அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அஞ்சலி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

21 டிச., 2025

பிரபஞ்சன் நினைவு நாள் அஞ்சலி

                                         🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பிரபஞ்சன் நினைவு தினம்: டிசம்பர் 21
................................
*எழுத்தாளர் பிரபஞ்சன்*
*திருப்பூர் கிருஷ்ணன்*
................................
   *பிரபஞ்சன் நெற்றியில் புருவங்களுக்கிடையே திருநீறு இட்டாற்போல் ஒரு சின்னத் தழும்பிருக்கும். நன்கு உடையணிந்து வசீகரமாக வலம் வருவார். 

   உரையாடலுக்கு உகந்தவர். எதிராளி பேசுவதைக் கவனமாகக் கேட்டு அன்போடு பதிலளிப்பார். 

  இலக்கியம் குறித்துத் தனிப்பட்ட முறையிலும், பொது மேடைகளிலும், யாராவது சந்தேகம் கேட்டால் பொறுப்போடு பதில் சொல்வார். 

  ஒருவர் தன்னைக் கேள்வி கேட்பது, தான் செய்த பாக்கியம் என எண்ணுவதுபோல் இருக்கும் அவர் பதில் சொல்லும் பாணி. 

  தன் தவறுகளை ஒப்புக்கொள்ள அவர் தயங்கியதில்லை. தாம் எழுதிய ஒரு சரித்திர நாவலின் முன்னுரையில், தமிழில் சரியான சரித்திர நாவல் இல்லை என்ற வசை தன்னால் ஒழிந்தது என்பதுபோல அகம்பாவமாக அவர் குறிப்பிட்டிருந்தார். 

  சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை டேக் மையத்தில் நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒரு வாசகி அந்த வாக்கியம் குறித்துச் சலிப்போடு கேள்வி கேட்டதும்,  தான் தற்பெருமையோடு அப்படி எழுதியது தவறுதான் என மேடையிலேயே ஒப்புக் கொண்டுவிட்டார். 

  எழுத்தாளர்களின் தற்பெருமை வாசகர்களுக்கு எரிச்சலூட்டுகிறது என்பதையும், தன்னைப் பற்றித் தன் எழுத்துத்தான் பேச வேண்டுமே தவிரத் தான் பேசக் கூடாது என்பதையும் போகப் போக அவர் புரிந்துகொண்டார். 

  கணையாழி கி. கஸ்தூரிரங்கன் தாம் தினமணிகதிர் ஆசிரியராக இருந்த காலகட்டத்தில், பிரபஞ்சனின் `மானுடம் வெல்லும், வானம் வசப்படும்` ஆகிய மிக நீண்ட தொடர்கதைகளை வாங்கி வெளியிட்டார். மணியம் செல்வனின் அழகிய ஓவியங்களோடு அவை வெளியாகி எண்ணற்ற வாசகர்களை ஈர்த்தன. 

  அந்தத் தொடர்கள் வெளிவரும் தருணத்தில் நான் தினமணிகதிர் துணையாசிரியனாக இருந்தேன். பிரபஞ்சனின் எழுத்தை அவர் கையெழுத்திலேயே சுடச்சுடப் படித்து ரசித்த அனுபவம் மறக்க இயலாதது. 

  நடன மங்கைகளைப் பற்றி எழுதும்போது அவர் பேனாவே நாட்டியமாடுவது போல் தோன்றும். அப்படி ரசித்து ரசித்து எழுதுவார். அவர் முறையாகத் தமிழ் கற்றவர் என்பதை அவர் கையாளும் உவமைகள் புலப்படுத்தும். 

 தினமணிகதிர் ஒரு காலத்தில் ஒரே எழுத்தாளரின் ஐந்து சிறுகதைகளைக் கேட்டு வாங்கி அடுத்தடுத்து வெளியிட்டுப் பெருமைப்படுத்தியது. அதுவும் கஸ்தூரிரங்கன் ஆசிரியராக இருந்தபோது நடந்ததுதான். 

  அப்படியான ஐந்து கதைகளை சுஜாதா, தருமூ சிவராமூ, ம.வே. சிவகுமார் போன்றோர் எழுதினார்கள். அந்த வரிசையில் பிரபஞ்சன் எழுதிய ஐந்து கதைகளும் முத்து முத்தானவை. 

  அவர் சுயமாக எழுதிய எழுத்துக்கள் மட்டுமல்ல, அவர் தொகுத்த பிறர் எழுத்துக்களும் கூட அவரது மேதைமையைப் பேசுபவை. ஆர். சூடாமணியின் சிறுகதைகளிலிருந்து ஆகச்சிறந்த கதைகளைத் தேடித் தொகுத்திருக்கிறார்.

  `புதுவைச் சிறுகதைகள்` என்ற தலைப்பில் அவர் தொகுத்த இரண்டு தொகுப்புக்களும் கூட முக்கியமானவை. 

   பாரதியாருக்கு தலித் மக்கள் மீதிருந்த அன்பைப் புலப்படுத்தும் வகையில் பாரதி வசந்தனால் எழுதப்பட்ட `தம்பலா` என்ற சிறுகதை உள்படப் பல வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கதைகள் அத்தொகுப்பை மேன்மைப்படுத்துகின்றன. (மிகச் சிறந்த எழுத்தாளரான பாரதி வசந்தன் காலமாகி விட்டார்.)

 புதுச்சேரியில் நடந்த `புதுவைச் சிறுகதைகள்` தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவிற்கு என்னைப் பேச அழைத்தார். 

