்ப மனமில்லை. இருப்பினும் வேறு வழியின்றி திருச்சி இரயில் நிலையம் சென்றோம். சித்தப்பா என்னிடம் சொன்னார்: அப்பா கேட்டால் சொல்லிவிடு துணிமணி எதையும் எடுத்து வரவில்லையென்று. சீப்பை ஒளித்து வைத்துக் கல்யாணத்தை நிறுத்துவதைப் போல். என்னைப் பார்த்ததும், ஏறி உள்ளே உட்கார் என்று ஒரு உறுமல் கட்டளை. நான் சப்தநாடியும் ஒடுங்க, அந்த ரயில் பெட்டியில் ஏறி காலியாக இருந்த ஒரு ஓரத்தில் அமர்ந்தேன். சித்தப்பா ஏதோ சொல்ல முயல, அவரை ஒரு கடி, அதோடு அவர் சரி. ரயில் புறப்பட்டது. மேலே லக்கேஜ் ரேக்கில் ஏறிப் படுத்துக் கொள்கிறாயா என்று கேட்டு, விரிப்பையும் விரித்துக் கொடுத்தார்.  நான் ஏறிப் படுத்தேன்.  சிறிது நேரத்தில் தூங்கியும் விட்டேன்.  இரவு  முழுவதும்  தந்தை டிக்கட் பரிசோதனை செய்யும் தன் பணியைப் பார்க்கப்  போய்விட்டார்.   

அதிகாலை மூன்று மணி அளவிருக்கும்.  தூங்கிக் கொண்டிருந்த என்னை எழுப்பி மானாமதுரை வருகிறது; இறங்கவேண்டும்; தயாராகு என்றார் தந்தை. விடியாத ஒரு வேளையில் மானாமதுரையில்  வந்திறங்கினேன்.  டிக்கட் பரிசோதகர்களின் பெட்டிகள் வைக்கும் அறையில், இரண்டு, மூன்று பெட்டிகளை இழுத்துப் போட்டு, படுத்துறங்கு; விடிந்தவுடன் எழுப்புகிறேன்; வீட்டிற்குச் செல்லலாம் என்றார் தந்தை.  உறங்கினேன்.  அவர் மீண்டும் என்னை எழுப்பியபோது, நன்றாக விடிந்திருந்தது.  பல் தேய்த்து, அருமையான காப்பி ஒன்றைப் பருகிவிட்டு, (அப்போதெல்லாம் மானாமதுரையில் இரயில்வே சிற்றுண்டியகம் இருந்தது; அங்கே சிறப்பான காப்பி கிடைத்தது), அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன்.

வைகை ஆறு மானாமதுரையை மேல் கரை, கீழ்கரை  என்று இரண்டாகப் பிரித்திருந்தது.  ரயில் நிலையம், எங்கள் வீடு போன்ற முக்கிய பலவும் மேல் கரைதான்.  கீழ் கரை ஞாயிறன்று அப்பாவுடன் சந்தையில் காய்கறி வாங்கச் செல்வது, பின்னர் கட்டப்பட்ட அமுது தியேட்டரில் நண்பர்களுடன் படம் பார்க்கச் செல்வது,  நண்பர்களுடன் செல்லமுத்து கடையில் புரோட்டா சாப்பிடச் செல்வது  என்று மிகக் குறைந்த தொடர்புதான்.

மேல்கரையில் ரயில் நிலையத்துடன் ஊர் முடிகிறது.  அல்லது ரயில் நிலையத்திலிருந்துதான் ஊர் ஆரம்பமாகிறது.

பிரதான சாலையில் அப்பாவுடன் வீட்டை நோக்கி நடந்தேன். சரியான பட்டிக்காடு. நெல்லை மாநகருக்குப்பின், மானாமதுரை அவ்வாறு தோன்றியதில் வியப்பில்லை. அடுத்த ஐந்தாண்டுகளை அந்த ஊரில் எப்படிக் கழிக்கப் போகிறேன் என்று நினைக்கவே கஷ்டமாக இருந்தது.  பத்து நிமிட நடைக்குப்பின் ஒருவழியாக வீட்டை அடைந்தோம்.  ஒரு பழைய வீடு.

இப்படித்தான் மானாமதுரை வாழ்கை ஆரம்பித்தது.  1970-ஆம்  ஆண்டு அந்த ஊரை விட்டுக் கிளம்பி, காரைக்குடியை அடுத்த கோட்டையூரில் குடிபுகுந்தது வரை உள்ள வாழ்க்கையை தற்போது பதிவு செய்ய முடியாது. நான் பதிவு செய்யப்போவது 2011 அக்டோபரில் மீண்டும் மானாமதுரையைச் சென்று பார்த்தது பற்றித்தான்.  அதாவது நாற்பது ஆண்டுகளுக்குப்பின் மீண்டும் மானாமாதுரையைப் பார்த்தது பற்றி.

