தென்றலாய் வருடியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தென்றலாய் வருடியவை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 ஜன., 2013

சூரியின் டைரி-65: தென்றலாய் வருடியவை - நீதியே மன்னவன் உயிர் நிலை


சூரியின் டைரி-65: தென்றலாய் வருடியவை - நீதியே மன்னவன் உயிர் நிலை

இனிய உதயம் மாத இதழை பல ஆண்டுகளாக நான் வாங்கிப் படித்து வருகிறேன்.  இதில் எனக்கு மிகவும் பிடித்த பகுதி பேட்டி.  படைப்பாளிகளுடனான ஆழமான, விரிவான பேட்டி வேறு எந்த இதழிலும் இல்லாத அளவிற்கு மிகச் சிறப்பாக இருக்கும்.  தற்போது இந்த இதழில் நிறைய மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

2013 ஜனவரி இதழில் புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்கள் எழுதியுள்ள “புதுமை வேட்டலா? புரட்டு வித்தையா?” என்ற கட்டுரை எனக்கு மிகவும் பிடித்தது. 

நாளிதழ் ஒன்றில் யாரோ எழுதிய சிலப்பதிகாரம் காலத்திற்கு ஏற்றதாக இல்லை, சிலம்பின் பேருண்மைகள் நிலயல்ல என்று எழுதியுள்ளார். அதை மறுத்து மிகத் தெளிவாக, மேற்கோள்களுடன் சிலப்பதிகாரத்தின் சிறப்பினை அற்புதமாக நிலை நாட்டியுள்ளார்.  இது தமிழார்வலர்கள் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு கட்டுரை.

ஆய்வு என்ற பெயரில் வாய்க்கு வந்ததையெல்லாம் எழுதுவது தற்போது வழக்கமாகி விட்டது.

இந்தக் கட்டுரையிலிருந்து எனக்கு மிகவும் பிடித்த ஒரு பகுதியினை மட்டும் இங்கே பதிவு செய்கிறேன்.  மீண்டும் கேட்டும் கொள்கிறேன்.  இந்தக் கட்டுரையை முழுமையாகப் படித்துப் பாருங்கள்.

...
நமது இலக்கியங்கள், காப்பியங்கள் , நீதி நூல்கள்  அனைத்தும் மக்கள் வாழ்க்கையை நெறிப்படுத்த, சீர்மை செய்திடவே படைக்கப் பட்டவையாகும்.

‘அல்லவை செயார்க்கு அறங்கூற்றாதல்’;  என்றும் அறத்தின் மீது, எல்லாக் காலத்திலும் ஆள்வோர்க்கு அச்சம் இருந்திட வேண்டும்.  அஃது இல்லாமல் போனதால்தான் இன்றைய அரசியலில் அவலங்கள், அநீதிகள், அக்கிரமங்கள், அயோக்கியத்தனங்கள் அரங்கேறுகின்றன.

தவறிழைத்த பாண்டியனைக் கண்ணகி தண்டிக்கவில்லை; யாரும் கொலை செய்யவில்லை. நீதியை – அறத்தை உயிராகக் கொண்டவன் அவனாதலின் நீதி தவறினோம் என்று உணர்ந்தவுடன், அக்கணமே உயிர் பிரிந்தது. மிகவுயர்ந்த சாவு இது. நீதியே மன்னவன் உயிர் நிலையாயிற்று.

‘வல்வினை வளைத்த கோலை மன்னவன்
 செல்லுயிர் நிமிர்த்துச் செங்கோ லாக்கியது’

என்றார் இளங்கோ.

கண்ணகியும் காப்பிய நிறைவுக்குமுன், வாழ்த்துக் காதையில்,

‘தென்னவன்  தீதிலன் தேவர்கோன்  தன்கோவில்
 நல்விருந்தாயினன்  நானவன்  தன் மகள்’

என்று சான்றளிக்கிறார்.


புலவர் கவிக்கோ ஞானச்செல்வன் அவர்களுக்கு எனது மனமார்ந்த பாராட்டுக்கள்

‘இனிய உதயம்’  மாத இதழுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்



15 ஜன., 2013


சூரியின் டைரி-64: தென்றலாய் வருடியவை – வணக்கத்திற்குரிய வாத்தியார்!

