31 டிச., 2009

திருவெம்பாவை-16:

முன்னிக்கடலை சுருக்கி எழுந்துடையாள்
என்னைத் திகழ்ந்து எம்மை ஆளுடையாள்
மின்னிப் பொலிந்து எம்பிராட்டி திருவடிமேல்
பொன்னம் சிலம்பின் சிலம்பித் திருப்புருவம்
என்னைச் சிலை குலவி நந்தம்மை ஆளுடையாள்
தன்னில் பிரிவிலா எம்கோமான் அன்பர்க்கு
முன்னியவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருளே
என்னப் பொழியாய் மழையேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-16:

நாயகனாய் நின்ற நந்தகோபனுடைய
கோயில் காப்பானே! கொடித்தோன்றும் தோரண
வாயில் காப்பானே! மணிக்கதவம் தாள்திறவாய்
ஆயர் சிறுமிய ரோமுக்கு அறைபறை
மாயன் மணிவண்ணன் நென்னலே வாய்நேர்ந்தான்
தூயோமாய் வந்தோம் துயிலெழப் பாடுவான்
வாயால் முன்னமுன்னம் மாற்றாதே யம்மா! நீ
நேய நிலைக்கதவம் நீக்கலோர் எம்பாவாய்.

30 டிச., 2009

திருவெம்பாவை-15:

ஒரொரு கால் எம்பெருமான் என்றென்றே
நம்பெருமான் சீரொருகால் வாய் ஓவாள்
சித்தம் களிகூர நீரொருகால் ஓவா
நெடுந்தாரை கண்பனிப்ப பாரொருகால் வந்து
அணையாள் விண்ணோரைத் தான் பணியாள்
பேரரையற்கு இங்ஙனே பித்தொருவர் ஆமாறும்
ஆரொருவர் இவ்வண்ணம் ஆட்கொள்ளும் வித்தகர் தாள்
வார் உருவப் பூண்முலையீர் வாயார நாம்பாடி
ஏர் உருவப்பூம்புனல் பாய்ந்தாடலோர் எம்பாவாய்.

திருப்பாவை-15:

எல்லே இளங்கிளியே! இன்னும் உறங்குதியோ!
சில்லென்று அழையேன்மின் நங்கைமீர்! போதருகின்றேன்
வல்லையுன் உன் கட்டுரைகள் பண்டேயுன் வாயறிதும்
வல்லீர்கள் நீங்களே நானேதான் ஆயிடுக
ஒல்லை நீ போதை உனக்கென்ன வேறுடையை
எல்லாரும் போந்தாரோ? போந்தார் போந்து எண்ணிக்கொள்
வல்லானை கொன்றானை மாற்றாரை மாற்றழிக்க
வல்லானை மாயனைப் பாடலோர் எம்பாவாய்.

திருவெம்பாவை-14:

காதார் குழையாடப் பைம்பூண் கலனாடக்
கோதை குழலாட வண்டின் குழாம் ஆட
சீதப்புனலாடிச் சிற்றம்பலம் பாடி
வேதப் பொருள்பாடி அப்பொருளா மாபாடி
சோதி திறம்பாடி சூழ்கொன்றைத் தார்பாடி
ஆதி திறம்பாடி அந்தமா மாபாடி
பேதித்து நம்மை வளர்ந்தெடுத்த பெய்வளை தன்
பாதத் திறம்பாடி ஆடேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-14:

உங்கள் புழைக்கடைத் தோட்டத்து வாவியுள்
செங்கழுநீர் வாய்நெகிழ்ந்து ஆம்பல் வாய் கூம்பின காண்
செங்கல் பொடிக்கூறை வெண்பல் தவத்தர்
தங்கள் திருக்கோவில் சங்கிடுவான் போதந்தார்
எங்களை முன்னம் எழுப்புவான் வாய்பேசும்
நங்காய்! எழுந்திராய் நாணாதாய் நாவுடையாய்!
சங்கோடு சக்கரம் ஏந்தும் தடக்கையன்
பங்கயக் கண்ணானை பாடலோர் எம்பாவாய்.