   அப்போது கேந்திரிய வித்யாலயா ஆசிரியையான என் மனைவி பணிநிமித்தம் பூனாவில் இருந்ததால் நானும் பூனாவில் சிறிதுகாலம் இருந்தேன். அங்கிருந்து புதுச்சேரி வந்து வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு பேசிவிட்டு, பின் பூனாவுக்குத் திரும்பிச் சென்றேன். 

  அடிக்கடிப் பிரபஞ்சனைச் சந்தித்துக் கொண்டிருந்த நான், கொஞ்சகாலம் சந்திக்காமல் இருந்து பின் மீண்டும் அவரைச் சந்தித்த தருணம் அது. 

   என் கைகளைப் பற்றிக்கொண்டு தழதழப்போடு அவர் பேசியபோது நான் அடைந்த நெகிழ்ச்சி விவரிக்க இயலாதது. 

  நான் அவர் மேல் செலுத்திய அன்பையும் அவர் எழுத்தின்மேல் கொண்டிருந்த மரியாதையையும் அவர் புரிந்துகொண்டிருந்தார். 

  முருங்கை மரத்தை மையமாக்கி எழுதப்பட்ட `பிரும்மம்` என்ற அவரின் கணையாழிக் கதை என் தாயாருக்கு மிகவும் பிடித்த கதை. 

   என் தாயார் அவரிடம் தொலைபேசியில் தொடர்புகொண்டு அந்தக் கதையை வெகுவாகப் பாராட்டினார். அந்தக் கதையை இலக்கியச் சிந்தனையில் மாதப் பரிசுக்காக நான் தேர்வு செய்தேன். 

  பிறகு அதே கதை முதுபெரும் எழுத்தாளர் கரிச்சான்குஞ்சு அவர்களால் ஆண்டுப் பரிசிற்காகவும் தேர்வானபோது என் தாயார் அடைந்த மகிழ்ச்சி அளவிடற்கரியது. 

   தமிழின் மிகச் சிறந்த சிறுகதைகள் என்று சிலவற்றைத் தொகுத்தால் அந்தத் தொகுப்பில் கட்டாயம் இடம்பெறக் கூடிய கதை அது.  

  எழுத்து, பேச்சு இரண்டிலும் திறமைபெற்ற சிலரில் அவரும் ஒருவர். திருத்தமான உச்சரிப்பில் பகுத்தும் தொகுத்தும் சபையைக் கட்டுவது மாதிரி ஒரு மணிநேரத்திற்கும் மேல் பேசக் கூடியவர். அவர் மேடைப் பேச்சில் கொஞ்சம் ஜெயகாந்தன் சாயல் தென்படும். 

  அவரும் நானுமாகப் பல மேடைகளில் இணைந்து பேசியிருக்கிறோம். பேச்சின் பொருட்டாக காரிலும் ரயிலிலும் பேருந்திலும் அவரோடு பயணம் செய்திருக்கிறேன். பயண நேரங்களில் அவரோடு பேசிக்கொண்டே செல்வது சுவாரஸ்யமாக இருக்கும். 

  அவர் ஓயாத படிப்பாளி. முன்னோடிகளின் தற்கால இலக்கியம் முழுவதையும் கரைத்துக் குடித்தவர். தி. ஜானகிராமனின் `மோகமுள்` தொடங்கிப் பழைய அழியாத காவியப் படைப்புகள் குறித்து அவருடன் பேசுவதென்பது ஒரு தனி ஆனந்த அனுபவம். 

  தேடிவரும் நண்பர்களை மிகவும் மதிப்பார். உற்ற நண்பர்களை அவரும் தேடிச் செல்வார். நட்பைப் போற்றுவதும் நண்பர்களோடு உரையாடுவதுமாகவே அவரது நேரங்கள் கழிந்தன. 

  தொடர்கதை அத்தியாயத்தைக் கொடுப்பதற்காகவோ என்னைச் சந்திக்கவென்றோ அவர் கதிர் அலுவலகம் வருவதுண்டு. மாலை ஐந்து மணிக்குமேல் எக்ஸ்ப்ரஸ் கான்டீனில் நெடுநேரம் நாங்கள் பேசிக் கொண்டிருப்போம். 

  சென்னை பீட்டர்ஸ் காலனியில் அவர் வசித்தபோது நான் அங்கு சென்று அவரைச் சந்தித்து மகிழ்ந்திருக்கிறேன். 

   புதுவைப் பல்கலையில் நான் முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டபோது பலமுறை அடுத்தடுத்துப் புதுவை செல்வேன். அப்போதெல்லாம் கி.ரா.வையும் பிரபஞ்சனையும் கொஞ்ச காலம் புதுச்சேரியில் வசித்த இந்திரா பார்த்தசாரதியையும் நான் சந்திக்காமல் இருந்ததில்லை. 

  பிரபஞ்சனின் மனைவி, சகோதரி பிரமிளா ராணி, நான் அவர் வீட்டுக்குச் செல்லும்போதெல்லாம் சாப்பிடச் சொல்லி அன்போடு உபசரிப்பார். 

   என்னைப் பார்த்தவுடன், நான் சைவ சாப்பாட்டுக்காரன் என்பதால், `இண்ணைக்கு மீன்குழம்பு வைக்க முடியாது. வெங்காய சாம்பார்தான்!` என்று அவர் சிரித்துக்கொண்டே சொல்வது வாடிக்கை. அவர் என்னை வரவேற்கும் விதமே அப்படித்தான். 

  அன்பே வடிவான கிராமியப் பெண்மணி. சாப்பாடு போடாமல் என்னை அவர் அனுப்பியதில்லை. அவர் சமையல்கலை வல்லுநர்.

