31 ஜூலை, 2010

நெல்லையப்பன் கவிதைகள்-70: விடுதலை


பொத்தென்று விழுந்தது மதில் சுவர்மேல்
பின்னிப் பிணைந்த குரங்கும் பாம்பும்
குரங்கின் உடலை இறுக்கியபடி பாம்பு,
பாம்பின் தலையோ குரங்குப் பிடியில்.

பிடிதளர்த்த முடியா மரணபயம் இரண்டிற்கும்;
"விட்டால் போதும்" மனநிலைக்கு வந்த பின்னும்
அதை உணர்த்த தெரியாமல் விழித்தன இரண்டும்.

மதிலின் மறுபுறம் கூக்குரலிடும் குரங்குகள்
"ஐயோ பாவம் பாம்பு" எனக் கதைக்கும்
பாம்பாட்டிக்கூட்டம் மதிலின் முன்புறம்.

வேண்டும் வேண்டும் விடுதலை வேண்டும்!
யாரிடமிருந்து யாருக்கு விடுதலையாம்?
பாம்பிடமிருந்து குரங்கிற்கா? குரங்கு பிடித்த பாம்பிற்கா?
ஒன்றின் அழிவுதான் மற்றதின் விடுதலையா?
இரண்டுக்குமான விடுதலை அங்கே சாத்தியமில்லையா?
யோசிக்க விரும்பவில்லை கு.கூட்டமும் பா.கூட்டமும்.

இன்றைய சிந்தனைக்கு-114:

திருப்போரூர்  நகரில்  பல  இடங்களில் சிந்தனையைத் தூண்டும்  பல வாசகங்கள் இதுபோல் எழுதி வைக்கப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது. 

அலெக்ஸ் பக்கம்-18: கைவண்ணம்-16

மனித மேம்பாட்டு அறிவியல் அமைப்பின் ஆங்கில இதழில் வெளியான ஒரு கவிதைக்காக  நண்பர்  அலெக்ஸ் வரைந்த படம்.  அனைவராலும் சிலாகிக்கப்பட்ட ஒரு படம்.  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-22:

என்புருகி  நெஞ்சம்  இளகிக்  கரைந்து
அன்புருவாய்  நிற்க  அலைந்தேன்  பராபரமே

யோக சித்தி-36: உலக வாழ்வு-2

ஆட்சி  பெற்றுள்ளே  அகில  விளையாட்டைக்
காட்சிபோற்  கண்டு  களி.

உன் உள்ளே,  உள்ளத்தில்  சுயாட்சி  பெறு.  உன்னை  நீ  அடக்கி  ஆள்வாயாக!  உன்  மனத்தை  வென்று  அடக்கு.  பிறகு  உலக  விளையாட்டை  நாடகக்காட்சி  போலக்  கண்டு  மகிழ்வுறு.      

29 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-17: கைவண்ணம்-15

நண்பர்  அலெக்ஸ்  வரைந்த மாமேதை டாக்டர் கென்ட் அவர்களது திருவுருவப்படம்.  நாங்கள் பெரிதும் போற்றும் ஹோமியோ மேதைகளில் ஒருவர் டாக்டர் கென்ட்.  அவரை ஹோமியோபதியின் தந்தை மாமேதை  டாக்டர் ஹானிமனுக்கு  அடுத்த இடத்தில்  வைத்துப் பெருமைப்படுவது ஹோமியோபதியர்களின் பழக்கம்.  காரைக்குடியில் கென்ட் விழா கொண்டாடியபோது அதற்காக அலெக்ஸ் வரைந்த படத்தின் 'அவுட்லைன்' இது.  முழுமையாக வரைந்த படம் கிடைக்காமல் போய்விட்டபடியால் இந்தக் கோட்டுச் சித்திரத்தை இங்கே பதிவு செய்கிறேன்.

