கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கடிதம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

10 செப்., 2012

கடிதம்-16: தாளில் எழுதி வாசியுங்க்கள்!

தாளில் எழுதி வாசியுங்க்கள்!

மேலூரில், ஒரு மிகப் பெரிய பொக்கிஷ மலையையே ‘கேக்’ போல் வெட்டியுள்ளது, அதிகாரிகளுக்கும், அரசியல்வாதிகளுக்கும் தெரியாமல் போய்விட்டதா?

மலையும், கண்மாயும் குண்டூசியா ஒளித்து வைக்க? அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் இதற்கு உடந்தை. ஆனால், சிக்கிக் கொண்டது முறைகேட்டில் ஈடுபட்ட முதலாளிகளுடன், ஒரு சில அதிகாரிகள் மட்டுமே.

‘அரசியல்வாதிகள் சிக்கிவிடக்கூடாது என்பதற்காகவே, சிபிஐ விசாரணை தேவையில்லை’ என, தமிழக காவல் துறை, ஐ கோர்ட்டில் கருத்துத் தெரிவித்துள்ளது. இதற்கு, முன் ஆட்சியில் இருந்த அரசியல் தலைவர்கள் ஏன் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை.. சிபிஐ விசாரணை வந்தால் தாமும் சிக்குவோம் என்பதால்தானே!

ஒவ்வொற்று சம்பவமும் கண்டுபிடிக்கப்பட்டவுடன், சில நாட்களுக்கு அது சம்பந்தமான அதிரடி உத்தரவுகள், ஆய்வுகள் வரும். அதன் பிறகு, ‘ஆறிய கஞ்சி பழைய கஞ்சி’ என்பது போலத்தான்.. பின், ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்ற கதையாகிவிடும்.

இந்த நாடு, நாளை சுடுகாடாகப் போவதற்கு அரசியல்வாதிகளும், அரசு அதிகாரிகளுமே காரணம். ‘தெரிந்தென்ன ஆகப் போகிறது? மக்களின் தலையெழுத்து’ என்று போகவேண்டியதைத் தவிர, வேறு வழி தெரியவில்லை. இந்தியா நாளை வல்லரசாகும் என்று, தாளில் எழுதி வாசித்துக் கொள்ள் வேண்டியதுதான்.

- 2012 செப்டம்பர் இரண்டாம் நாள் தினமலர் (மதுரை) நாளேட்டில் இது உங்கள் இடம் பகுதியில் பா.ப.தியாகராஜன், மக்கள் பொது நலன் சட்ட உரிமை இயக்க செயலர், பரமக்குடியிலிருந்து எழுதிய கடிதம்.

9 மார்., 2009

கடிதம்-15: "வரலாற்றில் லாலு"

இரயில்வே அமைச்சர் லாலுவின் இடைக்கால பட்ஜெட் செய்தி கண்டேன். உலகம் போற்றும் அளவுக்கு இரயில்வேயை நவீனப்படுத்தி, மக்களுக்குச் சிரமமின்றி பயணக் கட்டணங்களைச் சீர்படுத்தி, இந்திய வரலாற்றில் இடம் பிடித்துவிட்டார். திரும்பவும் அதே பொறுப்பில் இருந்து நாட்டுக்குச் சேவை செய்ய வளைகுடாவாழ் இந்தியர்கள் சார்பாக வாழ்த்துகிறேன். - முகவை எம்.ஜபருல்லா, சவூதி அரேபியா.
- தினமணி, மதுரை, மார்ச் 3, 2009 (அன்புள்ள ஆசிரியருக்கு பகுதியிலிருந்து)
நன்றி: திரு எம்.ஜபருல்லா & தினமணி.

4 மார்., 2009

கடிதம்-14: "தீர்ப்பு கேலிக்கூத்து"

முன்னாள் மத்திய அமைச்சர் சுக்ராமிற்கு, அளவிற்கு அதிகமான சொத்து சேர்த்த வழக்கில் தீர்ப்பு வந்துள்ளது. 1997-ல் தொடுக்கப்பட்ட வழக்கு, பதினோரு ஆண்டுகள் நடைபெற்றபின், தீர்ப்பு கூறப்பட்டு, வரலாற்றுச் சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தீர்ப்பின்படி, மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை தரப்பட்டு, அப்பீல் செய்ய இரண்டு மாதம் தவணை தந்து, அதுவரை தண்டனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

அளித்த தீர்ப்பு குறித்து உடனே மேல்முறையீடு செய்ய, நீதிமன்றமே தவணை தந்ததால், தீர்ப்பில் குறை உள்ளது என்று தானே அர்த்தம்; இப்படிப்பட்ட தீர்ப்பை தருவதற்கு பதினோரு ஆண்டுகள் தேவையா?