28 டிச., 2009

திருவெம்பாவை-13:

பைங்குவளைக் கார் மலரால் செங்கமலப் பைம்போதால்
அங்கங் குருகினத்தாற் பின்னும் அரவத்தால்
தங்கள் மலங்கழுவு வார்வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்கோனும் போன்றிசைந்த
பொங்கு மடுவிற் புகப்பாய்ந்து பாய்ந்து
நம் சங்கஞ் சிலம்பச் சிலம்பு கலர்ந்தார்ப்பக்
கொங்கைகள் பொங்கக் குடையும் புனல் பொங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடு ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை-13:

புள்ளின்வாய் கீண்டானை பொல்லா அரக்கனை
கிள்ளிக் களைந்தானைக் கீர்த்திமை பாடிப்போய்
பிள்ளைகள் எல்லாரும் பாவைக் களம்புக்கார்
வெள்ளி எழுந்து வியாழம் உறங்கிற்று
புள்ளும் சிலம்பின காண் போதரிக் கண்ணினாய்!
குள்ளக் குளிரக் குடைந்துநீர் ஆடாதே
பள்ளிக்கிடத்தியோ! பாவாய்! நீ நன்னாளால்
கள்ளம் தவிர்த்து கலந்தேலோர் எம்பாவாய்.

27 டிச., 2009

திருவெம்பாவை-12:

ஆர்த்த பிறவித் துயர்கெடநாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற் றில்லைச் சிற்றம்பலத்தே தீயாடும்
கூத்தன்இவ்வானும் குவலயமும் எல்லாமும்
காத்தும் படைத்தும் கரந்தும் விளையாடி
வார்த்தையும் பேசி வளைசிலம்ப வார்கலைகள்
ஆர்ப்பரவம் செய்ய அணி குழல்மேல் வண்டார்ப்பப்
பூத்திகழும் பொய்கை குடைந்துஉடையான் பொற்பாதம்
ஏத்தி இருஞ்சுனைநீர் ஆடேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-12:

கனைத்திளங் கற்றெருமை கன்றுக் கிரங்கி
நினைத்து முலைவழியே நின்றுபால் சோர
நனைத்தில்லம் சேறாக்கும் நற்செல்வன் தங்காய்!
பனித்தலை வீழநின் வாசல் கடைப்பற்றிச்
சினத்தினால் தென்னிலங்கைக் கோமானைச் செற்ற
மனத்துக் கினியானைப் பாடவும்நீ வாய்திறவாய்;
இனித்தான் எழுந்திராய்; ஈதென்ன பேருறக்கம்!
அனைத்தில்லத் தாரும் அறிந்தேலோ ரெம்பாவாய்!

26 டிச., 2009

திருவெம்பாவை-11:

மொய்யார் தடம் பொய்கை புக்கு முகேர் என்னக்
கையால் குடைந்து குடைந்து உன் கழல்பாடி
ஐயா வழியடியோம் வாழ்ந்தோம் காண்
ஆரழல் போல் செய்யா! வெண்ணீறு ஆடி! செல்வா!
சிறு மருங்குல் மையார் தடங்கண் மடந்தை மணவாளா!
ஐயா! நீ ஆட்கொண்டருளும் விளையாட்டில்
உய்வார்கள் உய்யும் வகையெல்லாம் உய்ந்தொழிந்தோம்
எய்யாமல் காப்பாய் எமையேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-11:

கற்றுக் கறவைக் கணங்கள் பலகறந்து
செற்றார் திறலழியச் சென்று செருகச் செய்யும்
குற்றமொன்றில்லாத கோவலர் தம் பொற்கொடியே
புற்றரவு அல்குல் புனமயிலே போதராய்
சுற்றத்துத் தோழிமார் எல்லாரும் வந்துநின்
முற்றம் புகுந்து முகில்வண்ணன் பேர்பாட
சிற்றாதே பேசாதே செல்வப்பெண்டாட்டி! நீ
எற்றுக்கு உறங்கும் பொருளேலோர் எம்பாவாய்.