கென்ட் அவர்களது உலகப் புகழ் பெற்ற மருந்து காண் ஏடு (Repertory) ஹோமியோபதியின் உயிர் நாடி.  அது மட்டுமல்ல,  ஹோமியோபதித்துறையில் எத்தனையோ புதிய மருந்துகளை அறிமுகம் செய்து, அவற்றின் மூலம் இன்றும் பல உயிர்களைக் குணப்படுத்த, பல உயிர்களைக் காக்க அவர் செய்த சேவை மகத்தானது.  அவர் ஒரு ஒப்பற்ற ஹோமியோ ஆசான்.  அவரது மற்ற சிறந்த நூல்களான ஹோமியோபதி தத்துவத்தைப் பற்றிய சிறப்புரைகள் (Lectures on Homeopathic Philosophy),  ஹோமியோபதி மருந்துகளைப் பற்றிய சிறப்புரைகள் (Lectures on Homeopathic Materia Medica) ஆகியவை இன்றும் ஹோமியோபதியர்களால் பெரிதும் போற்றப்படுபவை.

ஹோமியோபதிக்காகவே  வாழ்ந்து,  மறைந்தவர் அவர்.  அவரை இங்கே நினைவு கூர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.  -  சூரி  

தாயுமானவரின் பராபரக்கண்ணி-21:

ஈனந்தரும்  உடலம்  என்னதியான்  என்பதற
ஆனந்தம்  வேண்டி  அலைந்தேன்  பராபரமே    

யோக சித்தி-35: உலக வாழ்வு-1

தன்னியல்பாம்  தெய்வத்  தன்மை  அறியாக்கால்  
என்ன  பயன்  இப்பிறவியே

பிறவிப் பயனென்ன?  தனது இயல்பான, உண்மையான, தெய்வத்த்தன்மையை  உள்ளாழ்ந்து  அரிய வேண்டும்.  இல்லாவிடில் இந்த உயர்வான  மானிடப்  பிறவி கிடைத்தும்  பயனில்லாததாகும்.   

28 ஜூலை, 2010

இன்றைய சிந்தனைக்கு-113:

உழைப்பும், மகிழ்ச்சியும்  வாழ்நாளை  வளர்ப்பன - சிங் சௌ

அலெக்ஸ் பக்கம்-16: கைவண்ணம்-14

பிரபல  எழுத்தாளர்  கௌதம நீலாம்பரன்  அவர்கள்  நாங்கள் வருடாவருடம் நடத்தும் காரைக்குடி  புத்தகத் திருவிழாவில்  ஒரு வருடம், ஒரு நாள்  சிறப்பு  விருந்தினராக  வருகை புரிந்து, சிறப்புரையாற்றியும்,  எழுத்தாளர்-வாசகர் சந்திப்பு நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டு சிறப்பித்தார்.  அப்போது நண்பர் அலெக்ஸ் வரைந்த ஓவியம் இது.  கௌதம நீலாம்பரன் அவர்கள் அதைப் பாராட்டி  "நன்றி - வாழ்க வளமுடன்" என்று எழுதி தன் கையொப்பமிட்டுக் கொடுத்தார்.  அந்தப் படம்தான் நாம் மேலே காண்பது.  

நினைவலைகள் பின்னே ஓடுகிறது;  அன்று புத்தகத் திருவிழா நிகழ்ச்சிகள் முடிந்தபின் அவரை சிறப்புப் பேருந்தில் சென்னைக்கு வழியனுப்பக் காத்திருந்தபோது, நிறைய எண்ணங்களைப் பரிமாறிக்  கொண்டோம், குறிப்பாக ஆன்மீகச் சிந்தனைகளை. அப்போது அவர்,  "இவ்வளவு படித்திருக்கிறீர்கள், தெரிந்து வைத்திருக்கிறீர்கள்;   நீங்கள் ஏன் எழுதக் கூடாது" என்று என்னை எழுத ஊக்குவித்தார்.  அத்தோடு நில்லாமல் சென்னை திரும்பியபின் உற்சாகமூட்டிக் கடிதம் எழுதினார்.  'குங்குமச்சிமிழ்' என்ற இதழையும், இன்னொரு இதழையும் (பெயர் மறந்துவிட்டது, மன்னிக்கவும்) அனுப்பினார்.  மேலும்  நாங்கள்  புத்தகப் பிரியர்களுக்கான  கையேடு ஒன்றை வெளியிட எண்ணியிருந்த தருணம் அது.  அதற்கு 'தமிழில் வரலாற்றுப்  புதினங்கள்'  பற்றி ஒரு கண்ணோட்டமாக எழுதித் தரும்படி கேட்டிருந்தேன்.  அவர் உடனே அனுப்பி வைத்தார்.  ஆனால் பல்வேறு பிரச்சினைகள் காரணமாக அந்தக் கையேடு வராமலேயே போய்விட்டது.  அவருடைய நட்பை, அன்பைப் பற்றிக் கொள்ளாமல் நழுவ விட்டதை எண்ணி  இன்றும் வருந்துகிறேன் - சூரி 