ஆனந்தவிகடன் 2013 ஜனவரி இரண்டாம் நாள் இதழில் வெளியான “2012 டாப் 10 மனிதர்கள்” பகுதியிலிருந்து:

தடகள விளையாட்டுகளில், தமிழ் வீரர்களைச் சர்வதேச உயரத்துக்கு இட்டுச்செல்லும் ஏகலைவன், சென்னையைச் சேர்ந்த நாகராஜ்.  கேரள அரசின் கோடிக்கணக்கான நிதி உதவியுடன் செயல்படும் பி.டி.உஷா அகாடமியில் இருந்து, இதுவரை உருவானது இரண்டு சர்வதேசத் தடகள வீரர்கள் மட்டுமே.  ஆனால், எந்த அரசு உதவிகளும் இல்லாமல், நாகராஜ் இதுவரை 24 சர்வதேச வீரர்களை உருவாக்கி இருப்பது மகத்தான சாதனை. அதில் 14 பேர் சர்வதேச சாம்பியன்கள். 100க்கும் அதிகமானோர் தேசியத் தடகள சாம்பியன்கள்.  இவை அனைத்தையும் எதிர்பார்ப்புகள் எதுவும் இல்லாமல், தேசத்தின் மீதும், விளையாட்டின் மீதும் உள்ள காதலால் செய்கிறார் நாகராஜ்.  மாநிலம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் நடக்கும் இடங்களுக்கு அலைந்து திரிந்து, தகுதியும் ஆர்வமும் உள்ள மாணவர்களைத் தேடிப் பிடித்து வந்து, பயிற்சி அளிப்பதை, கடந்த 25 ஆண்டுகளாக ஒரு தவம் போல் செய்து வரும் நாகராஜின் கனவு, தமிழ் நாட்டில் இருந்து பல ஒலிம்பிய்ன்களை உருவாக்க வேண்டும் என்பதுதான். நடக்கும் நாகராஜ்!


திரு நாகராஜிற்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!

ஆனந்தவிடனுக்கும் மனமார்ந்த நன்றிகள்

12 ஜன., 2013

சூரியின் டைரி-62: தென்றலாய் வருடியவை – டாக்டர் வர்கீஸ் குரியன்


சூரியின் டைரி-61: தென்றலாய் வருடியவை – டாக்டர் வர்கீஸ் குரியன்

டாக்டர் வர்கீஸ் குரியன் தனது 90வது வயதில் காலமானபோது, உயிர்மை 2012 டிசம்பர் மாத இதழில், ஷாஜி எழுதிய “பால் வீதியில் ஒரு பயணம்” என்ற அஞ்சலிக் கட்டுரையிலிருந்து ஒரு பகுதி மட்டும்

இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் பெரும் புகழ்கொண்ட அமுல் என்ற வணிகப் பெயரையும், அதன் வணிக சாம்ராஜ்யத்தையும் 63 ஆண்டுகளுக்கு முன்பு ஆனந்தில் உருவாக்கி வளர்த்தெடுத்தவர் டாக்டர் வர்கீஸ் குரியன்.  அமுல் என்றால் ஆனந்த் மில்க் யூனியன் லிமிடெட் என்று பொருள் (Anand Milk Union Limited). உருவாகி சில மணி நேரத்திற்குள்ளேயே கெட்டுப் போகக்கூடிய ஒரு பொருளை வைத்துக்கொண்டு பலகோடி மக்களின் ஏழ்மையை, ஒரு தனிமனிதனால் எப்படித் தீர்க்க முடியும் என்பதற்கு உலகில் இருக்கும் ஒரே உதாரணம், டாக்டர் வர்கீஸ் குரியந்தான்!  ஒரு தனிமனிதனால் ஒரு நாட்டின் தலையெழுத்தையே மாற்றியமைக்க முடியும் என்று நிரூபித்த ஒரே இந்தியரும் அவர்தான் என்று திட்டவட்டமாகச் சொல்வேன்.

டாக்டர் வர்கீஸ் குரியன் அமுலின் உரிமையாளரோ, முதலீட்டாளரோ ஆக ஒருபோதும் இருந்தவரல்ல.  ஒரு அரசு ஊழியராக இருந்துகொண்டே ஒரு சமூகத் தொழில் முனைவராக அவர் முன்வந்தபோது நிகழ்ந்த அதிசயம்தான் அமுல்!  அமுல் ஒரு மாபெரும் கூட்டுறவு சங்கம்! 16,200 கிராமிய கூட்டுறவ் சங்கங்களின் கூட்டமைப்பு அது. 32 லட்சம் பொதுமக்கள்தான் அதன் உரிமையாளர்கள்!  ஆண்டில் 12,000 கோடியின் மொத்த விற்பனையுடன், பாலையும், பால் பொருட்களையும் பதப்படுத்தி விற்கும் உலகின் தலைசிறந்த நிறுவனமாக இன்று அமுல் திகழ்கிறது.