இந்த தீர்ப்பின் மூலம் ஒரு நிமிடம் கூட சிறை வாயிலைத் தொடவேண்டிய அவசியமே இல்லாமல் போய்விட்டதே. ஏற்கனவே பதினோரு ஆண்டுகள் ஓடிவிட்டன; மேல்முறையீடு மூலம் இன்னும் இருபது ஆண்டுகள் ஓட்டிவிடலாம்.

சுக்ராமிற்கு எண்பத்திரண்டு வயது. அப்பீல் முடிந்து தீர்ப்பு வரும்போது, எப்படியும் நூற்றிரெண்டு வயதாகிவிடும். அதன் பின்னர் அவருக்கு தண்டனை தந்து, அவர் சிறையில் இருந்து.... நினைக்கவே கேலிக்கூத்தாக உள்ளது.

இப்படிப்பட்ட உளுத்துப்போன சட்டங்களை வைத்துக்கொண்டு, உலகிலேயே பெரிய ஜனநாயக நாடு என்று, நம்மை நாமே பீற்றிக்கொள்வது, நூறு சதவிகித பைத்தியக்காரத்தனம். - ஏ.மலரவன், சென்னை, "இது உங்கள் இடம்", தினமலர், மதுரை.
நன்றி: திரு ஏ.மலரவன் & தினமலர்.

2 மார்., 2009

கடிதம்-13: "மக்களின் ஒரே நம்பிக்கை நட்சத்திரம்"

ஐகோர்ட் நடவடிக்கைகளுக்கு இடையூறு செய்பவர்கள், நீதிமன்றத்தை அவமதிப்பவர்கள் தானே? முன்பெல்லாம் குறுக்கே, நெடுக்கே நடந்தாலோ, வெளி வரண்டாவில் சத்தம் செய்தாலோ, 'நீதிமன்றத்தின் மாண்புக்கு இடையூறு நேர்ந்துவிட்டது' என்று உடனுக்குடன் தண்டனை வழங்கும் நீதியின் மாண்பு, இப்படி மலினப்பட்டு விட்டதே! சாதாரண பொதுமக்களுக்கு எஞ்சி இருக்கும் ஒரே நம்பிக்கை நட்சத்திரம், 'விடிவெள்ளி' நீதித்துறைதான். அதன் மாட்சியும், எல்லையற்ற அதிகாரமும் கொச்சைப்படுத்தப் பட்டு விட்டதே! இங்கே அடி வாங்கியது சுப்ரமணிசாமியா, காவல்துறை உயரதிகாரியா என்பது முக்கியமல்ல! நீதிமன்றத்தின் மாண்பை நம்பித்தானே, இஜட் பிளஸ் பாதுகாப்பை வெளியே நிறுத்திவிட்டு நுழைந்திருக்கிறார்? காவல்துறை உயர் அதிகாரி உடுப்பு, ரேங்க், அடையாளச்சின்னங்களுடன் பணிந்து நின்றது, கோர்ட்டின் மாண்பை நம்பித்தானே? கருப்பு அங்கி உடையினுள் புகுந்துகொண்டு, இரு நீதிபதிகளின் கண் முன்னேயே அராஜகம் செய்ததும், கோர்ட் அவமதிப்புத்தானா என்று விசாரித்துத்தான் நடவடிக்கை தொடர வேண்டுமா? - ச.ராசன், திருச்சி.
- 'இது உங்கள் இடம்', தினமலர், மதுரை, 26.2.2009.
நன்றி: திரு ச.ராசன் & தினமலர்.

18 பிப்., 2009

கடிதம்-12: "பஸ் எரிப்பு"

அரசு சொகுசு பஸ்சை எரித்த குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளது பாராட்டப்படவேண்டிய, தொடரவேண்டிய விஷயம்.

கூட்டணிக் கட்சித் தலைவர்களை 'தாஜா' செய்ய, தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களை, கவர்னரின் விஷேஷ உரிமையை பயன்படுத்தி வெளிக்கொணர்வது ஆளுங்கட்சியின் பழக்கம். சொகுசு பஸ், சாதாரண பஸ் எரித்து, தேசிய பாதுகாப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலைக்காக, கவர்னரின் அனுமதியை ஒரு ஆண்டு முடிவதற்குள் தமிழக அரசு கோரக்கூடாது.