தாயுமானவரின் பராபரக்கண்ணி-20:

முத்தாந்த  வீதி  முளரிதொழும்  அன்பருக்கே
சித்தாந்த  வீதிவரும்  தேவே  பராபரமே    

யோக சித்தி-34: உலகுயிர்-5

வேறுபாடெல்லாம்  விகற்ப  மன  மயக்காம்;
ஊறுபாடென்று  உதறித்  தள். 

மனிதனுக்கு  மனிதன்  வேறுபடுத்தும்  பிரிவினைகள்  எல்லாம்  விகற்பமுள்ள,  பிழையுள்ள  மனமயக்கமேயாகும்.  மனமயக்கத்தால் உண்டாகும்  இந்த  வேறுபாடுகள்  எல்லாம்  மனித சமுதாய  ஒற்றுமைக்கும்  முன்னேற்றத்திற்கும்  ஊறுபாடு  செய்வன,  இடையூறு செய்வன  என்று  உதறித்தள்ளு. 

26 ஜூலை, 2010

இன்றைய சிந்தனைக்கு-112:

சிந்தனையும்,  செயலும்  ஒன்றாகிவிட்டால்  வாழ்க்கையில்  வெற்றியை  எளிதில்  பெற்றுவிடலாம் - இராமதாசர்

அலெக்ஸ் பக்கம்-15: கைவண்ணம்-13


ஒருமுறை  காரைக்குடி  கம்பன் மணிமண்டபத்தில் நடந்த  கம்பன் விழாவில்  கலந்துகொள்ள  முனைவர் அறிவொளி அவர்கள் வந்திருந்தார்.  என்னைப்போல், ஏன் நம்மில் பலரைப்போல், நண்பர் அலெக்சும்  முனைவர் அறிவொளி அவர்களது பரம ரசிகர். அறிவொளியவர்கள் பேச்சில் மயங்காதவர் யார் இருக்க முடியும்?   மேடையில் அவர் வீற்றிருக்க,  பார்வையாளர் வரிசையிலிருந்து நண்பர் அலெக்ஸ் அவர்கள் ஒரு சில நிமிடங்களில் மேலே உள்ள  அறிவொளி அவர்களின் படத்தை வரைந்து, பின்னர் அதை அவரிடம் காட்டி, அவரது  வாழ்த்துக்களையும் பெற்றார்.  "மிக அருளுடை வாழ்க" என்று அறிவொளியவர்கள் படத்திலேயே எழுதிக் கையொப்பமிட்டுள்ளதைக்    காணலாம்.  -  சூரி     

தாயுமானவரின் பராபரக்கண்ணி-19:

போதாந்தப்  புண்ணியர்கள்  போற்றி  சயபோற்றியெனும் 
வேதாந்த  வீட்டில்  விளக்கே  பராபரமே

யோக சித்தி-33: உலகுயிர்-4

பெண்ணின்றி  ஆணில்லை;  ஆணின்றிப்  பெண்ணில்லை;
எண்ணிருவர்  சேர்ந்தே  இகம்.  

இறை இயற்கை, சிவம் சக்தி, முதல்வன்  ஆணை,  பரம்பொருள் பராசக்தி என்று தெய்வத் தத்துவங்கள் இனிபிரியாத  இரண்டாயிருக்கின்றன.  அதுபோலவே,  உலகிலும் எல்லாத்  தோற்றங்களும்  ஆண்-பெண்ணாக  விளங்குகின்றன.  ஆண்பெண்  என்னும்  இரண்டு தத்துவங்களும்  கூடித்தான்  இவ்வுலக  வாழ்வு  நடக்கிறது.  பென்னில்லாவது  ஆணாவது,  ஆணில்லாது  பெண்ணாவது  உண்டாவதில்லை.  இரண்டும் பிரிந்தால்  வாழ்வுமில்லை; உலகுமில்லை.   