  சிறுவனாக இருந்தபோது நகைச்சுவைத் துணுக்குகளை என்னோடு பகிர்ந்துகொண்டு என் நண்பனாகவும் மாறி என் மனத்தைக் கவர்ந்த சதீஷ் உள்பட, பிரபஞ்சனுக்கு மூன்று புதல்வர்கள். 

  பிரபஞ்சன் தன் கடைசிக் காலங்களில் புதுவையில் சில நாட்களும் சென்னையில் சில நாட்களுமாக வாழ்ந்து வந்தார். அவரது எழுத்து சார்ந்த வாழ்க்கைக்குச் சென்னையே செளகரியமாக இருந்தது.  

  கணிப்பொறியை அவர் பழகவில்லை. எப்போதும் கையெழுத்துத் தான். அடித்தல் திருத்தல் இல்லாத சீரான கையெழுத்து. சிறுகதையானாலும், தொடர்கதை அத்தியாயமானாலும், ஒரு வேகத்தோடு எழுதிக் கொடுத்து விடுவார். உலகளாவிய தத்துவப் பார்வை அவரது எழுத்தின் சிறப்பம்சம். 

  வாழ்நாள் முழுதும் வறுமை அவரை விரட்டியது. கடின உழைப்பாளியான அவருக்குப் பொருளாதார ரீதியிலான நிம்மதியான வாழ்க்கை அமையவில்லை. அவரின் அப்பாவின் ஆதரவு அவருக்குக் கைகொடுத்தது. 

  தஞ்சாவூரில் கொஞ்சகாலம் பள்ளி ஆசிரியராக இருந்தார். சிறிதுகாலம் குமுதத்திலும் வேறு சில பத்திரிகைகளிலும் பணிபுரிந்தார். 

   கொஞ்சகாலம் புதுவைப் பல்கலை நாடகத் துறையில் பேராசிரியராகப் பணியாற்றினார். பெரும்பாலான காலங்களில் எழுத்தை மட்டுமே சார்ந்தவராக முழுநேர எழுத்தாளராகத் தான் இருந்தார். 

 நாவல், சிறுகதை ஆகிய இரண்டு துறைகளிலும் முத்திரை பதித்தார். அவற்றில் சிறுகதைத் துறையில் அவர் பதித்த முத்திரை கூடுதல் அழுத்தம் கொண்டது. `முட்டை` உள்ளிட்ட முக்கியமான சில நாடகங்களையும் எழுதினார்.  

  தமிழில் முழுநேர எழுத்தாளராக இயங்குவது மிகக் கடினம். வல்லிக்கண்ணன் போன்ற தனி மனிதர்களே அப்படி வாழ முடியாமல் தத்தளித்தார்கள். பிரபஞ்சன் குடும்பஸ்தர். கடும் பொருளாதார நெருக்கடிகள் அவருக்குத் தொடர்ந்து இருந்து வந்தன. 

  தன்னை மணந்துகொண்ட காரணத்தாலேயே வறுமையோடு போராடுபவராகவே தம் மனைவியும் வாழ நேர்ந்ததில் அவருக்குக் குற்ற உணர்ச்சியோடு கூடிய கழிவிரக்கம் இருந்தது. மனைவி காலமானதும் தம் நண்பர்களிடம் அதுகுறித்துப் பெரிதும் வருந்தினார். 

  அவர் மனைவி காலமான தருணத்தில், மனைவியின்  விருந்துபசாரப் பண்பு பற்றி நான் புகழ்ந்து பேசியபோது அவர் விழிகள் கலங்கின. 

 `வானம் வசப்படும்` நாவலுக்காக சாகித்ய அகாதமி பரிசு, பாரதிய பாஷா பரிஷத் விருது, `மானுடம் வெல்லும்` நாவலுக்காக இலக்கியச் சிந்தனைப் பரிசு, சி.பா. ஆதித்தனார் விருது, தமிழக அரசின் பரிசு எனப் பல பரிசுகளையும் விருதுகளையும் பெற்றார். 

   முதுமையில் அவரது வறுமை சற்று விலகத் தொடங்கியது. நண்பர்கள் நிதிசேகரித்துக் கொடுத்தார்கள். இறுதிக் காலத்தில் செங்கமலத் தாயார் அறக்கட்டளைப் பரிசு உள்படப் பொருளாதாரப் பலன்தரும் சில பரிசுகள் அவரை வந்தடைந்தன. புதுவை அரசும் உதவியது. 

   ஆனால் புற்றுநோய் அவரை வரவேற்றது. அவர் கடைசிக் காலங்களில் கல்கியில் எழுதிய மகாபாரதப் பாத்திரங்களைப் பற்றிய தொடர் பெரும் வரவேற்பைப் பெற்றது. அவரது எழுத்தாற்றல் உச்சத்தைத் தொட்டுக் கொண்டிருந்த நேரத்தில், மரணம் அவரைத் தழுவியது. 

  ஒருவழியாக நோய்சார்ந்த உடல் வேதனையிலிருந்து அவர் விடுதலை பெற்றார். (டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் உள்ளிட்ட சிலர் அவருக்கு இறுதிக் காலத்தில் செய்த உதவிகள் குறிப்பிடத் தக்கவை.)

  புதுவை அரசு, அவர் புதுவையைச் சேர்ந்தவர் என்ற வகையில் அவருக்கு துப்பாக்கிக் குண்டு மரியாதையோடு கூடிய இறுதிச் சடங்கை நிகழ்த்தியது. தமிழ் எழுத்தாளர்களில் எவருக்கும் அதுவரை கிட்டாத பெருமை அது. 