உ.பி. மாநிலத்தில் சிறுமியை காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதற்காக காவல்துறை துணை ஆய்வாளரும், காவலரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தாக்கியதை வேடிக்கை பார்த்ததற்காக, காவல் நிலைய ஆய்வாளர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். மனிதாபிமானமற்ற காவல்துறையை உருவாக்கி நிர்வாகம் செய்த குற்றத்திற்காக மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.

இதே போக்கை பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்துபவர்கள் விஷயத்திலும் கடைப்பிடிக்க மாநில அரசுகள் தைரியமாக முன்வர வேண்டும். சூத்ரதாரியை விட்டுவிட்டு, பொம்மைகளை அடிப்பதால் பயன் என்ன?

'சாகிற வரையில் வைத்தியன் விடான், செத்தாலும் பாசாங்குக்காரன் விடான்.' அரசியல் தலைவர்கள், விஷமிகள் சிறைக்குச் சென்றாலும் விடமாட்டார்கள். தியாகி முத்திரை குத்தி, எம்.எல்.ஏ. சீட் தந்து சட்டசபைக்கு அனுப்பிவிடுவர்.

மரத்தை நட்டு, குளத்தை வெட்டி, அன்றைய அரசர்கள் ஆட்சி செய்தனர்; மரத்தை வெட்டி, பஸ்சை கொளுத்தி இன்றைய ஜனநாயக தலைவர்கள் அரசியல் செய்கின்றனர். - வீ.அன்புராஜா, எட்டயபுரம்.
தகவல்: "இது உங்கள் இடம்", தினமலர், மதுரை, 16.2.2009.
நன்றி: திரு.வீ.அன்புராஜா & தினமலர்.

17 பிப்., 2009

கடிதம்-11: "விளையாட்டு"

விளையாட்டு உடல் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. நம் பாரதி கூட ஓடி விளையாடு பாப்பா என்று விளையாட்டின் முக்கியத்துவத்தை புகழ்ந்து பட்டியிருக்கிறார். ஆனால் இன்றோ பல்வேறு பள்ளிகளில் சிறிது நேரம் கூட விளையாட அனுமதிப்பது இல்லை. படிப்பு, படிப்பு என்றே அறிவுறுத்துகின்றனர். இந்நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் விளையாட்டுத்துறையை ஊக்குவிக்க தமிழக அரசு நிதி அளிக்கவேண்டும். - எம்.பாசில் ஷரீஃப், தாளவாடி.
தகவல்: "கடிதங்கள்", தினகரன், 13.2.2009.
நன்றி: திரு பாசில் ஷரீஃப் & தினகரன்.

16 பிப்., 2009

கடிதம்-10: "மிகச் சிறந்த நிர்வாகி!"

தொடர்ந்து ஆறாவது முறையாக கட்டண உயர்வு இல்லாத ரயில்வே பட்ஜெட்டை தாக்கல் செய்து புதிய சரித்திரம் படைத்துள்ளார் அமைச்சர் லாலு. இதுமட்டும் அல்லாமல், எல்லா பொருட்களின் விளையும் தாறுமாறாக உயர்ந்து வரும் நிலையில், கட்டணங்களை குறைத்திருப்பதன் மூலம் சிறந்த நிர்வாகி என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். - எஸ்.ஜெகன், திருச்சி.

நன்றி: "கடிதங்கள்", தினகரன், ஃபிப்ரவரி 14, 2009.

20 ஜன., 2009

கடிதம்-9: "அவமானம் ஒரு சிலருக்கு மட்டும்தானா?"

இந்தியாவில் எத்தனையோ ஊழல்கள் நடந்துள்ளன, கோடி கோடியாக! இப்போது சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனம் ரூ.7800 கோடி ஊழல் செய்து உலக வங்கியின் மதிப்பையே சரிய வைத்துள்ளது. 2006-ம் ஆண்டிலிருந்தே இது நடைபெற்று வந்திருக்கிறது. இந்திய கிராமப்புறங்களில் சிலர் வயிற்றுப்பசிக்கு தேங்காய், மாங்காய், வேர்க்கடலை, மீன் போன்றவைகளையும், ஆடு, மாடுகளையும் திருடுவார்கள். திருட்டு தெரிந்துவிட்டால் மரத்தில் கட்டிப்போட்டு அடிப்பார்கள். அவமானம் தாங்காமல் சிலர் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொள்வார்கள். ஆனால், இந்தியாவின் பொருளாதாரம் மட்டும் இல்லை, உலக வங்கியின் மதிப்பையே சரிய வைத்து சாதனை புரிந்துவிட்டு, வெட்கமோ, மானமோ இன்றி இவர்கள் டிவியில் பேட்டி கொடுக்கிறார்கள். அவமானம் என்பது ஒரு சிலருக்கு மட்டும் தானா? - எம்.கோவிந்தராஜன், வந்தவாசி.
நன்றி: திரு எம்.கோவிந்தராஜன் & தினமணி, மதுரை, 13.1.2009.