25 டிச., 2009

திருவெம்பாவை-10:

பாதாளம் ஏழினுங்கீழ் சொற்கழிவு பாதமலர்
போதார் புனைமுடியும் எல்லாப் பொருள்முடிவே
பேதை ஒருபால் திருமேனி ஒன்றல்லன்
வேதமுதல் விண்ணோரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருதோழன் தொண்டருளன்
கோதில் குலத்தரன்றன் கோயிற்பிணாப் பிள்ளைகாள்
ஏதவநூர் ஏதவன்பேர் ஆருற்றார் ஆரயலார்
ஏதவனைப் பாடும் பரிசேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-10:

நோற்றுச் சுவர்க்கம் புகுகின்ற அம்மனாய்
மாற்றமும் தாராரோ வாசல் திறவாதார்
நாற்றத் துழாய்முடி நாராயணன் நம்மால்
போற்றப் பறைதரும் புண்ணியனால், பண்டொருநாள்
கூற்றத்தின் வாய்வீழ்ந்த கும்பகருணனும்
தோற்றும் உனக்கே பெருந்துயில்தான் தந்தானோ
ஆற்ற அனந்தல் உடையாய்! அருங்கலமே!
தேற்றமாய் வந்து திறவேலோ ரெம்பாவாய்.

24 டிச., 2009

சென்னைப் புத்தகக் கண்காட்சி

புதிய புத்தகம் பேசுது இதழ் என் கைக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் வந்தது. புரட்டியதும் முதலில் கண்ணில் பட்டது 33-வது சென்னைப் புத்தகக் கண்காட்சி பற்றிய செய்திதான். டிசம்பர் 30-ம் தேதி முதல் ஜனவரி 10-ம் தேதி வரை செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேனிலைப்பள்ளியில் நடைபெறவிருக்கிறது. நானும் எத்தனையோ ஆண்டுகளாக சென்னைப் புத்தகக் கண்காட்சியைக் கண்டு மகிழ வேண்டும் என்று ஏங்கியிருக்கிறேன். ஆனால் இது இன்றுவரை நிறைவேறவில்லை. ஜனவரி 6-ம் தேதி சென்னைக்கு வரும் வாய்ப்பிருக்கிறது. பதிப்பாள நண்பர்கள், எழுத்தாள நண்பர்கள் ஆகியோரைப் பார்க்கும் வாய்ப்பும் இருக்கிறது. எல்லாம் சரியாக அமைந்தால் இந்த முறையாவது கண்டு மகிழலாம், பார்க்கலாம்.

திருவெம்பாவை-9:

முன்னைப் பழம் பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்துமப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்ற உன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எங்கணவ ராவார் அவருகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணிசெய்வோம்
இன்ன வகையே எமக்கெங்கோன் நல்குதியேல்
என்ன குறையு மிலோமேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-9:

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழத் துயிலணை மேல் கண்வளரும்
மாமன் மகளே! மணிக் கதவம் தாள் திறவாய்
மாமீர்! அவளை எழுப்பீரோ? உன் மகள்தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்றேலோர் எம்பாவாய்.

23 டிச., 2009

திருவெம்பாவை-8:

கோழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் வெண்சங்கு எங்கும்
கேழில் பரஞ்சோதி, கேழில் பரங்கருணை
கேழில் விழுப்போருட்கள் பாடினோம் கேட்டிலையோ
வாழி ஈதென்ன உறக்கமோ வாய் திறவாய்
ஆழியான் அன்புடைமை ஆமாறும் இவ்வாறோ
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவனை
ஏழை பங்காளனையே பாடு, ஏலோர் எம்பாவாய்.

திருப்பாவை-8:

கீழ்வானம் வெள்ளென் ரெருமை சிறுவீடு
மேய்வான் பரந்தனகான்! மிக்குள்ள பிள்ளைகளும்
போவான் போகின்றாரைப் போகாமல் காத்துன்னைக்
கூவுவான் வந்துநின்றோம், கோது கழலுடைய
பாவாய்! எழுந்திராய்! பாடிப்பறை கொண்டு
மாவை பிளந்தானை மல்லரை மாட்டிய
தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்
ஆவாவென்று ஆராய்ந்த தருளேலோ ரெம்பாவாய்.