மதகுபட்டியிலிருந்து சிவகங்கை   சென்று, பின் அங்கிருந்து மானாமதுரை செல்ல திட்டம்.  ஆனால் நேரடியாக மானாமதுரை பேருந்தே கிடைக்க, நேராக மானாமதுரைக்கே    சீட்டு வாங்கினேன்.  கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேர பயணத்திற்குப் பின் மானாமதுரை கீழ்கரை, வைகைப் பாலம், மேல்கரை என்று பேருந்து செல்ல, மேல்கரை அடைந்தவுடன் ஊருக்குள் செல்லாமல், பைபாஸ் சாலை வழி வெளியே சென்றது.  இது முதல் மாற்றம்.  புதிய பேருந்து நிலையம், ரயில் நிலையத்தின் மறுபகுதியில் புதிதாக முளைத்திருந்த சாலையில் இருந்தது.  அருகே இரண்டு பெரிய சினிமா தியேட்டர்கள், மற்றும் பல கடைகள் என்று ஊர் வளர்ச்சி பெற்றிருந்தது.

பேருந்து நிலையம், ரயில் நிலையம் அருகில் என்பதை முதலில் உணர்ந்தேன். அதன் பின் ஊருக்குள் நடந்தேன்.  பிரதான சாலையில் பெரிதான  மாற்றம் ஒன்றுமில்லை. தம்பிகள் பயின்ற ஒக்கூர் வெள்ளையன் செட்டியார் உயர்நிலைப்பள்ளி. சீனியப்பா என்ற பெயரில் பல நிறுவனங்கள் (சினிமா தியேட்டர் உட்பட).  நாங்கள் அங்கிருந்த காலத்தில் பெரிய மரக்கடை வைத்திருந்தார்கள்.  தற்போது நிறைய மரக்கடைகள் மற்றும் தியேட்டர்.  நான் சற்றும் எதிர்பாராத ஒன்று பெரிய குழந்தைகள் மையம் ஒன்று டோப்ளர் ஸ்கேன் வசதியுடன்!

அடுத்து நிறைய குட்டிக் குட்டி கோவில்கள்.  (படங்களைப் பதிவு செய்துள்ளேன்.)  நகரின் முக்கிய கோவிலான அருள்மிகு ஆனந்தவல்லி சமேத  சோமநாதர் திருக்கோவில்.  எதிரே வைகை ஆற்றின் தரைப்பாலம்.  கிட்டத்தட்ட தூர்ந்து போயிருந்தது.  கோவிலைத் தாண்டி சென்றபோது வைகை ஆற்றின் மேலுள்ள பெரிய பாலம்.  அதற்கு முன் அண்ணா சிலை.  பாலத்திலிருந்து பார்த்தபோது பெரிய அதிர்ச்சியாக இருந்தது.  நாங்கள் வாழ்ந்த காலத்தில் வைகை ஆற்றுப் படுக்கை, மெரீனா பீச்சைப் போன்று வெள்ளைமணல் கொழிக்கும் எங்களது மாலைப் பொழுதை உவகையுடன் கழிக்கும் இடம்; குழந்தைகள் கொட்டமடிப்பது, விளையாடுவது;  தற்போது முற்றிலுமாக தூர்ந்து, புதர் மண்டியிருந்தது.  ஆறே சுருங்கிவிட்டதுபோன்ற உணர்வு.

நான் தட்டெழுத்து, சுருக்கெழுத்துப்  பயின்ற லக்ஷ்மி தட்டெழுத்துப்பள்ளி காணாமல் போயிருந்தது. புகுமுக வகுப்பில் இருமுறை தோற்று,  கல்லூரியில் பட்டப்படிப்பிற்கு இடம் கிடைக்காமல், அந்த ஆண்டை வீணாக்காமல் உருப்படியாக தட்டெழுத்து, சுருக்கெழுத்து வகுப்பில் சேர்ந்தேன். ஆனால் ஏதோ காலம் வீணாகி விடக்கூடாது என்று பொழுதுபோக்காக படித்த அவைதான் என் வாழ்வின் ஆதாரமாயின.  குடும்பம், பிள்ளைகுட்டி, அவர்களது படிப்பு, திருமணம் என்று அனைத்திற்குமே உதவியது அந்தப் படிப்புதான். இறுதியில் எனது சிறு சிறு கனவுகளை   நனவாக்கவும், எனக்கு ஓரளவு பெயரும் புகழும் கிடைக்கவும் அவையே ஆதாரமாயிருந்தன என்பதுதான் வாழ்க்கையின் வினோதம்.  