  அவருக்கு இறுதி அஞ்சலி செலுத்த ஏராளமான எழுத்தாளர்கள் புதுவையில் கூடினார்கள். அவரது நண்பர் வட்டம் எவ்வளவு பெரியது என்பதை அவரது இறுதி அஞ்சலிக்கு வந்த கூட்டம் புலப்படுத்தியது.  

 பிரபஞ்சன் காலமானாலும் மென்மையும் ஆழமும் கூர்மையும் கொண்ட அவரது வசீகரமான எழுத்துக்களுக்கு என்றும் அழிவே இல்லை.

(மீள் பதிவு)
................................

நன்றி:🙏🙏🙏

திரு.திருப்பூர் கிருஷ்ணன்
மற்றும் 
முகநூல் 

26 நவ., 2025

அஞ்சலி

                                      கவிஞர் ஈரோடு தமிழன்பன் 🙏🙏🙏🙏🙏🙏🙏
      

6 நவ., 2025

அஞ்சலி


பெ.சு. மணி பிறந்த தினம்: நவம்பர் 2
.......................
*குருதேவரின் அன்பர் எழுத்தாளர் பெ.சு.மணி*
.......................
  *எண்பதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர் எழுத்தாளர் பெ.சு. மணி. 

 `வ.வே.சு. ஐயரின் கட்டுரைக் களஞ்சியம், வ.வே.சு. ஐயரின் கம்பராமாயணக் கட்டுரைகள்` உள்ளிட்ட பல தொகுப்பு நூல்களை வெளியிட்டவர். 

 `இந்திய தேசியத்தின் தோற்றமும் வளர்ச்சியும், பழந்தமிழ் இதழ்கள், வீரமுரசு சுப்பிரமணிய சிவா, எழுத்திடைச் செழித்த செம்மல் கா.சி. வெங்கட்ரமணி` உள்ளிட்ட நூல்களின் ஆசிரியரும் கூட. 

  ம.பொ.சி.யின் அன்பரான இவர் அவரது கொள்கைகளாலும் அவர் நடத்திய செங்கோல் இதழாலும் பெரிதும் கவரப்பட்டார். 

   ம.பொ.சி.யின் தமிழரசுக் கழகத்தில் சென்னை மேற்கு மாம்பலச் செயலாளராகவும் இயங்கினார். 

  தொடக்கத்தில் அஞ்சல் துறை ஊழியராகப் பணியாற்றியவர். சென்னை மயிலை ராமகிருஷ்ண மடம், அடையாறு பிரம்மஞான சபை போன்றவற்றுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார். 

 வெ. சாமிநாத சர்மாவின் அன்பரான இவர் அவரது இறுதிக் காலங்களில் அவரைப் பராமரித்தவரும் கூட. சாமிநாத சர்மா தம் நூல்கள் அனைத்தின் உரிமையையும் பெ.சு. மணிக்கே வழங்கினார். 

   சாமிநாதசர்மா காலத்திற்குப் பிறகு சர்மாவின் நூல்கள் நாட்டுடைமை ஆகின. 

  சாகித்ய அகாதமிக்காக, வாழ்வும் பணியும் வரிசையில் தாம் நேசித்த ம.பொ.சி. பற்றியும் தாம் பராமரித்த சாமிநாத சர்மா பற்றியும் நூல்கள் எழுதியுள்ளார் பெ.சு. மணி. 

  ராமகிருஷ்ண மடத்தின் அன்பர். `சுவாமி விவேகானந்தரின் சிகாகோ சொற்பொழிவுகள், தூய அன்னை ஸ்ரீசாரதா தேவி, வீரமுரசு சுப்பிரமணிய சிவா, ` போன்ற பல புத்தகங்களை எழுதியவர். அவை ராமகிருஷ்ண மடத்து வெளியீடுகளாக வந்துள்ளன. 

  இலங்கைக்குச் சென்று அங்கு தங்கி இலங்கையில் வாழ்ந்த ராமகிருஷ்ண மடத்துத் துறவியான விபுலானந்தர் குறித்துத் தகவல்கள் சேகரித்து `சுவாமி விபுலானந்தரின் தலையங்க இலக்கியம்` என்ற நூல் எழுதியவர். 

  `புகழ்பூத்த` என்ற சொற்றொடரில் பெ.சு.மணிக்கு விருப்பம் அதிகம். தம் நூல்களில் ஆங்காங்கே இந்தச் சொற்றொடரை அதிகம் பயன்படுத்தியிருப்பார். அவர் பாணியிலேயே சொல்வதானால் பெ.சு.மணி ஒரு புகழ்பூத்த அறிஞர்!

 பெ.சு. மணி தீவிர பாரதி அன்பரும் கூட. `பாரதியாரின் ஞானரதம் மூலமும் ஆய்வும்,  சமூக சீர்திருத்த வரலாற்றில் பாரதியார்` போன்ற நூல்கள் இவரது படைப்புகளே. 

  எண்ணற்ற ஆய்வுக் கட்டுரைகளின் ஆசிரியர். தினமணி இவரது பல கட்டுரைகளை வெளியிட்டுள்ளது. தாம் வாழ்ந்த காலத்தில் தினமணி எழுத்தாளர் என்றே அறியப்பட்டார். தமிழ்நாடு அரசு பாரதி விருது அளித்து இவரை கெளரவித்துள்ளது. 

  கதர் வேட்டி, கதர் ஜிப்பா அணிந்து சைக்கிளில் சென்னையை வலம் வந்தவர். சென்னை மேற்கு மாம்பலத்தில் வசித்தவர். எளிய வாழ்வு வாழ்ந்த பெரிய மனிதர். பழகுவதற்கு இனிய பண்பாளர். 