20 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-14: கைவண்ணம்-12

ஹோமியோ  மேதை  டாக்டர்  கான்ஸ்டன்டைன் ஹெரிங் அவர்களது  இந்தத் திருவுருவப் படம்    நண்பர்  அலெக்ஸ் அவர்களது கைவண்ணத்தில் உருவானது.    காரைக்குடி  ஹெல்த்  இன்ஸ்டிட்யூட்டில்  ஹெரிங் தினம் கொண்டாட்டத்திற்காக இதை அவர் உருவாக்கினார்.  வந்திருந்த ஹோமியோ அன்பர்கள்  அனைவருக்கும்  இப்படத்தின்  ஜெராக்ஸ்  பிரதி  ஒன்று வழங்கப்பட்டது.  விழாவில் பல சிறப்பு அம்சங்கள் நிறைந்த்திருந்தன.  ஹோமியோபதியின்  தூண்களில் ஒருவர் என்று போற்றப்படும்  ஹெரிங் அவர்களது சாதனைகள்  கணக்கில் அடங்கா.  அவர்  ஆய்ந்தறிந்த  எத்தனையோ  மருந்துகளில் குறிப்பாக  லாக்கசிஸ்  என்ற  மருந்தைக் குறிப்பிடலாம்.  எண்ணிலடங்கா உயிர்களைக்  காத்த  அந்த  மருந்து  இன்றும் பலரைக்  காத்து வருகிறது.  தன் உயிரைப் பணயம் வைத்து  தென் அமெரிக்காவில்  வாழும்  சுருக்குக்கு  என்ற  மிகக் கொடிய விஷப்  பாம்பின்  விஷத்தை  ஹோமியோ முறைப்படி பக்குவம் செய்து அருந்தினார்.  அதனால் அவருக்கு  பல பாதிப்புகள் ஏற்பட்டது.  உதாரணமாக  வாழ்நாள் இறுதிவரை  காலர் வைத்த சட்டையை அவரால் அணியமுடியவில்லை.  ஆனால் அந்த மருந்து ஹோமியோபதி பக்குவத்தில்  பல்லாயிரக்கணக்கான  உயிர்களை காத்துள்ளது,  இன்றும்  காத்து வருகின்றது.  மேலும் நோய் குணமாவதை அறிவதற்கான விதிகளை அவர் கண்டறிந்தார்.  அந்த விதிகள் இன்றும் அவர் பெயராலேயே வழங்கப்படுகிறது.  நோய்  குணமாவதின்  அறிகுறி, நோய்க் குறிகள் உள்ளிருந்து வெளியே வரும், முக்கிய உறுப்புகளிலிருந்து குறைந்த முக்கியம் வாய்ந்த உறுப்புகளுக்கு மாறும், உடம்பின் மேல் பகுதியிலிருந்து கீழ் நோக்கி  நோய்க்குறிகள் மாறும்.  இவை அனைத்தும்  நோயாளி  நோயிலிருந்து விடுபட ஆரம்பித்துவிட்டார் என்பதனை உறுதி செய்கின்றன. 

அந்த ஹெரிங் விழாவில் கலந்துகொள்ளும்  வாய்ப்பு எனக்கும் கிடைத்ததை எண்ணி மகிழ்கிறேன்.   அந்த நினைவுகள் இன்றும் பசுமையாக இருக்கின்றன, என்றும் இருக்கும்  -  சூரி    

தாயுமானவரின் பராபரக்கண்ணி-18:

சித்த  நினைவும்  செயும்செயலும்  நீயெனவாழ்   
உத்தமர்கட்  காண  உறவே  பராபரமே 

யோக சித்தி-32: உலகுயிர் -3

போக்கு  வரவற்ற  பூரனணிக்  கூடுதற்கே,
மீக்கூர்த்துச்  செல்லுமுயிர் மேல்.      

மீக்கூர்த்தலாவது  மேன்மேலும்  வளர்ச்சி  பெற்று  அறிவில்  முன்னேறல்.  இறப்பு, பிறப்பு, போக்குவரத்து இல்லாமல் தானே  தானாக  தற்பரானந்தனாக  விளங்கும்   பரிபூரணனான   இறைவனைக்  கலக்கவே  ஜீவாத்மா  அறிவு முதிர்ந்து  மேன்மேலும்  உயரச் செல்கிறது.    