22 டிச., 2009

திருவெம்பாவை-7:

அன்னே யிவையுஞ் சிலவோ பல அமரர்
உனனற் கரியான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் கேட்பச் சிவனென்றே வாய் திறப்பாய்
தென்னா என்னா முன்னந் தீசேர் மெழுகொப்பாய்
என்னானை என்னரையன் இன்னமுதென் றெல்லோமும்
சொன்னோங்கேள் வெவ்வேறாய் இன்னந் துயிலுதியோ
வன்னெஞ்சப் பேதையர் போல் வாளா கிடத்தியால்
என்னே துயிலின் பரிசேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-7:

கீசுகீசு என்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து
பேசின பேச்சரவம் கேட்டிலையோ? பேய்ப் பெண்ணே!
காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து
வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்
ஓசை படுத்த தயிர் அரவம் கேட்டிலையோ?
நாயகப் பெண்பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி
கேசவனைப் பாடவும் நீ கேட்டே கிடத்தியோ?
தேசம் உடையாய்! திறவேலோர் எம்பாவாய்.

21 டிச., 2009

திருவெம்பாவை-6:

மானே நீ நென்னலை நாளை வந்து உங்களை
நானே எழுப்புவன் என்றலும் நாணாமே
போனதிசை பாராய் இன்னம் புலர்ந்தின்றோ
வானே நிலனே பிறவே அறிவரியான்
தானே வந்து எம்மைத் தலையளித்து ஆட்கொண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்தோர்க்கு உன் வாய் திறவாய்
ஊனே உருகாய் உனக்கே உறும் எமக்கும்
ஏனோர்க்கும் தம் கோனைப் பாடேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-6:

புல்லும் சிலம்பின காண்
புள்ளரையன் கோயிலில்
வெள்ளை விளிசங்கின் பேரரவம்
கேட்டிலையோ?
பிள்ளாய் எழுந்திராய்! பேய்முலை நஞ்சுண்டு
கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி
வெள்ளத்து அரவில் துயிலமர்ந்த வித்தினை
உள்ளத்துக் கொண்டு
முனிவர்களும் யோகிகளும்
மெல்ல எழுந்து அரியென்ற பேரரவம்
உள்ளம் புகுந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்.

20 டிச., 2009

திருவெம்பாவை-5:

மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்
போலறிவோம் என்றுள்ள பொக்கங்களே பேசும்
பாலூறு தேன்வாய்ப் படிறீ கடைதிறவாய்
ஞாலமே விண்ணே பிறவே அறிவறியான்
கோலமும் நம்மை ஆட்கொண்டருளிக் கோதாட்டும்
சீலமும் பாடிச் சிவனேயென்று
ஓலம் இடினும் உணராய்காண்
ஏலக்குழலி பரிசேலோர் எம்பாவாய்.

திருப்பாவை-5:

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை
தூய பெருநீர் யமுனைத் துறைவனை
ஆயர் குலத்தினில் தோன்றும் அணிவிளக்கை
தாயைக் குடல்விளக்கம் செய்த தாமோதரனை
தூயோமாய் வந்து நாம் தூமலர்த் தூவித்தொழுது
வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்க
போய பிழையும் புகுதருவான் நின்றனவும்
தீயினில் தூசாகும் செப்பேலோர் எம்பாவாய்.

19 டிச., 2009

பயணங்கள்-6: "திருக்குற்றாலம்" (படங்கள் மட்டும்)



































பயணங்கள்-5: "திருக்குற்றாலம்"

"ஆயிரம் கண்போதாது வண்ணக்கிளியே, குற்றால அழகை நாம் காண்பதற்கு வண்ணக்கிளியே" என்ற சி.எஸ்.ஜெயராமனின் குரல் இன்றும் செவியில் ஒலிக்கிறது. சென்ற ஆகஸ்ட் மாத இறுதியில் ஒரு கிரகப்ரவேசம், ஒரு கல்யாணம் இவற்றைச் சாக்காக வைத்துக்கொண்டு திருக்குற்றாலம் சென்று வந்தேன் நெல்லையப்பனுடன். என்னவோ தெரியவில்லை இதுவரை அதைப்பற்றி எழுத முடியாமல் தள்ளிக்கொண்டே போய்விட்டது. "Better Late Than Never".