  கணீரென்ற குரலில் பாடக் கூடிய வல்லமை படைத்தவர். இவர் கலந்துகொள்ளும் கூட்டங்கள் பலவற்றில் இவர்தான் கடவுள் வாழ்த்துப் பாடல் பாடவேண்டும் என்பது கூட்டத்திற்கு வந்துள்ளோரின் நேயர் விருப்பமாக அமையும். 

    சீர்காழி கோவிந்தராஜன் குரலைப் போன்றதொரு வெண்கல மணிக்குரல் அவருடையது. 

  அவர் காலமாவதற்குச் சில ஆண்டுகளுக்கு முன்பாகவே அவரது அன்பு மனைவி திருமதி சரஸ்வதி காலமாகி விட்டார்.  பெ.சு. மணி , தம் மனைவி பற்றி `நான் மறவேனே` என்றொரு நூல் எழுதியுள்ளார். 

   இறுதிக் காலங்களில் தில்லியில் தம் மகள் வீட்டில் வசித்துவந்த அவர், தம் 87ஆம் வயதில், காலமாவதற்கு முன்னால் `ஜெய் ஸ்ரீராமகிருஷ்ணா!` என குருதேவரின் திருநாமத்தை உச்சரித்த படியே மறைந்தார்.  

  `ஆய்வு நோக்கில் தகவல்களைத் திரட்டி, உண்மைக்குப் புறம்பான ஒரு கற்பனைச் செய்தியும் இல்லாமல் நூல் எழுதும் சிறந்த எழுத்தாளர்` என பெ.சு. மணியை மதிப்பிடலாம். 

   ஆவணக் காப்பகத்தில் கடின உழைப்பின்பேரில் அவர் திரட்டிய பல ஆய்வுத் தகவல்கள் அவரது நூல்களில் கொட்டிக் கிடக்கின்றன. 

  அவரது நூல்கள் அனைத்துமே தகவல் சுரங்கங்கள். தமிழின் ஆன்மிக இலக்கியத் துறைக்கு அவரின் பங்களிப்பு கணிசமானது.  
.......................

நன்றி: திருப்பூர் கிருஷ்ணன் அவர்கள், முகநூல் 

18 அக்., 2025

அஞ்சலி 🙏🙏🙏


இன்று (அக்டோபர் 15) சுந்தர ராமசாமி நினைவுதினம்

சு.ரா. தனது கடைசி நாட்களில் எழுதிய கவிதை:

அந்தக் குழந்தையின் காலோசை நம்மை அழைக்கிறது.
குழந்தையின் வடிவம் நம் பார்வைக்குப் புலப்படவில்லை.
நம் கலவரம், நம் பதற்றம் நம் பார்வையை மறைக்கிறது.
தன் காலோசையால் நம்மை அணைத்துக்கொள்ள 
அந்தக் குழந்தை நம்மைத் தேடி வருகிறது.
நாம் நம் தத்தளிப்பை மறைக்க மேலும் உரக்கப் பேசுகிறோம்

**

சுந்தர ராமசாமி இணையதளம்: https://sundararamaswamy.in/

சு.ரா.வின் வாழ்க்கை, அவரது ஆளுமை, ஆக்கங்கள், அவரைப் பற்றிய மதிப்பீடுகள், கடிதங்கள் எனப் பல பகுதிகளைக் கொண்ட இந்த இனையதளம் சு.ரா.வை நினைவுகூர்வதற்கான தளமாக விளங்குகிறது.

D.i. Aravindan Kannan Sundaram

#kalachuvadupublications #sundararamaswamy #tamilbookwriter

8 அக்., 2025

அஞ்சலி 🌹🌹🌹

                                   🙏🙏🙏🙏🙏👆🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம்
13 ஏப்ரல் 1930 – 8 அக்டோபர் 1959

ஒரு சிறந்த தமிழ் அறிஞர், சிந்தனையாளர், பாடலாசிரியர் ஆவார். எளிமையான தமிழில் சமூக சீர்திருத்தக் கருத்துகளை வலியுறுத்திப் பாடியது இவருடைய சிறப்பாகும். இவருடைய பாடல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன.

தமிழ் நாடு மாநிலம் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள செங்கப்படுத்தான்காடு, தாமரங்கோட்டை என்னும் சிற்றூரில் அருணாச்சலனார் - விசாலாட்சி ஆகியோருக்கு இளைய மகனாக 13.04.1930-ல் எளிய விவசாய குடும்பத்தில் பிறந்தார். இவர் தந்தையும் கவி பாடும் திறன் பெற்றவர். கணபதிசுந்தரம் என்கிற மூத்த சகோதரரும் வேதநாயகி என்கிற இளைய சகோதரியும் உள்ளனர். பள்ளிப்படிப்பு மட்டுமே கொள்ள முடிந்த கல்யாணசுந்தரம் சுயமரியாதை இயக்கத்திலும், கம்யூனிசத்திலும் ஈடுபாடு கொண்டிருந்தார். இவருடைய துணைவியார் பெயர் கௌரவம்மாள். 1959-ஆம் ஆண்டு இவர்களுடைய குழந்தை குமரவேல் பிறந்தது. அதே ஆண்டில் (08.10.1959) இவர் அகால மரணம் அடைந்தார்.