18 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-13: கைவண்ணம்-11

தாயுமானவரின் பராபரக்கண்ணி-17:

ஓடும்  இருநதியும்  ஒன்றாகக்  கண்டவர்கள்  
நாடும்  பொருளான  நட்பான  பராபரமே.   

யோக சித்தி-31: உலகுயிர் -2

வினையளவே தோற்றம்;  விமலன்  அருளாலே  
அனைத்துயிரும்  வீடு  அடைதலாம்.  

வினையின்  அளவே  உயிர்கள்  உலகில்  பிறந்து  விளங்கும்.  வந்த  வினையைச்  செய்து, வினைத்தளையற்று,  இறைவன்  அருளால்  எல்லாவுயிர்களும்  கட்டுக்களினின்று  விடுதலை  பெறமுடியும்.   

16 ஜூலை, 2010

சூரியின் டைரி-21: வாழ்க்கைப்பயணம்

இந்த வாழ்க்கை ஒரு பயணம்.  உடலளவில் பார்த்தால் கூட  எவ்வளவு பிரமிப்பான பயணம் இது!  ஆனால்  உடல் அழிந்ததும்  இந்தப்  பயணம் முடிவதாக  நான்  நினைக்கவில்லை.  நம் அனைவரினுள்ளும்  ஒரு உறுபொருள் இருக்கிறது.  அது அழிவற்றது.  இது நமது முதல் பிறவியும் அல்ல,  கடைசிப் பிறவியும் அல்ல.  இன்னும் எத்தனை பிறவிகளோ!  அப்படிப் பார்த்தால் இந்தப் பயணம் இன்னும் பிரமிப்பாகிறது.

கீதையில் கண்ணன் கூறியதுபோல்,  நைந்த, நொந்த, இற்றுப்போன உடையை மாற்றுவதுபோல்,  ஆன்மா உடலை மாற்றிக் கொள்கிறது.  நாம்  உடல் என்று நினைப்பதாலேயே  எண்ணற்ற  துயரங்கள்.  நாம்  உடலல்ல அழிவற்ற  ஆன்மா  என்பதை உணர ஆரம்பிக்கும்போதே நமது துன்பங்களும், துயரங்களும் மறைய ஆரம்பிக்கின்றன.   

இந்த வாழ்க்கை ரசித்து அனுபவிக்கவேண்டிய ஒரு பயணம்.  

அலெக்ஸ் பக்கம்-12: கைவண்ணம்-10


இளவரசி  டயானா

தாயுமானவரின் பராபரக்கண்ணி-16:

வானமெல்லாங் கொண்ட  மவுனமணிப் பெட்டகத்துக்    
கான  பணியான  பராபரமே.  

யோக சித்தி-30: உலகுயிர் -1

ஒவ்வொரு  உயிரும்  உலகின்  வினைக்கணியாய்த் 
தெய்வம்  படைக்கும்  எனத்தேர்.

இறைவன்  ஒவ்வொரு  உயிரையும்,  உலகாலயத்தில்  நிறைவேரவேண்டிய  ஒரு  காரியத்திற்கு  அணியாகவே  படைக்கிறான்  என்றறிக.  

14 ஜூலை, 2010

அலெக்ஸ் பக்கம்-11: கைவண்ணம்-9

தாயுமானவரின் பராபரக்கண்ணி-15:

அன்பைப்   பெருக்கி  எனதாருயிரைக்  காக்கவந்த  
இன்பப்  பெருக்கே  இறையே  பராபரமே.   

யோக சித்தி-29: இயற்கை-5

இயற்றுவது  எல்லாம்  இயற்கையதைப்  பற்றிப்  
பயிற்றுக  வாழ்வைப்  பரிந்து.  

இயற்கை  இறைவனார்  அருள் விளக்கம்.  அதுவே  உலகில்  எல்லாத்  தொழில்களையும்  செய்கிறது.  ஒவ்வொருவருள்ளும்  இருந்து,  இயற்கை   'இப்படிச் செய்,  அப்படிச்  செய்'  என்று  தூண்டுகிறது.  அன்புடன் அதைப் பற்றி, அதன் வழியே  வாழ்வைப் பயிற்றுக; பழக்குக. 
 