2 ஜன., 2009

கடிதம்-8: "புதிய நாகரிகம்"

"புத்தாண்டைப் புரிந்துகொள்வோம்" கட்டுரை படித்தேன். புத்தாண்டு என்றாலே குடியும், கும்மாளமும்தான் என்ற விஷவிதை இன்றைய இளைஞர்-இளைஞிகளிடம் வேரூன்றிவிட்டது. பெற்றோரும், சமூக சிந்தனையாளர்களும், அரசும் ஒருங்கிணைந்து அவர்களை நல்வழிப்படுத்தினாலன்றி நமது பண்பாட்டை, கலாச்சாரத்தை, குடும்ப அமைப்பை புதிய நாகரிகம் என்ற 'சுனாமி' விழுங்கிவிடும். - முருகு.சிற்றரசன், திருமுட்டம், ஆசிரியர்க்கு கடிதம் பகுதி, தினமணி, மதுரை, ஜனவரி 2, 2009.
நன்றி: திரு.முருகு.சிற்றரசன் & தினமணி நாளிதழ்.

22 டிச., 2008

கடிதம்-7: "குற்றப் பின்னணி"

சமீபத்தில் நடந்து முடிந்துள்ள ஐந்து மாநில தேர்தல்களில் வெற்றிபெற்ற வேட்பாளர்களின் விபரங்களை தேசிய தேர்தல் கண்காணிப்புக் குழு ஆராய்ந்துள்ளது. அதன்படி குற்றப் பின்னணி கொண்டவர்களில் 125 பேர்கள் வெற்றிபெற்றுள்ள சேதி மிகுந்த கவலை தருகிறது. இவர்களுக்கு இனி எம்.எல்.ஏ. என்ற அதிகாரமும் கிடைக்கும்போது, நிலை என்னவாகும் என சொல்லவே தேவையில்லை. குற்றப் பின்னணி உள்ளவர்கள் யாராக இருந்தாலும் தேர்தலில் நிற்க தடை விதிக்க வேண்டும். தேர்தல் கமிஷன் இந்த விஷயத்தில் தீவிர கட்டுப்பாடுகளை கொண்டுவரவேண்டும். - வி.எஸ்.கிருபானந்தம், கும்பகோணம்.
தகவல்: தினகரன், மதுரை, டிசம்பர் 19, 2008. ("கடிதங்கள்").

15 டிச., 2008

கடிதம்-6:

அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்பட்ட ஊசி, சிரிஞ்சுகளை மீண்டும் பயன்படுத்துவதால் பரவும் இரத்த சம்மந்தமான தொற்று நோய்களால் ஆண்டிற்கு மூன்று லட்சம் பேர் இறக்கின்றனர் என்ற செய்தியைப் படித்து அதிர்ச்சியடைந்தேன். இதை இப்படியே அலட்சியமாக விடக்கூடாது. மத்திய, மாநில அரசுகள் முன்கூட்டியே தடுப்பு நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். மேலும் பாதுகாப்பான ஊசியை மருத்துவர்கள் பயன்படுத்தும் வகையில் பொதுமக்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வும் ஏற்படுத்தப்படுவது அவசியம். - இ.தாமோதரன், சங்கராபுரம்.
நன்றி: திரு இ.தாமோதரன் & தினகரன், தமிழ் நாளிதழ், (மதுரைப் பதிப்பு) ("கடிதங்கள்" பகுதி)

4 டிச., 2008

கடிதம்-5:"துப்பாக்கி முனையில் தேர்தல்!"