பத்தொன்பதாவது வயதிலேயே கவிபுனைவதில் அதிக ஆர்வம் காட்டியவர். இவருடைய பாடல்கள் கிராமியப் பண்ணைத் தழுவியவை. பாடல்களில் உருவங்களைக் காட்டாமல் உணர்ச்சிகளைக் காட்டியவர். இருக்கும் குறைகளையும் வளரவேண்டிய நிறைகளையும் சுட்டிக் காட்டியவர். திரையுலகில் பாட்டாளி மக்களின் ஆசைகளையும், ஆவேசத்தையும், அந்தரங்க சக்தியுடன் பாடல்களாக இசைத்தார். இவர் இயற்றி வந்த கருத்துச் செறிவும் கற்பனை உரமும் படைத்த பல பாடல்களை ஜனசக்தி பத்திரிகை வெளியிட்டு வந்தது. 1954ஆம் ஆண்டு படித்த பெண் திரைப்படத்திற்காக முதல் பாடலை இயற்றி அந்தத் துறையில் அழுத்தமான முத்திரை பதித்தார்.

பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திருமணம் முடிந்த ஐந்து வருடங்களில் தனது 29-வது அகவையில் 1959 அக்டோபர் 8 ஆம் நாள் காலமானார். இவர் இறக்கும் போது இவருக்கு 5 மாத குழந்தை இருந்தது. இவரது மறைவுக்கு கலைஞர் மு. கருணாநிதி இவரது அஞ்சலியில் "கண்களை மூடுகிறேன்; கல்யாணம் தெரிகிறார் -- ஒளி தெரிகிறது! கண்களைத் திறக்கிறேன்: கல்யாணம் இல்லை - கலையுலகு இருட்டாயிருக்கிறது" எனத் தெரிவித்தார்.

5 செப்., 2025

அஞ்சலி 🙏🙏🙏🙏🙏


செப்டம்பர் 5: வ.உ.சி.யின் பிறந்த தினம்:
.................................
*செக்கிழுத்த செம்மல் வ.உ.சி.!*
*திருப்பூர் கிருஷ்ணன்*
.................................
   *தியாகிகள் செய்த தியாகங்களைப் போற்றுகிறோம். கூடவே தியாகிகளின் உறவினர்கள் செய்த தியாகங்களையும் நாம் போற்றுகிறோமா? மீனாட்சி சுந்தரம் யார் என்றோ மீனாட்சி சுந்தரத்திற்குப் பித்துப் பிடித்தது ஏன் என்றோ நாம் அறிவோமா? 

 மீனாட்சி சுந்தரம் தியாகி வ.உ. சிதம்பரம் பிள்ளையின் சொந்தச் சகோதரர்.   

  வ. உ.சி., சுதந்திரப் போரில் கலந்துகொண்டு இரட்டை ஆயுள் தண்டனை பெற்று சிறைப்பட்டார். அதாவது நாற்பது ஆண்டுகள் சிறைத்தண்டனை. 

  அண்ணன் சிறையில் நாற்பது ஆண்டுகள் வாழவேண்டும் என்ற செய்தியை முதன்முதலில் அறிந்ததும், அந்த அதிர்ச்சியில் திடீரென்று அவர்மேல் மிகுந்த பாசம் கொண்டிருந்த தம்பி மீனாட்சி சுந்தரத்திற்குப் பித்துப் பிடித்துவிட்டது. ஏதேதோ உளறியவராய்த் தெருவில் ஓடத் தொடங்கினார்.

  பின்னர் அவரை வீட்டுக்கு அழைத்து வந்தார்கள். ஆனால் தம் வாழ்நாளின் இறுதிவரை பித்தராகவே இருந்த அவர் சுதந்திரம் கிடைப்பதற்கு நான்கு ஆண்டுகள் முன் காலமானார்.

  *வ.உ.சி. தாய்நாட்டிற்காகக் கோவைச் சிறையில் செக்கிழுத்த செய்தி அனைவரும் அறிந்த செய்தி. கையில் விலங்கிட்டு அவரைச் சிறையில் அடைத்த ஆங்கிலேய அரசு விலங்கு செய்ய வேண்டிய பணியை அவர் செய்யவேண்டும் என வற்புறுத்தியது. 

  செக்கை மாடுகள்தான் இழுக்கும். ஆனால் மாட்டிற்கு பதிலாக வ.உ.சி.யைச் செக்கில் பூட்டி அவரைச் செக்கிழுக்க வைத்தார்கள். `செக்கிழுத்த செம்மல்` என்றே பின்னர் வ.உ.சி. அறியப்பட்டார். 

  அவர் கோவைச் சிறையில் பட்ட துன்பங்களை அறிந்த அவரது நண்பரான மகாகவி பாரதியார், வ.உ.சி.யை அடைத்து வைத்திருந்த கோயமுத்தூர் சிறைச்சாலையை "ஸ்ரீ பாரத நாட்டின் புதிய புண்ணிய ஸ்தலம்" என்று குறிப்பிட்டார்.... 

  *வ.உ.சி. 1872 செப்டம்பர் ஐந்தாம் தேதி பிறந்தவர். தந்தை உலகநாதர் புகழ்பெற்ற வழக்கறிஞர். தாய் பரமாயி அம்மாள். திருநெல்வேலி அருகேயுள்ள ஒட்டப் பிடாரம் தான் அவர் பிறந்த ஊர். 

  திலகரின் அரசியல் இயக்கத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டவர் வ.உ.சி. திலகரின் எழுத்தும் பேச்சும் அவர் உள்ளத்தைக் கொள்ளை கொண்டன. பின்னாளில் `திலக மகரிஷியின் வரலாறு` என்ற தலைப்பில், அவரை மகரிஷியாகவே உணர்ந்து ஒரு வாழ்க்கை வரலாற்று நூலையும் எழுதினார் அவர். 