சூரியின் டைரி-20: ஜவ்மிட்டாய்க்காரன்

சிறுவயதில் எவ்வளவோ குட்டிக்குட்டி  சந்தோஷங்கள்.  கவலை என்றால்  என்னவென்றே தெரியாத  அந்த  நாட்களில் குதியாட்டம், கும்மாளம்.  வாழ்க்கை எவ்வளவு எளிதாக இருந்தது! (பள்ளிக்கூடம் தவிர!  அது ஒரு கழுத்தறுப்பு மட்டும்தான்.  அதைச் சமாளித்துவிட்டால் வேறு பிரச்சினை இல்லை. அதிலும் எனக்கு எங்கள் டிரில் மாஸ்டரைக் கண்டால் நடுக்கம்)  குறிப்பாக  வீதியில்  விதம் விதமான தின்பண்டங்கள் வரும்.  பள்ளிக்கூடத்திற்கு அருகிலும் மிட்டாய்க்  கடைகள், அவற்றில் எத்தனையோவித ஆனந்தங்கள்!  இலந்தை அடை, குலேபகாவலி மிட்டாய்,  கொக்கோச்சு.  வாசலில் தினமும் வரும்  மிக்சர் வண்டி, அதில் விதம் விதமான தின்பண்டங்கள்.  அப்புறம்  ஜவ்மிட்டாய்.  திருவிழாக்காலங்களில் சொல்லவே வேண்டாம்.  ஆனால் இன்று அவற்றில் பல காணாமல் போய்விட்டன.  இன்றைய குழந்தைகளுக்கு அவற்றில் பல என்னவென்றே தெரியாமல் போய்விட்டது.  பதிலாக, இன்று  வேறு என்னென்னவோ விதம் விதமாக வந்துவிட்டது: ஐஸ் கிரீம், குர்குரே,  வகை வகையான சாக்லேட்டுகள் என்று வண்ண வண்ண பிளாஸ்டிக் கவர்களில்.

திண்டுக்கல்லில் அரசமரத்தடியில் பாட்டி விற்கும்  இலந்தை அடை, கொடுக்காப்பிளி, தேன் மிட்டாய்.  மதுரையில் நியூ சினிமா வாசலில்  ஒரு சிரட்டையில்  கடுகு, எண்ணெய்க்  கலவையை  நசுக்கி,  உப்பு, மிளகாய்த்தூள்  தூவி,  பொடியாக  நறுக்கிய  மாங்காய்த் துண்டுகளைக் கலந்து  விற்பவர் (இப்பொழுது நினைத்தாலும்  வாயில் எச்சில் ஊருகிறது), வாசலில் வரும்  சீத்தாப்பழம்.    


 ஜவ்மிட்டாய்க்காரர்  ஒருவர் எனக்கு நண்பர் என்று சொல்லலாம்.  ஒரு பெரிய கழியின் உச்சியில்  பாம்புபோல சுற்றிப்படர்ந்திருக்கும் மிட்டாய்.  அதிலிருந்து, சிறு பகுதியை லேசாக இழுக்க, இழுக்க வண்ண வண்ணமான  அந்தக் கலவை பல வடிவம் எடுக்கும்.  பையன்களுக்கு  கையில் கட்டிக்கொள்ள  கடிகாரம், சிறுமிகளுக்கு  கழுத்தில் நெக்லேஸ் என்று. ஆனால் எத்தனை பேருக்குக் கொடுத்தாலும்  அப்படியே இருக்கும்.  அளவே குறைவதே இல்லை.  எனக்கு ஆச்சரியமாக இருக்கும்.  அவரிடம் கேட்பேன் அதன் சூக்சுமத்தை.  சிரித்து மழுப்பி விடுவார்.  எவ்வளவு நாட்களுக்கு வரும்?  மாதக் கணக்கில்.  எப்படிப் பாதுகாப்பது?  பதில் சொல்லாமல் கண்ணைச் சிமிட்டிவிட்டுப் போய்விடுவார்.  பிசுபிசு என்று ஓட்டினாலும் அதன் மேல் தனி மோகம்.  இன்று பொடுசுகள் எல்லாம்  விலை உயர்ந்த உணமையான  கைக்கடிகாரங்களை கட்டிக்கொண்டு திரிவதால், இந்த மிட்டாய்க் கடிகாரம் இருந்திருந்தாலும் அவர்களுக்குப் பிடித்திருக்குமா என்று தெரியவில்லை.  