நாம் அன்றாடம் பயன்படுத்தும் பாலில் தொடங்கி வெண்ணெய், குழந்தைகளுக்கான பால் சத்துணவுகள், பால் கட்டி, பால் பொடி, தயிர், நெய், பாலாடை, பனிக்கூழ், பால் குளிர்பானங்கள், ஆரோக்கிய பானங்கள், உறைவிக்கப்பட்ட பால், பால் மொரப்பா, பால் அடிப்படையிலான பலகாரங்கள் மற்றும் மிட்டாய்கள் போன்றவற்றின் உற்பத்தியிலும் விற்பனையிலும் அமுலுக்கு நிகராகயிருக்கும் நிறுவனங்கள் உலகில் குறைவே.  அமுலில் டாக்டர் வர்கீஸ் குரியன் ஆரம்பித்த ‘செயல் பெருவெள்ளம்’ (Operation Flood) திட்டத்தின் வாயிலாகத்தான் இந்தியா முழுவதும் பால் கூட்டுறவு சங்கங்கள் உருவானது.  அதனூடாக உலகில் மிக அதிகமாகப் பாலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா மாறியது!

உலக அரங்கில் இந்தியா தலை நிமிர்ந்து நிற்பதற்கான மிகக்குறைந்த காரணங்களில் ஒன்று!  எல்லாமே டாக்டர் வர்கீஸ் குரியனின் சாதனைகள்.  மாத சம்பளம் வாங்கும் ஒரு அரசு ஊழியரின் அன்றாட வேலைகளின் பகுதியாக நினைத்துக் கொண்டே இதையெல்லாம் செய்து முடித்தார் அவர்!


நன்றி : திரு ஷாஜி மற்றும் உயிர்மை மாத இதழ்

10 ஜன., 2013

சூரியின் டைரி-60: தென்றலாய் வருடியவை - குப்பை கிடங்குகளாய் மாறிய ஏரிகளைச் சீரமைத்த அருண் கிருஷ்ணமூர்த்தி


சூரியின் டைரி-60: தென்றலாய் வருடியவை – குப்பை கிடங்குகளாய் மாறிய ஏரிகளைச் சீரமைத்த அருண் கிருஷ்ணமூர்த்தி

தினமலர் மதுரைப் பதிப்பு ஜனவரி ஒன்பதாம் நாள் இதழிலிருந்து:

சிறுவயதிலேயே ஏரி, பறவைகள் பிடிக்கும்.  சென்னை கீழ்கட்டளை ஏரியில் பறவை, மீன், ஆமை இருந்தன.  பின் குப்பைக் கிடங்காக மாறியதால், ஏரியை சீரமைக்கும் எண்ணம் ஏற்பட்டது.  நன்கு படித்து, கூகுள் நிறுவனத்தில் வேலை செய்தேன். 

வேலை பார்க்கும் போதே ஆந்திராவின் குருனாதன் செருவு ஏரி, சென்னையின் லக்ஷ்மி புஷ்கரம் ஏரிகளின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, முழுவதும் தூர் வாரி, சுற்றிலும் வேலியிட்டு, நண்பர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களின் உதவியோடு சீரமைத்தேன்.  ஆர்வத்தால் கூகுள் நிறுவ்ன வேலையை ராஜினாமா செய்து, முழு நேரமும் ஏரியை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டேன். 
....
ஏரிகளை சீரமைத்து, சுற்றுச்சூழலை பாதுகாத்ததற்காக, சர்வதேச இளைஞர் சங்கமும், சுவிட்சர்லாந்தின் ரோலக்ஸ் நிறுவனமும் விருது அளித்து பெருமைப்படுத்தின. 