  திலகர் குறித்த பல செய்திகள் அடுத்தடுத்து வ.உ.சி.யின் செவிகளை வந்தடைந்தன. இச்செய்திகளால் தம் பந்த பாசங்கள் அனைத்தையும் துறந்து இந்தியத் தாயின் மகன் என்ற உணர்வு மட்டுமே மேலோங்கியவராக வ.உ.சி. மாறினார். நாட்டு விடுதலைக்காக தமது அனைத்துச் செல்வத்தையும் அர்ப்பணிக்கத் தயாரானார். 

  பள்ளிப் படிப்பு முடிந்து சில ஆண்டுகளில் சட்டப் பள்ளியில் சேர்ந்து சட்டப் படிப்பை நிறைவு செய்து,. தந்தையைப் போலவே வழக்கறிஞரானார். என்றாலும் விடுதலை வேட்கை கொண்ட அவர் மனம் வழக்கறிஞர் தொழிலில் அதிக நாட்டம் கொள்ளவில்லை.

  1895இல் அவருக்குத் திருமணம் நடைபெற்றது. வள்ளியம்மையைக் கைப்பிடித்தார். மணவாழ்க்கை ஆறே ஆண்டுகள்தான் நீடித்தது. மனைவி 1901இல் காலமாகிவிட்டாள். 

  பின்னர் வ. உ. சிதம்பரத்தின் திருமணம் மீனாட்சி அம்மாளுடன் 8 செப்டம்பர் 1901 அன்று தூத்துக்குடியில் நடந்தது.

 , வ.உ.சி. தன் வாழ்வின் நேரம் முழுவதையும் நாட்டு விடுதலைப் பணிக்கென்றே அர்ப்பணித்தார். 

  1905இல் வ.உ.சி. இந்திய தேசிய காங்கிரஸ் உறுப்பினரானார். இந்தியாவில் சுதேசி இயக்கம் தலைதூக்கிய தருணம் அது. லாலா லஜபத்ராய், திலகர், அரவிந்தர் ஆகியோர் முழுவீச்சுடன் அதில் உழைத்துவந்தார்கள். 

   பாரதியார், சுப்பிரமணிய சிவா போன்றோர் சென்னை மகாகாணத்திலிருந்து சுதந்திரப் போரில் ஈடுபட்டுத் தொண்டாற்றினார்கள். 

  வ.உ.சி. இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் சேலம் மாவட்ட அமர்வில் தலைமை தாங்கும் அளவு அந்தஸ்தைப் பெற்றார். 

  வ.உ.சி.யின் மனம் கடலில் ஆங்கிலேயேரின் கப்பல்கள் தான் ஓடவேண்டுமா, இந்தியர்களின் கப்பல் ஓடக் கூடாதா எனச் சிந்தித்தது. 1906 நவம்பர் 12ஆம் நாள் சுதேசி ஸ்டீம் நாவிகேஷன் நிறுவனத்தை நிறுவினார். 

  வ.உ.சி.யின் கப்பல்கள் தூத்துக்குடி - கொழும்பு இடையே சேவைகளைத் தொடங்கின. இந்தியர்களாலும் கப்பல் விட முடியும் என்ற உண்மையை ஏற்றுக்கொள்ள இயலாமல் ஆங்கிலேயர்கள் திகைத்தனர். பிரிட்டிஷ் கப்பல் கம்பெனிக்கு வ.உ.சி.யின் கப்பல் கம்பெனி கடும் போட்டியாக உருவாகியது. 

 போட்டியை சமாளிக்க பிரிட்டிஷ் கப்பல் கம்பெனி கட்டணத்தைக் குறைக்க முடிவுசெய்தது. வ.உ.சி. தாமும் பிரிட்டிஷ் கம்பெனியை விடவும் கட்டணத்தைக் குறைத்தார். 

 இதற்குமேல் என்ன செய்வது என யோசித்த பிரிட்டிஷ் நிறுவனம் இலவசமாகவே பயணிகளை ஏற்றிச் செல்ல முன்வந்தது. தங்கள் கப்பல்களில் இலவசப் பயணம் செய்யும் பயணிகளுக்குக் குடைகளை அன்பளிப்பாகத் தரத் தொடங்கியது. 

  இத்தகைய கடும் போட்டியை வ.உ.சி.யால் சமாளிக்க இயலவில்லை. சுதேசிக் கப்பல் கம்பெனி திவாலாகும் நிலைக்குத் தள்ளப்பட்டது. 

 அவர் ஆங்கிலேய ஆட்சியின் தீமைகள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வுப் பிரசாரங்கள் செய்யலானார். தம் செயல்பாடுகளுக்கு திருநெல்வேலியில் உள்ள `கோரல் மில்ஸ்` தொழிலாளர்களின் ஆதரவைப் பெற்றார். எண்ணற்ற தொழிலாளர்களின் ஆதரவை அவர் பெற்றது ஆங்கிலேயர்களின் கண்ணை உறுத்தியது. 

  இச்செயலை அரசாங்கத்திற்கு எதிரான துரோகம் என்று முடிவுசெய்து 1908 மார்ச் 12 அன்று அவரைச் சிறைசெய்ய அரசாங்கம் உத்தரவு பிறப்பத்தது. அவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து கோயம்புத்தூர்ச் சிறையில் அவரை அடைத்தது.

  தத்துவஞானி ஜேம்ஸ் ஆலன் கருத்துகளால் கவரப்பட்ட வ.உ.சி., சிறையில் அவரது நூல்களைத் தமிழில் மொழிபெயர்த்தார். `அகமே புறம், மெய்யறிவு, மனம்போல வாழ்வு, வலிமைக்கு மார்க்கம்` என்ற தலைப்புகளில் அமைந்த அந்தச் சின்னஞ்சிறு நூல்கள் ஒவ்வொன்றும் பயில்பவரின் வாழ்வை மேம்படுத்தும் பொக்கிஷங்கள். 