நண்பர்கள் யாரும் கண்ணில் படவில்லை.  தொடர்பே இல்லாமல் போயிருந்தது.

வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில், பிரதான சாலையில், குண்டு காதர் கடையில் அப்பா எங்களுக்கு நொறுக்குத்தீனி வாங்கி வருவார். அந்தக் கடை காணாமல் போயிருந்தது.  அதுபோல் காலையில் அருமையான, சுவையான தேநீர் வழங்கும் சைவப் பிள்ளை கடையும் காணாமல் போயிருந்தது.   

நாங்கள் கடைசியாகக் குடியிருந்த தெற்கு ரத வீதியிலுள்ள வீட்டில் முகப்பில் மட்டும் சிறிய மாற்றம்.  முகப்பில் கேம்ப் காட்டில் படுத்துக் கொண்டு புத்தகம் படிப்பது, வேடிக்கை பார்ப்பது, உறங்குவது என்று எவ்வளவு நாட்களை கழித்திருக்கிறேன்.  எதிரே இருந்த கிருஷ்ணா மெடிக்கல்ஸ் காணாமல் போயிருந்தது.  எங்களூர் பாராளுமன்ற உறுப்பினர் தா.கிருட்டிணன் அவர்களது கடை.  திறந்து வைக்க நடிகர் எஸ்.எஸ்.ராஜேந்திரன் வந்திருந்தார். என் படுக்கையில் இருந்து பார்த்தால், கல்லாப் பெட்டியில் யார் என்று தெரியும்.  பல நாட்கள் எங்கள் எம்.பி. உட்கார்ந்திருப்பார்.  இளைஞர்களெல்லாம் சான்றிதழுக்காகப் படையெடுப்பர்.  பொறுமையாக ஒவ்வொருவருக்கும் தனது லெட்டர் பேடிலிருந்து ஒரு தாளைக் கிழித்துக் கொடுப்பார்.  அவர்கள் ஓடோடிச் சென்று டைப் அடித்து வாங்கி வருவர்.  அவரும் பொறுமையாக அனைவருக்கும் கையெழுத்திட்டுக் கொடுப்பார்.  பின்னாளில் சட்ட மன்ற உறுப்பினராகவும், அமைச்சராகவும் வளர்ந்தார். அதன் பின் பல்லாண்டு கழித்து,மதுரையில் அவர் கொலையுண்ட செய்தி  வருத்தத்தையும் அதிர்ச்சியையும் அளித்தது.

கடைசியாக மானாமதுரை ரயில் நிலையம்.  ஒருகாலத்தில் எப்போதும் ஜேஜே என்றிருக்கும்.  இராமேஸ்வரம், சென்னை, மதுரை, விருதுநகர் என்று நான்கு புறமும் ரயில் பாதைகள் பிரிந்து செல்லும் ஒரு முக்கிய ரயில் நிலையமாக விளங்கியது, காலை முதல் இரவு வரை ஏகப்பட்ட ரயில்கள். மண்டபம்-பாம்பன் இடையே தரைப் பாலம் வந்த பிறகு, ரயிலின் முக்கியத்துவம் குறைந்துவிட்டது. இன்று மிகக் குறைந்த ரயில் சேவைகளுடன் பரிதாபமாக் காட்சியளித்தது.  புதிய கட்டிடம், புதிய சிறந்த முகப்பு என்று எல்லாம் இருந்தும் பழைய சிறப்பில்லை.  நல்ல காப்பி கூட கிடைக்கவில்லை.  நாராயணன் என்று ஒருவர் புத்தகக் கடை வைத்திருந்தார். அங்கு நான் பல புத்தகங்கள் வாங்கியிருக்கிறேன்.  கமுதக்குடியில் பாதிரித் தோட்டத்தில் இருந்து, ஆப்பிள் கொய்யா என்று விதையே இல்லாத, மிகச் சுவையான கொய்யா வரும். எல்லாம் மறைந்துவிட்டது.

ஒருவித ஏமாற்றத்துடன் ஊர் திரும்பினேன்.

பின் குறிப்பு: 

புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தியேட்டரில் காலை பதினோரு மணி காட்சி "எங்கேயும் எப்போதும்" என்ற படம் பார்த்தேன்.  படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.  என்னையும் சேர்த்து மொத்தம் நான்கு பேர் மட்டுமே படம் பார்த்தோம்! தீபாவளிக்கு முந்திய சிலநாட்கள் என்பதால் கூட்டமே இல்லை.                       அது மட்டுமே இப்பயணத்தில் சற்று ஆறுதலான விஷயம்!