விருதிற்கான பணத்திற்குப் பதில், கீழ்கட்டளை ஏரியை ம்றுசீரமைக்கும் தொழில் நுட்ப உதவிகளை வழங்கக் கேட்டேன்.  நிறுவனம் அதற்கு சம்மதம் தெரிவித்தது.  விரைவில் பணி துவங்கும்.  மொபைல்: 9940203871


மனமார்ந்த பாராட்டுக்கள்: திரு அருண் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு
நன்றி:  தினமலர் நாளிதழ் 

6 ஜன., 2013

சூரியின் டைரி–57: தென்றலாய் வருடியவை - வழிகாட்டும் திம்பக்கு!


சூரியின் டைரி – 2013 ஜனவரி ஆறாம் நாள் - தென்றலாய் வருடியவை: வழிகாட்டும் திம்பக்கு!

என் வலைப்பூக்களுக்கும் எனக்கும் உள்ள தொடர்பு குறைந்துகொண்டே வருகிறது.  பொதுவாக மனம் எதிலும் ஒட்ட மறுக்கிறது.  ஈடுபாடு இல்லாமல் ஏனோதானோ என்று வாழ்ந்துகொண்டிருக்கிறேன். போராடித்தான் சிறு செயலையும் செய்ய வேண்டியிருக்கிறது.

அப்படி ஒரு போராட்டத்தின் முடிவாக இந்தப் பதிவு:

பெரிதாக ஏதோ சொந்த சரக்கைப் பதியப் போவதில்லை. இன்னும் இருக்கிறேன், கதை முடிந்துவிடவில்லை என்று காட்ட, நான் படித்தவற்றில் மனதில் படிந்த சிலவற்றை மட்டும், சுருக்கமாக இங்கே பதிவு செய்கிறேன்.

படித்த இதழ், ஆனந்தவிகடன் டிசம்பர் இருபத்தாறாம் நாள் இதழ்.

மருத்துவர் கு.சிவராமன் அவர்களின் தொடர் கட்டுரை, “ஆறாம் திணையிலிருந்து”:

‘திம்பக்கு’ சூழலிலும் விவசாயத்திலும் பெரும் மாற்றத்தைக் காட்டியுள்ள ஆந்திர அமைப்பு.  ‘தினையும் வரகும் பயிராக்கி பெருமளவில் பயன்படுத்திகிறார்களாமே?’ என்று நான் தேடிப் போன ஊர் இது.  திம்பக்கு பகுதிக்குள் நுழைந்ததும் அவர்கள் ஏற்படுத்தியிருந்த மாற்றம் பிரமிக்க வைத்தது. கிட்டத்தட்ட நூறு கிராமங்கள். ஏறத்தாழ முப்பதாயிரம் மக்களை வறண்ட விவசாயத்தில் இருந்து மீட்டு (இந்தியாவின் இரண்டாவது பெரிய மிக வறட்சி மாவட்டம் அனந்தப்பூர்1) அவர்கள் வாழ்வியலை உயர்த்தியதுடன், அருகில் உள்ள வறண்ட மூன்று மலைகளைப் பசுமைப் பூங்காவாக்கி இருக்கின்றனர் திம்பக்கு மக்கள்.  ஊரே தினையையும், ராகியையும் வரகையும்தான் மூன்று வேளையும் சாப்பிடுகிறது.  அங்கு ஓர் உணவு விடுதிக்குப் போனால் சாம்பார், ரசம், தயிர், கோவைக்காய் பொரியல் என்று முழுச்சாப்பாடும் தினை அரிசியில் போடுகிறார்கள்.  இன்று இந்தியா முழுவதும் அந்த மக்கள் இயற்கை விவசாயத்தில் எந்த ரசாயனக் கலப்பும் இல்லாத அந்த சிறு தானியத்தை மிகக் குறைவான, சரியான விலையில் விற்று தங்கள் வாழ்வை உயர்த்தி வருகின்றனர்.....

படிக்கப் படிக்க மன மகிழ்வையும், பிரமிப்பையும் ஏற்படுத்திய கட்டுரை இது.  இதை அனைவரும் படித்து மகிழவேண்டும், சிந்திக்க வேண்டும் என்பதற்காக ஒரு சிறு பகுதியை மட்டும் பதிகின்றேன்.  மொத்தத்தில் இந்தத் தொடர் கட்டுரை விடாமல் தொடர்ந்து படித்து மகிழ, பயன் பெற வேண்டிய ஒன்று.

மருத்துவர் சிவராமன் அவர்களுக்கும் ஆனந்தவிகடனுக்கும் எனது மனமார்ந்த நன்றிகளும், பாராட்டுக்களும்.