துப்பாக்கி முனையில் தேர்தல் நடத்தவேண்டிய நிலைமை வேதனை அளிப்பதாக தலைமை தேர்தல் கமிஷனர் கோபாலசுவாமி தெரிவித்துள்ளார். சட்டீஸ்கரில் தேர்தலைத் தடுக்க பல சாலைகளில் நக்சலைட்டுகள் தடை ஏற்படுத்தினர். அதனால், ஹெலிகாப்டர், சிறு விமானங்களில் வாக்குச்சாவடிக்கான பொருட்களைக் கொண்டு செல்ல வேண்டியிருந்தது. இதுபோல, காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை எங்கும் வன்முறை, எதற்கெடுத்தாலும் வன்முறை, போராட்டம். தீவிரவாதத்திற்கு அஞ்சியே மக்கள் வாழவேண்டியுள்ளது. இது என்ன ஜனநாயக நாடா? - வா.ரா.சண்முகம், திருப்பத்தூர்.
தகவல்: தினகரன் நாளிதழ், மதுரை, டிசம்பர் 2, 2008.
நன்றி: திரு சண்முகம் & தினகரன்.

3 டிச., 2008

கடிதம்-4:

ஈரோடு மாவட்டத்தில் ஒரு கிராம மக்கள் இலவச சமையல் காஸ் கேட்டு போராடிய செய்தியைப் படித்தேன். இதைப் பார்த்ததும் எனது மனம் சங்கடப்பட்டது. வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் அரசு இலவசமாகத் தரமுடியுமா? இப்படி தவறான, சோம்பேறித்தனமான எண்ணம் மக்களுக்கு வந்திருப்பதற்கு, அரசின் இலவச டிவி போன்ற திட்டங்களே காரணம். - எஸ்.சந்திரசேகரன், பாலக்காடு.
நன்றி: தினகரன், நாளிதழ், மதுரை, டிசம்பர் 1, 2008.

2 டிச., 2008

கடிதம்-3: "முறைகேடுகளுக்கு தளமாகலாமா தமிழகம்?"

"அமெரிக்க டாலர்கள் அச்சடிக்க முயற்சி" என்ற செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. ஏற்கனவே, இந்தியாவில் அதிகமான கள்ளநோட்டுப் புழக்கத்திற்கு தமிழகம் தளமாக அமைந்துள்ளதாகச் செய்திகள் வெளியானது. மேலும், கொலைகள், கொள்ளைகள், தீவிரவாதிகள் நடமாட்டம், பயங்கரவாதிகளின் பயிற்சி முகாம்கள், போதைப்பொருள் கடத்தல், போலி மது தயாரித்தல் என காவல்துறை "வேடிக்கைத்துறை"யாகி விட்டதால், தமிழகத்தில் ஜாதி, மதக் கலவரங்கள், அண்டை மாநில வெடிகளுக்கு வேடந்தாங்கள், சரணாலயம் என எண்ணற்ற முறைகேடுகளுக்கும் தளமாக அமைந்துள்ளது தமிழகம். இன்று போலி அமெரிக்க டாலர் அச்சடிக்கும் கும்பலுக்கு 'மதுரை' தளமாக அமைந்துள்ளதை அறிந்த தமிழர்கள் வேதனைப்படுகிறார்கள். - இரா.அசோகன், சென்னை.
தினமணி, மதுரை, நாளிதழில் "அன்புள்ள ஆசிரியருக்கு" பகுதியிலிருந்து.
நன்றி: திரு.இரா.அசோகன் மற்றும் தினமணி.

17 நவ., 2008

கடிதம்-2: "பேயாட்டம்"

சட்டம் படிக்கும் மாணவர்கள் கைகளில் சட்ட புத்தகத்திற்குப் பதிலாக கத்திகளும், வீச்சரிவாளும், இரும்பு ராடுகளும், குண்டாந்தடிகளுமாக சென்னை அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் வலம் வந்து அராஜகம் செய்திருக்கின்றனர்.

மாணவர்களின் வாழ்க்கையை சீரழிக்கும் ஜாதி, நக்சல், அரசியல் கட்சிகளின் கொடிக்கம்பங்கள், கல்வெட்டுக்கள், சுவரொட்டிகள் போன்றவற்றை அனைத்து சட்ட, பிற கல்லூரிகளின் முன் அமைப்பதற்கு தடை விதிக்க வேண்டும்; தற்போது இருப்பதையும் அகற்ற வேண்டும்.

மாணவர் மன்றம் என்ற பெயரில் நடைபெறும் கூட்டங்களில் ஜாதிக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பதற்கும் தடை விதித்து, அரசு அவசரச் சட்டம் இயற்ற வேண்டும்.
- எஸ்.குமார், கோவை.
"இது உங்கள் இடம்" (ஆசிரியர்க்குக் கடிதங்கள் பகுதி), தினமலர், மதுரை, நவம்பர் 16, 2008.
நன்றி: திரு.எஸ்.குமார் & தினமலர்.