என் தாய்மொழி தமிழுக்கென்றே இவ்வலைப்பூ. எனது எண்ணங்கள், எனக்குப் பிடித்த கருத்துக்கள், கவிதைகள், கதைகள் மற்றும் என்னை ஈர்த்த செய்திகள், நாட்டுநடப்புகள், நம் அனைவரின் வாழ்வோடு தொடர்புடைய மற்றனைத்தும் இதில் இடம் பெறும். (பின்புலப் புகைப்படத்தை எடுத்த ஜோன் சல்லிவனுக்கும், அதை வழங்கிய பப்ளிக்-டொமைன்-ஃபோட்டோஸ்.காமிற்கும் நன்றி)
Click Me
9 பிப்., 2020
9 ஜன., 2019
மனம் நெகிழ வைத்தவை-5:
அறிந்து உணரமுடியாத அதிசயம், துயரம் எனப் பல பக்கங்களைத் தன்னோடு சுமந்துள்ளது, கோயம்பேடு பேருந்து நிலையம். இரவு நேரங்களில் பேருந்து நிலையத்தின் காத்திருப்போர் பகுதி முழுவதும் அவ்வளவு பேர் தங்கள் உறக்கத்துக்கு இடம்பிடித்திருக்கிறார்கள். உடலும் மனமும் மட்டுமே சொத்தாகப் படுத்திருக்கிறார்கள். பல குடும்பங்களுக்கு அதுதான் வீடு. குழந்தைகள் முதல் முதியோர் வரை கோயம்பேடு பேருந்து நிலையத்துக்குள் இருக்கும் உலகம் சொல்லும் கதைகள் மனதை உருகவைப்பவை.
வீட்டைக் காலி செய்து, மொத்த பொருள்களையும் சாக்கு மூட்டையில் கொண்டுவந்திருந்த ஒருவர், தலைக்குப் பக்கத்தில் வைத்துப் படுத்திருக்கிறார். மூட்டையைச் சந்தேகத்துடன் தட்டிப்பார்த்த காவலரிடம் “குக்கர்” என்கிறார். இன்னொருவர் துணியைத் தலையணையாக்கி தூங்க முயற்சி செய்கிறார். தலைமாட்டில் சாமி படத்துடன் ஒருவர். குழந்தைக்குப் பால் கொடுக்கும் பெண், காலுக்கு மருந்து போட்டவாறு ஒரு முதியவர். காவலர்கள் இங்கும் அங்குமாக வலம் வருகிறார்கள். வாக்கி டாக்கி அலைவரிசை மாறிக்கொண்டே இருக்கிறது. ஒரு குழந்தை விளையாடி கலைத்துப் போட்ட பொம்மைகளாக இருக்கிறது அந்த இடம். கோயம்பேட்டில் உள்ள ஆதரவற்ற மனிதர்களின் வயிற்றை விட கொசுக்களின் வயிறு நிரம்பியிருக்கிறது.
இரவு நேரப் பாதுகாப்பில் பெண் காவலர்கள் நான்கைந்து பேர் எப்போதும் இருப்பார்கள். அங்கிருக்கும் பெண்கள், குழந்தைகளை அழைத்து விசாரிப்பார்கள். பசியோடு உள்ள ஓரிருவருக்குச் சாப்பாடு வாங்கிக்கொடுக்கும் பெண் காவலர்களைப் பார்க்கலாம். பேருந்து நிலைய நுழைவு வாயிலில் காவல் பணியில் இருந்த 30 வயது பெண் காவலர் சரண்யா, “இங்கே தூங்கும் பலரும் வெளியூரிலிருந்து வந்தவங்கதான். காலையில் போய்டுவாங்க. சிலர் தங்கறதுக்கு இடமில்லாமல் படுத்துட்டு காலையில் போய்டுவாங்க. ஊரைவிட்டு ஓடி வந்தவங்க, குடும்பத்தால் நிராகரிக்கப்பட்டவங்க, வேலை தேடி வந்தவங்க எனப் பலரின் கதைகளைக் கேட்டால் தூக்கமே வராது. இப்போகூட சேலத்திலிருந்து வந்துட்டு, எங்கே போறதுன்னு தெரியாமல் அழுதுட்டிருந்த பொண்ணை விசாரிச்சேன். அம்மா அப்பா இல்லாமல், மாமா வீட்டில் வளர்ந்திருக்கா. அந்தப் பொண்ணுக்குப் படிக்க ஆசை. மாமாவால் படிக்கவைக்க முடியலை. சென்னைக்குக் கிளம்பி வந்துட்டாள். அண்ணாநகர் ஹோமில் விட்டுட்டு வர்றதுக்காக ஒரு காவலர் போயிருக்கார்'' என்றார்.