"திங்கள் முடி சூடும் மலை, தென்றல் விளையாடும் மலை" என்று தென்பொதிகை மலை பற்றி நிறையச் சொல்லலாம். திருகூட ராசப்பக் கவிராயரின் "திருக்குற்றாலக் குறவஞ்சி" என்று என்னென்னவோ நினைவில் வந்தது.

நெல்லையில் வாழ்ந்த காலத்தில் நினைத்தால் குற்றாலம். சீசன் காலங்களில் குடும்பத்துடன் குற்றாலம் சென்று ஒரு வாரம் வரை தங்கி மகிழ்ந்திருக்கிறோம். தற்போது பல ஆண்டுகளுக்குப்பின் குற்றாலம் செல்லும் வாய்ப்புக் கிட்டியது.

தங்குவதற்கு வசதியாக கீழ்த் தளத்திலேயே நல்ல அறை கிடைத்தது. பொருட்களையெல்லாம் அறையில் போட்டுவிட்டு நானும் நெல்லையும் சுற்றக் கிளம்பிவிட்டோம்.

"உற்றாரை யான்வேண்டேன் ஊர்வேண்டேன் பேர்வேண்டேன்
கற்றாரை யான்வேண்டேன் கற்பனவும் இனியமையுங்
குற்றாலத் தமர்ந்துறையுங் கூத்தா உன்குரைகழற்கே
கற்றாவின் மனம் போலக் கசிந்துருக வேண்டுவனே"

எனக் குற்றாலநாதரை இறைஞ்சி மாணிக்கவாசகர் பாடிய பாடல் கூத்தர் கோவில் வாசலில் கண்ணில் பட்டது.

மெயின் ஃ பால்ஸ் எனும் முக்கிய அருவியைச் சுற்றிவந்தோம். பின் ஐந்தருவிப் பாதையில் காலாற நடந்தோம். எழில் கொஞ்சும் இயற்கை அழகைச் சொல்லி மாளாது. எனது கேமெராவில் இஷடப்படி சுட்டுத்தள்ளினேன்.

மறுநாள் விசுவும் எங்களோடு சேர்ந்துகொண்டான். அப்புறம் கேட்பானேன். ஐந்தருவிக்குச் சென்று குளித்தோம். அங்கேயும் படங்கள்.

குற்றாலக் கடைவீதியில் நிறைய பொருட்கள். வீட்டிற்கு வேண்டுவன, குறிப்பாக ஜாதிக்காய் ஊறுகாய், வாங்கினோம். எனக்குத் தெரிந்து ஜாதிக்காய் ஊறுகாய் வேறெங்கும் கிடைப்பதில்லை. மேலும் சுவையான உணவு.
முன்னிரவில் அறையில் அரட்டைக் கச்சேரி.

அடுத்த நாள் மனமின்றி குற்றாலத்தைவிட்டு ஊருக்குக் கிளம்பினோம். குற்றாலத்தில் எடுத்த படங்களில் சிலவற்றை மட்டும் மேலே தனியே பதிவு செய்துள்ளேன்.

திருவெம்பாவை-4:

ஒள்நித் திலநகையாய் இன்னம் புலர்ந்தின்றோ
வண்ணக் கிளிமொழியார் எல்லாரும் வந்தாரோ
எண்ணிக் கொடுள்ளவா சொல்லுகோம் அவ்வளவும்
கண்ணைத் துயின்றவமே காலத்தைப் போக்காதே
விண்ணுக் கொருமருந்தை வேத விழுப்பொருளை
கண்ணுக்கினியானை பாடிக் கசிந்துள்ளம்
உள்நெக்கு நின்றுருக யாம்மாட்டோம் நீயேவந்
தெண்ணிக் குறையில் துயிலேலோர் எம்பாவாய்.