  வ.உ.சி கைது செய்யப்பட்டதை அறிந்து நாடெங்கும் வன்முறை வெடித்தது. காவல்துறை அதிகாரிகளுக்கும் பொதுமக்களுக்கும் இடையே மோதல் உருவாயிற்று. மோதலில் நான்குபேர் மரணமடைந்தனர். 

  வ.உ.சி.யை விடுவிக்க வேண்டும் என்ற குரல் இந்திய நாடெங்கும் ஒலிக்கத் தொடங்கியது. ஆனால் பிரிட்டிஷ் அரசாங்கம் அதற்குச் செவிசாய்க்கவில்லை. 

 எனினும் 1912 டிசம்பர் 12 அன்று அவரை விடுதலை செய்தாக வேண்டிய கட்டாய நிலைக்கு அரசாங்கம் தள்ளப்பட்டது. 

   காரணம் வ.உ.சி.யின் மிக மோசமான உடல்நிலை. சிறைப்பட்ட  காலத்தில் செக்கிழுத்தல் உள்ளிட்டு அவர் செய்த கடும் உடல் உழைப்பால் அவர் உடல்நலம்  சீர்கெட்டது. 

  அவருக்கு ஏதேனும் ஆகிவிட்டால் அது பெரும் சங்கடத்தைத் தோற்றுவிக்கும் என்றெண்ணிய அதிகாரிகள் அவரை விடுதலை செய்தார்கள். 

 தமது ஆதரவாளர்கள் எண்ணற்றோர் சிறைவாயிலில் தன்னை வரவேற்கக் காத்திருப்பார்கள் என்ற எண்ணத்துடன் சிறையை விட்டு வெளியே வந்த வ.உ.சிக்குக் கடும் அதிர்ச்சி. வெளியே பெரிதாகக் கூட்டமெதுவும் இல்லை.  

 பிரிட்டிஷ் அரசின் அடக்கு முறையைக் கண்டு மக்கள் அஞ்சினார்களா, சில ஆண்டுகளுக்குள்ளேயே மக்கள் அவரை மறந்துவிட்டார்களா? புரியாமல் குழம்பியது அவர் உள்ளம். 

  பாரிஸ்டர் பட்டம் ஏற்கெனவே அவரிடமிருந்து பறிக்கப்பட்டதால் அவரால் வழக்கறிஞர் தொழிலை மேற்கொள்ள இயலவில்லை. சுதேசி ஸ்டீம் நேவிகேஷன் நிறுவனமும் 1911இல் ஒழிக்கப்பட்டது. 

  மாபெரும் செல்வந்தராக, கப்பல் நிறுவன உரிமையாளராக வாழ்ந்த அவர் வறுமை நிலைக்குத் தள்ளப்பட்டதுதான் காலத்தின் விசித்திரம். அவர் மனைவியோடும் இரு குழந்தைகளோடும் சென்னையில் குடியேறினார். 

`வந்த கவிஞர்க்கெல்லாம் மாரியெனப் பல்பொருளும்
தந்த சிதம்பரன் தாழ்ந்தின்று - செந்தமிழ்வெண்
பாச்சொல்லிப் பிச்சைக்குப் பாரெல்லாம் ஓடுகிறான்
நாச்சொல்லும் தோலும் நலிந்து!`

 என உள்ளத்தை உருக்கும் வகையில் வெண்பா எழுதினார் அவர். 

 பிழைப்புக்காக அரிசி, நெய் வியாபாரம் செய்தார். பின் கோயமுத்தூர் தொழிலாளர் பாங்கு ஸ்டோர்ஸ் பணி அவருக்குக் கிட்டியது. கோவை சென்றார். 

 மீண்டும் வழக்கறிஞராகப் பணியாற்றும் உரிமையை நீதிபதி இ.எச். வாலசின் உதவியால் 1924இல் பெற்றார். அதற்கு நன்றி தெரிவிப்பதுபோல் தம் கடைசி மகனுக்கு வாலேஸ்வரன் எனப் பெயர் சூட்டினார். 

  (இந்த வாலேஸ்வரன் தம் முதிய வயதில் அண்மையில் காலமானார் என்ற செய்தி சிறிது காலத்திற்குமுன் நாளிதழ்களில் வந்தது.) 

  மறுபடியும் வழக்கறிஞராகி கோவில்பட்டியில் குடியேறினார் வ.உ.சி. 1932இல் தூத்துக்குடி சென்றார். கடைசி நாட்களிலும் தமக்குப் பிடித்த எழுத்துப் பணிகளில் ஈடுபட்டார். 

 1936 நவம்பர் 18 அன்று அவருடைய பெருமிதமான வாழ்வு அவரது அறுபத்து நான்காம் வயதில் நிறைவுற்றது. சுதந்திரக் காற்றில் பட்டொளி வீசிப் பறக்கும் நம் தாயின் மணிக்கொடி, அவர் புகழைச் சொல்லியேதான் படபடக்கிறது. 

(நன்றி: ஓம் சக்தி மாத இதழ்)

நன்றி: திரு திருப்பூர் கிருஷ்ணன், முகநூல் மற்றும் ஓம் சக்தி மாத இதழ்

🙏🙏🙏🙏🙏🙏

22 ஏப்., 2025

அஞ்சலி


                                                   போப்பாண்டவர் பிரான்சிஸ் மறைவு 

                                                          🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