இன்றும் திருவிழாகளுக்கோ,  கிராமங்களுக்கோ  சென்றால்  எங்காவது  இவர்கள் தென்படுகிறார்களா என்று பார்ப்பேன்.  சில  முற்றிலுமாக காணாமல் போய்விட்டன.  அந்த ஜவ்மிட்டாய்க்காரர்கள்?  நான்  நினைக்கிறேன்,  அவர்களும், அவர்களது சந்ததியினரும்  டிவி சானல்களில்  மெகா  சீரியல்  நடத்தப் போய்விட்டார்கள் என்று.    

6 ஜூலை, 2010

சூரியின் டைரி-19: 'பாரத் பந்த்'

நேற்று, ஜூலை ஐந்தாம் நாள்,  பாரத் பந்த்  நடந்து முடிந்துவிட்டது.  பெட்ரோலியப் பொருட்களின் விலை உயர்வு ஒரு மக்கள் விரோத நடவடிக்கை; ஆட்சியாளர்கள் வெறும் கணக்குப்பிள்ளை போல செயல்படுகிறார்கள் என்பதை உறுதிப்படுத்தும் ஒரு செயல்;  பெட்ரோலியப் பொருட்கள் வாழ்வின் பல அங்கங்களோடு கலந்துவிட்ட ஒன்று;  அதன் விலையேற்றம் அனைத்து மக்களையும் பாதிக்கும், விலைவாசி மேலும் மேலும் உயர வழிவகுக்கும், சாதாரண மக்கள் கடும் துயருக்கு உள்ளாவர்;  அரசின் அனைத்து திட்டங்களையும் அர்த்தமற்றதாக்கிவிடும் என்பதும் அனைவரும் அறிந்ததே.  இருப்பினும் மறுபடியும் மறுபடியும் வேறு வழியில்லை என்று சொல்லி, பெரும் நஷ்டக் கணக்கைக்  காட்டி, விலையேற்றுவது ஆட்சியாளர்களின் திறமையின்மையையும், சிந்தனை வறட்சியையும்,  பொறுப்பற்றதன்மையையும் காட்டுகிறது.   இந்தப் பிரச்னைக்கு நிரந்தரமான,  மாற்றுத் தீர்வுகளைக் காண அரசு தீவிரமாக சிந்திப்பதாகவோ, முயல்வதாகவோ  தெரியவில்லை.

இது ஒருபுறமிருக்க,  எதிர்க்கட்சிகளின் செயல்பாடோ வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதாக இருக்கிறது.  அர்த்தமற்ற 'பந்த்கள்', போராட்டங்கள் இவற்றால் என்ன சாதிப்பதாக அவர்கள் நினைக்கிறார்கள்?   அவர்கள் போராட்டங்களால் எந்த மாற்றமும் நிகழ்வதில்லை.  நாங்களும்  இருக்கின்றோம் என்று தங்களைக் காட்டிக்கொள்ள மட்டுமே பயன்படுத்துகிறார்களா?   இந்த 'பந்தினால்'  பத்தாயிரம் கோடி  ரூபாய் இழப்பு என்று செய்தித் தாட்கள் கூறுகின்றன.  இவ்வளவு இழப்பை ஏற்படுத்தும், பொதுமக்களுக்கு பல வகைகளில்  இடையூறு விழைவிக்கும் இப்படி ஒரு போராட்டம் தேவைதானா? பேருந்துகள் உடைப்பு போன்ற பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிக்கும் செயல்களால் யாருக்கு லாபம்?  எதிர்ப்பைத் தெரிவிக்க  வேறு வழியே தெரியவில்லையா? இங்கும் கடுமையான சிந்தன வறட்சியும், பொறுப்பற்ற தன்மையுமே வெளிப்படுகிறது. 

பொதுமக்களைப் பொறுத்தவரை  அரசியல்வாதிகளால் - அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் சரி - துன்பம் மட்டுமே; நடக்கும் நிகழ்வுகள் இதனை உறுதி செய்கின்றன.